புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 14-02-2020
உத்தரவு பிறப்பித்த நாள் : 18-04-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 08/2020.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கத்தேரி கிராமம், மஞ்சு பாளையம், வண்ணாங்காடு, கதவு இலக்கம் 1/104 ல் வசிக்கும் செங்கோட கவுண்டர் மகன் நல்லசாமி -முறையீட்டாளர்
எதிர்
சென்னை, வேப்பேரி, புரசைவாக்கம் ,ரித்தர்டன் சாலை, இலக்கம் 900 -ல் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி இணையம், மேலாளர் - எதிர் தரப்பினர்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு என். கண்ணன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர் தரப்பினருக்கு திருவாளர்கள் எஸ். கண்மணி, அண்ணாமலை மற்றும் கே. வெங்கடேசன், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 10-04-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், எதிர் தரப்பினரின் பதில் உரை, முறையீட்டாளர் தரப்பு இரண்டு சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் அவரது சான்றாவணங்கள்-12, எதிர் தரப்பினரின் நிரூபண வாக்குமூலம், இரு தரப்பினர்களின் வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து, தமக்கு சொந்தமான ஆவணங்களை எதிர் தரப்பினர் தம்மிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.18 லட்சம் எதிர் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூ.10,000/- எதிர் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் இன்னும் தக்கது என கருதும் பிற ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள ஜே கே கே நடராஜன் நகர் கூட்டுறவு கட்டிட சங்கத்தில் தமது தந்தை செங்கோட கவுண்டர் என்பவர் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான மூன்று கிரைய ஆவணங்களில் பெறப்பட்ட சொத்துக்களை பொருத்த அளவில் அடமான ஆவணம் எழுதிக் கொடுத்து அசல் ஆவணங்களை ஒப்படைத்து கடந்த 18-08-1999 ஆம் தேதியில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வீட்டுக் கடன் பெற்றார் என்றும் தம்மை வாரிசாக விட்டுவிட்டு கடந்த 10-02-2006 ஆம் தேதியில் தனது தந்தை இறந்துவிட்டார் என்றும் இந்நிலையில் 04-03-2014 ஆம் தேதியில் கடனில் ரூ 81,765/- நிலுவையில் இருப்பதாக கூட்டுறவு சங்கத்தில் இருந்து கடிதம் வந்தது என்றும் ஏற்கனவே ரூபாய் இரண்டரை லட்சம் வரை செலுத்தியுள்ள நிலையில் மீண்டும் இவ்வாறு பணம் கேட்டு கடிதம் வந்தது தமக்கு அதிர்ச்சியை அளித்து கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு சென்று கேட்டபோது அசல் ரசீதுகளை கணக்கை சரிபார்க்க கொடுத்து விட்டு செல்லுமாறு கேட்டதால் நம்பி அதனையும் தான் கொடுத்துவிட்டு வந்தேன் என்றும் ஆனால் கணக்கை சரிபார்த்து பதில் சொல்லாமலும் அசல் ரசீதுகளையும் திரும்பத் தராமலும் காலம் கடத்தி வந்தார்கள் என்றும் இந்நிலையில் 13-12-2018 ஆம் தேதி என்று ஒருவர் தம்மை தமிழ்நாடு வீட்டு வசதி இணையத்தின் அலுவலர் என கூறிக்கொண்டு இன்னும் இரண்டரை லட்சம் பணம் செலுத்தினால் அசல் ஆவணங்களை திரும்பிப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார் என்றும் இந்நிலையில் கூட்டுறவு சங்க அலுவலகத்தை சென்று பார்த்தபோது அந்த அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது கண்டு அருகில் விசாரித்த போது மேற்படி சங்கம் நீண்ட நாட்களாக செயல்படுவதில்லை என்பதை அறிந்தேன் என்றும் தனது தரப்பில் முறையாக பணம் செலுத்தியுள்ள நிலையில் கூடுதலாக பணம் கேட்பதும் அசல் ஆவணங்களை திருப்பி தராமல் இருப்பதும் சேவை குறைபாடு என்றும் இத்தகைய சேவை குறைபாட்டை எதிர்த்தரப்பினரின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கம் புரிந்துள்ளதென்றும் அதனால் எதிர் தரப்பினருக்கும் பகர பொறுப்பு உண்டு என்றும் இதனால் எதிர் தரப்பினருக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பய னும் ஏற்படவில்லை என்றும் இதனால் எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பெற சங்கதிகளையும் தெரிவித்து முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
.
04. எனவே, தமக்கு சொந்தமான ஆவணங்களை எதிர் தரப்பினர் தம்மிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.18 லட்சம் எதிர் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூ.10,000/- எதிர் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் இன்னும் தக்கது என கருதும் பிற ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
05. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
06. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளபடி சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தில் சொத்தின் அசல் ஆவணங்களை ஒப்படைத்து அடமான ஆவணம் எழுதி கொடுத்து கடன் பெற்றது உண்மை என்றும் ஆனால் தங்களுக்கும் முறையீட்டாளர் தரப்பிற்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லை என்றும் முறையீட்டாளர் தரப்பில் கடன் பெற்ற சங்கம் தங்களுக்கு கீழ் கூட்டமைப்பில் இருப்பதாகவும் இத்தகைய சங்கங்களுக்கு கடன் கொடுக்கும் வசதி இல்லை என்ற நிலையில் கடன் விண்ணப்பங்களை பெற்று தங்களிடம் ஒப்படைத்து பணம் பெற்று தனி நபர்களுக்கு கடன் வழங்கி வந்தார்கள் என்றும் அவ்வாறு கடன் வழங்கிய பின்னர் அவர்களது அசல் ஆவணங்களை தங்கள் வசம் ஒப்படைப்பார்கள் என்றும் இந்நிலையில் முறையீட்டாளர் தரப்பில் எவ்வித தொகையும் செலுத்தப்பட்டதாக தங்களது ஆவணங்களில் இல்லை என்றும் செலுத்தப்பட்டதாக கூறப்படும் விவரங்களை அவரே நிருபிக்க கடமைப்பட்டவர் என்றும் தற்போது சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்தை துணைப் பதிவாளர் ஒருவர் தலைமையில் நிர்வகிப்பதாகவும் இந்த பிரச்சனையை அங்கு சென்று தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தங்களால் தொகை வழங்கப்பட்ட நிலையில் கடன் சங்கங்கள் தங்களுக்கு திருப்பி செலுத்தாத போது கடன் சங்கங்களால் தொகை வழங்கப்பட்ட தனிநபர்களை சந்தித்து கடனை செலுத்துமாறு கேட்பது தங்கள் வழக்கம் என்றும் அவ்வாறு ஒரு முறை தங்களது அலுவலர் முறையீட்டாளரை சந்தித்து கடனை செலுத்துமாறு கேட்டது உண்மை என்றும் கடனை முறைப்படி செலுத்தாத காரணத்தால் தற்போது அவர் முறையீட்டாளர் தரப்பில் செலுத்தி வைக்க வேண்டிய தொகை ரூ 5,94,250/-என்றும் தாங்கள் நேரடியாக முறையீட்டாளர் தரப்பிற்கு சேவை புரிந்து வராக செயல்படாத நிலையில் தங்கள் மீது வழக்கு தொடர இயலாது என்றும் இதனால் தாங்கள் எவ்வித சேவை குறைபாடும் புரியவில்லை என்றும் முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளார்
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
8. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளபடி நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள ஜே கே கே நடராஜன் நகர் கூட்டுறவு கட்டிட சங்கத்தில் புகாரில் சொல்லப்படும் கடன் பெறப்பட்டுள்ளது என்ற நிலையில் முறையீட்டாளர் அந்த சங்கத்தின் நுகர்வோர் ஆவார். அந்த சங்கம் செயல்படாத நிலை ஏற்பட்டால் அந்த சங்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் அரசின் துறை சார்ந்த அதிகாரியின் நுகர்வோராக முறையீட்டாளர் இருப்பார். ஆனால், இந்த புகாரில் எதிர் தரப்பினராக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் மேலாளர், அதாவது தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி கூட்டமைப்பின் பொது மேலாளருக்கும் முறையீட்டாளருக்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. இந்நிலையில் எதிர் தரப்பினருக்கு முறையீட்டாளர் நுகர்வோர் அல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
9. புகாரில் சொல்லப்பட்டுள்ள கடன் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தில் பெறப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும் வழக்கில் முற்றிலும் வரவு செலவு குறித்த விவரங்களை விசாரணை செய்ய வேண்டிய நிலையிலும் சுருக்கமுறை விசாரணையின் மூலம் இந்த ஆணையத்தால் புகாரி ல் உள்ள பிரச்சனையை தீர்ப்பது இயலாது என்பதோடு இத்தகைய பிரச்சனைகள் தக்க நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் எவ்வாறு இருப்பினும் புகாரில் சொல்லப்பட்டுள்ள சங்கதிகளை முறையீட்டாளர் தக்க சாட்சியங்கள் மற்றும் சான்றாவணங்கள் மூலம் நிரூபிக்க வில்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. எனவே எதிர் தரப்பினர் புகாரின் கூறியுள்ள படி சேவை குறைபாடு புரிந்துள்ளார் என முடிவு செய்ய இயலாது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
10. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
11. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 18-04-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
உறுப்பினர் – I தலைவர் முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 30-03-1974 | கிரைய ஆவணம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 30-06-1976 | கிரைய ஆவணம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 03-05-1999 | கிரைய ஆவணம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | - | ரசீதுகள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | - | கடன் கணக்கு புத்தகம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 10-02-2006 | இறப்புச் சான்றிதழ் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 14-11-2017 | வாரிசு சான்றிதழ் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 04-02-2019 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | 06-02-2019 | அஞ்சல் ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 24-01-2019 | வில்லங்கச் சான்று கூட்டுறவு சங்க அறிவிப்பு சுவாதீன சான்று | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.11 | - | சுவாதீன சான்று | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.12 | 04-03-2014 | கூட்டுறவு சங்க அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு நல்லசாமி, திரு தங்கராஜ்
எதிர்தரப்பினர்கள் சாட்சி: இல்லை
உறுப்பினர் – I தலைவர்.