புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 22-12-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 14-10-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 217/2022.
சென்னை, தேனாம்பேட்டை, 3வது தெரு, இலக்கம், 15-ல் வசிக்கும் மோகன் செனாய், அவரது பிரதிநிதி வரத தேசியன் மூலம் -முறையீட்டாளர்
1. சென்னை, திருவல்லிக்கேணி, பாரதி சாலை, இலக்கம் 38-ல் உள்ள பிரியதர்ஷினி செல், அதன் அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம்
2. சென்னை, கேகே நகர், பி வி ராஜமன்னார் சாலையில் இலக்கம் 92/A1 & A12 -ல் உள்ள பிரியதர்ஷினி செல், அதன் அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம்
- எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்காக அவரே முன்னிலையாகியும், முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்களுக்காக திருவாளர்கள் அப்துல் மூபின் மற்றும் மூவர் வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 15-09-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் புகார், முறையீட்டாளர் தரப்பில் சாட்சியம்-1, அவரது 3 சான்றாவணங்கள், எதிர் தரப்பினரின் பதிலுரை மற்றும் சாட்சியம், வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து முதலாம் எதிர் தரப்பினரிடம் விலைக்கு வாங்கிய குறைபாடு உடைய கைபேசிக்கு பதிலாக புதிய கைபேசி ஒன்றை அதே வகையில் வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 75 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும்
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. கடந்த 04-03-2013 அன்று முதலாம் எதிர் தரப்பினரிடம் இருந்து தாம் கைபேசி ஒன்றை (LYF Model) ரூ 7,500/- செலுத்தி விலைக்கு பெற்றதாகவும் அதற்கு சிம் கார்டு தரப்படும் என உறுதியளித்த பின்னர் எதிர்த் தரப்பினர்கள் அதனை தரவில்லை என்றும் பலமுறை தொடர்புகொண்டோம் தமது வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை என்றும் இந்நிலையில் ஒரு சில நாளில் கைபேசி சரிவர வேலை செய்யவில்லை என்றும் இதனால் முதலாம் எதிர் தரப்பினரை தொடர்பு கொண்டபோது இரண்டாம் எதிர் தரப்பினரை அணுகுமாறு கேட்டுக் கொண்டார் என்றும் அதன் பின்னர் இரண்டாம் எதிர்தரப்பினர் அறிவுறுத்தலின்படி கைபேசி உற்பத்தியாளர் நிறுவனத்தின் சேவை மையத்தில் அதனை 20-03-2017 ஆம் தேதியில் சமர்ப்பித்து கேட்டபோது அதனை சரிசெய்ய ரூ 9,434/- செலவாகும் என்று தோராய மதிப்பு பட்டியலை வழங்கினார்கள் என்றும் இந்தத் தொகை கைபேசி விலைக்கு வாங்கப்பட்ட தொகையை விட அதிகம் என்றும் முதலாம் எதிர்தரப்பினர் சார்பில் சேவை வழங்கும் மையங்களில் அளித்தும் உத்தரவாதம் உள்ள நிலையிலும் குறைபாடு சரி செய்யப்படவில்லை என்றும் பலமுறை எதிர் தரப்பினருக்கு பிரச்சினையை தெரிவித்தும் தமது பிரச்சனை சரி செய்யப்படவில்லை என்றும் மாறாக தவறான பதில்களை அவர்கள் அளித்தார்கள் என்றும் தமக்கு குறைபாடுடைய கைபேசியை முதலாம் எதிர்தரப்பினர் விற்பனை செய்துள்ளார் என்றும் இது குறித்து புகார் அளித்தும் தமக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் குறைபாடுடைய பொருளை விற்பனை செய்தது மற்றும் சேவை குறைபாடு ஆகியவற்றை முதலாம் எதிர்தரப்பினர் புரிந்துள்ளார் என்றும் இதற்கு இரண்டாம் எதிர் தரப்பினரும் பகர பொறுப்பு உடையவர் என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு எதிர் தரப்பினர்கள் முழு பொறுப்பு உடையவர்கள் என்றும் இன்னும் பிற விவரங்களை கூறி முறையீட்டாளர் தமது புகாரை தாக்கல் செய்துள்ளார்.
04. எனவே, முதலாம் எதிர் தரப்பினரிடம் விலைக்கு வாங்கிய குறைபாடு உடைய கைபேசிக்கு பதிலாக புதிய கைபேசி ஒன்றை அதே வகையில் வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 75 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கமான விவரம்:
05. புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது என்றும் இங்கே வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர்த் தரப்பினர்கள் தங்களது பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்
06. தாங்கள் விற்பனை செய்தபோது கைபேசி நல்ல நிலையில் இருந்தது என்றும் அதனை சோதனை செய்து பார்த்து முறையீட்டாளர் விலைக்கு வாங்கினார் என்றும் அதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அந்த கைபேசியின் உற்பத்தியாளர் நடத்தும் சேவை மையத்தில் சமர்ப்பித்து சரி செய்து கொள்ளலாம் என்றும் ஆனால் உற்பத்தியாளரை முறையீட்டாளர் தரப்பினராக சேர்க்கவில்லை என்றும் இந்த வழக்கில் இரண்டாம் எதிர்தரப்பினர் மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் தேவையின்றி தரப்பினராக இணைக்கப்பட்டு உள்ளார் என்றும் தங்கள் தரப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என்றும் தாங்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றி சேவைக் குறைபாடு எதனையும் புரியவில்லை என்றும் முறையீட்டாளர் விதிகளை நிபந்தனைகளை பின்பற்றாமல் கைபேசியை கையாண்டு ஏற்பட்ட குறைபாடுகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் இதனால் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பிற சங்கதிகளை தெரிவித்தும் பதிலுரை தாக்கல் செய்துள்ளார்கள்
07. தீர்மானிக்க வேண்டிய பிரச்சனைகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் குறைபாடு உள்ள பொருளை விற்பனை செய்து சேவை குறைபாடு புரிந்துள்ளாரா?
2) எதிர்தரப்பினர்கள் குறைபாடு உள்ள பொருளை விற்பனை செய்து சேவை குறைபாடு எனில் முறையீட்டளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
பிரச்சனை எண் – 1
08. முறையீட்டாளர் கடந்த 04-03-2013 அன்று முதலாம் எதிர் தரப்பினரிடம் இருந்து தாம் கைபேசி ஒன்றை (LYF Model) ரூ 7,500/- செலுத்தி விலைக்கு பெற்றார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனை எதிர் தரப்பினர் மறுக்கவும் இல்லை. இதனால் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
08. மேற்படி கைபேசியில் திரவ அடைப்பு ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் அதனை சரிசெய்ய ரூ ரூ 9,434/- செலவாகும் தோராய மதிப்பு என்று கைபேசி சேவை நிறுவனத்தினர் தெரிவித்துள்ளார்கள். தமது பிரச்சினை குறித்து எதிர் தரப்பினர்களுக்கு முறையீட்டாளர் எவ்வித எழுத்து மூலமான கடிதத்தைஅல்லது வழக்கறிஞர் அறிவிப்பை வழங்கவில்லை. தமது பிரச்சினை எதிர் தரப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்பதற்கும் எதிர் தரப்பினர்கள் தம்மால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமது பிரச்சனையை சரி செய்ய முன்வரவில்லை என்பதற்கும் எவ்வித ஆதாரங்களையும் முறையீட்டாளர் முன்வைக்கவில்லை. விற்பனை செய்யப்பட்ட பொருளில் குறைபாடு இருப்பின் உற்பத்தியாளர் நிவாரணம் வழங்க கடமைப்பட்டவர் என்ற நிலையில் உற்பத்தியாளரை அல்லது சம்மந்தப்பட்ட சேவை மைய மையத்தை நிறுவனத்தையும் முறையீட்டாளர் தரப்பினராக சேர்க்கவில்லை. இந்நிலையில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் கிடைக்கதக்கதல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இந்நிலையில் முறையீட்டாளர் தமது புகாரை போதிய சாட்சியம் மற்றும் சான்று ஆவணங்களுடன் நிரூபிக்கவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
பிரச்சனை எண் – 2 & 3
08. முதலாவது பிரச்சனையை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரச்சனைகளுக்கும் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு சேவை குறைபாடு இல்லை என்பதால் எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும்வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள்அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பின ரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை.
.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 14-10-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | - | Advt. of opposite parties | Xerox |
ம.சா.ஆ.2 | 04-03-2017 | Purchase Bill | Xerox |
ம.சா.ஆ.3 | 20-03-2017 | Service Centre Job Sheet | Xerox |
எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு மோகன் செனாய் – முறையீட்டாளர்
எதிர் தரப்பினர் தரப்பு சாட்சி: திரு மோகன் குமார்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.