புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 11-10-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 09-12-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 171/2022.
சென்னை, அகரம், சோமசுந்தரம் 1வது தெரு, இலக்கம் 1/3 -ல் வசிக்கும் முகமது ரஹ்மதுல்லா மகன் முகமது நஸ்ருல்லா
-முறையீட்டாளர்
1. சென்னை, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இலக்கம் 240 -ல் உள்ள டி எஸ் மகாலிங்கம் அண்ட் சன்ஸ், நிர்வாக இயக்குனர்,
2. சென்னை, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இலக்கம் 240 -ல் உள்ள டி எஸ் மகாலிங்கம் அண்ட் சன்ஸ், இயக்குனர்,
3. சென்னை, அண்ணாநகர் கிழக்கு, இலக்கம்15 -ல் உள்ள உள்ள டி எஸ் மகாலிங்கம் அண்ட் சன்ஸ், திரு சசிகுமார்,
4. சென்னை, அண்ணாநகர், பன்னிரண்டாம் பிரதான சாலை, எட்டாவது தெரு, ஏ எப் பிளாக், இலக்கம் AH 3362/4 -ல் வசிக்கும் ஆர்கே கிருஷ்ணமூர்த்தி
- எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திரு ஏ டி ஜான் விக்டர் வழக்கறிஞர் முன்னிலையாகியும் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர்களுக்கு திருவாளர்கள் சுரேஷ் அசோசியேட்ஸ், வேல்முருகன், ராஜீவ், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் நான்காம் எதிர்தரப்பினர் மீது புகாரை வலியுறுத்தவில்லை என்று முறையீட்டாளர் தெரிவித்து அவர் மீதான புகார் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும் இந்த ஆணையத்தின் முன்பாக 17-11-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியமாக நிரூபண வாக்குமூலம், முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள் – 19, எதிர் தரப்பினரின் பதிலுரை, சாட்சியம், சான்றாவணங்கள் – 03 மற்றும் வாதங்கள், சமர்ப்பிக்கப்பட்ட முன் தீர்ப்பு நகல்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, எதிர் தரப்பினரின் அவர்களின் அஜாக்கிரதையால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் கொடுமைக்கு ரூ 7 லட்சம், தம்மிடம் கூடுதலாக மிகையான தொகையாக பெறப்பட்ட ரூ 2 லட்சம், தாம் வாகனத்தில் பழுது நீக்க செலவு தொகை ரூ 90 ஆயிரம், இந்த வழக்கின் செலவு தொகை ஆகியவற்றை முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
- தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் பணியில் உள்ளவர்கள் என்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் அவர்களது பிரதிநிதி என்றும் நான்காம் எதிர்தரப்பினர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்த் தரப்பினர்கள் மூலம் தாம் வாங்கிய வாகனத்தின் உரிமையாளர் என்றும் தாம் உபயோகப்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் (Used Car) ஒன்றை விலைக்கு வாங்க திட்டமிட்டு கடந்த 2017 மார்ச் மாதத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்களை அணுகினேன் என்றும் தமக்கு நான்கு சக்கர வாகனம் குறித்த விவரங்கள் எவையும் தெரியாது என்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் தமக்கு வாகனங்களை காட்டினார் என்றும் தாம் குழப்பத்தில் இருந்த நிலையில் மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் வகை 2008 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட TN 02 AF 4390 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தை வாங்கிக் கொள்ளுமாறு மூன்றாம் தரப்பினர் நிர்ப்பந்தம் செய்தார் என்றும் அதன் விலை ரூ 2,90,00/- என்று தெரிவிக்கப்பட்டது என்றும் எவ்வித விலை குறைப்பு செய்ய முன்வரவில்லை என்றும் மூன்றாம் எதிர் தரப்பினரின் வழிகாட்டுதலை தொடர்ந்து தான் மேற்படி தொகை கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டேன் என்றும் கடந்த 23-03-2017 ஆம் தேதியில் ரூ 10,000/- முன்பணமாக செலுத்தினேன் என்றும் 27-03-2017 ஆம் தேதியில் ரூ 2,80,000/- மீத தொகையை செலுத்தினேன் என்றும் எதிர் தரப்பின ர்களுக்கு தரகு தொகையாக ரூ 6,000/- மற்றும் வாகனத்தின் பெயர் மாற்றம் செய்ய ரூ 1000 எதிர் தரப்பினர்களிடம் செலுத்தி மேற்படி வாகனத்தை பெற்றுக் கொண்டு வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது அபாயகரமான சத்தம் வாகனத்தில் இருந்து வருவதை உணர்ந்து ஸ்ரீ சக்கரவர்த்தி டயர்ஸ் என்ற நிறுவனத்தில் வீல் பேலன்ஸிங் செய்தபோது அங்கிருந்த தொழில்நுட்ப பணியாளர் வாகனத்தின் Chasis முழுவதுமாக சேதமடைந்துள்ளது என தெரிவித்தார் என்றும் Kepico Motors India Private Limited என்ற நிறுவனத்தில் வாகனம் குறித்த வரலாறு முழுவதையும் எடுத்து பார்த்தபோது வாகனம் மோசமான நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொண்டேன் என்றும்தொடர்ந்து வாகனத்தை இயக்கினால் வாகனத்தின் எஞ்சின் விழுந்து விடும் நிலையில் வாகனம் இருந்தது என்றும் விசாரித்தபோது ஒன்பது ஆண்டுகள் பழமையான இந்த வகை வாகனத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் மட்டுமே என்றும் ஆனால் தம்மிடம் ரூ 2 லட்சம் கூடுதலாக எதிர் தரப்பினர்கள் பணம் பெற்று உள்ளார்கள் என்று அறிய வந்தது என்றும் மேலும் இந்த வாகனத்தை பழுது நீக்குவதற்கு தான் 90 ஆயிரம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் இதுகுறித்து எதிர்தரப்பினர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது எவ்வித பலனும் ஏற்படவில்லை என்றும் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எதிர் தரப்பினர்கள் தமக்கு எவ்வித பரிகாரத்தையும் வழங்கவில்லை என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கை சேவை குறைபாடு என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, எதிர் தரப்பினரின் அவர்களின் அஜாக்கிரதையால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் கொடுமைக்கு ரூ 7 லட்சம், தம்மிடம் கூடுதலாக மிகையான தொகையாக பெறப்பட்ட ரூ 2 லட்சம், தாம் வாகனத்தில் பழுது நீக்க செலவு தொகை ரூ 90 ஆயிரம், இந்த வழக்கின் செலவு தொகை ஆகியவற்றை முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும்தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர்தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
05. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
06. முறையீட்டாளர் தனது புகாரில் கூறியுள்ளது போல நான்காம் எதிர் தரப்பினருக்கு சொந்தமான வாகனத்தை விற்பனை செய்யும் தரகு பணியில் தாங்கள் ஈடுபட்டது உண்மை என்றும் முறையீட்டாளர் கூறியுள்ள தொகை செலுத்தி அந்த வாகனத்தை விலைக்கு வாங்கியது உண்மை என்றும் ஆனால் அவர் தங்களது நிறுவனத்திற்கு வந்தபோது அவருடன் ஒரு வாகன தொழில்நுட்ப பணியாளரை அழைத்து வந்து தங்களிடம் இருந்த பல வாகனங்களை பார்த்தார் என்றும் ஒருபோதும் புகாரில் கூறியுள்ள வாகனத்தை வாங்குமாறு தமது தரப்பில் வற்புறுத்த படவில்லை என்றும் புகாரில் கூறியுள்ளார் வாகனத்தை அவரது தொழில்நுட்ப பணியாளர் பரிந்துரைத்தார் என்றும் இதன் பின்பு முழுமையான திருப்தி அடைந்த பின்பே தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொண்டார் என்றும் இதில் தாங்கள் ஒரு முகவராக மட்டுமே செயல்பட்டு உள்ளோம் என்றும் வாகனத்தை எடுத்துச் செல்லும் வழியில் சத்தம் வந்து சக்கரவர்த்தி டயர்ஸ் என்ற நிறுவனத்தில் சோதித்தபோது வாகனத்தில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று கூறுவது உண்மையானது அல்ல என்றும் இரண்டு மாதங்கள் கழித்து தான் எங்களை அவர் சந்தித்தார் என்று கூறுவது உண்மை அல்ல என்றும் வாகன பதிவு புத்தகத்தை வாங்குவதற்காக வாகனத்தை பெற்ற பத்து நாட்கள் கழித்து அவர் வந்தார் என்றும் வாகனத்தில் என்ன பிரச்சனை என்று முழுமையாக தெரிவித்து அதற்கான ஆதாரங்களை முறையீட்டாளர் சமர்ப்பிக்கவில்லை என்றும் தங்கள் தரப்பில் மேற்படி வாகனத்திற்கு எவ்வித உத்தரவாதம் மற்றும் உறுதி எதுவும் வழங்கவில்லை என்றும் முறையீட்டாளர் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் எதுவும் வாகனத்தில் உள்ள குறைபாட்டை காட்டுவதாக இல்லை என்றும் புகாரை அவர் நிரூபிக்கவில்லை என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் இல்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
08. முறையீட்டாளர் தனது புகாரில் கூறியுள்ளது போல நான்காம் எதிர் தரப்பினருக்கு சொந்தமான வாகனத்தை விற்பனை செய்யும் தரகு பணியில் தாங்கள் ஈடுபட்டது உண்மை என்றும் முறையீட்டாளர் கூறியுள்ள தொகை செலுத்தி அந்த வாகனத்தை விலைக்கு வாங்கியது உண்மை என்றும் எதிர்தரப்பினர்கள் கூறும் நிலையில் முறையீட்டாளர் அவர்களின் நுகர்வோர் ஆவார்.
09. முறையீட்டாளர் தனது புகாரில் மேற்படி வாகனத்தை பெற்றுக் கொண்டு வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது அபாயகரமான சத்தம் வாகனத்தில் இருந்து வருவதை உணர்ந்து ஸ்ரீ சக்கரவர்த்தி டயர்ஸ் என்ற நிறுவனத்தில் வீல் பேலன்ஸிங் செய்தபோது அங்கிருந்த தொழில்நுட்ப பணியாளர் வாகனத்தின் Chasis முழுவதுமாக சேதமடைந்துள்ளது என தெரிவித்தார் என தெரிவித்துள்ளார் ஆனால் மேற்படி சக்கரவர்த்தி டயர்ஸ் நிறுவனத்திற்கு அவர் சென்று பரிசோதனை செய்து அதற்கான ரசீது வழங்கப்பட்டுள்ள நாள் பல வாரங்கள் கழித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
10. முறையீட்டாளர் தான் வாங்கிய வாகனத்தில் என்னென்ன பிரச்சனைகள் எந்தெந்த பாகங்களில் பிரச்சினைகள் என்பது குறித்த முழுமையான விபரங்கள் எதனையும் புகாரில் முறையீட்டாளர் தெரிவிக்கவில்லை. அவ்வாறான பிரச்சனைகளுக்கு நிபுணர் ஒருவரின் சாட்சியம் அல்லது கருத்துரை முறையீட்டாளர் தரப்பில் இந்த ஆணையத்தின் மூலம் தமது புகாரை நிரூபிக்க சமர்ப்பிக்கப்படவில்லை. ரூ 2 லட்சம் அதிகமான தொகைக்கு தமக்கு வாகனத்தை விற்பனை செய்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டும் நிலையில் சந்தையில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் மதிப்பு எவ்வளவு என்று காட்டுவதற்கான நிபுணர் ஒருவரின் கருத்துரை அல்லது சாட்சியம் இந்த ஆணையத்தின் முன்பாக முறையீட்டாளர் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை. உள்ளது உள்ளபடி என்ற நிலையில் வாகனத்தை சோதனை செய்து பணம் செலுத்தி வாங்கிக் கொண்ட நிலையில் அதன்பின்பு முறையீட்டாளர் வாகனத்திற்கு செய்யும் செலவுகளுக்கு எவ்வாறு எதிர்தரப்பினர்கள் பொறுப்பு என்பதை முறையீட்டாளர் நிரூபிக்கவில்லை. முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர்கள் தரகுப் பணியாளர்கள் அதாவது நான்காம் எதிர் தரப்பினர் இந்த விற்பனையில் முதல்வர் என்றும் மற்ற எதிர்த் தரப்பினர்கள் முகவர் என்றும் உள்ள நிலையில் முதல்வர் மீதான புகாரை வலியுறுத்தவில்லை என்று முறையீட்டாளர் இந்த ஆணையத்தில் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்காம் எதிர் தரப்பினருக்கு முழுப்பொறுப்பு உள்ள நிலையில் அவரை முறையீட்டாளர் விடுவித்தது சரியல்ல. சுருங்கக்கூறின், தகுந்த சாட்சியங்கள் மற்றும் சான்று ஆவணங்களுடன் முறையீட்டாளர் தமது புகாரை நிரூபிக்கவில்லை. மேலும் எதிர்த் தரப்பினர்கள் மீது நியாயமற்ற வணிக நடைமுறை என்ற குற்றச்சாட்டையும் முறையீட்டாளர் முன்வைக்கவில்லை. இந்நிலையில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரியவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2 & 3
11. முதலாவது எழு வினாவை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 09-12-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 23-03-2017 | முதலாம் எதிர்தரப்பினர் வழங்கிய தற்காலிக ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 27-03-2017 | முதலாம் எதிர்தரப்பினர் வழங்கிய ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 04-04-2017 | காப்பீட்டு ஆவணம் பெயர் மாற்றம் செய்த ஆதரவு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | - | வாகன பதிவு புத்தகம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | - | காப்பீட்டு ஆவணம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 04-04-2017 | காப்பீட்டுக்கு பணம் செலுத்திய ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 13-05-2017 | சக்கர ஆய்வறிக்கை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 15-04-2017 | மாருதி கார் டீலரின் ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | - | மாருதி கார் டீலரின் ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | - | மாருதி கார் டீலரின் ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.11 | - | மாருதி கார் டீலரின் ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.12 | - | மாருதி கார் டீலரின் ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.13 | 01-06-2017 | மாருதி கார் டீலரின் ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.14 | - | குடும்ப அட்டை நகல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.15 | - | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.16 | - | நான்காம் எதிர் தரப்பினருக்கு அனுப்பி திரும்பி வந்த அஞ்சல் உரை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.17 | - | அஞ்சலக ஒப்புதல் அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.18 | - | அஞ்சலக ஒப்புதல் அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.19 | - | அஞ்சலக ஒப்புதல் அட்டை | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | - | எதிர் தரப்பினரின் நிறுவன பதிவு சான்றிதழ் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | 27-03-2017 | வாகன ஒப்படைப்பு குறிப்பு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.3 | 19-05-2017 | முறையீட்டாளர் பணம் செலுத்திய ஆதரவு | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு முகமது நஸ்ருல்லா
எதிர்தரப்பினர்கள் சாட்சி: திரு சசிகுமார்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.