புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 09-03-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 02-12-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 55/2022.
சென்னை, சிதலபாக்கம், சங்கராபுரம் லேஅவுட், நான்காவது தெரு, விஜய் அவன்யூ, பிளாட் எண் 63/1 பி -ல் வசிக்கும் வெங்கடேசன் -முறையீட்டாளர்
சென்னை, அண்ணாசாலை, இலக்கம் 603, மூன்றாவது மாடி, ராணி சீதை ஹாலில் உள்ள வில்லிங்டன் சாரிட்டபிள் டிரஸ்ட் கௌரவ செயலாளர் - எதிர் தரப்பினர்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்காக திருவாளர்கள் எஸ். காமேஸ்வரன், கே. இந்து பிரியா. வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும், எதிர்தரப்பினருக்காக திருவாளர்கள் கே. பாலாஜி, ஏ. சரவணன், டீ. சுரேகா , வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 15-11-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் புகார், முறையீட்டாளர் தரப்பில் சாட்சியம்-1, அவரது 08 சான்றாவணங்கள், எதிர் தரப்பினரின் பதில் உரை, அவரது சாட்சியம்-1, அவரது 01 சான்றாவணம், சமர்ப்பிக்கப்பட்ட முன் தீர்ப்பு நகல்கள், வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து தாம் செலுத்திய முன் பணம் ரூ. 10,83,000/- ஐ எதிர்தரப்பினர் தமக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு மற்றும் மன உளைச்சல் போன்ற சேதங்களுக்கு எதிர்த் தரப்பினர் தமக்கு ரூ 5,00,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவுத் தொகையை எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. கடந்த 01-07-2015 அன்று ரூ 10,83,000/- செலுத்தி 11-02-2016 & 12-02-2016 ஆகிய தேதிகளில் நடக்க திட்டமிட்ட தனது மகளின் திருமணத்துக்கு எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தை பதிவு செய்தேன் என்றும் தவிர்க்க இயலாத சூழ்நிலை காரணமாக மேற்படி திருமணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடந்த 27-07-2015 ஆம் தேதி எதிர் தரப்பினரிடம் தாம் முன்பதிவு செய்ததை ரத்து செய்து தாம் செலுத்திய மேற்படி தொகையை திரும்ப வழங்குமாறு கேட்டேன் என்றும் ஆனால் அதிர்ச்சி அடையும் வகையில் கடந்த 06-08-2015 ஆம் தேதிய கடிதத்தின் மூலம் முன்பதிவு தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது என எதிர்தரப்பினர் தெரிவித்தார் என்றும் மீண்டும் தமது முன் பணத்தை திரும்ப வழங்குமாறு 21-08-2015 ஆம் தேதியில் எதிர் தரப்பினருக்கு ஒரு கடிதம் எழுதினேன் என்றும் அதற்கு பதில் எதுவும் இல்லாத காரணத்தால் 02-11-2015 ஆம் தேதியில் வழக்கறிஞர் மூலம் பணத்தை திருப்பித் தருமாறு அறிவிப்பு அனுப்பினேன் என்றும் ஆனால் எவ்வித பலனும் ஏற்படவில்லை என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எதிர்த் தரப்பினர் தாம் செலுத்திய பணத்தை திருப்பி தர முடியாது என்றும் வேறு தேதியை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்த நிலையில் தமக்கு மீண்டும் திட்டமிட்டு திருமணத்தை நடத்தும் நிலை இல்லாத சூழ்நிலை இருந்த காரணத்தால் பணத்தை திரும்பப் பெறுவது அவசியமாக இருந்தது என்றும் இந்த தொகை மறுக்கப்பட்ட நிலையில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் என்பதால் மிகுந்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் திருமண மண்டபத்தை முன்பதிவு செய்த பின்னர் மூன்று வார காலத்தில் அதனை ரத்து செய்தேன் என்றும் அதாவது திருமண மண்டபத்தை வாடகைக்கு பதிவு செய்த நாளிலிருந்து சுமார் 7 மாத காலத்திற்கு முன்பாகவே முன்பதிவு ரத்து செய்து எதிர் தரப்பினருக்கு தெரிவித்து விட்டேன் என்றும் இதனால் எதிர் தரப்பினருக்கு எவ்வித சிரமமும் ஏற்படவில்லை என்றும் தாம் செலுத்திய தொகையை திரும்ப வழங்க வேண்டிய கடமை எதிர் தரப்பினருக்கு உண்டு என்றும் இதனை தர மறுப்பது சேவை குறைபாடு என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. எனவே, தாம் செலுத்திய முன் பணம் ரூ. 10,83,000/- ஐ எதிர்தரப்பினர் தமக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு மற்றும் மன உளைச்சல் போன்ற சேதங்களுக்கு எதிர்த் தரப்பினர் தமக்கு ரூ 5,00,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவுத் தொகையை எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்று தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
06. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர்தரப்பினர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.
07. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி முறையீட்டாளர் கடந்த 01-07-2015 அன்று ரூ 10,83,000/- செலுத்தி 11-02-2016 & 12-02-2016 ஆகிய தேதிகளில் நடக்க திட்டமிட்ட மகளின் திருமணத்துக்கு திருமண மண்டபத்தை முன்பதிவு செய்தது உண்மை என்றும் முறையீட்டாளர் தங்களது திருமண மண்டபத்தை வாடகைக்கு முன் பதிவு செய்தபோது ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்துள்ளார் என்றும் அந்த ஒப்பந்தத்தில் உள்ள விதி எண் 3 -ன் படி முன்பதிவு ரத்து செய்யப்பட்டால் செலுத்தப்பட்ட தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது என்றும் ரத்து செய்யப்படும் சூழ்நிலை ஏற்படும்போது முன்பதிவு செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் மாற்று தேதியில் மண்டபம் வேறு நபர்களுக்கு வாடகைக்கு விடாமல் இருந்தால் நுகர்வோர் தேதியை மட்டும் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் மேற்படி விதிகளின்படி முறையீட்டாளரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றும் இதனால் ஒப்பந்தப்படி அவர் செலுத்திய பணம் திரும்ப பெறுவதற்கு வழங்கப்படமாட்டாது என்றும் அவர் முன்பதிவு செய்து இருந்த நாட்களில் வேறு எந்த நபருக்கும் தாங்கள் திருமண மண்டபத்தை வாடகைக்கு விடவில்லை என்றும் முன்பதிவு செய்து ரத்து செய்வதால் தங்களுக்கு பெருத்த பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால் பணத்தை திரும்ப வழங்குவதில்லை என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்ய வேண்டியது என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் எதிர்த் தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
08. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
09. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி முறையீட்டாளர் கடந்த 01-07-2015 அன்று ரூ 10,83,000/- செலுத்தி 11-02-2016 & 12-02-2016 ஆகிய தேதிகளில் நடக்க திட்டமிட்ட மகளின் திருமணத்துக்கு திருமண மண்டபத்தை முன்பதிவு செய்தார் என்பதை எதிர்தரப்பினர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதி ஆகும்.
10. முறையீட்டாளர் கடந்த 27-07-2015 ஆம் தேதிய கடிதத்தின் மூலம் மேற்படி முன்பதிவை ரத்து செய்ய வேண்டுகோள் சமர்ப்பித்தார் என்பதை எதிர்தரப்பினர் மறுக்கவில்லை. முன்பதிவு செய்த மூன்று வாரங்களில் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முறையீட்டாளர் முன்வைத்துள்ளார் என்பதும் அவர் மண்டபத்தை முன்பதிவு செய்த நாட்களுக்கு சுமார் 7 மாத காலத்திற்கு முன்பே ரத்து செய்ய கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் சாட்சியும் மற்றும் சான்று ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.
11. முறையீட்டாளர் தங்களது திருமண மண்டபத்தை வாடகைக்கு முன் பதிவு செய்தபோது ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்துள்ளார் என்றும் அந்த ஒப்பந்தத்தில் உள்ள விதி எண் 3 -ன் படி முன்பதிவு ரத்து செய்யப்பட்டால் செலுத்தப்பட்ட தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது என உள்ளது என்றும் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார். முறையீட்டாளர் தரப்பு சான்றாவணம் 8 என்பது முறையீட்டாளர் எதிர் தரப்பினருக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்புக்கு எதிர்த் தரப்பினர் வழங்கிய பதிலாகும். இருதரப்பினரும் கையொப்பம் செய்யப்பட்ட மேலே கூறப்படும் ஒப்பந்தத்தின் நகலை எதிர்தரப்பினர் இந்த ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்யவில்லை. இவ்வாறு தாக்கல் செய்யப்படாத சூழ்நிலையில் ஒப்பந்த விதிகள் என்று எதிர்தரப்பினர் கூறும் நிபந்தனைகள் எதுவும் ஏற்புடையதல்ல என்று இந்த ஆணையம் கருதுகிறது. மேலும் திருமண மண்டபத்தை முன்பதிவு செய்வது மற்றும் அது தொடர்பான வரைமுறைகள் எதுவும் எதிர் தரப்பினர் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்து குறியீடு செய்யவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
12. இந்த சூழ்நிலையில் தமது முன்பதிவை ரத்து செய்யுமாறு கோரிய முறையீட்டாளருக்கு முன்பதிவு தொகை முழுவதையும் வழங்கப்படமாட்டாது என்று எதிர்தரப்பினர் கூறுவது ஏற்புடையதல்ல. மேலும் திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்ட நாட்களுக்கு சுமார் 7 மாதங்களுக்கு முன்பு முறையீட்டாளர் தனது முன்பதிவை ரத்து செய்துள்ளார் என்பதை பார்க்கும் போது அவர் மிக அதிக காலத்திற்கு முன்பே ரத்து செய்யும் கோரிக்கையை தெரிவித்துவிட்டார் என்றும் இதன் மூலம் முன் பதிவு செய்யப்பட்ட நாட்களில் வேறு நபர்களுக்கு வாடகைக்கு விட எதிர் தரப்பினருக்கு அதிக வாய்ப்பு இருந்தது என்றும் கருதவேண்டியுள்ளது. மேலும் எதிர்தரப்பினர் முறையீட்டாளர் தங்களது திருமண மண்டபத்தை வாடகைக்கு முன் பதிவு செய்த நாட்களில் தாங்கள் யாருக்கும் மண்டபத்தை வாடகைக்கு விடவில்லை எனகூறும் நிலையில் திருமண மண்டப முன்பதிவு பதிவேட்டை மேற்படி கூற்றை நிரூபிக்கும் வகையில் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை.
13. முறையீட்டாளர் தரப்பின் 7 முன் தீர்ப்பு நகல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள விவரங்கள் அவரது கோரிக்கை சரியானது என்பதை காட்டுவதாக அமைந்துள்ளன. மேற்கண்ட காரணங்களினால் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு அவர் செலுத்திய முன்பண தொகையை திரும்ப வழங்க கடமைப்பட்டவர் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
15. முதலாவது எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு அவர் செலுத்திய முன்பண தொகையை திரும்ப வழங்க கடமைப்பட்டவர் என்றும் முடிவு மேற்கொள்ளப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு எவ்வித எவ்வளவு தொகை திரும்ப எதிர்தரப்பினர் அளிக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பொதுவாக இத்தகைய முன் பதிவுகளை ரத்து செய்து முன் பணத்தை திரும்ப கேட்கின்ற போது எவ்வளவு நாட்களில் முன்பதிவு ரத்து செய்யப்பட்டால் எவ்வளவு ரத்து கட்டணம் கழித்துக்கொண்டு முன்பதிவு பணம் திரும்ப வழங்கப்படும் என்ற விதிமுறைகள் இருக்க வேண்டும். ரயில் பயணச்சீட்டு முன்பதிவை ரத்து செய்கிறபோது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக ரத்து செய்தால் எவ்வளவு தொகை திரும்ப வழங்கப்படும் என்பது பல்வேறு பிரிவுகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைப்போல எதிர் தரப்பினரின் திருமண மண்டபத்தை முன்பதிவு செய்த பின்பு எவ்வளவு நாட்களுக்கு முன்பு ரத்து செய்தால் எவ்வளவு தொகை திரும்ப வழங்கப்படும் என்ற விதிமுறைகள் இருக்க வேண்டியது அவசியமாகும். மாறாக முன்பதிவை ரத்து செய்தால் மொத்த பணமும் திரும்ப வழங்கப்படமாட்டாது என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை.
16. உதாரணமாக ஒரு திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துவிட்டு மண்டபத்தை வாடகைக்கு முன்பதிவு செய்த தேதிக்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பாக ரத்து செய்தால் 10 சதவீத ரத்து கட்டணம் என்றும் ஐந்து மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தால் 20 சதவீத ரத்து கட்டணம் என்றும் நான்கு மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தால் 30 சதவீத ரத்து கட்டணம் என்றும் மூன்று மாதங்களுக்கு முன்பு பதிவு செய்து ரத்து செய்தால் 40 சதவீத ரத்து கட்டணம் வேண்டும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தால் 50 சதவீத கட்டணம் என்றும் ஒரு மாதத்திற்கு முன்பு ரத்து செய்தால் 60 சதவீத கட்டணம் என்றும் ஒரு மாத காலத்திற்கு உள்ளாக ரத்து செய்தால் 70 சதவீத கட்டணம் என்றும் நிர்ணயம் செய்வது சரியானதாக இருக்கும் என்று இந்த ஆணையம் கருதுகிறது.
17. திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துவிட்டு ரத்து செய்துள்ள இந்த வழக்கின் தன்மைகளை ஆய்வு செய்து பார்க்கும்போது ஆறு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் எவ்வளவு தொகையை திருப்பி தர வேண்டும் என்ற விதிமுறைகள் இந்த ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்யப்படாத நிலையில் முன்பண தொகையில் 5 % பிடித்தம் செய்து கொண்டு எதிர் தரப்பினர் மீத தொகையை முறையீட்டாளருக்கு வழங்க வேண்டுமென்று அதாவது ரூ 10,28,850/- முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் திருப்பி வழங்க வேண்டும் என்றும் தவறினால் 25-12-2022 தேதி முதல் ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 10,28,850/- தொகையுடன் முறையீட்டாளர்களுக்கு முதலாம் எதிர் தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
18. எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முன்பண தொகையில் 5 % பிடித்தம் செய்து கொண்டு ரூ 10,28,850/- ஐ எதிர்த் தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் திருப்பி வழங்க வேண்டும். தவறினால் 02-12-2022 தேதி முதல் ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 10,28,850/- தொகையுடன் முறையீட்டாளர்களுக்கு எதிர் தரப்பினர் வழங்க வேண்டும்.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 02-12-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 01-07-2015 | ரசீது ரத்து கடிதம் மூன்றாவது கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 27-07-2015 | ரத்து கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 06-08-2015 | இரண்டாவது ரத்து கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 21-08-2015 | ரத்து கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 02-01-2015 | மூன்றாவது ரத்து கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 08-12-2016 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 15-12-2016 | ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 27-12-2016 | பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | - | திருமணப் பதிவேடு | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு வெங்கடேசன்
எதிர் தரப்பினர் தரப்பு சாட்சி: திரு பழனியப்பன்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.