புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்(Coimbatore): 10-04-2018
உத்தரவு பிறப்பித்த நாள் 26-09-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். இரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 77/2022.
கோயம்புத்தூர், சௌரிபாளையம், இந்திரா நகர், கதவு எண் 182 -ல் வசிக்கும் டி பழனிச்சாமி (இறப்பு)-1, இதே முகவரியில் வசிக்கும் முதலாம் முறையீட்டாளரின் மனைவி பாப்பாத்தி - 2 மற்றும் அவரது மகன் மோகன்ராஜ் – 3 -முறையீட்டாளர்கள்
- எதிர்-
1. கோயம்புத்தூர், 1287, திருச்சி சாலை, ஐ சி ஐ சி ஐ வங்கியின் எதிரில் உள்ள Ortho Neuro and Trauma Centre - ரிச்மண்ட் ஹாஸ்பிடல் அதன் நிர்வாக இயக்குனர் மூலம்,
2. கோயம்புத்தூர், பீளமேட்டில் உள்ள பி. எஸ். ஜி. ஹாஸ்பிடல், அதன் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மூலம்- எதிர் தரப்பினர்கள்
ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன்படி முறையீட்டாளர்கள் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திரு எம். ஜே. சலாஹுதீன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் முதலாம் எதிர் தரப்பினருக்கு திரு ஆர். அய்யாவு, வழக்கறிஞர் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு திரு டி. கே. விஜயன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 20-09-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், முறையீட்டாளர் சாட்சியம் -02, முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின் தனித்தனியான பதில் உரைகள், முதலாம் எதிர் தரப்பினரின் சாட்சியம்-01, மற்றும் இரண்டு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம்
02. கடந்த 02-11-2016 ஆம் தேதி முதலாம் முறையீட்டாளர் விபத்துக்கு உள்ளாகி சவுரிபாளையம் சண்முகப்பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க கூடும் என்ற காரணத்தால் மேல் சிகிச்சைக்காக கடந்த 03-11-2016 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள் நோயாளியாக கடந்த 12-11-2016 ஆம் தேதி வரை முதலாம் முறையீட்டாளர் இருந்தார் என்றும் விபத்தின் காரணமாக வலது கால் மூட்டில் அதிகமான வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டது என்றும் அதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முதலாம் எதிர் தரப்பினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்றும் முதலாம் முறையீட்டாளர் தரப்பில் ஒப்புக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் பின்னரும் தொடர்ந்து வலி இருந்து வந்ததால் கடந்த 24-12-2016 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் முதலாம் முறையீட்டாளர் மீண்டும் அனுமதிக்கப்பட்டு 08-01-2017 ஆம் தேதியில் விடுவிப்பு செய்யப்பட்டார் என்றும் முதலாம் எதிர்த்தரப்பினர் கவனக்குறைவாக செயல்பட்டு மருத்துவ அலட்சியத்துடன் முதலாம் முறையீட்டாளருக்கு சிகிச்சை வழங்கியதால் முதலாம் முறையீட்டாளரின் பிரச்சனை தொடர்ந்து வந்ததால் இரண்டாம் எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டபோது முதலாம் முறையீட்டாளரின் வலது காலின் ஒரு பகுதியை எடுப்பதுதான் தீர்வு என கூறியதால் அதற்கு சம்மதித்து முதலாம் முறையீட்டாளரின் வலது கால் இரண்டாம் எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் நீக்கம் செய்யப்பட்டு வைத்தியம் செய்யப்பட்டது என்றும் முதலாம் எதிர்த்தரப்பினர் கேட்டுக்கொண்ட சிகிச்சைக்கான தொகை அனைத்தையும் செலுத்தியும் முதலாவது எதிர் தரப்பினர் கவனக்குறைவாக செயல்பட்டு அலட்சியமான மருத்துவ சிகிச்சை வழங்கியதால் முதலாம் முறையீட்டாளருக்கு காலை எடுக்க வேண்டிய நிலையில் மிகுந்த சிரமமும் மன உளைச்சலும் ஏற்பட்டது என்றும் முதலாம் முறையீட்டாளர் இந்த புகாரை தாக்கல் செய்த பின்னர் இறந்து விட்டதால் இந்த ஆணையத்தின் அனுமதியை பெற்று முதலாம் முறையீட்டாளரின் வாரிசுகளான இரண்டாம் மற்றும் மூன்றாம் முறையீட்டாளர்கள் இந்த புகாரில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றும் முதலாவது எதிர் தரப்பினர் அலட்சியமாக சிகிச்சை செய்து சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் இதனால் பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர்கள் புகாரில் தெரிவித்துள்ளார்கள்.
04. எனவே, முதலாம் முறையீட்டாளருக்கு கவனக்குறைவான அலட்சியமான சிகிச்சியை முதலாம் எதிர் தரப்பினர் வழங்கியதால் முதலாம் முறையீட்டாளரின் கால் நீக்கம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதற்கும் இதனால் முறையீட்டாளர்கள் தரப்பிற்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கும் முதலாம் எதிர் தரப்பினர் இழப்பீடாக ரூபாய் 20 லட்சமும் இந்த வழக்கின் செலவு தொகையையும் இந்த வழக்கில் சங்கதிகளுக்கு ஏற்ப தேவையான இதர தீர்வுகளையும் வழங்க வேண்டும் என்றும் புகாரில் முறையீட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்ள்.
முதலாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
05. முறையீட்டாளர்கள் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர்கள் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் முதலாம் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார் .
06. புகார் கற்பனையான சங்கதிகளுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கடந்த 02-11-2016 ஆம் தேதி முதலாம் முறையீட்டாளர் விபத்துக்கு உள்ளாகி சவுரிபாளையம் சண்முகப்பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது எனக் கூறும் நிலையில் அந்த மருத்துவமனையை இந்த புகாரில் தரப்பினராக முறையீட்டாளர்கள் சேர்க்கவில்லை என்றும் மேலே சொல்லப்பட்டவாறு முதலுதவி வழங்கிய பின்னர் தங்கள் மருத்துவமனையில் புகாரில் கூறியுள்ளது போல உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டது உண்மை என்றும் முதலாம் முறையீட்டாளருக்கு சண்முகப்பிரியா மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சைகளின் விவரங்கள் அல்லது மருத்துவமனை விடுவிப்பு அறிக்கை எதனையும் முறையீட்டாளர்கள் தரப்பில் தங்களிடம் சமர்ப்பிக்கவில்லை என்றும் முதலாம் முறையீட்டாளர் தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் அவருக்கு சிகிச்சை வழங்கினோம் என்றும் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கினோம் என்றும் தங்கள் மருத்துவமனையில் உள்ள தரம் வாய்ந்த மருத்துவர்கள் முதலாம் முறையீட்டாளரை பரிசோதித்து பிரச்சனையின் தன்மையை அறிந்து சிகிச்சை வழங்கினோம் என்றும் முறையீட்டாளர்கள் தரப்பில் சம்மதத்தை பெற்று மருத்துவ வழிகாட்டுதல்களை பின்பற்றி முறையான அறுவை சிகிச்சையை செய்தோம் என்றும் கொடுங்காயமாக இருந்ததால் சிகிச்சைக்கு பின்னர் காயம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து முதலாம் முறையீட்டாளருக்கு விளக்கப்பட்டது என்றும் தங்கள் மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்ட பின்னர் மீண்டும் பரிசோதனைக்காக முதலாம் முறையீட்டாளர் மருத்துவமனைக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் என்றும் மீண்டும் பரிசோதனைக்காக தங்கள் மருத்துவமனைக்கு வந்த போது அவரது காயங்கள் குணமாகி இருந்தன என்றும் இது குறித்து அவருக்கு விளக்கப்பட்டது என்றும் மீண்டும் உரிய சோதனைகள் செய்யப்பட்டது என்றும் மூன்றாவது முறை பரிசீலனைக்காக முறையீட்டாளர் தங்கள் மருத்துவமனைக்கு வந்தார் என்றும் முறையீட்டாளர் தங்களது வழிகாட்டுதல்களை அறிவித்து கட்சிக்கு பின்னர் பின்பற்றாததால் காலில் பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தது என்றும் இதற்காக சிகிச்சை அளிக்கும் போது தங்கள் அறிவுறுத்தலை மீறி மருத்துவமனையில் இருந்து சென்று விட்டார் என்றும் மீண்டும் 24-12-2016 ஆம் தேதியில் முதலாம் முறையீட்டாளர் தங்கள் மருத்துவமனைக்கு வந்த போது அவர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவரது சம்மதம் பெறப்பட்டு இரண்டாவது நிலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் தங்கள் தரப்பில் முதலாம் முறையீட்டாளருக்கு தக்க முறையில் சிறந்த அறுவை சிகிச்சையும் மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டது என்றும் அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் 08-01-2017 ஆம் தேதியில் முறையீட்டாளரை மருத்துவமனையில் இருந்து விடுவித்த பின்னர் அவர் மீண்டும் பரிசோதனைக்கு தங்கள் வேண்டுகோளின் படி அறிவுறுத்தலின்படி வரவில்லை என்றும் முறையீட்டாளர் தங்களுக்கு அனுப்பிய அறிவிப்பிற்கு தக்க பதில் அறிவிப்பு வழங்கப்பட்டது என்றும் அதன் பின்னரும் முதலாம் முறையீட்டாளர் இந்த புகாரை தாக்கல் செய்துள்ளார் என்றும் முறையீட்டாளர்கள் கேட்கும் பரிகாரம் கிடைக்கத்தக்கது அல்ல என்றும் இந்நிலையில் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் புகாரில் கூறியுள்ளது போல ஏற்படவில்லை என்றும் முறையீட்டாளர்கள் புகாரில் கூறுவது போல எவ்வித மருத்துவ அலட்சியமான சிகிச்சையும் தங்கள் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் முதலாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
இரண்டாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
07. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார் .
08. கடந்த 03-02-2017 ஆம் தேதியில் முதலாம் முறையீட்டாளர் தங்கள் மருத்துவமனைக்கு வலது காலில் அதிக வலியும் கடந்த மூன்று மாதங்களாக நடக்க இயலவில்லை என்றும் தெரிவித்து சிகிச்சை பெற வந்தார் என்றும் மூன்று மாதங்களுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதும் அதன் பின்னர் இரண்டாவது அறுவை சிகிச்சையும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது என்பதும் முதலாம் முறையீட்டாளர் சமர்ப்பித்த மருத்துவ ஆவணங்கள் மூலம் தங்களுக்கு தெரிய வந்தது என்றும் தங்களால் தக்க மருத்துவ சோதனைகள் செய்யப்பட்ட பின்னர் முதலாம் முறையீட்டாளருக்கு இருந்த பிரச்சனையை சரி செய்ய வலது காலின் ஒரு பகுதியை நீக்கம் செய்ய வேண்டும் என்று முதலாம் முறையீட்டாளருக்கு தெரிவித்து அவர் ஒப்புக் கொண்டதால் கடந்த 05-02-2017 ஆம் தேதியில் அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் உங்கள் சிகிச்சைகளின் போது உரிய மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்பட்டு அவருக்கு விடுவிப்பு தொகுப்புரை வழங்கப்பட்டது என்றும் அதன் பின்னர் தங்களால் அறிவுறுத்தப்பட்டபடி அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பரிசோதனைகளுக்கு முதலாம் முறையீட்டாளர் தங்கள் மருத்துவமனைக்கு வந்தார் என்றும் தங்கள் மீது புகார் தாக்கல் செய்ய வழக்கு மூலம் இல்லை என்றும் தங்களிடம் புகாரில் எவ்வித பரிகாரமும் கேட்கவில்லை என்றும் தங்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளையும் புகாரில் முன் வைக்கவில்லை என்றும் இந்நிலையில் தங்கள் மீதான புகாரை தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் இரண்டாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
09. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? எதிர் தரப்பினர்கள் அலட்சியமான மருத்துவ சிகிச்சையை வழங்கி சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர் தரப்பினர்கள் அலட்சியமான மருத்துவ சிகிச்சையை வழங்கி சேவை குறைபாடு புரிந்து உள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
10. முதலாம் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார் என்று எதிர் தரப்பினர்களின் பதில் உரைகளில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதால் முதலாம் முறையீட்டாளர் எதிர்தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்றும் முதலாம் முறையீட்டாளர் இறந்து விட்டதால் அவரது வாரிசுகளான இரண்டாம் மற்றும் மூன்றாம் முறையீட்டாளர்களும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி எதிர்தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
11. புகாரில் இரண்டாம் எதிர் தரப்பினர் மீது எவ்வித குற்றச்சாட்டுகளையும் முன் வைக்காததாலும் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் எவ்வித பரிகாரங்களையும் கேட்காததாலும் எடுத்த எடுப்பிலேயே இரண்டாம் எதிர் தரப்பினர் மீதான புகாரை தள்ளுபடி செய்வது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
12. புகாரில் முதலாம் எதிர்த்தரப்பினர் கவனக்குறைவாக செயல்பட்டு அலட்சியமான மருத்துவ சிகிச்சை வழங்கியதன் மூலமாக சேவை குறைபாடு புரிந்துள்ளார் என கூறும் நிலையில் எத்தகைய கவனக்குறைவான அலட்சியமான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது என்ற விவரங்களையும் அதனை நிரூபிக்க தக்க சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் எதனையும் முறையீட்டாளர்கள் தரப்பில் இந்த ஆணையத்தில் தாக்கல் செய்து குறியீடு செய்யவில்லை. முறையீட்டாளர்கள் தரப்பில் முதலாம் முறையீட்டாளரின் இறப்பிற்கு முன்பு அவரால் இந்த ஆணையத்தின் முன்பாக நிரூபண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது இறப்பிற்கு பின்பு திருத்தப்பட்ட புகார் விசாரணை ஏற்பட்ட நிலையில் மூன்றாம் முறையீட்டாளரால் நிரூபண வாக்குமூலம் இந்த ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலாம் முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினருக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு, அதனை முதலாம் முறையீட்டாளர் பெற்றுக் கொண்டதற்கான அஞ்சல் ஒப்புகை அட்டை, முதலாம் எதிர் தரப்பினரின் பதில் அறிவிப்பு ஆகியவற்றை இந்த புகாரை தாக்கல் செய்யும்போது முதலாம் முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ளார். இந்த ஆவணங்களையும் குறியீடு செய்வதற்கு தக்க நடவடிக்கைகளை முறையீட்டாளர்கள் தரப்பில்மேற்கொள்ளவில்லை. எவ்வாறு இருப்பினும் வழக்கறிஞர் அறிவிப்பு பதிலறிப்பு போன்றவை மட்டுமே புகாரில் உள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானவை அல்ல.புகாரில் உள்ள முதலாம் எதிர் தரப்பினர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தக்க மருத்துவ சாட்சியம் அல்லது மருத்துவ நிபுணரின் கருத்துரை எதனையும் முறையீட்டாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் முதலாம் எதிர் தரப்பினர் மீதான புகார் முறையீடாளர்கள் தரப்பில் தக்க சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2 & 3
13. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 26-09-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முதலாம் எதிர் தரப்பினர் சான்றாவணங்கள்: இல்லை
இரண்டாம் எதிர் தரப்பினர் சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர்கள் தரப்பு சாட்சி: திரு டி பழனிச்சாமி, திரு மோகன்ராஜ்
முதலாம் எதிர் தரப்பினர் சாட்சி: மருத்துவர் வி. ரஞ்சித்
இரண்டாம் எதிர் தரப்பினர் சாட்சி: இல்லை
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.