புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 22-06-2022
உத்தரவு பிறப்பித்த நாள் : 10-05-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 26/2022.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், ஆர். கவுண்டம்பாளையம், திருநகர், இலக்கம் 3/322 -ல் வசிக்கும் காங்கேய கவுண்டர் மகன் கே செங்கோட்டையன் -முறையீட்டாளர்
- எதிர்-
01. சென்னை, அண்ணா சாலை, இலக்கம் 763 -ல் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,
02. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், ஆண்டகலூர் கேட், திருச்செங்கோடு சாலை, இலக்கம் 5/ 159 ஏ -ல் உள்ள மேலாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, குருக்கபுரம் கிளை, - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு அவரே முன்னிலையாகியும் எதிர்தரப்பினருக்கு திரு. பி. குமரேசன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் (முதலாம் எதிர் தரப்பினர் ஆணையத்தின் அறிவிப்பை பெற்றுக்கொண்டு ஆஜராகவும் பதில் தரவும் இல்லை) இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 17-04-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம், முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவண ங்கள்-19, எதிர் தரப்பினரின் பதிலுரை, அவரது சாட்சியம், சான்றாவணங்கள்-4 மற்றும் இருதரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 2019, பிரிவு 35-ன்படிமுறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, எதிர் தரப்பினர்களின் வசம் 31-08-2021 ஆம் தேதி முதல் உள்ள தமது வைப்பு தொகை ரசீதை அசல் ஒப்பந்தத்தில் உள்ளது போல புதுப்பித்து தமக்கு எதிர் தரப்பினர்கள் திரும்ப வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் மீது தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் 27-04-2021 ஆம் தேதியில் தமது 18 வைப்பு தொகை ரசீதுகள் தானாகவே புதுப்பிக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டதை மீண்டும் ஒப்பந்தப்படி புதுப்பிப்பு செய்ய வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு எதிர் தரப்பினர்கள் ரூ 1,30,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. கடந்த 04-07-2016 ஆம் தேதியில் ரூபாய் 5 ஆயிரத்தை இரண்டாம் எதிர் தரப்பினர் வங்கியில் வைப்பீடு செய்து 317604000000080 என்ற எண்ணில் ரசீது பெற்றேன் என்றும் வைப்பீடு செய்வதற்கான விண்ணப்பத்தில் வைப்பீடு முதிர்ச்சி அடையும் போது தன்னிச்சையாகவே புதுப்பித்துக் கொள்ளுமாறு விருப்பம் (auto renewal option) தெரிவிக்கப்பட்டது என்றும் இந்த வகையில் மேற்படி தமது வைப்பீடு 04-07-2021 ஆம் தேதியில் தானாகவே புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் ஆனால் அவ்வாறு புதுப்பிக்கப்படாததால் 31-08-2021 ஆம் தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினரை சந்தித்து புகார் தெரிவித்து தமது மேற்படி வைப்பீடு ரசீதில் புதுப்பிப்பு விவரங்களையும் இதர விவரங்களையும் பதிவு செய்து தருமாறு கேட்டபோது அதனைப் பெற்றுக் கொண்டவர் 04-09-2021 ஆம் தேதியில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார் என்றும் 04-09-2021 ஆம் தேதியில் மீண்டும் தாம் இரண்டாம் எதிர் தரப்பினரை சந்தித்தபோது தமது மேற்படி வைப்பீடு ரசீதை தரவில்லை என்றும் மாறாக அவருக்கும் முதலாம் எதிர் தரப்பினரின் சேவை மேலாளருக்கும் நடைபெற்ற தகவல் பரிவர்த்தனை அடங்கிய மின்னஞ்சலை இரண்டாம் எதிர் தரப்பினர் தம்மிடம் வழங்கினார் என்றும் அதில் “04-07-2021 ஆம் தேதியில் மேற்படி வைப்பீட்டை புதுப்பிக்க தானாகவே வாடிக்கையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்றும் ஆனால் மேற்படி வைப்பீட்டுக் கணக்கு தன்னிச்சையாக தவணை தேதியில் புதுப்பிக்கப்படவில்லை என்றும் தங்களால் 14 நாட்களுக்குப் பிறகு முந்தைய தேதியில் புதுப்பிக்கப்பட இயலவில்லை என்றும் இந்த கணக்கை புதுப்பிக்க தேவையான உதவி செய்ய வேண்டும்” என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் அனுப்பிய கோரிக்கைக்கு “தற்போது புதுப்பிக்க வேண்டிய காலத்தை விட கூடுதலாக நாட்கள் ஆகிவிட்டதால் புதிதாக வைப்பீடு கணக்கை தொடங்கி கொள்ளுமாறும் இடைப்பட்ட நாட்களுக்கு உரிய வட்டியை செலுத்துமாறு அறிவுறுத்தி” சேவை மேலாளர் தெரிவித்துள்ளார் என்றும் அசல் வைப்பீடு ரசீதை தருமாறு கேட்டபோது இரண்டாம் எதிர் தரப்பினர் தம்மை அவமரியாதை செய்து மிரட்டினார் என்றும் தற்போது வரை அசல் வைப்பீடு ரசீது அவரது கைவசம் உள்ளது என்றும் இந்த விவரங்கள் சிசிடிவி கேமரா பதிவுகளில் இருக்கும் என்றும் இதன் பின்னர் 06-09-2021, 07-09-2021 ஆம் தேதிகளில் தான் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு தமது வைப்பீடு ரசீதின் நகலையும் கணக்கு தொடங்கப்பட்ட படிவத்தின் நகலையும் கேட்டு கடிதம் எழுதினேன் மின்னஞ்சல் அனுப்பினேன் என்றும் அவர் எவ்வித பதிலையும் தராததால் தலைமை அலுவலகத்திற்கு புகார் அனுப்பினேன் என்றும் 20-09-2021 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினர் வைப்பீடு ரசீதின் ஜெராக்ஸ் நகலையும் நகலை தமக்கு அனுப்பினார் என்றும் கணக்கு தொடங்கப்பட்ட படிவத்தை அனுப்பவில்லை என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. முதலாம் எதிர் தரப்பினர் அனுப்பிய கடிதத்தில் தான் முதலாம் எதிர் தரப்பினர் வங்கியில் செய்திருந்த 18 வைப்பீடு ரசீதுகளுக்கு வழங்கியிருந்த முதிர்ச்சி அடையும் போது தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் விருப்பத்தை ரத்து செய்வதாக தெரிவித்தார் என்றும் தாம் ஒரு போதும் இவ்வாறு தமது மேற்படி விருப்பத்தை ரத்து செய்யுமாறு கூறவில்லை என்றும் இவ்வாறு இரண்டாம் எதிர் தரப்பினர் செய்தது சேவை குறைபாடு என்றும் பின்னர் மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து ஆம்புட்ஸ்மேன் அமைப்பிடம் புகார் அளித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் முதலாம் எதிர் தரப்பினர் மேலே விவரிக்கப்பட்டவாறு சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சந்ததிகளையும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. எனவே, எதிர் தரப்பினர்களின் வசம் 31-08-2021 ஆம் தேதி முதல் உள்ள தமது வைப்பு தொகை ரசீதை அசல் ஒப்பந்தத்தில் உள்ளது போல புதுப்பித்து தமக்கு எதிர் தரப்பினர்கள் திரும்ப வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் மீது தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் 27-04-2021 ஆம் தேதியில் தமது 18 வைப்பு தொகை ரசீதுகள் தானாகவே புதுப்பிக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டதை மீண்டும் ஒப்பந்தப்படி புதுப்பிப்பு செய்ய வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு எதிர் தரப்பினர்கள் ரூ 1,30,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
06. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார். முதலாம் எதிர் தரப்பினர் ஆணையத்தின் அறிவிப்பை பெற்றுக்கொண்டு ஆஜராகவும், பதில் தரவும் இல்லை
07. முறையீட்டாளர் புகாரில் கூறுவது போல கடந்த 04-07-2016 ஆம் தேதியில் ரூபாய் 5 ஆயிரத்தை இரண்டாம் எதிர் தரப்பினர் வங்கியில் வைப்பீடு செய்து 317604000000080 என்ற எண்ணில் ரசீது பெற்றார் என்றும் அந்த வைப்பீடு முதிர்ச்சி அடையும் 24 மாதங்களுக்கு முன்பே முதிர்ச்சின்போது தானாகவே புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அறிவுறுத்தலை தங்களுக்கு வாய்மொழியாக (oral instruction) வழங்கினார் என்றும் இதே போலவே அவரது மற்ற 17 வைப்பீடு ரசீதுகளுக்கும் முதிர்ச்சி அடையும் போது தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் விருப்பத்தை தங்களுக்கு வாய்மொழியாக (oral instruction) வழங்கி அவர் திரும்ப பெற்றுக் கொண்டார் என்றும் இதன் காரணமாகவே வைப்பீடு முதிர்ச்சி அடைந்த நாளில் தங்களால் புதுப்பிக்க இயலவில்லை என்றும் அவர் புதுப்பிக்க கூறியபோது முதிர்ச்சி அடைந்தபோது வைப்பீடு உள்ள தொகைக்கும் அதன் பின்னர் புதுப்பிக்கப்பட்ட காலத்துக்கும் இடையில் உள்ள உரிய வட்டி விகித தொகையும் சேர்த்து அவரது வைப்பீடு புதுப்பிக்கப்பட்டது என்றும் இதனால் முறையீட்டாளருக்கு எவ்வித பொருளாதார இழப்பும் ஏற்படவில்லை என்றும் முறையீட்டாளர் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிய புகாருக்கு தங்களது தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது என்றும் முறையீட்டாளரின் புகாரில் உண்மை இல்லை என்று ஆம்பூட்ஸ்மேன் அமைப்பும் அவரது புகாரை தள்ளுபடி செய்து விட்டது என்றும் தங்களது தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் முறையீட்டாளின் புகார் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் தமது பதில் உரையில் இரண்டாம் எதிர் தரப்பினர் தெரிவித்துள்ளார்
08. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
09. முறையீட்டாளர் புகாரில் கூறுவது போல கடந்த 04-07-2016 ஆம் தேதியில் ரூபாய் 5 ஆயிரத்தை இரண்டாம் எதிர் தரப்பினர் வங்கியில் வைப்பீடு செய்து 317604000000080 என்ற எண்ணில் ரசீது பெற்றார் என்றும் மேலும் 17 வைப்பீடுகளை செய்துள்ளார் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் தங்கள் பதிலில் ஒப்புக் கொண்டுள்ளதாலும் இரண்டாம் எதிர் தரப்பினரின் தலைமை முதலாம் எதிர் தரப்பினர் என்பதாலும் முறையீட்டாளர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
10. முறையீட்டாளர் இரண்டாம் எதிர் தரப்பினர் வங்கியில் 18 ரசீதுகள் மூலம் வைப்பீடு செய்தார் என்று இரண்டாம் எதிர் தரப்பினர் பதிலில் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவர் தமது வைப்பீட்டுக்கான விண்ணப்பங்களில் முதிர்ச்சி அடையும் நாளில் தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் விருப்பத்தை தேர்வு செய்து அறிவுறுத்தலை வழங்கியிருந்தார் என்பதையும் இரண்டாம் எதிர் தரப்பினர் பதிலில் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் வாய்மொழியாக தமது வைப்பீடுகள் முயற்சி அடையும் நாளில் தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் விருப்பத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக முறையீட்டாளர் தங்களிடம் அறிவுறுத்தியதால் தானாக புதுப்பிக்கும் வசதி அவரது வைப்பீடுகளில் ரத்து செய்யப்பட்டது என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் தமது பதிலில் தெரிவித்துள்ளார். இரண்டாம் எதிர் தரப்பினரின் இத்தகைய பதில் ஏற்புடையது அல்ல எழுத்து மூலமாக வைப்பீடு செய்வதற்கு விண்ணப்பங்களை பெற்று அதில் முதிர்ச்சி அடையும் நாளில் வைப்புத் தொகையை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் விருப்பத்தையும் எழுத்து வடிவில் பெற்ற பின்னர் அதனை நீக்கம் செய்ய வேண்டும் என்று எனில் முறையீட்டாளரின் எழுத்துப்பூர்வமான வேண்டுகோள் இல்லாமல் ஒருதலைப் பட்சமாக இரண்டாம் எதிர் தரப்பினர் அதனை ரத்து செய்து இருப்பது சட்டப்படியும் நியாயப்படியும் சரியல்ல என்றும் இத்தகைய இரண்டாம் எதிர் தரப்பினரின் செய்கை சேவை குறைபாடு என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
11. தமது வைப்பீடு 04-07-2021 ஆம் தேதியில் தானாகவே புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் ஆனால் அவ்வாறு புதுப்பிக்கப்படாததால் 31-08-2020 ஆம் தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினரை சந்தித்து புகார் தெரிவித்து தமது மேற்படி வைப்பீடு ரசீதில் புதுப்பிப்பு விவரங்களையும் இதர விவரங்களையும் பதிவு செய்து தருமாறு கேட்டபோது அதனைப் பெற்றுக் கொண்டவர் 04-09-2021 ஆம் தேதியில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார் என்றும் 04-09-2021 ஆம் தேதியில் மீண்டும் தாம் இரண்டாம் எதிர் தரப்பினரை சந்தித்தபோது தமது மேற்படி வைப்பீடு ரசீதை தரவில்லை என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார். இவ்வாறு அசல் வைப்பீடு ரசீது முறையீட்டாளருக்கு திரும்ப வழங்கப்படாதது குறித்து அவர் புகார் மேற்கொண்டுள்ள நிலையில் 20-09-2021 ஆம் தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினர் எழுதியுள்ள முறையீட்டாளர் தரப்பு ஏழாவது சான்றாவணமான கடிதத்தில் எவ்வித பதிலும் தரப்படவில்லை. மேலும், முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி இரண்டாம் எதிர் தரப்பினரின் மேற்பார்வை அலுவலகமாக செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வட்டார அலுவலகத்திற்கு அனுப்பிய விண்ணப்பத்திற்கு அவர்கள் பதில் அளித்துள்ளனர். அந்த பதில் முறையீட்டாளர் தரப்பு 18 ஆவது சான்றாவணமான குறியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிலில் “ branch informed that deposit receipt is not traceable” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முறையீட்டாளரின் குற்றச்சாட்டை மறுத்து எவ்வித பதிலையும் இரண்டாம் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதிலிருந்து இரண்டாம் எதிர் தரப்பினர் புகாரில் சொல்லியுள்ள அசல் வைப்பீடு ரசீதை பெற்றுக் கொண்டு முறையீட்டாளருக்கு திரும்ப வழங்கவில்லை என்றும் இத்தகைய செயல் சேவை குறைபாடு என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
12. 04-09-2021 ஆம் தேதியில் மீண்டும் தாம் இரண்டாம் எதிர் தரப்பினரை சந்தித்தபோது தமது மேற்படி வைப்பீடு ரசீதை தரவில்லை என்றும் மாறாக அவருக்கும் முதலாம் எதிர் தரப்பினரின் சேவை மேலாளருக்கும் நடைபெற்ற தகவல் பரிவர்த்தனை அடங்கிய மின்னஞ்சலை இரண்டாம் எதிர் தரப்பினர் தம்மிடம் வழங்கினார் என்றும் அதில் “04-07-2021 ஆம் தேதியில் மேற்படி வைப்பீட்டை தானாகவே புதுப்பிக்க வாடிக்கையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்றும் ஆனால் மேற்படி வைப்பீட்டுக் கணக்கு தன்னிச்சையாக தவணை தேதியில் புதுப்பிக்கப்படவில்லை என்றும் தங்களால் 14 நாட்களுக்குப் பிறகு முந்தைய தேதியில் புதுப்பிக்கப்பட இயலவில்லை என்றும் இந்த கணக்கை புதுப்பிக்க தேவையான உதவி செய்ய வேண்டும்” என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் அனுப்பிய கோரிக்கைக்கு “தற்போது புதுப்பிக்க வேண்டிய காலத்தை விட கூடுதலாக நாட்கள் ஆகிவிட்டதால் புதிதாக வைப்பீடு கணக்கை தொடங்கி கொள்ளுமாறும் இடைப்பட்ட நாட்களுக்கு உரிய வட்டியை செலுத்துமாறு அறிவுறுத்தி” சேவை மேலாளர் தெரிவித்துள்ளார் என்றும் முறையீட்டாளர் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக அவரது மூன்றாவது சான்றாவணம் உள்ளது. இதனை பார்க்கும்போது முறையீட்டாளர் தமது வைப்பீடு ரசீதுக்கு தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் விருப்பத்தை விலக்கி கொண்டிருந்தால் வங்கியின் மேலாளர் மேற்கண்டவாறு நிறுவனத்தின் சேவை அலுவலருக்கு தகவல் அளித்திருக்க மாட்டார் என்றும் இதன் மூலம் முறையீட்டாளர் தரப்பில் கூறப்படும் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த ஆணையம் கருதுகிறது. மேலும், இரண்டாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையில் சம்பந்தப்பட்ட வைப்பீடு ரசீது தானாகவே புதுப்பித்துக் கொள்ள இயலாமல் போனதால் மீண்டும் அதனை புதிதாக வைப்பீடு செய்து முறையீட்டாளருக்கு ரசீது வழங்கப்பட்டது என்று கூறப்பட்டு அதற்கு ஆதாரமாக இரண்டாம் எதிர் தரப்பினர் தரப்பில் சான்றாவணம் -2 குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு புதிதாக வைப்பீடு செய்யப்பட்ட நாளுக்கும் வைப்பீடு முதிர்ச்சி அடைந்த நாளுக்கும் இடையில் உரிய வட்டி செலுத்தப்பட்டுள்ளதால் பொருளாதார இழப்பு எதுவும் முறையீட்டாளருக்கு ஏற்படவில்லை என்று இரண்டாம் தரப்பினர் பதிலில் தெரிவித்துள்ளார். மேலே சொல்லப்பட்ட இடைப்பட்ட காலத்தில் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்ட முதிர்ச்சி தொகைக்கு வழங்கப்படும் வட்டிக்கும் மீண்டும் புதிதாக வைப்பீடு செய்யப்பட்டு வழங்கப்படும் வட்டிக்கும் சிறிய வித்தியாசம் இருக்கும் என்றும் அவ்வாறு இருக்கும் போது சிறிய அளவிலான இழப்பீடு ஏற்படும் என்றும் அதனை கணக்கிட்டு எதிர் தரப்பினர் பதிலில் தெரிவிக்க தெரிவிக்கவில்லை என்றும் ரூபாய் ஆயிரத்துக்குள் இந்த இழப்பீடு இருக்கும் என்றும் இந்த ஆணையம் கருதுகிறது. புதுப்பிக்கப்படாமல் மேற்கண்டவாறு சேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டு பின்னர் அதனை மீண்டும் எடுத்து வைப்பீடு செய்வதற்கு முறையீட்டாளரிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் பெறப்பட்டதாகவும் புதிதாக வைப்பீடு செய்வதற்கு விண்ணப்பம் பெறப்பட்டதாகவும் எந்த ஆவணத்தையும் இரண்டாம் எதிர் தரப்பினர் குறியீடு செய்யவில்லை. தான் இத்தகைய அறிவுறுத்தல் எதனையும் வழங்கவில்லை என்று முறையீட்டாளர் கூறும் நிலையில் தன்னிச்சையாக இரண்டாம் எதிர் தரப்பினர் இவ்வாறு செயல்பட்டு உள்ளது சேவை குறைபாடு என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
15. மேற்கண்ட 9 முதல் 14 ஆம் பத்திகளில் விவரிக்கப்பட்டுள்ள காரணங்களினால் இரண்டாம் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் முதலாம் எதிர்த்தரப்பினருக்கு பிரச்சினை குறித்து முறையீட்டாளர் புகார் அளித்தும் பகர பொறுப்புடைய இரண்டாம் எதிர் தரப்பினர் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இதனால் இரண்டாம் எதிர் தரப்பினரும் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
16. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது முதலாம் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு புகாரில் அவர் கேட்கும் பரிகாரங்கள் வழங்கத்தக்கனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. தம்மிடம் 31-08-2021 ஆம் தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினரால் புதுப்பிக்க பெறப்பட்ட அசல் வைப்பீடு ரசீது தமக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும் என்று முறையீட்டாளர் கேட்டுள்ளார். ஆனால், அந்த ரசீது கிடைக்கவில்லை என்று எதிர் தரப்பினர் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ரசீதின் முதிர்ச்சி தொகை மீண்டும் வைப்பீடு செய்யப்பட்டு அசல் வைப்பீடு ரசீது முறையீட்டாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை திருப்பித் தர உத்தரவிட வேண்டியது இல்லை என்று இந்த ஆணையம் கருதுகிறது. எதிர்தரப்பினர்களின் சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு மன உளைச்சல் மற்றும் சிரமங்கள் ஏற்பட்டிருப்பது இயல்பானதே. இதனால், வழக்கின் தன்மையைக் கருதி முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் ரூபாய் 50 ஆயிரத்தை இழப்பீடாக இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. தவறினால் 08-06-2023 ஆம் தேதி முதல் மேற்படி இழப்பீட்டுத் தொகைக்கு ஆண்டொன்றுக்கு ஆறு சதவீத வட்டி தொகை வழங்கப்படும் நாள் வரை கணக்கிடப்பட்டு முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 3
10. இந்த வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 5 ஆயிரத்தை முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் வேறு எந்த பரிகாரங்களும் கிடையாது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. வழக்கின் தன்மையைக் கருதி எதிர்தரப்பினர்களின் சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் ரூபாய் 50 ஆயிரத்தை இழப்பீடாக இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் 08-06-2023 ஆம் தேதி முதல் மேற்படி இழப்பீட்டுத் தொகைக்கு ஆண்டொன்றுக்கு ஆறு சதவீத வட்டி தொகை வழங்கப்படும் நாள் வரை கணக்கிடப்பட்டு முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும்.
.
02. வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 5 ஆயிரத்தை முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 10-05-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 14-05-2022 | எதிர் தரப்பினர்களுக்கு அனுப்பிய அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 13-07-2020 | வைப்புத் தொகை ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 31-08-2021 | முறையீட்டாளளருக்கு எதிர் தரப்பினர்கள் தரப்பில் வழங்கப்பட்ட மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 06-09-2021 | முறையீட்டாளர் அனுப்பிய மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 07-09-2021 | முறையீட்டாளர் அனுப்பிய மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 14-09-2021 | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மத்திய அலுவலகம் சென்னைக்கு அனுப்பிய புகார் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 20-09-2021 | இரண்டாம் எதிர் தரப்பினர் அனுப்பிய கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 22-09-2021 | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மத்திய அலுவலகம் சென்னைக்கு அனுப்பிய புகார் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | 24-09-2021 | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மத்திய அலுவலகம் சென்னைக்கு அனுப்பிய புகார் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 01-10-2021 | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மத்திய அலுவலகம் சென்னைக்கு அனுப்பிய புகார் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.11 | 19-11-2021 | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மத்திய அலுவலகம் சென்னைக்கு அனுப்பிய புகார் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.12 | 19-11-2021 | வங்கி அனுப்பிய மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.13 | 08-01-2022 | கணக்கு அறிக்கை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.14 | 20-11-2021 | முதலாம் எதிர்த்தரப்பினருக்கு அனுப்பிய கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.15 | 27-10-2021 | ஆம்பூட்ஸ்மேன் அமைப்புக்கு அனுப்பிய புகார் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.16 | 21-12-2021 | புகார் முடிவு குறித்த தகவல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.17 | 11-02-2022 | ஆம்பூட்ஸ்மேன், மும்பையில் இருந்து பெறப்பட்ட கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.18 | 14-11-2022 | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வட்டார அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.19 | 04-07-2016 | கணக்கு தொடங்குவதற்கான படிவம் | ஜெராக்ஸ் |
இரண்டாம் எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | 04-07-2019 | முறையீட்டாளரின் வைப்புத் தொகை ரசீது | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | 19-11-2021 | முறையீட்டாளரின் வைப்புத் தொகை ரசீது | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.3 | 28-12-2020 | முதலாம் எதிர் தரப்பினரின் சுற்றறிக்கை | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.4 | 22-12-2021 | ஆம்பூட்ஸ்மேன் கடிதம் | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு கே. செங்கோட்டையன்
இரண்டாம் எதிர்தரப்பினர் சாட்சி: திரு ஏ. பி. முருகேசன்
உறுப்பினர் – I தலைவர்.