புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 27-02-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் : 01-08-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 55/2022.
கோயம்புத்தூர், பீளமேடு, லட்சுமிபுரம், குச்சிநாயுடு லேஅவுட், இலக்கம் 18/30 -ல் வசிக்கும் பெருமாள் மகன் பி. கிருஷ்ணசாமி -முறையீட்டாளர்
- எதிர்-
கோயம்புத்தூர், சிவானந்தபுரம், சத்தி சாலையில் உள்ள சங்கரா கண் மருத்துவமனை, அதன் நிர்வாக அலுவலர் மூலம் - எதிர் தரப்பினர்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன்படி முறையீட்டாளர் எதிர் தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திருமதி ஏ. அனிதா தேவி, வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர்தரப்பினருக்கு திருமதி எம். கிருஷ்ணவேணி, வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 04-07-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, சான்றாவணங்கள்-10, எதிர் தரப்பினரின் பதிலுரை, சாட்சியம்-1, மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
02. தமக்கு 62 வயது என்றும் தான் தனியார் கடையில் வேலை பார்க்கிறேன் என்றும் கண் பார்வையில் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 04-12-2017 ஆம் தேதி எதிர் தரப்பினர் மருத்துவமனைக்கு சென்று புதிய நோயாளி என்பதால் எதிர் தரப்பினரின் அறிவுறுத்தலின்படி பதிவு செய்து அதன் பின்னர் மருத்துவரை சந்தித்தேன் என்றும் அவர் தமது கண்களை பரிசோதித்து விட்டு cataract என்ற நோய் இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார் என்றும் அதற்கு முன்னதாக ரத்தம் சிறுநீர் மற்றும் எச்ஐவி உள்ளிட்ட பரிசோதனைகளை செய்யுமாறு அறிவுறுத்தினார் என்றும் எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் ஆய்வகத்தின் இந்த பரிசோதனைகள் தமக்கு 04-12-2017 ஆம் தேதியில் செய்யப்பட்டு மறுநாள் (05-12-2017) அறிக்கை வழங்கப்பட்டது என்றும் எதிர் தரப்பினர் வழங்கிய ஆய்வக அறிக்கையில் தமக்கு எச்ஐவி தொற்று (HIV : Card Test T1 Positive)இருப்பதாக கூறப்பட்டிருந்தது என்றும் இதனால் தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்து திரும்பத் திரும்ப இந்த தொற்று தமக்கு உள்ளதா என்று கேட்ட போது ஆம் உள்ளது என்று கூறி அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து வருமாறு கடிதம் வழங்கினார்கள் என்றும் இதனை தமது மனைவியிடம் தெரிவித்த போது அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார் என்றும் தமக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டது என்றும் இதனால் தமக்கு மன அமைதி இழந்து மன உளைச்சல் ஏற்பட்டது என்றும் தமக்கு அரசு மருத்துவமனையில் எச்ஐவி பரிசோதனை செய்வதோடு தான் தமது மனைவியையும் அந்த பரிசோதனை செய்வதற்கு அழைத்தேன் என்றும் ஆனால் அவர் ஒப்புக் கொள்ளாமல் இருந்ததோடு மிகுந்த சண்டைக்கு பின்பு ஒப்புக்கொண்டார் என்றும் இறுதியில் கடந்த 08-12-2017 ஆம் தேதியில் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் HIV I & HIV II ஆகிய சோதனைகளை செய்தோம் என்றும் இந்த சோதனைகளின் முடிவில் தங்களுக்கு எச்ஐவி தொற்றுநோய் இல்லை (HIV Negative) என்று தெரிவிக்கப்பட்டது என்றும் மீண்டும் ஒருமுறை சோதனை செய்ய திட்டமிட்டு கடந்த 19-12-2017 ஆம் தேதி அன்று கோயம்புத்தூர் ஆர் எஸ் புறத்தில் உள்ள மைக்ரோ பயாலஜிக்கல் லேப்ரற்றியில் தான் எச்ஐவி சோதனைக்கு உட்படுத்திக் கொண்டேன் என்றும் அதிலும் தமக்கு எச்ஐவி தொற்று இல்லை என்று அறிக்கை வழங்கப்பட்டது என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
03. கடந்த 04-12-2017 ஆம் தேதி முதல் 19-12017 ஆம் தேதி வரை தமக்கும் தமது மனைவிக்கும் மிகுந்த மன உளைச்சலும் சிரமமும் ஏற்பட்டதோடு மகனுக்கும் இந்த விவரம் தெரிய வந்து அவர் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்து இருந்தார் என்றும் அவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் என்றும் இதனை அறிந்த நபர்கள் தம்மை மிக மோசமாக பார்த்ததோடு சமூகத்தில் தமக்கு மிகுந்த அவமரியாதை ஏற்பட்டது என்றும் மேற்கண்ட நாட்களில் தமது மனைவியால் சமையல் செய்வது உட்பட அன்றாட வேலைகளை செய்ய முடியவில்லை என்றும் குடும்பத்தில் அனைவரும் சாப்பிட கூட இயலாத நிலையில் இருந்தோம் என்றும் இதுகுறித்து தான் 22-12-2017 ஆம் தேதியில் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியதில் உண்மைக்கு புறம்பான சங்கதிகளை கூறி எதிர் தரப்பினர் 08-01-2018 ஆம் தேதியில்பதில் அனுப்பினார் என்றும் எதிர் தரப்பினரின் நேர்மையற்ற வணிக முறையிலான அலட்சியமான மருத்துவ செயல்பாட்டால் தமக்கு சேவை குறைபாடு ஏற்பட்டு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எதிர் தரப்பினரின் நேர்மையற்ற வணிக நடைமுறை மற்றும்சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் இதர சிரமங்களுக்கு ரூபாய் 5 லட்சத்தையும் இந்த வழக்கின் செலவு தொகையும் எதிர்த் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் சரி என கருதும் இந்த ஆணையம் சரி என கருதும் இதர தீர்வுகளை வழங்கும்படியும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
05. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
06. முறையீட்டாளர் கடந்த 04-12-2017 ஆம் தேதி அன்று தங்கள் மருத்துவமனைக்கு கண் பார்வையில் பிரச்சனை என்று வந்தார் என்றும் அவர் புதிய நோயாளி என்பதால் உரிய வகையில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது என்றும் அவர் பதிவு செய்த பின்னர் தங்கள் மருத்துவமனையின் மருத்துவர் பரிசோதனை செய்து அவருக்கு கண் அறுவை சிகிச்சை (cataract surgery) செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதென்றும் அதற்கு வழக்கமாக அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவருடைய உடல் நிலையை அறிந்து கொள்வதற்காக செய்யப்படும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி தொற்றுநோய் (HIV test T1 Positive) இருப்பது அறிய வந்தது என்றும் சந்தேகத்தை தீர்ப்பதற்காக அரசு மருத்துவமனையில் திரும்பவும் சோதனை செய்யுமாறு தங்களால் கடிதம் வழங்கப்பட்டது என்றும் ரத்த மாதிரியின் தங்கள் தரப்பில் முறையீட்டாளரின் ரத்த மாதிரியின் TRIDOT Card Test T1 சோதனை செய்யப்பட்டது என்றும் வழிகாட்டுதலின்படி அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு எச்ஐவி தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள WESTERN BLOT சோதனையை செய்ய அறிவுறுத்தப்பட்டது என்றும் அந்த சோதனை செய்ய தங்களது மருத்துவமனையில் வசதி இல்லாததால் அரசு மருத்துவமனையில் செய்து வரும்படி தங்களால் கடிதம் வழங்கப்பட்டது என்றும் அரசு மருத்துவமனையில் மேற்படி சோதனையை செய்து வந்தால் தான் தங்களால் அவருக்கு கண் பார்வையில் உள்ள பிரச்சனைக்கான அறுவை சிகிச்சையை செய்வதற்கு திட்டமிட இயலும் என்பதால் அவர் அரசு மருத்துவமனையில் சோதனை செய்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் என்றும் தங்களால் செய்யப்பட்ட சோதனையின் முடிவை உறுதி செய்ய மேற்கண்ட இரண்டாவது சோதனை செய்யப்பட வேண்டும் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் தங்களால் எவ்வித தவறான ஆலோசனை வழங்கப்படவில்லை என்றும் அவரது மனைவிக்கு எச்ஐவி பரிசோதனை செய்ய வேண்டும் என்று தங்கள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவருக்கு எச்ஐவி உள்ளதா என்பதை தேசிய வழிகாட்டுதலின்படி அரசு மருத்துவமனையில் WESTERN BLOT என்ற சோதனையை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது என்றும் தங்கள் தரப்பில் முறையீட்டாளர் கூறுவது போல எவ்வித அலட்சியம் அல்லது நேர்மையற்ற வர்த்தக நடைமுறை புரியப்படவில்லை என்றும் இந்நிலையில் முறையீட்டாளர் கூறுவது போல் எத்தகைய பரிகாரத்தையும் தாங்கள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவரது புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் எதிர்தரப்பினர்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள் .
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர் அலட்சியமான மருத்துவ சிகிச்சை மூலம் நேர்மையற்ற வணிக நடைமுறையில் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர் அலட்சியமான மருத்துவ சிகிச்சை மூலம் நேர்மையற்ற வணிக நடைமுறையில் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
08. முறையீட்டாளர் தங்களிடம் சிகிச்சைக்காக வந்தார் என எதிர்த்தரப்பினர் பதில் உரையில் ஒப்புக் கொண்டுள்ளதால் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
09. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல “முறையீட்டாளர் கடந்த 04-12-2017 ஆம் தேதி அன்று தங்கள் மருத்துவமனைக்கு கண் பார்வையில் பிரச்சனை என்று வந்தார் என்றும் அவர் புதிய நோயாளி என்பதால் உரிய வகையில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது என்றும் அவர் பதிவு செய்த பின்னர் தங்கள் மருத்துவமனையின் மருத்துவர் பரிசோதனை செய்து அவருக்கு கண் அறுவை சிகிச்சை (cataract surgery) செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதென்றும் அதற்கு வழக்கமாக அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவருடைய உடல் நிலையை அறிந்து கொள்வதற்காக செய்யப்படும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி தொற்றுநோய் (HIV test T1 Positive) இருப்பது அறிய வந்தது” என எதிர் தரப்பினர் பதில் உரையில் ஒப்புக்கொண்டுள்ளதால் இந்த சங்கதிகள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.
10. முறையீட்டாளருக்கு தங்களது பரிசோதனையில் ரத்த மாதிரியின் TRIDOT Card Test T1 சோதனை செய்யப்பட்டது என்றும் எச்ஐவி தொற்று (HIV test T1 Positive) இருந்தது கண்டறியப்பட்டது என்றும் எதிர் தரப்பினர் ஒப்புக் கொள்ளும் நிலையில் எதிர் தரப்பினரால் வழங்கப்பட்ட பரிசோதனை அறிக்கையான பரிசோதனை அறிக்கை முறையீட்டாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 ஆம் சான்றாவணத்திலும் இந்த விபரம் உள்ளது.
11. எதிர் தரப்பினர் முறையீட்டாளரின் சட்ட அறிவிப்பிற்கு 08-01-2018 ஆம் தேதியிட்டு வழங்கிய பதில் அறிவிப்பில் (முறையீட்டாளர் தரப்பு சான்றாவணம்-10) தங்களது மருத்துவர் அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பதாக ஆய்வக அறிக்கையில் தெரிய வருகிறது எனக் கூறிய பின்னர் முறையீட்டாளர் மருத்துவரிடம் திரும்பத் திரும்ப கேட்டதால் சந்தேகம் இருந்தால் அரசு மருத்துவமனையில் சோதனை செய்யுமாறு பரிந்துரை கடிதம் ஒன்றை தங்களது மருத்துவர் அவருக்கு வழங்கினார் என்றும் எவ்வாறு இருப்பினும் தங்களது ஆய்வு அறிக்கை முற்றிலும் சரியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவை உறுதி செய்ய WESTERN BLOT என்ற சோதனை செய்யப்பட வேண்டும் என்று மேற்படி பதில் அறிவிப்பில் எதிர் தரப்பினர்களால் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த புகாரை தாக்கல் செய்த பின்னர் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையில் தங்களது ஆய்வக பரிசோதனையின் முடிவை உறுதிப்படுத்த என்ற WESTERN BLOT என்ற பரிசோதனை செய்வது அவசியமானது என்று கூறியுள்ளார். எதிர் தரப்பினரின் பரிசோதனையில் முறையீட்டாளருக்கு எச்ஐவி தொற்று இருப்பதாக கூறப்பட்ட பின்னர் முறையீட்டாளருக்கு அரசு மருத்துவமனையிலும் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் அவருக்கு எச்ஐவி non active என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள் – 4 & 6 ஆதாரங்களாக உள்ளன. (What does it mean when you get a non reactive result for HIV? A non-reactive result from an HIV test is the same as a negative result. It means that the HIV antibodies and virus have not been found in your blood). மேற்கண்ட சங்கதிகளை பார்க்கும் போது எதிர் தரப்பினர் அலட்சியமாக செயல்பட்டு தவறான பரிசோதனை முடிவை வழங்கி சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 2
12. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்ததாக முடிவு செய்யப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு கிடைக்க வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது. முறையீட்டாளர் தனது புகாரில் எதிர் தரப்பினரால் தவறான பரிசோதனை தகவல் வழங்கப்பட்டதால் ஏற்பட்டதாக கூறப்படும் மன உளைச்சல் மற்றும் சிரமங்கள் அனைத்தும் ஏற்புடையதாகவே உள்ளன என்றும் எதிர் தரப்பினரில் சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 5,00,000/-ஐ முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் இந்த தொகைக்கு 28-08-2023 ஆம் தேதி முதல் தொகை வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
13. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 5,00,000/-ஐ முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் இந்த தொகைக்கு 28-08-2023 ஆம் தேதி முதல் தொகை வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 01-08-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | - | வெளி நோயாளிக்கான அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 05-12-2017 | எச்ஐவி பரிசோதனை அறிக்கை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 05-12-2017 | பரிந்துரை கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 08-12-2017 | முறையீட்டாளரின் அரசு மருத்துவமனை அறிக்கை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 08-12-2017 | முறையீட்டாளரின் மனைவியின் அரசு மருத்துவமனை அறிக்கை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 19-12-2017 | மைக்ரோ பயாலஜிக்கல் ஆய்வக அறிக்கை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 22-12-2017 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | | அஞ்சல் ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | 29-12-2017 | எதிர் தரப்பினரின் முதலாவது பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 08-01-2018 | எதிர் தரப்பினரின் பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் சாட்சி: திரு. பி. கிருஷ்ணசாமி, முறையீட்டாளர்
எதிர்தரப்பினர் சாட்சி: திரு அஸ்வத்தம்மன்
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.