புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 09-05-2017
உத்தரவு பிறப்பித்த நாள் : 20-06-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 04/2017.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மோரூர் அஞ்சல், நாராயணம் பாளையம், இலக்கம் 1/149 -ல் உள்ள காமதேனு ஹை டெக் ட்ரில்ஸ் உரிமையாளர், நடராஜன் மனைவி ராதா மணி - முறையீட்டாளர்
- எதிர்-
01. கோயம்புத்தூ,ர் பந்தய சாலை, எக்ஸலென்ஸ் பில்டிங், இரண்டாவது தளம், கதவு எண் 104 உள்ள M/s. எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் கிளை மேலாளர்
02. மும்பை, அந்தேரி கிழக்கு, எக்ஸ்பிரஸ் ஹைவே- அந்தேரி குர்லா சாலை, வெஸ்டர்ன் ஜங்ஷன், நடராஜ், இலக்கம் 101, 201, 301 -ல் உள்ள M/s.எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தலைமை அலுவலகம்
- எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திரு ஜி கே கார்த்திகை குமாரா, வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு பி. ராஜவேல், வழக்கறிஞர் முன்னிலையாகியும் முதலாம் எதிர் தரப்பினர் மீது ஒருதலைப் பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்டும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 06-06-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள்-10, இரண்டாம் எதிர் தரப்பினர்களின் பதிலுரை, சாட்சியம்-1, சான்றாவணங்கள்-04 மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02. நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, விபத்துக்கு உள்ளான வாகனத்தை பழுது நீக்க தமக்கு ஏற்பட்ட செலவு தொகை ரூ8,42,850/- ஐ எதிர் தரப்பினர்கள் திருப்பி அளிக்க வேண்டும் விபத்துக்கு உள்ளான வாகனத்தை சம்பவ இடத்திலிருந்து கொண்டு வர ஏற்பட்ட செலவு தொகை ரூ 20,500/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் கட்டண வாகன நிறுத்தத்துக்கு தான் செலுத்திய தொகை ரூ15,000/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதற்கு மாதம் ரூபாய் நாற்பதாயிரம் என கணக்கிட்டு 21 மாதங்களுக்கு ரூ8,40,000/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் இரண்டு லட்சமும் இந்த வழக்கின் செலவு தொகையையும் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் தன்மையைக் கருதி தக்கது என கருதும் இதர பரிகாரங்களை ஆணையம் வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தமது சுய தொழிலுக்காக காமதேனு ஹை டெக் ட்ரில்ஸ் என்ற நிறுவனத்தை தாம் நடத்தி வருவதாக அதில் தமக்கு சொந்தமாக KA 51MA 3994 என்ற பதிவு எண் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனம் உள்ளது அதனை எதிர் தரப்பினர்கள் நிறுவனத்தில் 23-04-2015 ஆம் தேதி முதல் 22-04-2016 ஆம் தேதி வரை பிரிமியம் செலுத்தி காப்பீடு செய்திருந்தேன் என்றும் இந்நிலையில் கடந்த 22-05-2015 ஆம் தேதி அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பாலத்தை கடந்து கொண்டிருந்த போது பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டு விட்டது என்றும் உடனடியாக விபத்தில் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்து அருகாமையில் உள்ள எதிர் தரப்பினர்கள் அலுவலகத்திற்கு தகவல் தரப்பட்டது என்றும் எதிர் தரப்பினர்கள் நிறுவனத்தால் கணக்கெடுப்பாளர் நியமனம் செய்யப்பட்டு சேத மதிப்பீடு செய்யப்பட்டது என்றும் முதலில் ஈரோடு அருகே உள்ள ஒரு குன்னத்தூர் பணிமனையில் பழுது நீக்க வாகனத்தை வழங்கி இருந்து அங்கு இயலாத சூழ்நிலை ஏற்பட்ட பின்பு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பணிமனைக்கு வாகனம் பழுது நீக்க எடுத்துச் செல்லப்பட்டது என்றும் முறைப்படி எதிர் தரப்பினரிடம் இழப்பு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அவர்களிடம் இருந்து முறையான பதில் எதுவும் இல்லாத நிலையில் கடந்த 07-04-2016 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினருக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பப்பட்டது என்றும் சில விவரங்களை சமர்ப்பிக்காததால் தமது இழப்பீட்டு கோரிக்கையை தள்ளுபடி செய்ததாக எதிர் தரப்பினர்கள் தெரிவித்தனர் என்றும் எதிர் தரப்பினர்களின் இத்தகைய செய்கை சேவை குறைபாடு என்றும் இதனால் தனக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பெற சங்கதிகளையும் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, தமக்கு விபத்துக்கு உள்ளான வாகனத்தை பழுது நீக்க ஏற்பட்ட செலவு தொகை ரூ8,42,850/- ஐ எதிர் தரப்பினர்கள் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் விபத்துக்கு உள்ளான வாகனத்தை சம்பவ இடத்திலிருந்து கொண்டு வர ஏற்பட்ட செலவு தொகை ரூ 20,500/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் கட்டண வாகன நிறுத்தத்துக்கு தான் செலுத்திய தொகை ரூ15,000/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதற்கு மாதம் ரூபாய் நாற்பதாயிரம் என கணக்கிட்டு 21 மாதங்களுக்கு ரூ8,40,000/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் இரண்டு லட்சமும் இந்த வழக்கின் செலவு தொகையையும் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் தன்மையைக் கருதி தக்கது என கருதும் இதர பரிகாரங்களை ஆணையம் வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் ஆம் எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
05. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
06. முறையீட்டாளர் புகாரில் சொல்லப்பட்டுள்ளது போல கடந்த 25-05-2015 ஆம் தேதியில் தங்களிடம் காப்பீடு செய்யப்பட்ட அவரது வாகனம் விபத்துக்குள்ளானதாக தங்களுக்கு தகவல் வழங்கப்பட்டது என்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு அமைப்பின் உரிமம் பெற்ற சேத கணக்கீடாளர்களை நியமித்து இறுதி கணக்கிட்டு அறிக்கை தங்களுக்கு 20-07-2015 ஆம் தேதியில் கிடைக்கப்பெற்றது என்றும் இழப்பீட்டு கோரிக்கை படிவம் மற்றும் கணக்கிட்டாளர்களின் அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்து கணக்கு எண், ஐ எஃப் எஸ் சி கோட், எம் ஐ சி ஆர் கோட் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ரத்து செய்யப்பட்ட முறையீட்டாளரின் காசோலை அல்லது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், காப்பீடு செய்தவரின் முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு 13-08-2015 ஆம் தேதியில் முறையீட்டாளருக்கு தங்களால் கடிதம் அனுப்பப்பட்டது என்றும் ரூபாய் ஒரு லட்சத்துக்கும் மேல் இழப்பீட்டு கோரிக்கைகள் இருக்குமாயின் பண மோசடி தடுப்பு சட்டம், 2002, விதிமுறைகளின்படி மேற்படி ஆவணங்களை கேட்க வேண்டியது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு அமைப்பின் விதிமுறை என்றும் தங்களது கடிதத்திற்கு எவ்வித பதிலும் இல்லாததால் மீண்டும் கடந்த ஆம் தேதியில் மேற்படி ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு முறையீட்டாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது என்றும் அதன் பின்னரும் கேட்கப்பட்ட ஆவணங்களை அவர் தங்களுக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் இதனால் முறையீட்டாளரின் கோரிக்கை 16-10-2015 ஆம் தேதியில் முடித்துக் கொள்ளப்பட்டது (as closed) என்றும் புகாரில் கேட்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை என்பது மிகவும் மிகைப்படுத்தப்பட்டது என்றும் இதற்காக ஆவணங்களும் ரசீதுகளும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் விபத்துக்குள்ளான வாகனத்திற்கு பழுது நீக்க ரூ8,42,850/- செலவு செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும் ஏற்புடையது அல்ல என்றும் வாகனத்தின் தேய்மானம் இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்யும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்றும் புகாரில் சொல்லப்பட்டுள்ள முகவரியில் தங்களுக்கு கோயம்புத்தூரில் கிளை நிறுவனம் இல்லை என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் இதனால் தங்கள் மீதான புகார் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் இரண்டாம் எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார் .
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளாரா?
2) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனர் எனில் எத்தகைய பரிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
08. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு வழங்கியுள்ள காப்பீட்டு ஆவணமான முறையீட்டாளர் தரப்பு இரண்டாவது சான்றாவணம் மூலமாக தெரிய வருவதால் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
09. உங்கள் வாடிக்கையாளர் யார் (Know Your Custormer) என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் (Anti-Money Laundering Act, 2002) வழிகாட்டுதலின்படி ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்பதால் முறையீட்டாளரின் இழப்பீட்டு கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக எதிர் தரப்பினர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையீட்டாளரின் வாகனத்துக்கு பிரிமிய தொகை பெற்றுக்கொண்டு காப்பீடு வழங்கும் போதே மேற்கண்ட ஆவணங்களை எதிர் தரப்பினர்கள் பெற்றுக்கொண்டு காப்பீடு வழங்கியிருக்க வேண்டும். காப்பீட்டு பிரிமிய பணத்தை பெற்றுக் கொள்ளும் போது இத்தகைய ஆவணங்கள் இல்லாமல் பெற்றுக் கொண்டதும் எதிர் தரப்பினர்களின் தவறாகும் என்று இந்த ஆணையம் கருதுகிறது.
10. மேற்கண்ட ஆவணங்களை முறையீட்டாளர் சமர்ப்பிக்க கேட்டு கடந்த 13-08-2015, 25-09-2015ஆம் தேதிகளில் கடிதம் அனுப்பியதாக எதிர் தரப்பினர்கள் தரப்பில் 4 ஆம் சான்றாவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முறையீட்டாளர் புகாரில் முறையீட்டாளர் தாங்கள் இழப்பீட்டு கோரிக்கையை சமர்ப்பித்த பின்பு எந்த தகவலும் தங்களுக்கு வழங்கவில்லை என்று கூறும் நிலையில் மேற்படி கடிதங்களை அனுப்பியதற்கான கூரியர் அல்லது அஞ்சல் ரசீதுகள் மற்றும் கடிதங்கள் வழங்கப்பட்டதற்கான ஒப்புகை அட்டைகள் எதிர் தரப்பினர்கள் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் எதிர் தரப்பினர்களின் வாதம் ஏற்புடையதாக இல்லை என்று இந்த ஆணையம் கருதுகிறது.
11. மேற்கண்ட ஆவணங்களை முறையீட்டாளர் சமர்ப்பிக்க கேட்டு கடந்த 13-08-2015, 25-09-2015 ஆம் தேதிகளில் கடிதம் அனுப்பியதாக எதிர் தரப்பினர்கள் தரப்பில் 4 ஆம் சான்றாவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கடிதங்களில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை எனில் கோரிக்கை நிராகரிக்கப்படும் என்று எந்த விவரங்களும் இல்லை என்பதோடு முறையீட்டாளரின் இழப்பீட்டு கோரிக்கையை நிராகரித்து தனியான கடிதத்தையும் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு வழங்கவில்லை. எதிர் தரப்பினர்களின் இத்தகைய செய்கை சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
12. கோரிக்கை தொகையை கேட்டு முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களுக்கு சட்ட அறிவிப்பு (சான்றாவணம் -7) அனுப்பியதில் எதிர் தரப்பினர்கள் பதில் அறிவிப்பை (சான்றாவணம் -8) வழங்கி அதில் மேற்படி ஆவணங்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார்கள். அதற்கு முறையீட்டாளர் தரப்பில் பதில் (சான்றாவணம் -9) வழங்கப்பட்டு கேட்கப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பெற்ற பின்னர் முறையீட்டாளரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக அல்லது பகுதி ஏற்றுக் கொண்டதாக அல்லது நிராகரித்ததாக எந்த நேரடி கடிதத்தையும் இறுதி உத்தரவாக எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு வழங்கவில்லை எதிர் தரப்பினர்களின் இத்தகைய செய்கை சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
13. 11-04-2019 ஆம் தேதியில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் மீது ஒருதலைப் பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்ட நிலையில் CMP 70/2019 என்ற எண்ணில் இரண்டாம் எதிர் தரப்பினர் மட்டும் அதனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்து அந்த மனு அனுமதிக்கப்பட்டுள்ளது. புகாரில் சொல்லப்பட்டுள்ள முகவரியில் தங்களுக்கு கோயம்புத்தூரில் கிளை நிறுவனம் இல்லை என்று இரண்டாம் எதிர் தரப்பினர் பதில் உரை தாக்கல் செய்துள்ள நிலையிலும் முதலாம் எதிர் தரப்பினர் மீது ஒருதலைப் பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்டும் இருந்த நிலையிலும் விசாரணையில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின் நிரூபண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார்கள். கடந்த 18-02-2021 ஆம் தேதியில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களுக்கு புதிதாக வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டு வக்காலத்து தாக்கல் செய்யப்பட்டு பின்னர் 16-02-2023 ஆம் தேதியில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களுக்கு நிறுவன வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முரண்பாடுகள் ஏற்புடையதாக இல்லை என்று இந்த ஆணையம் கருதுகிறது.
எழு வினா எண் – 2
13. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு என்ன பரிகாரம் கிடைக்கத்தக்கது என்று ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.
14. தமக்கு விபத்துக்கு உள்ளான வாகனத்தை பழுது நீக்க ஏற்பட்ட செலவு தொகை ரூ8,42,850/- ஐ எதிர் தரப்பினர்கள் திருப்பி அளிக்க வேண்டும் என முறையீட்டாளர் புகாரில் கேட்டுள்ள நிலையில் எதிர் தரப்பினர்களின் கணக்கீட்டாளர் தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில் (எதிர் தரப்பினர் சான்றாவணம் -3) சேத இழப்பீடாக ரூ 1,940,189/- தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள தோராய மதிப்பீட்டில் (முறையீட்டாளர் தரப்பு சான்றாவனம்-6) ரூ 8,42,850/- பழுது நீக்க செலவு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்கு உள்ளான வாகனத்தை பழுது நீக்க ஏற்பட்ட செலவு தொகையாக 4,00,000/-/- ஐ எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் 25-05-2015 ஆம் தேதியிலிருந்து பணம் வழங்கப்படும் தேதி வரை ஆண்டொன்றுக்கு ஆறு சதவீத வட்டி சேர்ந்து வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
15. விபத்துக்கு உள்ளான வாகனத்தை சம்பவ இடத்திலிருந்து கொண்டு வர ஏற்பட்ட செலவு தொகை ரூ 20,500/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் கட்டண வாகன நிறுத்தத்துக்கு தான் செலுத்திய தொகை ரூ15,000/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதற்கு மாதம் ரூ40,000/- என கணக்கிட்டு 21 மாதங்களுக்கு ரூ8,40,000/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் புகாரில் கேட்டுள்ள நிலையில் விபத்துக்கு உள்ளான வாகனத்தை சம்பவ இடத்திலிருந்து கொண்டு வர ஏற்பட்ட செலவு, கட்டண வாகன நிறுத்தத்துக்கு செலுத்திய தொகை ஆகியவற்றை எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வருமான இழப்பை எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த உரிய சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் முறையீட்டாளர் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
16. தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் இரண்டு லட்சமும் இந்த வழக்கின் செலவு தொகையையும் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்று முறையீட்டாளர் புகாரில் கேட்டுள்ள நிலையில் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு மன உளைச்சல் ஏற்படுவது என்பது இயற்கையானது என்ற நிலையில் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ 2,00,000/-/- ஐ எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும் என்றும் தவறினால் 18-07-2023 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை இத்தொகைக்கு ஆண்டொன்றுக்கு ஆறு சதவீத வட்டி சேர்த்து எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
14. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. விபத்துக்கு உள்ளான வாகனத்தை பழுது நீக்க ஏற்பட்ட செலவு தொகையாக 4,00,000/-/- ஐ எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் 25-05-2015 ஆம் தேதியிலிருந்து பணம் வழங்கப்படும் தேதி வரை ஆண்டொன்றுக்கு ஆறு சதவீத வட்டி சேர்ந்து வழங்க வேண்டும்.
02. முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ 2,00,000/-/- ஐ எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும் என்றும் தவறினால் 18-07-2023 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை இத்தொகைக்கு ஆண்டொன்றுக்கு ஆறு சதவீத வட்டி சேர்த்து எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும்.
03. வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 20-06-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
மு.சா.ஆ.1 | 15-02-2013 | வாகன பதிவு சான்றிதழ் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.2 | 23-04-2015 | வாகனத்தின் காப்பீட்டு ஆவணம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.3 | 27-05-2015 28-05-2015 | செலவு கட்டண ரசீதுகள் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.4 | 08-06-2015 | பணிமனை தோராய மதிப்பீடு | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.5 | 09-06-2015 | இன்வாய்ஸ் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.6 | 08-06-2015 | கோரிக்கை படிவம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.7 | 07-04-2016 | முதலாம் எதிர் தரப்பினருக்கு வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.8 | 09-06-2016 | பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.9 | 23-01-2017 | முதலாம் எதிர்த்தரப்பினருக்கு பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.10 | 30-01-2016 | ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எ.சா.ஆ.1 | 08-06-2015 | கோரிக்கை படிவம் | ஜெராக்ஸ் |
எ.சா.ஆ.2 | 23-04-2015 | வாகனத்தின் காப்பீட்டு ஆவணம் | ஜெராக்ஸ் |
எ.சா.ஆ.3 | 20-07-2015 | கணக்கெடுப்பாளர் இறுதி அறிக்கை | ஜெராக்ஸ் |
எ.சா.ஆ.4 | 13-08-2015 25-09-2015 | நினைவூட்டல் கடிதம் | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: ராதா மணி, முறையீட்டாளர்
எதிர் தரப்பினர்கள் சாட்சி: ஜி ஜே ராஜேஷ்
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.