புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 16-12-2013
உத்தரவு பிறப்பித்த நாள் : 16-05-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 68/2013.
நாமக்கல் வட்டம், போதுபட்டி அஞ்சல், ரக்கம் பாளையம், நான்கு சாலையில் உள்ள பழனியாண்டி கவுண்டர் மகன் பி வீரப்பன்
-முறையீட்டாளர்
- எதிர்-
01. நாமக்கல் நகர், ரங்கநாதர் சன்னதி தெருவில் உள்ள இந்தியன் வங்கி, உதவி பொது மேலாளர் கிளை மேலாளர்,
02. சென்னை சென்னையில் தலைமையகம், இந்தியன் வங்கி, பொது மேலாளர்,
03. சேலத்தில் உள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகம், மண்டல மேலாளர், - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திரு டி. வி. ரகு, வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு. எஸ் வினோத், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 26-04-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள்-5, எதிர் தரப்பினர்களின் பதிலுரை, அவர்கள் தரப்பு சாட்சியம்-1, சான்றாவணங்கள்-10, மற்றும் இருதரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டிய தொகை ரூ 2,39,867/- ஐ தமது கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட நாள் முதல் 18 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செயலால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 2,00,000/- இழப்பீட்டையும் இந்த வழக்கின் செலவு தொகையையும் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் தன்மையைக் கருதி தக்கது என கருதும் இதர பரிகாரங்களை ஆணையம் வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாம் முதலாம் எதிர் தரப்பினரிடம் கடன் கேட்டு விண்ணப்பித்தேன் என்றும் அப்போது அவர் ரூபாய் 4 லட்சம் பிணைய வைப்பீடு (security deposit) செய்ய வேண்டும் என்று தெரிவித்ததில் தாமும் அவ்வாறே முதலாம் எதிர் தரப்பினரிடம் வைப்பீடு செய்தேன் என்றும் பின்னர் கடன் வசதி தமக்கு வேண்டாம் என்று கருதி அதனை எதிர் தரப்பினர்களிடம் தெரிவித்து விட்டு தான் செய்த வைப்பீட்டை திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை என்றும் அந்த வைப்பீடு ஏழு ஆண்டுகளுக்கு செய்யப்பட்டது என்றும் ஏழாண்டுகள் கழித்து தாம் முதலாம் எதிர் தரப்பினரை தொடர்பு கொண்டு தமது வைப்பீட்டை புதுப்பிக்கும்படி கேட்டுக் கொண்டேன் என்றும் முதலாம் எதிர் தரப்பு வங்கி ஊழியர் ரூ 20,000/- ஐ எடுத்துக்கொண்டு ரூ 7,80,000/- மட்டும் வைப்பீடு செய்து தமக்கு ரசீதை 15-06-2011 ஆம் தேதியில் வழங்கினார் என்றும் மேற்கண்டவாறு ரூ 20,000/- ஐ வங்கி ஊழியர் எடுத்துக் கொண்டதை மேலாளிடம் தெரிவித்த பின்னர் தமக்கு அந்த தொகை வழங்கப்பட்டது என்றும் மேற்கண்டவாறு வைப்பீடு செய்யப்பட்ட தொகை 13-06-2014 ஆம் தேதியில் முதிர்ச்சி பெற்றது என்றும் இந்த வைப்பீட்டுக்கு வரக்கூடிய வட்டி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தமது சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்றும் இந்நிலையில் தான் எவ்வித அறிவுறுத்தலையும் முதலாம் எதிர் தரப்பினருக்கு வழங்காத நிலையில் தமது வைப்பீட்டுத் தொகை முழுவதும் தமது சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது என்றும் பின்னர் ரூ 2,39,867/- ஆம் தேதியில் தம்முடைய அறிவுறுத்தல் இல்லாமலும் தமது கையொப்பத்தை பெறாமலும் தமது சேமிப்பு கணக்கிலிருந்து கழிக்கப்பட்டு விட்டது என்றும் தாம் பெற்ற கடனுக்கு வரவு வைப்பதற்காக மேற்படி தொகை தமது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விட்டதாக தமக்கு முதலாம் எதிர் தரப்பினர் வாய் மொழியாக தெரிவித்தனர் என்றும் தாம் எவ்வித கடனையும் பெறாத நிலையில் இவ்வாறு தமது பணத்தை எடுத்துக் கொண்டது மோசடியான செயல் என்றும் இதுகுறித்து 07-09-2013, 04-10-2013 ஆம் தேதிகளில் எதிர் தரப்பினருக்கு வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பினேன் என்றும் இதற்கு தவறான தகவலுடன் தனக்கு பதில் அளிக்கப்பட்டது என்றும் அந்த பதிலில் தாம் ₹3,80,000 கடன் பெற்றிருந்தேன் என்றும் அதில் ரூ 2,40,000/- செலுத்தி விட்டேன் என்றும் 01-09-20009 ஆம் தேதியில் கடன் கணக்கில் ரூ 1,10,000/- செலுத்திய போது தவறுதலாக அசல் வைப்பீடு ரசீது வழங்கப்பட்டு விட்டது என்றும் தணிக்கையாளர் ஆய்வுக்கு பின்னர் இது தெரிய வந்ததால் தமது வைப்பீடு முடிக்கப்பட்டு சேமிப்புக் கணக்குக்கு மாற்றப்பட்டு வங்கிக்கு வர வேண்டிய பணம் எடுத்துக் கொள்ளப்பட்டது என மோசடியாக தெரிவித்துள்ளார்கள் என்றும் இவ்வாறு எவ்வித கடனையும் தான் பெறாத சூழ்நிலையில் தமது வைப்பீட்டுத் தொகையை தமது அறிவுறுத்தல் இல்லாமல் முடித்து சேமிப்பு கணக்கிற்கு முழு பணத்தையும் மாற்றி கடனுக்காக என்று ரூ 2,39,867/- பிடித்தம் செய்து கொண்டது எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டிய தொகை ரூ 2,39,867/- ஐ தமது கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட நாள் முதல் 18 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செயலால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 2,00,000/- இழப்பீட்டையும் இந்த வழக்கின் செலவு தொகையையும் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் தன்மையைக் கருதி தக்கது என கருதும் இதர பரிகாரங்களை ஆணையம் வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
05. முதலாம் எதிர்த்தரப்பினர் (as per amended complaint)பதில் உரை தாக்கல் செய்து அதனை மற்ற எதிர் தரப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
06. முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினர் வங்கியில் கடந்த 28-10-2008 ஆம் தேதியில் ரூபாய் 7 லட்சத்து 80 ஆயிரத்தை வைப்பீடு (Fixed Deposit: TDR- TM/BTDP 0350887) செய்தார் என்றும் இந்நிலையில் 02-02-2009 ஆம் தேதியில் மேற்படி வைப்பீடு ரசீதின் அடிப்படையில் ரூபாய் 3 லட்சத்து 80 ஆயிரம் கடன் (No:820788009) பெற்றார் என்றும் 09-03-2009 ஆம் தேதியில் ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் 17-04-2009 ஆம் தேதியில் ரூபாய் 60 ஆயிரம் அவர் கடன் கணக்கிற்கு அவரது சேமிப்பு கணக்கு மூலமாக செலுத்தியுள்ளார் என்றும் 01-09-2009 ஆம் தேதியில் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை அவரது சேமிப்பு கணக்கில் செலுத்தி விட்டு கடன் கணக்கிற்கு அதனை மாற்றிக் கொள்ளுமாறு தெரிவித்து அசல் வைப்பீடு ரசீதை கேட்டார் என்றும் தவறுதலாக கடன் கணக்கு பதிவேடுகளை பார்க்காமல் கடன் கணக்கு முடிக்கப்பட்டு விட்டது என்று கருதி அசல் வைப்பீடு ரசீதை முறையீட்டாளருக்கு வழங்கி விட்டோம் என்றும் இந்நிலையில் மேற்படி வைப்பு தொகை முதிர்ச்சி அடைந்த பின்னர் முறையீட்டாளர் வங்கிக்கு வந்து அதனை மீண்டும் மூன்றாண்டுகள் புதுப்பித்து தருமாறு கேட்டதன் அடிப்படையில் அவருக்கு அதனை புதுப்பித்து புதிதாக வைப்பீடு ரசீது(No: 800324323) வழங்கப்பட்டது என்றும் மேலே கூறப்பட்டுள்ளபடி அவரால் பெறப்பட்ட கடன் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்றும் ஆனால் எவ்வித பிணையமும் இன்றி தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தது என்றும் கடந்த 2013 ஏப்ரல் மாதத்தில் தணிக்கையாளர்கள் வங்கியில் ஆய்வு செய்தபோது முறையீட்டாளர் வங்கிக்கு பணம் செலுத்த வேண்டியது இருந்தது தெரியவந்தது என்றும் உடனடியாக முறையீட்டாளரை தொடர்பு கொண்டு கடனுக்காக செலுத்த வேண்டிய தொகையை கேட்ட போது அவர் தரவில்லை என்றும் இதனால் வங்கிக்கு முறையீட்டாளர் செலுத்த வேண்டிய தொகையை பெறுவதற்காக அவரது வைப்பீடு ரசீது முழுமையாக முடிக்கப்பட்டு அந்தத் தொகை அவரது சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டு வங்கிக்கு வரவேண்டிய தொகை ரூ 2,39,867/- எடுத்துக் கொண்டு அவரது கடன் கணக்கு முடிக்கப்பட்டு விட்டது என்றும் முறையீட்டாளர் அனுப்பிய அவரது முதலாவது சட்ட அறிவிப்புக்கு பதில் தரவில்லை என்பது தவறானது என்றும் அதற்கு பதில் தர தயாராகிக் கொண்டிருந்தபோது அவரது இரண்டாவது சட்ட அறிவிப்பு கிடைக்கப்பெற்று பின்னர் தமது தரப்பில் மேலே சொல்லப்பட்ட விவரங்களை தெரிவித்து பதில் அறிவிப்பு முறையீட்டாளருக்கு தரப்பட்டது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் தங்களது பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
08. முறையீட்டாளர் தங்களது வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார் என்றும் நிரந்தர வைப்பு கணக்கு வைத்திருந்தார் என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலில் ஒப்புக் கொண்டுள்ளதால் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
09. தாம் முதலாம் எதிர் தரப்பினரிடம் கடன் கேட்டு விண்ணப்பித்தேன் என்றும் அப்போது அவர் ரூபாய் 4 லட்சம் பிணைய வைப்பீடு (security deposit) செய்ய வேண்டும் என்று தெரிவித்ததில் தாமும் அவ்வாறே முதலாம் எதிர் தரப்பினரிடம் வைப்பீடு செய்தேன் என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் முதலாம் எதிர் தரப்பினரிடம் கடன் கேட்டு விண்ணப்பிப்பதற்கு எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. மேலும் தாம் ரூபாய் 4 லட்சம் வைப்பீடு செய்ததாக கூறும் நிலையில் அதனை எந்த தேதியில் வைப்பீடு செய்தார் என்று அவரது புகாரில் தெரிவிக்கவில்லை. மேலும், ஏழாண்டுகளுக்கு வைப்பீடு செய்ததாக கூறுவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தமது வைப்பு தொகைக்கு வட்டியை தமது சேமிப்புக் கணக்கில் பெற்றுக் கொண்டதாக கூறும் அவர் தாம் முதலீடு செய்த ரூபாய் 8 லட்சத்துக்கான ரசீதை புதுப்பிக்க சென்றேன் என்று கூறுவதும் முரண்பாடாக உள்ளது. அவ்வாறு புதுப்பிக்க சென்ற போது வங்கி ஊழியர் ரூபாய் 20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டார் என்றும் மேலாளரிடம் புகார் தெரிவித்து அதனை பெற்றேன் என்று கூறுவதும் நம்பும்படியாக இல்லை.
10. முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினர் வங்கியில் கடந்த 28-10-2008 ஆம் தேதியில் ரூபாய் 7 லட்சத்து 80 ஆயிரத்தை வைப்பீடு (Fixed Deposit: TDR- TM/BTDP 0350887) செய்தார் என்றும் இந்நிலையில் 02-02-2009 ஆம் தேதியில் மேற்படி வைப்பீடு ரசீதின் அடிப்படையில் ரூபாய் 3 லட்சத்து 80 ஆயிரம் கடன் (No:820788009) பெற்றார் என்றும் எதிர் தரப்பினர்கள் கூறும் நிலையில் முறையீட்டாளர் கடன் பெறுவதற்கு அவரது விண்ணப்பம் அல்லது குறைந்தபட்சம் அவரது எழுத்துப்பூர்வமான வேண்டுகோள் எதுவும் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கப்படவில்லை. 09-03-2009 ஆம் தேதியில் ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் 17-04-2009 ஆம் தேதியில் ரூபாய் 60 ஆயிரம் அவர் கடன் கணக்கிற்கு அவரது சேமிப்பு கணக்கு மூலமாக செலுத்தியுள்ளார் என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்து அதற்கு ஆதாரமாக அவர்கள் தரப்பில் சான்றாவணங்கள் 5,6 ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், அவற்றில் எதிலும் முறையீட்டாளரின் கையொப்பம் இல்லை. ஆனால் கடந்த 02-02-2009 ஆம் தேதியில் ரூ 3,80,000/- முறையீட்டாளரின் சேமிப்பு கணக்கிட்டு மாற்றப்பட்டுள்ளது என்பதையும் அதனை வரும் வங்கியில் இருந்து எடுத்துள்ளார் என்பதையும் எதிர் தரப்பினர்கள் சான்றாவணங்கள் ஆகியன காட்டுகின்றன. இந்த ஆவணங்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்த வேறு சாட்சியங்களோ சான்றாவணங்களோ கிடையாது. அவர் கடந்த 01-09-2009 ஆம் தேதியில் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை கடன் கணக்குக்காக செலுத்தி விட்டு அசல் நிரந்தர வைப்பு ரசீதை கேட்டதாகவும் அதனை தாங்கள் தவறுதலாக திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் எதிர்த் தரப்பினர்கள் கூறுகின்றனர். ஆனால், அதே வைப்புத் தொகை ரசீதை சமர்ப்பித்து முறையீட்டாளர் மீண்டும் 15-06-2011 ஆம் தேதியில் புதிதாக வைப்பு தொகை ரசீதை ரூ 7,80,000/- க்கு முதலாம் எதிர் தரப்பினடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார் (முறையீட்டாளர் தரப்பு முதலாவது சான்றாவணம்) என்பது குறிப்பிடத்தக்கது. முறையீட்டாளர் வைப்பீடு மீது கடன் தொகை பெற்றிருந்தால் இவ்வாறு புதுப்பிக்க வாய்ப்பு இல்லை என இந்த ஆணையம் கருதுகிறது.
11. மேற்கண்ட 09, 10 ஆம் பத்திகளில் விவரிக்கப்பட்டுள்ள காரணங்களினால் முறையீடாளர் மற்றும் எதிர் தரப்பினர்கள் தரப்பில் வைப்புத் தொகையின் மீது கடன் பெற்றதாக கூறப்படுவது பல முரண்பாடுகளை உள்ளடக்கியதாக உள்ளது. 02-02-2009 ஆம் தேதியில் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களிடம் கடன் பெற்றதாக கூறப்படும் நிலையில் அதனை வசூலிக்க காலம் வரையறை சட்டப்படி 01-02-2012 ஆம் தேதி வரை மட்டுமே எதிர் தரப்பினர்களுக்கு உரிமை உள்ளது. தங்களால் வழங்கப்பட்ட கடன் எந்த வித பிணையமும் இல்லாமல் இருந்து வந்ததால் 2013 ஏப்ரல் மாதத்தில் தணிக்கையாளர்கள் வங்கியில் ஆய்வு செய்தபோது முறையீட்டாளர் வங்கிக்கு பணம் செலுத்த வேண்டியது தெரியவந்தது என்றும் உடனடியாக முறையீட்டாளரை தொடர்பு கொண்டு கடனுக்காக செலுத்த வேண்டிய தொகையை கேட்ட போது அவர் தரவில்லை என்றும் இதனால் வங்கிக்கு முறையீட்டாளர் செலுத்த வேண்டிய தொகையை பெறுவதற்காக அவரது வைப்பீடு ரசீது முழுமையாக முடிக்கப்பட்டு அந்தத் தொகை அவரது சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டு வங்கிக்கு வரவேண்டிய தொகை ரூ 2,39,867/- எடுத்துக் கொண்டு அவரது கடன் கணக்கு முடிக்கப்பட்டு விட்டது என்றும் எதிர் தரப்பினர்கள் தரப்பில் கூறுவது சட்டப்படி சரியானது அல்ல என்று இந்த ஆணையம் கருதுகிறது. முறையீட்டாளர் ரூ 2,39,867/- தர வேண்டும் என்ற நிலை இருந்தால் அவரது வைப்புத் தொகையை முடித்து பணம் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக தாங்கள் கேட்டோம் என எதிர் தரப்பினார்கள் கூறும் நிலையில் குறைந்தபட்சம் அவருக்கு எழுத்து பூர்வமாக ஒரு அறிவிப்பு அனுப்பி இருக்க வேண்டியது சட்டபூர்வமான எதிர்பார்ப்பாகும். குறைந்தபட்சம் முறையீட்டாளர் சட்ட அறிவிப்பு அனுப்புவதற்கு முன்பாக அவரது கணக்கை முடித்து பணத்தை எடுத்துக் கொண்ட பின்பாவது முறையீட்டாளருக்கு முறையான கடிதத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எதனையும் எதிர் தரப்பினர்கள் மேற்கொண்டதாக தெரியவில்லை. முறையீட்டாளரின் ரூ 2,39,867/- ஐ தன்னிச்சையாக முதலாம் எதிர் தரப்பினர் கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டது சரியானது அல்ல என்றும் அவர் உரிமையியல் சட்ட நடவடிக்கைகள் மூலம் அதனைப் பெற முயற்சித்திருக்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் தங்களிடம் கடன் பெற்றார் என்பதை நிரூபிக்கும் வகையில் முறையீட்டாளரின் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்காதது, அவரது வைப்புத் தொகையை அவரது அறிவுறுத்தல் அல்லது அவருக்கு தகவல் தராமல் முன்கூட்டியே முடித்தது, அவ்வாறு முடிக்கப்பட்ட பின்னர் தங்களுக்கு சேர வேண்டிய தொகையை எடுத்துக் கொண்டது குறித்து எவ்வித அறிவிப்பும் அவருக்கு வழங்காதது போன்றவை முதலாம் எதிர்த்தரப்பினரின் சேவை குறைபாடுகள் என்றும் இந்நிலையில் மேற்படி தொகை முறையீட்டாளருக்கு வழங்கப்பட வேண்டிய ஒன்று என்றும் இதற்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்களுக்கு பகர பொறுப்பு உண்டு என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2 & 3
12. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு புகாரில் அவர் கேட்கும் பரிகாரங்கள் வழங்கத்தக்கனவா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. முறையீட்டாளரின் வங்கிக் கணக்கில் எதிர் தரப்பினர்கள் பிடித்தம் செய்து கொண்ட ரூ 2,39,867/- மற்றும் ரூ 2,39,867/- க்கு ஆண்டொன்றுக்கு 12 சதவீத வட்டியை 15-06-2011 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை கணக்கிட்டு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 50,000/- இழப்பீட்டை முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இந்த வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 5 ஆயிரத்தை முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் வேறு எந்த பரிகாரங்களும் கிடையாது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் வங்கிக் கணக்கில் எதிர் தரப்பினர்கள் பிடித்தம் செய்து கொண்ட ரூ 2,39,867/- மற்றும் ரூ 2,39,867/- க்கு ஆண்டொன்றுக்கு 12 சதவீத வட்டியை 15-06-2011 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை கணக்கிட்டு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும்.
02. முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 50,000/- இழப்பீட்டை முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும்.
03. இந்த வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 5 ஆயிரத்தை முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.
. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 16-05-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
மு.சா.ஆ.1 | 15-06-2011 | நிரந்தர வைப்பு ரசீது | அசல் |
மு.சா.ஆ.2 | - | வங்கி கணக்கு புத்தகம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.3 | 07-09-2013 | முதலாவது வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.4 | 04-10-2013 | இரண்டாவது வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.5 | 31-10-2013 | எதிர்தரப்பினரின் பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எத.சா.ஆ.1 | - | வங்கி கணக்கு புத்தகம் | சான்றிட்ட நகல் |
எத.சா.ஆ.2 | - | கடன் கணக்கு தாள் | சான்றிட்ட நகல் |
எத.சா.ஆ.3 | 02-02-2009 | முறையீட்டாளர் பெற்ற கடன் அவரது சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டதற்கான ஆதரவு | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.4 | 02-02-2009 | முறையீட்டாளர் பெற்ற கடன் தொகையை வங்கியில் இருந்து எடுத்ததற்கான ஆதரவு | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.5 | 09-03-2009 | முறையீட்டாளர் ரூ 1, 80,000/- சேமிப்பு கணக்கில் செலுத்தியதற்கான ஆதரவு | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.6 | 17-04-2009 | ரூ 1, 80,000/- கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டதற்கான ஆதரவு | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.7 | 17-04-2009 | முறையீட்டாளர் சேமிப்பு கணக்கிலிருந்து ரூ 60,000/- எடுக்கப்பட்டதற்கான ஆதரவு | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.8 | 17-04-2009 | ரூ 60,000/- கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டதற்கான ஆதரவு | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.9 | 24-04-2013 | முறையீட்டாளரின் நிரந்தர வைப்பு ரசீதில் சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்ட மற்றும் எடுக்கப்பட்ட விவரம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.10 | 02-04-2013 | முறையீட்டாளரின் நிரந்தர வைப்பு ரசீதில் சேமிப்பு கணக்கில் ரூ 2,39,867/- எடுக்கப்பட்ட மற்றும் கடன் கணக்கிற்கு செலுத்தப்பட்ட விவரம் | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு வீரப்பன்
எதிர்தரப்பினர்கள் சாட்சி: திரு எஸ் முரளி உதவி மேலாளர் இந்தியன் வங்கி
உறுப்பினர் – I தலைவர்.