புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 04-12-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 02-12-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 206/2022.
சென்னை, ஆழ்வார்பேட்டை, டிடிகே சாலை, இலக்கம் 49/97 -ல் வசிக்கும் ஜாபர் அலி -முறையீட்டாளர்
1. சென்னை, மயிலாப்பூர், ராயப்பேட்டை சாலை, இலக்கம் 201, சிடி ஐஐடி குரு டவர்ஸ் -ல் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட், அதன் மேலாளர் மூலம்,
2. சென்னை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலை, இலக்கம் 89 -ல் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட், அதன் மேலாளர் மூலம்,
3. புது தில்லி, மதுரா சாலை, மோகன் கூட்டுறவு தொழிற்பேட்டை பேட்டையில் உள்ள எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், அவன் அலுவலர் மூலம் - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திருவாளர்கள் எஸ் என் ஏ உசேன்னி, எஸ். முகமத் காசிம், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களுக்கு திரு கே. ரவிக்குமார், வழக்கறிஞர் முன்னிலையாகியும் மூன்றாம் எதிர் தரப்பினர் மீது ஒருதலைப்பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்டும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 15-11-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியமாக நிரூபண வாக்குமூலம், முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள் – 06, முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் பதிலுரை, அவரது சாட்சியமாக நிரூபண வாக்குமூலம் மற்றும் வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தமக்கு விற்பனை செய்யப்பட்ட உற்பத்தி குறைபாடுள்ள குளிர்சாதன பெட்டிக்கு தாம் செலுத்திய ரூ 80,360/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு ரூ 1,00,000/- ஐ எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
- தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. கடந்த 08-04- 2015 அன்று முதலாம் எதிர் தரப்பினரிடம் மூன்றாம் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்ட குளிர்சாதனப் பெட்டி (Refrigirator) ஒன்றை தாம் ரூ 80,360/- விலைகொடுத்து வாங்கினேன் என்றும் இந்த குளிர்சாதன பெட்டி சரிவர வேலை செய்யவில்லை என்றும் இந்தப் பெட்டியின் உள்ளே சுவர்களில் விரிப்பு ஏற்பட்டது என்றும் இதுகுறித்து தாம் முதலாம் எதிர் தரப்பினரிடம் தெரிவித்து அவரது சேவை பொறியாளர் வந்து குளிர்சாதனப் பெட்டியை சோதனை செய்து இந்த பழுதை நீக்க முடியாது என்றும் வேறு குளிர்சாதனப்பெட்டிதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார் என்றும் உடனடியாக முதலாம் எதிர் தரப்பினரிடம் இதனை தெரிவித்த போது அவர் மூன்றாம் எதிர் தரப்பினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் என்றும் மூன்றாம் எதிர் தரப்பினரை தொடர்புகொண்டபோது உத்தரவாதம் முதலாம் எதிர்தரப்பினர் வழங்கியுள்ளார் என்பதால் முதலாம் எதிர்தரப்பினர்தான் குளிர்சாதனப் பெட்டியை மாற்றித் தர வேண்டும் என தெரிவித்தார் என்றும் குளிர்சாதனப் பெட்டிக்கு உத்திரவாத காலம் 08-04-2016 முதல் 07-04-2020 வரை உள்ளது என்றும் எதிர் தரப்பினர்கள் உற்பத்தியின் போது குறைபாடுள்ள குளிர்சாதன பெட்டியை விற்பனை செய்துள்ளார்கள் என்றும் இது குறித்து புகார் செய்தும் அதனை மாற்றி புதிய குளிர்சாதனப் பெட்டியை வழங்க மறுக்கிறார்கள் என்றும் இதன்மூலம் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் பெருத்த இழப்பு உள்ளிட்ட சிரமங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு எதிர் தரப்பினர்கள் பொறுப்பாளர்கள் என்றும் இதுகுறித்து கடந்த 03-08-2017 ஆம் தேதியில் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, தமக்கு விற்பனை செய்யப்பட்ட உற்பத்தி குறைபாடுள்ள குளிர்சாதன பெட்டிக்கு தாம் செலுத்திய ரூ 80,360/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு ரூ 1,00,000/- ஐ எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
05. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
06. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல 08-04-2015 அன்று முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினரிடம் வாங்கியது உண்மை என்றும் இதற்கு நான்காண்டுகள் உத்தரவாத காலம் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டு உத்திரவாத கால ஆவணம் வழங்கப்பட்டது என்றும் அந்த ஆவணத்தில் நிபந்தனைகள் உள்ளன என்றும் முறையீட்டாளர் குளிர்சாதன பெட்டியை சுமார் ஓராண்டு எவ்வித பிரச்சினையும் இன்றி இல்லாமல் பயன்படுத்தி வந்துள்ளார் என்றும் கடந்த 17-10-2016 ஆம் தேதியில் குளிர்சாதனப்பெட்டியில் குளிரும் தன்மை இல்லை என்று முறையீட்டாளர் புகார் அளித்து தொழில்நுட்ப பணியாளர்கள் அவரது வீட்டிற்குச் சென்று குளிர்சாதனைப் பெட்டியை பரிசோதித்துப் பார்த்து பெட்டியில் உள்ளே உள்ள வாயு குறைவாக இருப்பதை அறிந்து அதனை சரி செய்தார்கள் என்றும் இதன் பின்னர் 9 மாதங்கள் கழித்து கடந்த 01-07-2017 ஆம் தேதியில் முறையீட்டாளர் தமது குளிர்சாதன பெட்டியில் குளிரும் தன்மை இல்லை என்று புகார் அளித்துள்ளார் என்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குளிர்சாதனப் பெட்டியை பரிசோதித்துப் பார்த்து அதன் உள்புறத்தில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால்தான் இத்தகைய தன்மை ஏற்பட்டுள்ளது என் தெரிவித்தார்கள் என்றும் இவ்வாறு இரண்டு முறையும் தொழில்நுட்ப பணியாளர்கள் குளிர்சாதனப் பெட்டியை சோதனை செய்ததில் பெட்டியின் உட்புற சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுதான் குளிரும் தன்மை குறைபாட்டிற்கு காரணம் என்றும் இவ்வாறு சுவர்களில் விரிசல் ஏற்பட காரணம் physical damage என்றும் physical damage காரணமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்றும் எவ்வாறு இருப்பினும் தாங்கள் விற்பனையாளர்கள் மட்டுமே என்றும் குளிர்சாதனப் பெட்டியில் உற்பத்தி குறைபாடு உள்ளது என்றால் அதனை மாற்றி தருவதற்கு உற்பத்தியாளரான மூன்றாம் எதிர்தரப்பினர்தான் பொறுப்பு என்றும் இந்தப் புகாரின் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் தாங்கள் குறைபாடு உடைய பொருளை விற்க வில்லை என்றும் எவ்வித சேவை குறைபாடு புரியவில்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் உற்பத்தியில் குறைபாடு உள்ள பொருளை விற்பனை செய்தும் சேவை குறைபாடும் புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர்கள் உற்பத்தியில் குறைபாடு உள்ள பொருளை விற்பனை செய்தும் சேவை குறைபாடும் புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
08. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல 08-04-2015 அன்று முறையீட்டாளர் மூன்றாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியை முதலாம் எதிர் தரப்பினரிடம் வாங்கியது உண்மை என முதலாம் எதிர்தரப்பினர் ஒப்புக் கொண்டுள்ளதால் முறையீட்டாளர் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் களின் நுகர்வோர் ஆவார்.
09. முதலாம் எதிர்தரப்பினர் குளிர்சாதனப் பெட்டியை விற்பனை செய்தவர் மட்டும் என்ற நிலையில் குறைபாடுள்ள பொருள் விற்கப்பட்டது என்றால் அதன் உற்பத்தியாளரான மூன்றாம் எதிர் தரப்பினரே அதனை மாற்றி தரவேண்டும் என்ற நிலை இருப்பதால் இந்த புகாரில் முதலாம் எதிர்தரப்பினர் மீது முறையீட்டாளர் எவ்வித பரிகாரங்களையும் கோரமுடியாது என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் எவ்வாறு இந்த புகாரில் தொடர்பு உடையவர் என்று முறையீட்டாளர் புகாரில் விளக்கவில்லை என்பதால் இரண்டாம் எதிர்தரப்பினர் மீது முறையீட்டாளர் எவ்வித பரிகாரங்களையும் கோரமுடியாது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
10. இரண்டு முறை தொழில்நுட்ப பணியாளர்கள் குளிர்சாதனப் பெட்டியை சோதனை செய்ததில் பெட்டியின் உட்புற சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுதான் குளிரும் தன்மை குறைபாட்டிற்கு காரணம் என்றும் இவ்வாறு சுவர்களில் விரிசல் ஏற்பட காரணம் physical damage என்றும் physical damage காரணமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் தங்களது பதிலுரையில் கூறும் நிலையில் குளிர்சாதனப்பெட்டி வாங்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட உத்தரவாத ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை ஆய்வு செய்வது அவசியமாக உள்ளது. ஆனால் முதலீட்டாளர் உத்திரவாத அட்டை மற்றும் நிபந்தனைகளை தமது தரப்பில் ஆவணமாக இந்த ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை. அதிலுள்ள நிபந்தனைகளை அறியாமல் இப்பிரச்சினையில் முடிவு காண இயலாது.
11. மேற்படி குளிர்சாதனப்பெட்டியில் குளிரும் தன்மை குறைபாட்டிற்கு காரணம் உட்புற சுவர்களில் விரிசல் ஏற்பட காரணம் physical damage என முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்த் தரப்பினர்கள் கூறும் நிலையில் physical damage மூலம் இந்த பிரச்சனை ஏற்படவில்லை என்பதை தக்க சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டிய கடமை முறையீட்டாளருக்கு உண்டு. குறைந்தபட்சம் குளிர்சாதனப்பெட்டி தொடர்பான அனுபவம் பெற்ற நிபுணர் ஒருவரின் கருத்துரை பெற்று அதனை இங்கு முறையீட்டாளர் தாக்கல் செய்திருக்கலாம் ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எதனையும் அவர் மேற்கொள்ளவில்லை.
12. மேற்கண்ட காரணங்களினால் முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் உற்பத்தியில் குறைபாடு உள்ள பொருளை விற்பனை செய்தும் சேவை குறைபாடும் புரிந்து உள்ளார்கள் என்பது முறையீட்டாளர் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 2 & 3
13. முதலாவது எழு வினாவை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு புகாரில் முதலீட்டாளர் கேட்டுள்ள பரிகாரங்கள் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 02-12-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 08-04-2015 | வாடிக்கையாளர் தரவு சீட்டு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 10-04-2015 | குளிர்சாதன பெட்டி வழங்கப்பட்டன குறிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 10-04-2015 | ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 03-08-2017 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | - | அஞ்சலக ஒப்புதல் அட்டைகள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | - | மூன்றாம் எதிர்தரப்பினருக்கு அனுப்பி திரும்பி வந்த அஞ்சல் உரை | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு ஜாபர் அலி
முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் சாட்சி: திரு சொக்கலிங்கம்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.