புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 10-10-2022
உத்தரவு பிறப்பித்த நாள் : 11-07-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 143/2022.
நாமக்கல், திருச்சி சாலை, அழகு நகர், இலக்கம் 5/937 -ல் வசிக்கும் ராமசாமி மனைவி கலைவாணி - முறையீட்டாளர்
- எதிர்-
01. திருச்சி-620001, கண்டோன்மென்ட், இலக்கம் 38, 39/3, பாரதிதாசன் சாலை, எம். ஐ. இன்சாப் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளத்தில் உள்ள ரோஷன் குரூப் ஆப் கம்பெனிஸ், நிர்வாக இயக்குனர், சுப்பிரமணியன் மகன் சதீஷ் பாபு,
02. திருச்சி-620001, கண்டோன்மென்ட், இலக்கம் 38, 39/3, பாரதிதாசன் சாலை, எம். ஐ. இன்சாப் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளத்தில் உள்ள ரோஷன் குரூப் ஆப் கம்பெனிஸ், அதன்நிர்வாக இயக்குனர், சுப்பிரமணியன் மகன் சதீஷ் பாபு மூலம் - எதிர் தரப்பினர்கள்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019, பிரிவு 35-ன்படி முறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திரு.பி. பாஸ்கர், திருமதி சி நந்தினி பவானி, வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர் மீது ஒருதலைப் பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 14-06-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள்-15, முறையீட்டாளரின் வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
02. தாம் எச்டிஎப்சி வங்கியில் உதவி மேலாளராக சேலத்தில் பணியாற்றி வருவதாகவும் தமக்கு சொந்தமாக நாமக்கல் அழகு நகரில் உள்ள காலி மனை இடத்தில் 2356 சதுர அடி பரப்பளவில் தரை தளத்திலும் முதல் தளத்திலும் வீடு கட்டி தருவதற்கு எதிர் தரப்பினர்கள் ஒப்புக்கொண்டு தமக்கும் எதிர் தரப்பினர்களுக்கும் இடையே கட்டிட ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும் இதன் அடிப்படையில் தான் ஒரு சதுர அடிக்கு ரூ 1900/- வீதம் ரூ 45,47,600/- எதிர் தரப்பினர்களுக்கு மொத்தம் தொகை வழங்க வேண்டியது என்றும் இந்நிலையில் கூடுதலாக இரண்டாவது தளத்தையும் கட்டித் தருவதாக எதிர் தரப்பினர்கள் தெரிவித்ததால் வாய் மொழியாக ஒப்புக்கொண்டு ஒப்புக்கொண்டேன் என்றும் இதன் அடிப்படையில் மொத்தம் ரூபாய் 48 லட்சத்தை எதிர் தரப்பினர்களுக்கு செலுத்தி விட்டேன் என்றும் கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் கோவிட் தொற்றுநோய் பரவல் காரணமாக தரை தளத்திலும் முதல் தளத்திலும் கட்டவேண்டிய கட்டிடப் பணிகளில் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் வேலையை நிறுத்தி விட்டார்கள் என்றும் கோவிட் பரவல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் எதிர் தரப்பினர்களை தாம் அணுகிய போது கூடுதலாக ரூபாய் 13 லட்சம் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்கள் என்றும் இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்த போது எதிர் தரப்பினர்கள் இப்பிரச்சினை உரிமை இயல் பிரச்சனை என்பதால் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார்கள் என்றும் இதற்கு பின்னர் கடந்த 2021 ஜூலை மாதத்தில் தமக்கு எதிர் தரப்பினர்கள் மோசடியான சட்ட அறிவிப்பை அனுப்பினார்கள் என்றும் அதற்குரிய பதிலை தான் வழங்கியுள்ளேன் என்றும் தான் விசாரணை செய்த போது இரண்டாம் எதிர் தரப்பினராக உள்ள நிறுவனம் தம்மிடம் கட்டிட ஒப்பந்தம் செய்து அதில் கொடுத்துள்ள முகவரியில் அத்தகைய அலுவலகம் இல்லை என்றும் முதலாம் எதிர் தரப்பினர் மோசடியாக தம்மிடம் பணம் பெற்றுள்ளார் என்றும் இந்நிலையில் தான் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலும் எதிர் தரப்பினர்கள் செய்து தர மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டதாலும் கட்டிட பொறியாளர் ஒருவரை நியமித்து செய்த பணிகளின் மதிப்பீட்டை பார்த்தபோது எதிர் தரப்பினர்கள் ரூபாய் 23 லட்சம் மதிப்பிற்கு பணியை முடித்து இருக்கிறார்கள் என தெரிய வந்தது என்றும் பதினாறு மாதங்கள் காத்திருந்தும் தமது கட்டிட பணி நடைபெறாதால் பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் முழுமையாக ஒப்பந்தப்படி கட்டி தராமல் விட்டுச் சென்ற தனது கட்டிடத்தை முழுமையாக தாம் கட்டி முடிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இதனால் வேறு வழியின்றி இந்த புகாரை தாம் தாக்கல் செய்துள்ளேன் என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
03. எனவே, சேவை குறைபாட்டிற்காக ரூபாய் 15 லட்சமும் மன உளைச்சலுக்கு இளைப்பீடாக இழப்பீடாக ரூபாய் 5 லட்சமும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 25 ஆயிரமும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய் 25 லட்சமும் தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் சரியான கருதும் தக்க தீர்வுகளை தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர்கள் மீதான ஒருதலைப் பட்ச ஆணை மற்றும் அவர்களது சட்ட அறிவிப்பில் உள்ள சங்கதிகள் சுருக்கம்:
04. எதிர் தரப்பினர்கள் மீது ஒரு தலை பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு அவர் தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
05. எதிர் தரப்பினர்கள் கடந்த 22-02-2021 ஆம் தேதியில் முறையீட்டாளருக்கு ஒரு சட்ட அறிவிப்பு அனுப்பி உள்ளார்கள் அதில் உள்ள சங்கதிகள் சுருக்கம் பின்வருமாறு. தான் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடங்களை கட்டி கொடுக்கும் பணியில் உள்ளேன் என்றும் தமக்கும் முறையீட்டாளருக்கும் கடந்த 22-02-2021 ஆம் தேதியில் நாமக்கல் நகர், அழகு நகரில் உள்ள காலி இடத்தில் வீடு கட்டுவதற்காக ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும் ஒப்பந்தப்படி தரைத்தளமும் முதல் தளமும் கட்டப்பட வேண்டும் என்றும் வாய்மொழியாக இரண்டாவது தளத்தை கட்டுவதற்கு தமக்கும் முறையீட்டாளருக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும் அதன்படி முறையீட்டாளர் தமக்கு ரூ 67,29,334/- செலுத்த வேண்டும் என்றும் ஆனால் அவர் ரூ 48,000,00/- மட்டுமே செலுத்தியுள்ளார் என்றும் மீதத்தொகை ரூ 19,29,334/- ஐ அவர் செலுத்த வேண்டி உள்ளது என்றும் தாம் செய்த கட்டிடப் பணிகளில் இன்னும் ரூபாய் 7 ஏழு லட்சம் மதிப்புள்ள பணிகள் மட்டுமே மீதம் உள்ளது என்றும் எனவே மீதத்தொகை ரூபாய் 12,29,334/-ஐ தமக்கு முறையீட்டாளர் உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் எதிர் தரப்பினர்கள் இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்கள்
06. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளாரா?
2) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனர் எனில் எத்தகைய பரிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
07. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல அவருக்கும் எதிர் தரப்பினர்களுக்கும் கட்டிட ஒப்பந்தம் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரமாக முறையீட்டாளர் தரப்பு முதலாவது சான்றாவணம் உள்ளதாலும் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களுக்கு பணம் செலுத்தியதற்கு சான்றாவணங்கள் அவர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாலும் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
08. முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலாவது சான்றாவணமான முறையீட்டாளருக்கும் எதிர் தரப்பினர்களுக்கும் ஏற்பட்ட 05-06-2019 ஆம் தேதிய கட்டிட ஒப்பந்தப்படி எதிர்த் தரப்பினர்கள் நாமக்கல் அழகு நகரில் உள்ள காலி மனை இடத்தில் 2356 சதுர அடி பரப்பளவில் தரை தளத்திலும் முதல் தளத்திலும் வீடு கட்டி தர வேண்டும் என்பதும் இதற்கு ஒரு ரூ 45,47,600/-முறையீட்டாளர் செலுத்த வேண்டும் என்பதும் தெரிய வருகிறது. இந்த ஆவணத்தில் எந்தெந்த பணிகள் முடிவடைந்த உடன் எவ்வளவு தொகை முறையீட்டாளரால் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முறையீட்டாளரே தமது கட்டிடத்தில் மூன்றாவது தளத்தையும் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டு எதிர் தரப்பினர் ஒப்புக்கொண்டு வாய்மொழியாக ஒப்பந்தம் ஏற்பட்டது என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். எதிர் தரப்பினர் வழங்கிய சட்ட அறிவிப்பிலும் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் ஆணையர் தரப்பில் குறியீடு செய்யப்பட்டுள்ள புகைப்படங்களில் முழுமையாக பூர்த்தியாகாத நிலையில் தரைத்தளமும் முதல் தளமும் கட்டப்பட்டு ஒப்பந்தத்தில் உள்ளபடி இரண்டாவது தளத்தில் ஒரு அறை மட்டும் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் மூன்றாவது தளத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டதாக எடுத்துக் கொள்ள இயலாது என்றும் இதனால் ஒப்பந்தப்படி கட்டிடம் கட்டப்பட்டதா? என்பதை மட்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
09. முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களுக்கு ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய தொகை ரூ 45,47,600/ மற்றும் கூடுதலாக ரூ 2,53,400/- ஆக மொத்தம் ரூபாய் 48 லட்சத்தை செலுத்தி விட்டார் என்பதற்கு ஆதாரமாக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சான்றாவணங்கள் உள்ளன. இந்த ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட ஆணையர் அறிக்கை மற்றும் அத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று சான்றாவனங்களை பரிசீலிக்கும் போது ஒப்பந்தப்படி எதிர்தரப்பினர்கள் கட்டிடத்தை கட்டி முடிக்காமல் உள்ளார்கள் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
10. ஒப்பந்தப்படி செய்யப்பட வேண்டிய பணிகளில் எதிர்த்தரப்பினர்கள் செய்துள்ள பணிகளின் மதிப்பு என்ன என்று முடிவு செய்யப்பட வேண்டிய சூழ்நிலையில் கட்டிட பொறியாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அளித்த அவரது அறிக்கை முறையீட்டாளர் தரப்பு 11 வது சான்றாவணமாக குறியீடு செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை நிபுணரின் அறிக்கையாக பார்க்கும் போது ஒப்பந்தப்படி எதிர்தரப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகளில் செய்துள்ள பணியின் மதிப்பு ரூபாய் 23 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளதை இந்த ஆணையம் ஏற்றுக் கொள்கிறது.
11. ஒப்பந்தத்தில் எதிர் தரப்பினர்கள் அவர்களது முகவரியாக கூறியுள்ள இடத்தில் எதிர்தரப்பினர்களின் அலுவலகம் இல்லை என்று புகாரில் முறையீட்டாளர் குற்றம் சாட்டியுள்ளார். இதே போலவே எதிர் தரப்பினர்கள் நிறுவனத்தின் நிர்வாகி இயக்குனரின் மனைவி பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களுக்கு பணத்தை செலுத்தி வந்தார் என்பதை முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்துள்ள சான்றாவணம்-13 மூலம் அறிய முடிகிறது. இத்தகைய சூழ்நிலையில் முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளது போல எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 2
12. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு என்ன பரிகாரம் கிடைக்கத்தக்கது என்று ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.
13. ஒப்பந்தப்படி கட்டிடத்தை ஏற்றுக் கொண்ட கால அளவில் முறையீட்டாளர் முழுமையான தொகையை வழங்கியும் ஒப்பந்தப்படி பணிகளை முடிக்காத காரணத்தால் எதிர் தரப்பினர்கள் ஏற்றதை ஆற்றவில்லை என்று இந்த ஆணையம் முடிவு செய்து முறையீட்டாளரிடம் பெற்ற பணம் ரூபாய் 48 லட்சத்தில் கட்டிட பணியாக செலவு செய்த தொகை ரூபாய் 23 லட்சத்தை கழித்துக் கொண்டு மீதத்தொகை ரூபாய் 25 லட்சத்தை முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் 09-08-2023 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை இத்தொகைக்கு ஆண்டொன்றுக்கு 9 % வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும்.என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
14, எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டிற்காகவும் அதனால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகவும் ரூபாய் 5 லட்சத்தை முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் 09-08-2023 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை இத்தொகைக்கு ஆண்டொன்றுக்கு 9 % வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும்.என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
15, இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரிடம் பெற்ற பணம் ரூபாய் 48 லட்சத்தில் கட்டிட பணியாக செலவு செய்த தொகை ரூபாய் 23 லட்சத்தை கழித்துக் கொண்டு மீதத்தொகை ரூபாய் 25 லட்சத்தை முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் 09-08-2023 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை இத்தொகைக்கு ஆண்டொன்றுக்கு 9 % வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும்..
02. எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டிற்காகவும் அதனால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகவும் ரூபாய் 5 லட்சத்தை முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் 09-08-2023 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை இத்தொகைக்கு ஆண்டொன்றுக்கு 9 % வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும்.
03. வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 11-07-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
மு.சா.ஆ.1 | 05-06-2019 | கட்டிட ஒப்பந்தம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.2 | 23-08-2019 | முன்பண ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.3 | 18-09-2019 | முன்பண ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.4 | 29-09-2019 | முன்பண ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.5 | 03-12-2019 | முன்பண ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.6 | 19-12-2019 | முன்பண ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.7 | 01-01-2020 | முன்பண ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.8 | 30-05-2020 | முன்பண ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.9 | 11-07-2020 | முன்பண ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.10 | - | புகைப்படங்கள் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.11 | - | நடைபெற்ற வேலைகள் குறித்த அறிக்கை | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.12 | - | முறையீட்டாளர் சமர்ப்பித்த புகார் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.13 | 05-03-2021 | காவல்துறையில் முதலாம் எதிர் தரப்பினர் மனைவியின் பதில் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.14 | 22-02-2021 | எதிர்தரப்பினரின் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.15 | 05-01-2022 | முறையீட்டாளரின் பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ஆணையர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Description | Note |
ஆ.சா.ஆ.1-C-1 | ஆணையர் அறிக்கை | அசல் |
ஆ.சா.ஆ.2-C-2 | மாதிரி வரைபடம் | அசல் |
ஆ.சா.ஆ.2-C-2 | புகைப்படங்கள்-6 | அசல் |
எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி:
திருமதி கலைவாணி, முறையீட்டாளர்
திரு சி செந்தில்குமார், கட்டிட பொறியாளர்
எதிர் தரப்பினர்கள் சாட்சி: இல்லை
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.