புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 06-03-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் : 08-08-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 56/2022.
திருப்பூர், குருநாதர் தெரு, இலக்கம் 170 -ல் வசிக்கும் கோவிந்தராவ் மகன் கேசவராவ் -முறையீட்டாளர்
- எதிர்-
1. கோயம்புத்தூர், வடவள்ளி, மருதமலை சாலை, நவாவூர் பிரிவு, ஆர்கே நகர் முதல் தெரு, இலக்கம் 1 -ல் உள்ள ஞானாலயா வள்ளுவர் கோட்டத்தின் நிறுவனர் முத்துகிருஷ்ணன் மகன் திருஞானந்தா,
2. திருப்பூர், பி என் சாலை, கரூர் வைசியா வங்கி பின்புறம், எஸ் வி காலனி மேற்கு, ஜோதி நகரில் உள்ள ஞானாலயா வள்ளுவர் கோட்டத்தின் தலைவர் நல்லசாமி மகன் கந்தசுவாமி,
3. திருப்பூர், பி என் சாலை, கரூர் வைசியா வங்கி பின்புறம், எஸ் வி காலனி மேற்கு, ஜோதி நகரில் உள்ள ஞானாலயா வள்ளுவர் கோட்டத்தின் பொதுச் செயலாளர் ஆர். டி. பி. ரவிச்சந்திரன். - எதிர் தரப்பினர்கள்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன்படி முறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திரு ஆர். ராமச்சந்திரன், திருமதி பி. இந்து பிரியா மற்றும் திரு ஏ அசோக் குமார், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு டி. தினேஷ்குமார், திரு வி, இளங்கோ, திருமதி கே. ஜெயந்தி, வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 05-07-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், முறையீட்டாளர் சாட்சியம் -01, அவரது சான்றாவணங்கள் -03, முதலாம் எதிர் தரப்பினரின் பதிலுரை, இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரின் பதில் உரை, மற்றும் இரண்டு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம்
02. தாம் திருப்பூரில் வசித்து வருகிறேன் என்றும் இந்து சமய வழிபாட்டிலும் செயல்பாட்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளேன் என்றும் கடந்த 2006 ஆம் ஆண்டு வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றும் முதலாம் எதிர் தரப்பினரை சந்தித்தேன் என்றும் அவர் கோயம்புத்தூரில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருபவர் என்றும் 2006 ஆம் ஆண்டு முதல் அவரை பின்பற்றுவராக தான் செயல்பட்டு அவரது ஆசிரம நடவடிக்கைகளில் ஈடுபட்டும் ஆசிரமத்திற்கு நன்கொடைகள் வழங்கியும் உள்ளேன் என்றும் முதலாம் எதிர் தரப்பினரின் ஆசிரமத்தின் ஒரு கிளையாக திருப்பூரில் ஞானாலயா வள்ளுவர் கோட்டம் என்ற பெயரில் ஒரு அமைப்பு உள்ளது என்றும் அதன் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் முறையே இந்த வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
03. எதிர் தரப்பினர்கள் காய சித்தி பயிற்சி என்ற பெயரில் பயிற்சி அளித்து வருகிறார்கள் என்றும் பொதுமக்களை ஈர்ப்பதற்காகவும் அவர்களை தனது கொள்கைகளை பின்பற்றும் நபர்களாக மாற்றுவதற்காகவும் தொடக்கத்தில் காய சித்தி பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டது என்றும் காய சித்தி பயிற்சியை இலவசமாக தொடக்கத்தில் ஆசிரமம் வழங்கியதன் விளைவாக தாம் ஆசிரமத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டேன் என்றும் பின்னர் ஆசிரமத்தின் பக்தனாக மாறி ஆசிரம நலத்திற்காக பணிகளை மேற்கொண்டேன் என்றும் வடலூர் அருகே இடம் வாங்கி ஆசிரமம் அமைப்பதற்காக மூன்றாம் எதிர் தரப்பினர் கேட்டுக் கொண்டதால் கடந்த 2009-10 ஆம் ஆண்டில் ரூ 2,50,000/- மூன்றாம் எதிர் தரப்பினரிடம் வழங்கினேன் என்றும் கடந்த 2012 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழாவுக்காக போது ரூ 35,000/- மூன்றாம் எதிர் தரப்பினரிடம் வழங்கினேன் என்றும் கடந்த செப்டம்பர் 2013 முதல் ஜூன் 2016 வரை இரண்டாம் எதிர் தரப்பினர் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 3,000/- காய சித்தி பயிற்சியை வழங்குவதற்காக பெற்றுக் கொண்டார் என்றும் 2015 ஆம் ஆண்டு வாக்கி டாக்கி வாங்குவதற்காக ரூ 10,000/- வழங்கினேன் என்றும் இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இரண்டாம் எதிர் தரப்பினர் தம்மை திருப்திப்படுத்தும் வகையில் பேசி ஆசிரமத்துக்கு ரூபாய் ஒரு லட்சம் பணம் பெற்றுக் கொண்டார் என்றும் மேற்கண்ட தொகைகளை முழு மனதுடன் நல்ல எண்ணத்துடன் வழங்கினேன் என்றும் ஆனால் இவ்வாறு வழங்கப்பட்ட பணத்துக்கு எவ்வித ரசீதும் வழங்கவில்லை என்றும் மாறாக, மேலே குறிப்பிட்டவாறு வாங்கப்படும் இடத்திற்கான கிரைய ஆவணத்தில் தமது பெயர் வாங்கும் தரப்பினர்களில் ஒருவராக இடம்பெறும் - அங்கு கட்டப்படும் கல் தூணில் நன்கொடையாளர்களில் ஒருவராக பெயர் பொறிக்கப்படும் என்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் தெரிவித்தார்கள் என்றும் கிரைய ஆவணத்தை காட்டும்படியும் இடம் எங்கு வாங்கப்பட்டுள்ளது என தெரிவிக்குமாறும் அவர்களிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை என்றும் இத்தகைய செய்கை ஏமாற்றும் நோக்கம் கொண்டதாக இருந்தது என்றும் ஆசிரமம் பணத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது - பின்பற்றுபவர்கள் நலனுக்காக செயல்படவில்லை என தாம் அறிந்து கொண்டேன் என்றும் தொடக்கத்தில் உடல் நலத்துக்கும் மனநலத்துக்கும் சிறந்தது எனக் கூறி காய சித்தி பயிற்சியை கட்டணமில்லாமல் வழங்கிய எதிர் தரப்பினர்கள் பின்னர் அதனை பின்பற்றுபவர்களிடம் உறுதிமொழி ஒன்றில் கையொப்பம் செய்யுமாறு கேட்டார்கள் என்றும் அதில் இந்த பயிற்சியின் மூலம் உயிருக்கும் உடலுக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஆசிரமம் பொறுப்பு அல்ல என்பதோடு பயிற்சி மேற்கொள்ளும் தனி நபர்கள் தான் பொறுப்பு என எழுதப்பட்டிருந்தது என்றும் காய சித்தி பயிற்சியை மேற்கொண்டவர்கள் அனைவரும் இந்த உறுதிமொழி ஆவணத்தில் கையொப்பம் செய்து கொடுத்தார்கள் என்றும் தாமும் இரண்டு முறை கையொப்பம் செய்து கொடுத்தேன் என்றும் இரண்டாம் மூன்றாம் எதிர் தரப்பினரிடம் தான் மொத்தம் ரூ 4,47,000/- செலுத்தியுள்ளேன் என்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் காய சித்தி பயிற்சியை பின்பற்ற வருபவர்களிடம் பணத்தை பெறுவது தான் நோக்கமாக இருந்தது என தெரிய வந்த பின்னர் இரண்டாம், மூன்றாம் எதிர் தரப்பினர்களை அணுகி தம்மால் செலுத்தப்பட்ட பணத்தையும் சமர்ப்பிக்கப்பட்ட உறுதிமொழி ஆவணங்களையும் திருப்பி வழங்குமாறு கேட்டேன் என்றும் அவற்றை திருப்பித் தருவதற்கு பதிலாக எதிர் தரப்பினர்கள் தம்மை மிரட்டினார்கள் என்றும் இதனால் தான் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினேன் என்றும் தமது வழக்கறிஞர் அறிவிப்பிற்கு அவர்கள் எவ்வித பதிலையும் தரவில்லை என்றும் அவர்களது செயல்கள் சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, தம்மிடம் பெற்ற தொகை ரூ 4,47,000/- ஐ தமக்கு எதிர் தரப்பினர்கள் திரும்ப வழங்க வேண்டும் என்றும் சேவை குறைபாடு மற்றும் ஏமாற்றும் செயல்கள் காரணமாக இழப்பீடு ரூபாய் 2 லட்சத்தையும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 10 ஆயிரத்தையும் தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
04. முறையீட்டாளரின் புகார் உண்மைக்கு புறம்பாகவும் மோசடியாகவும் உள்ளது என்றும் சட்டப்படி நியாயப்படி நிலை நிற்கத்தக்கதல்ல என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் முதலாம் எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
05. முதலாம் எதிர் தரப்பினரால் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு கடந்த 2006 ஆம் ஆண்டில் ஞானாலயா வள்ளுவர் கோட்டம் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது என்றும் நடமாடும் சத்திய தருமசாலையை துவக்கி செயல்படுத்தி வருகிறது என்றும் இமயமலையில் உள்ள ஜோதி பர்வதத்தில் குழந்தைகளின் கல்விக்காக ஞானாலயா வள்ளலார் விசு மந்திர் என்ற ஆரம்ப பாட சாலையை நடத்தி வருகிறது என்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறது என்றும் வள்ளலார் கருத்துக்களை எடுத்துரைக்கும் பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது என்றும் ஞானாலயா வள்ளுவர் கோட்டத்தில் முக்கியமான பணி பசித்தவர்களுக்கு உணவளிக்கும் அன்னதான பணி என்றும் இயலாதவர்களுக்கு அவர்களது இடத்துக்குச் சென்று அன்னதானம் வழங்கும் பணியையும் செய்து வருகிறது என்றும் முதலாம் எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
06. இரண்டாம் எதிர் தரப்பினர் அரசு கல்லூரியில் ஓய்வு பெற்ற பேராசிரியர் என்றும் மூன்றாம் எதிர் தரப்பினர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள பெரியவர் என்றும் புகாரில் தெரிவித்துள்ளவாறு காய சித்தி பயிற்சி என்று எதுவும் இல்லை என்றும் காய சித்தி என்பது ஓர் உணவு பழக்க வழக்க முறை என்றும் வாழ்க்கை சிறப்பதற்காக உணவு முறை, தியான முறை மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றிற்கான விவரங்கள் தங்களால் போதிக்கப்படுகிறது என்றும் இவை தங்களால் இலவசமாக வழங்கப்படுவது இல்லை என்றும் இவை அனைத்திற்கும் ஒரு சிறிய தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டு அதற்கு ரசீதும் வழங்கப்படுகிறது என்றும் தங்களது வள்ளலார் கூட்டம் முற்றிலும் பணத்திற்காக இயங்குகிறது என்பது தவறானது என்றும் எந்த நேரத்திலும் வள்ளலார் கோட்டம் தனது வளர்ச்சிக்கு என எந்த ஒரு செயலையும் செய்வது கிடையாது என்றும் தங்களது அமைப்புக்கு நன்கொடை தருமாறு யாரையும் வற்புறுத்துவதோ ஆசை வார்த்தை கூறி நன்கொடை பெறுவதோ கிடையாது என்றும் தங்களது அமைப்பின் பணிகளுக்கு யார் நன்கொடை அளித்தாலும் அவர்களுக்கு ரசீது வழங்குவது உண்டு என்றும் அதற்கு வருமான வரி விலக்கு உண்டு என்றும் தங்களது கூட்டத்துக்கு யாராவது வந்தால் அவர்கள் மது போதை மற்றும் மாமிசம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிப்பதும் அதற்காக உறுதிமொழி விண்ணப்பத்தில் கையொப்பம் செய்யுமாறு கேட்பதும் பழக்கம் என்றும் அவ்வாறு உறுதிமொழி எடுத்தவர்கள் அதனைப் பின்பற்றுகிறார்களா என கேட்பது கிடையாது என்றும் தனி மனித ஒழுக்கத்துக்காக அத்தகைய உறுதிமொழி பெறப்படுகிறது என்றும் தங்களால் கூறப்படும் காய சித்தி உணவு முறையை பின்பற்றுவதாலும் மேற்கண்டவாறு உறுதி மொழியை வழங்குவதாலும் தங்களது வள்ளலார் கோட்டத்திற்கோ அல்லது எதிர் தரப்பினர்களுக்கோ எவ்வித நன்மையும் இல்லை என்றும் முதலாம் எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
07. புகாரில் தெரிவித்துள்ளது போல தங்களால் தெரிவிக்கப்படும் வள்ளலாரின் போதனைகளை முழுவதுமாக முறையீட்டாளர் பின்பற்றுபவர் அல்ல என்றும் அவர் தங்களது ஞானாலயா வள்ளுவர் கோட்டத்திற்கு எவ்வித பணிகளையும் செய்ததில்லை என்றும் எவ்வித நன்கொடையையும் தங்களுக்கு வழங்கவில்லை என்றும் அதற்கு ஆதாரமாக எந்த ரசீதையும் அவர் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை என்றும் ஒருவேளை நன்கொடை கொடுத்திருந்தாலும் அதைக் கொண்டு நற்பணிகள் செய்யப்பட்டு விட்டன என்றும் தெய்வங்களை நினைத்து உனக்கு நான் இன்னது இன்னது செய்துள்ளேன் – ஆனால், எனக்கு எதுவும் நடக்கவில்லை. ஆகவே, நான் செய்ததை எல்லாம் திருப்பித்தா என்பது ஒரு கேலிக்கூத்தான முட்டாள்தனமான செயலாகும் என்றும் முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினராகிய தாம் ஏற்படுத்திய ஞானாலயா வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வள்ளலாரை வணங்குவதற்கு அவ்வப்போது வருவார் என்றும் முறையீட்டாளரின் உறவினர் ஒருவருக்கு உடல் நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட போது தங்களது சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் உயரிய மருத்துவ சிகிச்சை எடுக்க அழைத்து வந்தார் அந்த சிகிச்சைக்கான பணத்தையே இன்னும் தரவில்லை என்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் வள்ளலாரின் போதனைகளை பின்பற்றி நடப்பதால் அவர்களை ஆன்மீக நிகழ்ச்சிகள் அருட்பணிகள் பெரியவர்களின் இல்ல நிகழ்வுகளுக்கு அனைவரும் அழைப்பது வழக்கமான ஒன்றாக இருந்ததால் முறையீட்டாளருக்கு அவர்கள் மீது பொறாமை ஏற்பட்டு விட்டது என்றும் கடந்த 2016 செப்டம்பரில் தம்மை சந்தித்து திருப்பூர் கோட்டத்தின் தலைமை பொறுப்பை தம்மிடம் தாருங்கள் என கேட்டார் என்றும் தாமும் அப்படியே ஆகட்டும் எனக் கூறினேன் என்றும் அதன் பின்னர் முறையீட்டாளர் சொந்த வேலை, தாயார் உடல் நலப் பாதிப்பு போன்றவற்றால் அன்னதானப் பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் தான் மீண்டும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்களை அன்னதானப் பணிகளை முறையீட்டாளர் மேற்கொள்ளாததால் அவர் வரும் வரை மீண்டும் தாங்களே அவற்றை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்தேன் என்றும் இதனால் கோபமடைந்த முறையீட்டாளர் இந்த புகாரை தாக்கல் செய்துள்ளார் என்றும் முதலாம் எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
08. தங்களுக்கும் முறையீட்டாளருக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லாத நிலையில் தாங்கள் ஒப்பந்தத்தை மீறுவதாக கூறுவது தவறானது என்றும் முறையீட்டாளர் தங்களுக்கு எவ்வித பணத்தையும் தராத நிலையில் அதனை கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இயலாது என்றும் முறையீட்டாளரின் புகாருக்கு எவ்வித ஆவண சாட்சியங்களும் இல்லை என்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முறையீட்டாளருக்கு வழக்கு மூலம் எதுவும் கிடையாது என்றும் ஒருவேளை முறையீட்டாளர் தங்களிடம் தொகை கொடுத்து சேவை பெற்றிருந்தாலும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கால வரையறைக்கு பின் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் முறையீட்டாளர் பத்து ஆண்டுகள் கழித்து தான் தொகை கொடுத்து சேவை பெற்றதாகவும் அந்த சேவையில் குறைபாடு இருப்பதாகவும் புகார் தாக்கல் செய்துள்ளது நிலைக்கத்தக்கது அல்ல என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் புரியப்படவில்லை என்றும் இதனால் முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் முதலாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
09. முறையீட்டாளரின் புகார் உண்மைக்கு புறம்பாகவும் மோசடியாகவும் உள்ளது என்றும் சட்டப்படி நியாயப்படி நிலை நிற்கத்தக்கதல்ல என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
10. முதலாம் எதிர் தரப்பினரின் ஞானாலயா வள்ளுவர் கோட்டத்தின் திருப்பூர் கிளையின் தலைவராகவும் செயலாளராகவும் தங்களில் இரண்டாம் எதிர் தரப்பினரும் மூன்றாம் எதிர் தரப்பினரும் உள்ளோம் என்றும் ஞானாலயா வள்ளுவர் கோட்டம் அமைப்பானது நடமாடும் சத்திய தருமசாலையை துவக்கி செயல்படுத்தி வருகிறது என்றும் இமயமலையில் உள்ள ஜோதி பர்வதத்தில் குழந்தைகளின் கல்விக்காக ஞானாலயா வள்ளலார் விசு மந்திர் என்ற ஆரம்ப பாட சாலையை நடத்தி வருகிறது என்றும் வள்ளலார் கருத்துக்களை எடுத்துரைக்கும் பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது என்றும் ஞானாலயா வள்ளுவர் கோட்டத்தில் முக்கியமான பணி பசித்தவர்களுக்கு உணவளிக்கும் அன்னதான பணி என்றும் இயலாதவர்களுக்கு அவர்களது இடத்துக்குச் சென்று அன்னதானம் வழங்கும் பணியையும் செய்து வருகிறது என்றும் புகாரில் தெரிவித்துள்ளவாறு காய சித்தி பயிற்சி என்று எதுவும் இல்லை என்றும் காய சித்தி என்பது ஓர் உணவு பழக்க வழக்க முறை என்றும் வாழ்க்கை சிறப்பதற்காக உணவு முறை, தியான முறை மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றிற்கான விவரங்கள் தங்களால் போதிக்கப்பட்டு வருகிறது என்றும் இவை தங்களால் இலவசமாக வழங்கப்படுவது இல்லை என்றும் இவை அனைத்திற்கும் ஒரு சிறிய தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டு அதற்கு ரசீதும் வழங்கப்படுகிறது என்றும் தங்களது வள்ளலார் கூட்டம் முற்றிலும் பணத்திற்காக இயங்குகிறது என்பது தவறானது என்றும் எந்த நேரத்திலும் வள்ளலார் கோட்டம் தனது வளர்ச்சிக்கு என எந்த ஒரு செயலையும் செய்வது கிடையாது என்றும் தங்களது அமைப்புக்கு நன்கொடை தருமாறு யாரையும் வற்புறுத்துவதோ ஆசை வார்த்தை கூறி நன்கொடை பெறுவதோ கிடையாது என்றும் தங்களது அமைப்பின் பணிகளுக்கு யார் நன்கொடை அளித்தாலும் அவர்களுக்கு ரசீது வழங்குவது உண்டு என்றும் அதற்கு வருமான வரி விலக்கு உண்டு என்றும் தங்களது கூட்டத்துக்கு யாராவது வந்தால் அவர்கள் மது போதை மற்றும் மாமிசம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிப்பதும் அதற்காக உறுதிமொழி விண்ணப்பத்தில் கையொப்பம் செய்யுமாறு கேட்பதும் பழக்கம் என்றும் காய சித்தி உணவு முறைக்கு யாரும் எளிதாக வரமாட்டார்கள் என்றும் அவ்வாறு வருபவர்களிடம் அந்த உணவு முறைக்கு வர விரும்புகிறேன் வள்ளல் பெருமான் கூறிய முறையான உணவுப் பழக்க வழக்கத்தை கடைபிடிப்பேன் என்று உறுதிமொழி தாங்கள் வாங்குகிறோம் இவ்வாறு உறுதிமொழி பெறுவது தவறானது கிடையாது என்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
11. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளது போல தங்களால் தெரிவிக்கப்படும் வள்ளலாரின் போதனைகளை முழுவதுமாக முறையீட்டாளர் பின்பற்றுபவர் அல்ல என்றும் அவர் தங்களது ஞானாலயா வள்ளுவர் கோட்டத்திற்கு எவ்வித பணிகளையும் செய்ததில்லை என்றும் எவ்வித நன்கொடையையும் தங்களுக்கு வழங்கவில்லை என்றும்அதற்கு ஆதாரமாக எந்த ரசீதையும் அவர் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை என்றும் ஒருவேளை நன்கொடை கொடுத்திருந்தாலும் அதைக் கொண்டு நற்பணிகள் செய்யப்பட்டு விட்டன என்றும் தெய்வங்களை நினைத்து உனக்கு நான் இன்னது இன்னது செய்துள்ளேன் – ஆனால், எனக்கு எதுவும் நடக்கவில்லை. ஆகவே, நான் செய்ததை எல்லாம் திருப்பித்தா என்பது ஒரு கேலிக்கூத்தான முட்டாள்தனமான செயலாகும் என்றும் கடந்த 2016 செப்டம்பரில் முதலாம் எதிர் தரப்பினரை சந்தித்து திருப்பூர் கோட்டத்தின் தலைமை பொறுப்பை தம்மிடம் தாருங்கள் என கேட்டார் என்றும் எதிர் தரப்பினரும் அப்படியே ஆகட்டும் என கூறினார் என்றும் அதன் பின்னர் முறையீட்டாளர் சொந்த வேலை, தாயார் உடல் நலப் பாதிப்பு போன்றவற்றால் அன்னதானப் பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் முதலாம் எதிர் தரப்பினர் மீண்டும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்களை அன்னதானப் பணிகளை முறையீட்டாளர் மேற்கொள்ளாததால் அவர் வரும் வரை மீண்டும் அவற்றை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்ததால் கோபமடைந்த முறையீட்டாளர் இந்த புகாரை தாக்கல் செய்துள்ளார் என்றும் முறையீட்டாளர் தங்களுக்கு எவ்வித பணத்தையும் தராத நிலையில் அதனை கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இயலாது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் புரியப்படவில்லை என்றும் இதனால் முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்கள்
12. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
13. முறையீட்டாளர் புகாரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்களிடம் ரூ 4,47,000/- பல தவணைகளில் செலுத்தியதாக கூறியுள்ளார். இதில் எதிர் தரப்பினர்கள் வழங்கும் காய சித்தி பயிற்சியை பெறுவதற்கு செப்டம்பர் 2013 முதல் ஜூன் 2016 வரை ரூபாய் 3000 /- மாதம் ஒன்றுக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் வசூலித்ததாக முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளார். இவ்வாறு 34 மாத தவணைகளில் செலுத்திய ரூ 1,02,000/- மட்டுமே. காய சித்தி பயிற்சி என்ற எதிர் தரப்பினர்கள் வழங்கும் சேவையைப் பெற நுகர்வோராக பணம் செலுத்தியதற்கு எவ்வித ஆதாரங்களையும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தில் சமர்ப்பிக்காததால் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் அல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
14. தமது ஞானாலயா வள்ளுவர் கோட்டம் போதிக்கும் வள்ளலார் சிந்தனைகளை முறையீட்டாளர் பின்பற்றுவோர் அல்ல என்றும் தமது அமைப்புக்கு முறையீட்டாளர் நன்கொடை எதுவும் வழங்கவில்லை என்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் என்றும் அவர்கள் தனது அமைப்பின் கொள்கைகளை பின்பற்றி செயல்படுபவர்கள் என்றும் முதலாம் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துவிட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு தமக்கு தலைவர் பதவி வழங்குமாறு முறையீட்டாளர் கேட்டதால் அப்படியே ஆகட்டும் என தான் தெரிவித்தேன் என்றும் அவர் சரிவர பணியாற்றாத காரணத்தால் அவர் மீண்டும் அந்த பணியை முழுமையாக செய்வதற்கு வரும் வரை முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் அந்த பணிகளை செய்யட்டும் என்று தெரிவித்ததாகவும் முதலாம் எதிர் தரப்பினர் தமது பதில்கள் தெரிவித்துள்ளது முரண்பாடாக உள்ளது.
15. ஞானாலயா வள்ளுவர் கோட்டம் என்பது முதலாம் எதிர் தரப்பினர் நடத்தும் தனிநபரின் அமைப்பா? அல்லது அறக்கட்டளைகள் சட்டப்படி பதிவு பெற்ற அமைப்பா? அல்லது அமலில் உள்ள வேறு ஏதேனும் சட்டப்படி பதிவு பெற்ற அமைப்பா? என்பது குறித்து இரண்டு தரப்பிலும் தெரிவிக்கப்படவில்லை. தனிநபர் அல்லது தனியார் அறக்கட்டளைகள் நடத்தும் ஆன்மீக மையங்களுக்கு செல்லும்போது அந்த இடங்களில் கூறப்படும் தல வரலாறு உண்மையா? என்பதைம் அத்தகைய இடங்களில் உள்ள சாமியார் என கூறப்படுபவர் அல்லது அங்கு சாமியார் ஒருவர் இருந்ததாக கூறப்படுவது குறித்த சங்கதிக ள் உண்மையா? என்பதைம் அத்தகைய மையங்களில் நடத்தப்படும் பயிற்சிகள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் ஆகியவற்றால் ஏற்படுவதாக கூறப்படும் பலன்கள் அறிவியல் பூர்வமாக சரியானதா? என்பதற்கான பதில்களை அறிந்து கொள்ளாமல் 10 ஆண்டுகள் ஒரு ஆசிரமத்தின் பக்தராக இருந்து விட்டு திடீரென ஆசிரமம் பணத்தை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என்று பயிற்சிக்காகவும் நன்கொடையாகவும் பணம் ரூ 4,47,000/- நன்கொடை வழங்கியதாகவும் எதிர் தரப்பினர்கள் ரசீது எதுவும் வழங்கவில்லை என்றும் இவ்வாறு சேவை குறைபாடு புரிந்துள்ளதால் தாம் செலுத்திய பணத்தை செலுத்திய பணத்தை அவர்கள் வழங்க ஆணையிட வேண்டும் என்று இந்த ஆணையத்தில் முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகார் ஏற்புடையது அல்ல.
16. தனிநபர் அல்லது தனியார் அறக்கட்டளைகள் நடத்தும் ஆன்மீக மையங்களின் தல வரலாறு, அத்தகைய இடங்களில் உள்ள சாமியார் என கூறப்படுபவர் அல்லது அத்தகைய இடங்களில் சாமியார் ஒருவர் இருந்ததாக கூறப்படுவது குறித்த சங்கதி, அத்தகைய மையங்களில் நடத்தப்படும் பயிற்சிகள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் ஆகியவற்றால் ஏற்படுவதாக கூறப்படும் பலன்கள் ஆகியவை உண்மைக்கு புறம்பானவையாக இருந்து அதன் மூலம் மக்களை ஏமாற்றி தீய லாபம் அடைவதாக முறையீட்டாளர் கூறுவது போல இருக்குமாயின் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளத்தக்க அரசு அமைப்புகளிடம் முறையீட்டாளர் முறையிட வேண்டும் அல்லது தக்க நீதிமன்றங்களை அணுக வேண்டும். முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களுக்கு நன்கொடையாக வழங்கியதாக கூறப்படும் பணத்தை எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்து விசாரிக்க இந்த ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.
17. முறையீட்டாளர் புகாரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்களிடம் ரூ 4,47,000/- பல தவணைகளில் செலுத்தியதாக கூறியுள்ளதில் எதிர் தரப்பினர்கள் வழங்கும் காய சித்தி பயிற்சியை பெறுவதற்கு செலுத்தியதாக கூறப்படும் ரூ 1,02,000/- தவிர முறையீட்டாளர் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்களிடம் ஞானாலயா வள்ளுவர் கோட்டம் என்ற அமைப்பின் பணிகளுக்காக மீதத்தொகை ரூ 3,45,000/- முழு மனதுடன் நன்கொடைகளாக செலுத்தப்பட்டதாகவும் அதனை எதிர்தரப்பினர்கள் திரும்ப வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986, பிரிவு 2(1) டி- ன்படியும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019, பிரிவு 2(7)- ன்படியும் ஒரு பொருளை அல்லது சேவையை விலை கொடுத்து பெற்றால் மட்டுமே எந்த ஒரு நபரும் பொருளை விற்றவர் அல்லது சேவையை வழங்குபவர் வழங்குபவரின் நுகர்வோர் ஆவார். முறையீட்டாளர் நன்கொடையாக கொடுத்ததாக சொல்லப்படும் பணத்திற்கு ஏதேனும் பொருளை வழங்குவதாக அல்லது ஏதேனும் சேவையை வழங்குவதாக எதிர் தரப்பினர்கள் உறுதிமொழி அளித்தார்கள் என்று முறையீட்டாளர் புகார் தெரிவிக்கவில்லை. எதிர்தரப்பினர்களால் ஞானாலயா வள்ளுவர் கோட்டத்திற்கு வாங்கப்படும் இடத்திற்கான கிரைய ஆவணத்தில் முறையீட்டாளரின் பெயர் வாங்குவோரின் தரப்பில் இடம் பெறும் என்றும் ஆசிரமத்தில் எழுப்பப்படும் கல் தூணில் முறையீட்டாளரின் பெயர் பதிக்கப்படும் என்றும் முறையீட்டாளர் கூறுவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதோடு இத்தகைய சங்கதிகள் குறித்து உரிமையியல் நீதிமன்றத்தில் மட்டுமே முடிவு செய்ய இயலும்.
18. மேற்கண்ட 13 முதல் 17 வகையான பத்திகளில் விவரிக்கப்பட்டுள்ள காரணங்களினால் முறையீட்டாளர் அவரது புகாரை தக்க சாட்சியம் மற்றும் சான்றாவணங்களுடன் நிரூபிக்கவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
19. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
20. முறையீட்டாளர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களிடம் சேவையைப் பெற பணம் செலுத்தினேன் எனக் கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாமல் புகார் தாக்கல் செய்து உள்ளது, முறையீட்டாளருக்கும் எதிர் தரப்பினர்களுக்கும் சேவை வழங்குபவர் - சேவை பெறுபவர் என்ற உறவு நிலை இல்லாமல் புகார் தாக்கல் செய்து உள்ளது, முறையீட்டாளர் செலுத்தியதாக கூறப்படும் நன்கொடை பணத்தை திரும்ப பெறுவதற்கு தீர்வு வழங்க அதிகாரம் இல்லாத இந்த ஆணையத்தில் புகார் தாக்கல் செய்துள்ளது போன்றவற்றால் நுகர்வோர் ஆணையத்துக்கு ஏற்பட்ட கால இழப்பு பணியாளர்களின் மனித உழைப்பு இழப்பு ஆகிய காரணிகளை கருதியும் வழக்கின் தன்மைகளை கருதியும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்,2019, பிரிவு 39(டி)-ன்படி தண்டனை சேத (punitive damage) இழப்பீடாக முறையீட்டாளர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் சட்ட உதவி நிதி கணக்கில் ரூ 10,000/- ஐ இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் இவ்வாறு பெறப்படும் பணம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 39 (2) -ன்படி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய ஆணையத்தின் சட்ட உதவி நிதி கணக்கில் செலுத்தப்படுவதோடு அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வழக்கின் தன்மைகளை கருதி வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. முறையீட்டாளர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களிடம் சேவையைப் பெற பணம் செலுத்தினேன் எனக் கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாமல் புகார் தாக்கல் செய்து உள்ளது, முறையீட்டாளருக்கும் எதிர் தரப்பினர்களுக்கும் சேவை வழங்குபவர் - சேவை பெறுபவர் என்ற உறவு நிலை இல்லாமல் புகார் தாக்கல் செய்து உள்ளது, முறையீட்டாளர் செலுத்தியதாக கூறப்படும் நன்கொடை பணத்தை திரும்ப பெறுவதற்கு தீர்வு வழங்க அதிகாரம் இல்லாத இந்த ஆணையத்தில் புகார் தாக்கல் செய்துள்ளது போன்றவற்றால் நுகர்வோர் ஆணையத்துக்கு ஏற்பட்ட கால இழப்பு, பணியாளர்களின் மனித உழைப்பு இழப்பு ஆகிய காரணிகளை கருதியும் வழக்கின் தன்மைகளை கருதியும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்,2019, பிரிவு 39(டி)-ன்படி தண்டனை சேத (punitive damage) இழப்பீடாக முறையீட்டாளர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் சட்ட உதவி நிதி கணக்கில் ரூ 10,000/- ஐ இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு பெறப்படும் பணம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 39 (2) -ன்படி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய ஆணையத்தின் சட்ட உதவி நிதி கணக்கில் செலுத்தப்படுவதோடு அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
03. வழக்கின் தன்மைகளை கருதி வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து என்னால் திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 08-08-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 20-01-2017 | இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட வழக்கறிஞர் அறிவிப்பு | அசல் |
ம.சா.ஆ.2 | 21-01-2017 | இரண்டாம் எதிர் தரப்பினரின் அஞ்சல் ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 21-01-2017 | மூன்றாம் எதிர் தரப்பினரின் அஞ்சல் ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சிகள்: திரு கேசவராவ்
எதிர் தரப்பினர்கள் சாட்சி: இல்லை
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.