புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்(Coimbatore) : 08-05-2018
உத்தரவு பிறப்பித்த நாள் :12-09-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 92/2022.
கோயம்புத்தூர், பட்டணம் அபிலயம் ராமசாமி நகர் இலக்கம் 6/376 -ல் வசிக்கும் ஜி. ஹரிஷ் மல்லையா மனைவி ஸ்ரீ லட்சுமி ஹரிஷ்
- முறையீட்டாளர்
- எதிர்-
1. மும்பை, அந்தேரி கிழக்கு, அந்தேரி குர்லா சாலை, சகீனகா, டவுன் சென்டர் II, இலக்கம் 502, ஐந்தாவது மாடியில் அலுவலகம் வைத்துள்ள M/s. RANAULT, அதன் மேலாளர் மூலம்,
2. கோயம்புத்தூர், லட்சுமி மில்ஸ் சந்திப்பு, அவினாசி சாலை, கதவு எண் 1187 -ல் உள்ள அண்ணாமலை மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட், அதன் மேலாளர் மூலம். - எதிர் தரப்பினர்கள்
ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன்படி முறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்காக பி. சுதாகர், வழக்கறிஞர் முன்னிலையாகியும் முதலாம் எதிர் தரப்பினருக்கு திரு எம். ரங்கநாதன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு திரு எஸ் பெருமாள் வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 05-09-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், முறையீட்டாளர் சாட்சியம் -01, அவரது சான்றாவணங்கள் -15, முதலாம் எதிர் தரப்பினரின் பதில் உரை, அவரது தரப்பு சான்றாவணம்-1, இரண்டாம் எதிர் தரப்பினரின் பதில் உரை, அவரது சாட்சியம் அவரது தரப்பு சான்றாவணங்கள்-2 மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம்
02. முதலாம் எதிர் தரப்பினர் KWID என்ற வகையில் கார்களின் தயாரிப்பாளர் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் இந்த வகை வாகனங்களை கோயம்புத்தூர் பகுதியில் விற்பனை செய்யும் விநியோகஸ்தர் என்றும் கடந்த 2017 முதல் வாரத்தில் இரண்டாம் எதிர் தரப்பினரை கார் வாங்குவதற்காக அணுகிய போது 999 சி சி திறன் உடைய காரை வாங்குவதற்கு அவர்கள் தரப்பில் தம்மிடம் பரிந்துரை செய்யப்பட்டது என்றும் இதன் அடிப்படையில் KWID RXT (o) SCE BS IV என்ற வகை காரை ரூ 4,84,642/- செலுத்தி இரண்டாம் எதிர் தரப்பினரிடம் விலைக்கு வாங்கி கடந்த 09-06-2017 ஆம் தேதியில் TN 37 CS 8709 என்ற எண்ணில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்தேன் என்றும் இந்த காரை உபயோகிக்க தொடங்கிய போது அதிக சத்தம் காற்று தடைகளில் பிரச்சனை குறைந்த மைலேஜ் குறைந்த உந்து சக்தி, சக்கரங்களிலும் ஜன்னல் கண்ணாடிகளிலும் அதிர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகள் வாகனத்தில் உள்ளது தெரிய வந்தது என்றும் இத்தகைய அனைத்து பிரச்சனைகளையும் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் தெரிவித்த போது அவர்கள் தரப்பில் சேவை மேலாளரை அனுப்பி வாகனத்தை எடுத்துச் சென்று பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக திரும்ப வழங்கினார்கள் என்றும் மீண்டும் கடந்த 31-07-2017 ஆம் தேதியில் வாகனத்தில் பழுது நீக்க இரண்டாம் எதிர் தரப்பினருக்கு வாகனம் அனுப்பப்பட்டது என்றும் வாகனத்தில் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டதாக இரண்டாம் எதிர் தரப்பினர்மீண்டும் வாகனத்தை வழங்கிய போதும் வாகனத்தில் எந்த பிரச்சனையும் இரண்டாம் எதிர் தரப்பினரால் சரி செய்யப்படவில்லை என்றும் மேலே கூறப்பட்ட குறைபாடுகளுடன் இந்த வகை வாகனம் முதலாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்படுவதாக இரண்டாம் எதிர் தரப்பினர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்றும் இந்த வகை வாகன தயாரிப்பின் அம்சங்கள் (ARAI Specifications) குறித்து இரண்டாம் எதிர் தரப்பினரை கேட்டபோது முதலாம் எதிர்த்தரப்பினரிடம் பெற்று தருவதாக கூறிவிட்டு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் அதனை வழங்கவில்லை என்றும் வாகனத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்யவில்லை என்பது குறித்து கடந்த 20-09-2017 ஆம் தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தும் எவ்வித பதிலும் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் கடந்த 22-09-2017 ஆம் தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு தான் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியதாகவும் அதனை பெற்ற பின்னர் கடந்த 06-10-2017 ஆம் தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினரின் சேவை குழுவினர் வாகனத்தை எடுத்துச் சென்று சென்றனர் என்றும் இந்த முறையும் குறைபாடுகள் சரி செய்யப்படவில்லை என்றும் முதலாம் எதிர் தரப்பினரால் குறைபாடு உடைய வாகனம் உற்பத்தி செய்யப்பட்டு இரண்டாம் எதிர் தரப்பினரால் தமக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் கடந்த 15-02-2018 ஆம் தேதியில் எதிர்தரப்பினர்களுக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியதில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் இரண்டாம் எதிர் தரப்பினர் தமக்கு பதில் அளித்துள்ளார் என்றும் முதலாம் எதிர்த்தரப்பினர் எவ்வித பதிலையும் வழங்கவில்லை என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கை நேர்மையற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளார்
03. எனவே, Automotive Research Association of India என்ற அமைப்பானது வகுத்துள்ள விதிமுறைகளின்படி தமது வாகனத்தை எதிர்த்தரப்பினர்கள் சோதனை செய்து குறைபாடுகளை முழுமையாக நீக்கி தர வேண்டும் அல்லது தம்மால் செலுத்தப்பட்ட காரின் விலை ரூ 4,84,642/- ஐ தமக்கு 18 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் முதலாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்டு குறைபாடுகளுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் முதலாம் எதிர் தரப்பினர் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறைபாடு உள்ள வாகனத்தை தமக்கு விற்று சேவை குறைபாடு புரிந்துள்ளதால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு தமக்கு ரூபாய் 8 லட்சம் இழப்பீடாகவும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 10 ஆயிரத்தையும் இன்னும் இந்த ஆணையம் சரி என கருதும் இதர தீர்வுகளையும் தமக்கு ஆணையம் வழங்க வேண்டும் என்றும்முறையீட்டாளர் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
04. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் முதலாம் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
05. முதலாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்டு இரண்டாம் எதிர் தரப்பினரிடம் முறையீட்டாளர் வாங்கிய வாகனம் குறைபாடு உடையது என்பதை நிரூபிக்க முறையீட்டாளர் போதிய சாட்சியம் மற்றும் ஆவணங்களை இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை என்றும் முதலாம் எதிர்த்தரப்பினர் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி புகார் தாக்கல் செய்ய இயலாது என்றும் வாகனத்தில் என்ன குறைபாடுகள் இருந்தன என்று குறிப்பிட்டு புகாரில் முறையீட்டாளர் தெரிவிக்கவில்லை என்றும் தங்களுக்கும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கும் விநியோகஸ்தர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதன்படி தாங்களும் முதலாம் எதிர்த்தரப்பினரும் principal to principal என்ற அடிப்படையில் செயல்படுபவர்கள் என்றும் தங்களுக்கும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கும் இடையே முதல்வர் முகவர் என்ற உறவு இல்லாத நிலையில் அதனை நிரூபிக்க வேண்டிய கடமை முறையீட்டாளருக்கு உண்டு என்றும் புகாரில் சொல்லப்பட்டுள்ள காரின் உற்பத்தியாளர் தாங்கள் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் தங்களது விநியோகஸ்தர் என்றும் முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளது போல இரண்டாம் எதிர் தரப்பினரிடம் காரை வாங்கியது உண்மை என்றும் முறையீட்டாளரால் வாங்கப்பட்ட வாகனத்தின் டயர்களின் காற்று தடுப்பணை உபயோகிக்கும் போது அதிக சத்தம் வருகிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை முறையீட்டாளருக்கு உண்டு என்றும் இத்தகைய சத்தம் வேறு வெளிப்புற காரணிகளாலும் வரக்கூடிய வாய்ப்பு உண்டு என்றும் மிக அதிக வேகத்தில் சென்று காற்று தடுப்பணை உபயோகிக்கும் போது சத்தம் வரக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்றும் அதிக திறன் கொண்ட வாகனங்கள் வேகமாக இயக்கப்படும்போது அனுமதிக்கப்பட்ட அளவு சத்தம் வருவது இயல்பானது என்றும் உற்பத்தி குறைபாடு காரணமாக அதிக சத்தம் வருகிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை முறையீட்டாளருடையது என்றும் millage of the vehicle என்பது வாகன ஓட்டுனரின் திறமை சாலையின் தன்மை போக்குவரத்து நிலைகள் போன்ற காரணங்களை உள்ளடக்கியது என்றும் தாங்கள் காரின் விலைக்கு தகுந்த அளவில் தரம் உள்ள வாகனங்களை உற்பத்தி செய்துள்ளோம் என்றும் முறையீட்டாளர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப சிறப்பு தகுதிகளை அவரால் வாங்கப்பட்ட காரில் இருந்து எதிர்பார்க்கக் கூடாது என்றும் தாங்கள் உரிய அமைப்புகளிடம் காரை தயாரிக்க அனுமதி பெற்று அதனை உற்பத்தி செய்துள்ளோம் என்றும் வட்டார போக்குவரத்து அலுவலரால் வாகனம் பரிசோதிக்கப்பட்டு பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது என்றும் விலைக்கு வாங்கிய வாகனத்தை முறையீட்டாளர் முறையாக கையாண்டார் என்பது முக்கியமான கேள்வி என்றும் முறையீட்டாளர் கேட்டுள்ள பரிகாரங்கள் அவருக்கு வழங்கத்தக்கதல்ல என்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் முதலாம் எதிர் தரப்பினர் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முறையீட்டாளர் புகாரில் கேட்டுள்ளது சட்டப்படி சரியானது அல்ல என்றும் ஏனெனில் அவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் தங்கள் மீதான புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் முதலாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
இரண்டாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
06. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
07. தங்களை முறையீட்டாளரும் அவரது கணவரும் கார் ஒன்றை வாங்குவதற்காக அணுகினார்கள் என்பது உண்மை என்றும் அவ்வாறு வந்தபோது KWID 800 CC என்ற வாகனத்தை சோதனை ஓட்டம் செய்து பார்த்தனர் என்றும் தாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட வாகனத்தையும் பரிந்துரைக்கவில்லை என்றும் முறையீட்டாளரும் அவரது கணவரும் முடிவு செய்து புகாரில் குறிப்பிட்டுள்ள வாகனத்தை வாங்க தீர்மானித்து தங்களிடம் புகாரில் உள்ள குறிப்பிட்டுள்ளவாறு பணத்தை செலுத்தி குறிப்பிட்டுள்ள நாளில் வாங்கி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்தது உண்மை என்றும் தங்களால் குறைபாடு உடைய வாகனம் விற்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை தாங்கள் மறுக்கிறோம் என்றும் கடந்த 09-06-2017 ஆம் தேதியில் தங்களிடம் வாகனத்தை பெற்றுக் கொண்ட பின்பு வாகன இயந்திரத்தில் சத்தம் வருவதாகவும் கண்ணாடியில் அதிர்வதாகவும் தெரிவித்தனர் என்றும் வாகனத்தை பார்த்தபோது கண்ணாடிகளில் இருந்த ஸ்குரு (tightened the screws) சரி செய்யப்பட்டு அதிர்வுகள் நிறுத்தப்பட்டன என்றும் வாகனத்தில் இயந்திரத்தில் சப்தம் வந்தது என்பது சரியானது அல்ல என்றும் இதே போலவே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளை தங்களிடம் முறையீட்டாளர் கூறிக் கொண்டு இருந்தார் என்றும் ஒவ்வொரு முறையும் வாகனத்தை சோதனை செய்து பார்த்தோம் என்றும் வாகனமானது 17 கிலோமீட்டர் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு வழங்கியது என்றும் அதனையும் தாங்கள் அவரது வாகனத்தை எடுத்து வந்து சோதனை செய்து பார்த்தோம் என்றும் தாங்கள் முறையீட்டாளர் மின்னஞ்சல் அனுப்பிய பின்பு பதில் அனுப்பவில்லை எனக் கூறுவது தவறு என்றும் அதனைப் பெற்ற உடனே நேரடியாக வாகனத்தை பார்த்தோம் என்றும் முறையீட்டாளர் அவரது குற்றச்சாட்டை போதிய சாட்சியம் மற்றும் சான்ற ஆவணங்களுடன் சமர்பிக்கவில்லை என்றும் கடந்த 09-06-2018 ஆம் தேதியில் 5106 கிலோ மீட்டர் ஓடிய நிலையில் வாகனம் தங்களால் சர்வீஸ் செய்யப்பட்டு வழங்கப்பட்டது என்றும் அப்போதும் முறையீட்டாளர் எந்த புகாரையும் தெரிவிக்கவில்லை என்றும் அவரால் விலைக்கு வாங்கப்பட்ட வாகனத்துக்குரிய அனைத்து தரங்களையும் கொண்டு வாகனம் விளங்குகிறது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் தங்கள் மீதான புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் இரண்டாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
08. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் உற்பத்தி குறைபாடு உடைய வாகனத்தை விற்றுசேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர்கள் உற்பத்தி குறைபாடு உடைய வாகனத்தை விற்று சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
09. முறையீட்டாளர் முதலாம் எதிர்த்தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்ட காரை விலைக்கு வாங்கியுள்ளதாலும் இரண்டாம் எதிர் தரப்பினர் அதனை விற்பனை செய்துள்ளதாலும் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. முறையீட்டாளர் முதலாம் எதிர்தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்ட காரில் உற்பத்தி குறைபாடு இருந்தது என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் உற்பத்தி குறைவான காரை தமக்கு விற்று விட்டார்கள் என்றும் குற்றம் சாட்டும் நிலையில் முறையீட்டாளரால் புகாரில் காரில் என்னென்ன உற்பத்தி குறைபாடுகள் இருந்தன என்று பட்டியலிட்டு அவற்றை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் மற்றும் சான்றாவணங்களை இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை. வாகனம் குறைபாடு உடையது எனக் கூறும் நிலையில் தக்க நிபுணர்கள் மூலம் சாட்சியத்தை முன்வைக்கவோ அல்லது அவர்களது கருத்துரையை பெற்று ஆவணமாக சமர்ப்பிக்கவோ முறையீட்டாளர் தவறிவிட்டார். இந்நிலையில் முறையீட்டாளரின் புகாயில் உள்ள சங்கதிகள் தக்க சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2 & 3
10. எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்ததாக முறையீட்டாளர் நிரூபிக்கவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கது அல்ல என்றும்இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து என்னால் திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 12-09-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 09-06-2017 | கார் வாங்கிய ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | - | இரண்டாம் எதிர் தரப்பினர் வழங்கிய ரசீதுகள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 09-06-2017 | வாகன பதிவு சான்றிதழ் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 09-06-2017 | வாகன காப்பீட்டு ஆவணம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 28-07-2017 | இரண்டாம் எதிர் தரப்பினர் வழங்கிய முதலாவது சேவை இன்வாய்ஸ் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 31-07-2017 | இரண்டாம் எதிர் தரப்பினர் வழங்கிய சீட்டு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 20-09-2017 | முறையீட்டாளரின் மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 22-09-2017 | முறையீட்டாளரின் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | 06-10-2017 | இரண்டாம் எதிர் தரப்பினர் வழங்கிய பணிக்கு முந்திய சீட்டு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 15-02-2018 | முறையீட்டாளரின் வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.11 | 17-02-2018 | முதலாம் எதிர் தரப்பினருக்கு வழக்கறிஞர் அறிவிப்பு சேர்ந்ததற்கான ஆவணம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.12 | 16-02-2018 | இரண்டாம் எதிர் தரப்பினரின் வழக்கறிஞர் அறிவிப்புக்கான அஞ்சல் ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.13 | 19-02-2018 | அஞ்சல் ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.14 | - | ஆதார் அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.15 | 15-03-2018 | இரண்டாம் எதிர் தரப்பினரின் பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
முதலாம் எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | - | முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட விநியோகஸ்த ஒப்பந்தம் | ஜெராக்ஸ் |
இரண்டாம் எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | 09-06-2017 | Vehicle history | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | 06-10-2017 | Fuel Efficiency test data sheet | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி:
திருமதி ஸ்ரீ லட்சுமி ஹரிஷ், முறையீட்டாளர்
முதலாம் எதிர் தரப்பினர் சாட்சி:
திருமதி அபா திவாரி, முதுநிலை சட்ட மேலாளர்
இரண்டாம் எதிர் தரப்பினர் சாட்சி:
திரு எம். சந்திரசேகர், ஆலோசகர்
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.