புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 09-05-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் : 12-04-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 95/2022.
கோயம்புத்தூர் நகர், பிரஸ் காலனி, பாலாஜி கார்டன், இலக்கம் 229-ல் வசிக்கும் கிருஷ்ணன் மகன் சுரேஷ் -முறையீட்டாளர்
- எதிர்-
கோயம்புத்தூர் நகர், ரத்னபுரி, சாமி காலனி, இலக்கம் 45 -ல் உள்ள ஏபி எலக்ட்ரானிக்ஸ்உரிமையாளர் -எதிர் தரப்பினர்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திருவாளர்கள் திருவாளர்கள் சி சஜு மற்றும் ஏழு வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் எதிர் தரப்பினருக்கு திரு சி ஏ சம்பத் வழக்கறிஞர், முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 05-04-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளர்களின் புகார், எதிர்தரப்பினரின் பதில் உரை, ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து, எதிர் தரப்பினரால் தமக்கு ஏற்பட்ட இழப்பு ரூ 30,920/- மற்றும் அவரது செயலால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடு ரூ 1,00,000/- இந்த வழக்கின் செலவு தொகை ரூ 2,000/- ஆகியவற்றை தமக்கு எதிர்ப்பு தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையும் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. கடந்த 16-11-2011 ஆம் தேதியில் தான் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை விலைக்கு வாங்கியதாகவும் அதில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக எதிர் தரப்பினரிடம் தொலைக்காட்சி பெட்டியை 12-02-2016 ஆம் தேதியில் அளித்ததாகவும் அதற்கு பழுது நீக்க பாகங்களை மாற்றியதற்கும் சேவை கட்டணமாக எதிர் தரப்பினர் பெற்றுக் கொண்டார் என்றும் பின்னர் மீண்டும் தொலைக்காட்சி பெட்டியில் பழுது ஏற்பட்ட போது 13-02-2017 ஆம் தேதியில் எதிர் தரப்பினரிடம் தொலைக்காட்சி பெட்டியை அளித்ததாகவும் அதற்கு பழுது நீக்க பாகங்களை மாற்றியதற்கும் சேவை கட்டணமாக எதிர் தரப்பினர் பெற்று ரூபாய் பெற்றுக் கொண்டார் என்றும் இதன்பின்னரும் தொலைக்காட்சி பெட்டியில் பழுது ஏற்பட்டது என்றும் மீண்டும் தொலைக்காட்சி பெட்டியை எதிர் தரப்பினரிடம் அளித்த போது மீண்டும் பழுது நீக்க பாகங்களை மாற்றியதற்கும் சேவை வழங்கியதற்கும் ரூபாய் பெற்றுக் கொண்டார் என்றும் இதன் பின்னர் தான் தம்மை தவறான கருத்தை தெரிவித்து பாகங்களை மாற்றி தொலைக்காட்சி பெட்டியில் பாகங்களை மாற்றி அதற்கான கட்டணங்களையும் தேவையற்ற வகையில் பாகங்களை மாற்றியதற்கு சேவை கட்டணங்களையும் பெற்றுக்கொண்டது தமக்கு தெரியவந்தது என்றும் இது குறித்து அவரை அணுகி தாம் செலுத்திய பணத்தை திரும்பக் கேட்டபோது அவர் தரவில்லை என்றும் இது குறித்து வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டால் தமக்கு மிகுந்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பிற விவரங்களை பிற விவரங்களையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, எதிர் தரப்பினரால் தமக்கு ஏற்பட்ட இழப்பு ரூ 30,920/- மற்றும் அவரது செயலால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடு ரூ 1,00,000/- இந்த வழக்கின் செலவு தொகை ரூ 2,000/- ஆகியவற்றை தமக்கு எதிர்ப்பு தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையும் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
05. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
06. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி அவர் தங்களிடம் தொலைக்காட்சி பெட்டியை பழுது நீக்க கொடுத்தது உண்மை என்றும் அதில் ஏற்பட்ட பழுதின் காரணமாக பழுதை செய்வதற்கு பாகங்களை மாற்றியும் பழுது நீக்கத்தை முறைப்படி செய்தும் பாகங்களை மாற்றியதற்கும் பணி புரிந்ததற்கும் உரிய கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் தீய நோக்கத்துடன் முறையீட்டாளர் புகார் செய்துள்ளார் என்றும் தங்கள் தரப்பில் எவ்வித தவறும் ஏற்படவில்லை என்றும் அவர் தொலைக்காட்சி பெட்டியை சரிவர கையாளாமல் உள்ளூரில் உள்ள திறன் இல்லாத நபர்கள் மூலம் தொலைக்காட்சி பெட்டியை அவ்வப்போது ஏதாவது செய்து வந்ததன் காரணமாகவே தொலைக்காட்சி பெட்டியில் பிரச்சனைகள் ஏற்பட்டது என்றும் அதனை தாங்கள் சரி செய்து கொடுத்த நிலையில் தேவையற்ற புகாரை தாக்கல் செய்துள்ளார் என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் இதனால் முறையீட்டாளரின் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
8. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி அவரது புகாரை நிரூபிக்க இந்த ஆணையம் அவருக்கு பல வாய்ப்புகள் வழங்கியும் தமது தரப்பில் சாட்சியம் மற்றும் சான்றாவணங்களை முறையீட்டாளர் தாக்கல் செய்யவில்லை. ஆணையத்திலிருந்து இறுதி அறிவிப்பு அனுப்பப்பட்டும் புகாரியில் உள்ள முகவரியில் அவர் இல்லை என்று அனுப்பப்பட்ட அறிவிப்பு திரும்ப வந்துவிட்டது. இதனால் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் என்றும் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளதால் தான் கூறும் பரிகாரத்தை வழங்கத்தக்கவர்கள் என்றும் முறையீட்டாளர் நிரூபிக்கவில்லை என்று இந்த ஆணையும் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
9. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
10. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 12-04-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
உறுப்பினர் – I தலைவர்
முறையீட்டாளர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர்கள் தரப்பு சாட்சி: இல்லை
எதிர்தரப்பினர் சாட்சி: இல்லை
உறுப்பினர் – I தலைவர்