புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 21-02-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் : 18-04-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 46/2022.
கோயம்புத்தூர் மாவட்டம், எட்டிமடை பிரிவு, சந்தோஷ் நகர் பிளாட் இலக்கம் 3 -ல் உள்ள வெங்கடசுப்பிரமணியன் அவர்களின் தந்தை வி. கிருஷ்ணமூர்த்தி (தமிழ்நாடு மின்சார வாரிய முன்னாள் நிர்வாக அலுவலர்) -முறையீட்டாளர்
- எதிர்-
1. கர்நாடகா, பெங்களூரு நகர், கொடிக்கள்ளி, மணிப்பால் மருத்துவமனை எதிரில், பழைய விமான நிலைய சாலை, இலக்கம் 1-ல் மூன்றாவது மாடியில் அலுவலகம் வைத்துள்ள M/s.Red Bus,
2. கோயம்புத்தூர் நகர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலை பழைய இயக்கம் 237 புதிய இலக்கம் 1 இல் உள்ளM/s. ESSAR TRAVELS.
- எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு அவரே முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்கள் ஆணையத்தின் அறிவிப்பை பெற்றுக்கொண்டு ஆஜராகாததால் ஒரு தலைப்பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 11-04-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், முறையீட்டாளரின் நிரூபண வாக்குமூலம், அவரது சான்று ஆவணங்கள்-15, ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தமது தரப்பில் எதிர் தரப்பினர்களுக்கு பயண கட்டணமாக செலுத்தப்பட்ட ரூ 750/- ஐ தமக்கு எதிர் தரப்பினர்கள் திரும்ப வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செயலால் ஏற்பட்ட வகையில் தமக்கேற்பட்ட (Car Rent) போக்குவரத்து செலவு ரூ 5,000/- ஐ தமக்கு எதிர் தரப்பினர்கள் திரும்ப வழங்க வேண்டும் என்றும் தமக்கும் தமது மனைவிக்கும் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ.4,50,000/- இழப்பீட்டை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகை ரூ 25,000/- எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம்
03. தாமும் தமது மனைவியும் கடந்த 24-04-2027 ஆம் தேதியில் திருச்சியிலிருந்து கோயம்புத்தூர் செல்வதற்காக முதலாம் எதிர் தரப்பினரின் இணையதளத்தில் 21-04-2017 ஆம் தேதியில் ரூபாய் 750/- செலுத்தி முறையீட்டாளரின் மகன் பேருந்து பயண முன்பதிவு சீட்டை பதிவு செய்திருந்தார் என்றும் 24-04-2027 ஆம் தேதி இரவு 12.05 மணிக்கு திருச்சியில் பேருந்து நிற்கும் இடத்திற்கு சென்று காத்திருந்தபோது பேருந்து வந்தது என்றும் சம்பந்தப்பட்ட பேருந்தில் ஏறும்போது பணியாளர்கள் ஏற்கனவே தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை இரண்டிலும் வேறு பயணிகள் இருப்பதால் ஏற்ற முடியாது என கூறிவிட்டு சென்றார்கள் என்றும் இதன் பின்னர் நடு இரவில் தமது மகனை அழைத்து கார் ஒன்றை ஏற்பாடு செய்து ரூ 5,000/- செலவு செய்து கோயம்புத்தூருக்கு தாமும் தனது மனைவியும் சென்றோம் என்றும் தாங்கள் இருவரும் மூத்த குடிமக்கள் என்றும் தமது மனைவிக்கு இருதய நோய் உள்ளது என்றும் தமக்கு வயது முதிர்வின் காரணமாக நோய்கள் உள்ளது என்றும் இதுகுறித்து எதிர் தரப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் கடிதம் மூலமும் தெரிவித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கை சேவை குறைபாடு என்றும் இதனால் தங்களுக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, தமது தரப்பில் எதிர் தரப்பினர்களுக்கு பயண கட்டணமாக செலுத்தப்பட்ட ரூ 750/- ஐ தமக்கு எதிர் தரப்பினர்கள் திரும்ப வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செயலால் ஏற்பட்ட வகையில் தமக்கேற்பட்ட (Car Rent) போக்குவரத்து செலவு ரூ 5,000/- ஐ தமக்கு எதிர் தரப்பினர்கள் திரும்ப வழங்க வேண்டும் என்றும் தமக்கும் தமது மனைவிக்கும் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ.4,50,000/- இழப்பீட்டை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகை ரூ 25,000/- எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
05. எதிர் தரப்பினர் அறிவிப்பை ஆணையத்தின் அறிவிப்பை பெற்றுக்கொண்டு ஆஜராகதால் ஒரு தலைப்பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்டுள்ளார் அறிவிப்பை
06. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
10. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி முறையீட்டாளரும் அவரது மனைவியும் பேருந்து பயண முன் பதிவு செய்திருந்தார்கள் என்பதை முறையீட்டாளரது முதலாவது சான்றாவணம் மூலம் அறிய முடிகிறது. முறையீட்டாளரின் மகன் பணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று இருந்தாலும் அவரது அனுமதியுடன் முறையீட்டாளரும் அவரது மனைவியும் பயணிகள் என்பதாலும் பயண சீட்டுக்கள் முறையீட்டாளர் மற்றும் அவரது மனைவியின் பெயரில் பெறப்பட்டுள்ள தாலும் முறையீட்டாளர் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
11. முறையீட்டாளரும் அவரது மனைவியும் 24-04-2027 ஆம் தேதி 00. 05 மணிக்கு கிளம்பும் பேருந்தில் திருச்சியிலிருந்து கோயம்புத்தூர் செல்வதற்காக முதலாம் எதிர் தரப்பினரின் இணையதளத்தில் 21-04-2017 ஆம் தேதியில் ரூபாய் 750/- செலுத்தி முறையீட்டாளரின் மகன் பேருந்து பயண முன்பதிவு சீட்டை பதிவு செய்திருந்தார் என்பதும் அந்தப் பேருந்து இரண்டாம் எதிர் தரப்பினரால் இயக்கப்படக்கூடியது என்பதும் முறையீட்டாளரின் முதலாவது சான்றாவணம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
12. மேற்கண்டவாறு பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டின் மூலம் பேருந்தில் பயணிக்க முறையீட்டாளரும் அவரது மனைவியும் அனுமதிக்கப்படவில்லை என்ற விவரத்தை தெரிவித்து முறையீட்டாளர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் இந்த மின்னஞ்சல் இரண்டாவது சான்றாவணமாக முறையீட்டாளர்கள் தரப்பில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பேருந்து இயக்குனரான இரண்டாம் எதிர் தரப்பினர் புகார் அளித்த 24-04-2027 ஆம் தேதியிலேயே பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த மின்னஞ்சல் முறையீட்டாளர் தரப்பு மூன்றாவது சான்றாவணம் ஆகும். அந்தப் பதிலில் முறையீட்டாளரும் அவரது மனைவியும் பயணிக்க பேருந்தில் ஏற வேண்டிய நாள் 25.04-2017 ஆம் தேதி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பயண சீட்டில் உள்ள பயணத் தேதி 25.04-2017 ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டாம் எதிர் தரப்பினரின் பதில் ஏற்புடையதல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
13. முறையீட்டாளர் தரப்பு ஐந்தாவது சான்றாவணம் என்பது முதலாம் எதிர் தரப்பினர் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதம் ஆகும். அதில் பயண கட்டணத்தை திரும்ப அளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அதனை கடிதத்தை அனுப்பிய பின்னரும் தரவில்லை என்பது முறையீட்டாளர் தரப்பு நான்காவது சான்றாவணம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
14. மேற்கண்ட 10 முதல் 14 வரை உள்ள பத்திகளில் விவரிக்கப்பட்ட காரணங்களினால் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்பது முறையீட்டாளர் தரப்பில் சாட்சியின் மூலமும் சான்றாவணங்கள் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
15. எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் எனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு அவர் கேட்கும் பரிகாரங்களில் எத்தகைய பரிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும். முறையீட்டாளர் தமது புகாரில் தமது தரப்பில் செலுத்தப்பட்ட பயண கட்டணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். இந்த கோரிக்கை ஏற்புடையதாகும். எனவே, முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு அவரது தரப்பில் இருந்து பெறப்பட்ட பயண கட்டணம் ரூ 800/- இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் திருப்பி வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
16. முன்பதிவு செய்யப்பட்டபடி பேருந்தில் பயண இருக்கைகள் வழங்கப்படாததால் மாற்று ஏற்பாடு மூலம் ரூ 5000/- செலவு செய்து திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் சென்றதாக கூறப்படுவதற்கு எவ்வித ரசிதும் முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் போக்குவரத்து செலவு ரூ 5000/- தங்களுக்கு எதிர் தரப்பினர்கள் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல என்று இந்த ஆலயம் தீர்மானிக்கிறது.
17. நடு இரவில் முன்பதிவு செய்த மூத்த பயணிகளை பேருந்தில் இருக்கை வழங்கி அழைத்துச் செல்லாமல் சென்றதால் அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலும் சிரமமும் ஏற்படும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் முறையீட்டாளர் மற்றும் அவரது மனைவிக்கு மருத்துவ பிரச்சினைகள் உள்ளது என்பதை சான்றாவணங்கள் மூலம் முறையீட்டாளர் நிரூபித்துள்ளார். எதிர்தரப்பினர்களின் செயல்களால் முறையீட்டாளருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டியது எதிர் தரப்பினங்களின் கடமையாகும். எனவே, வழக்கின் தன்மையை கருதி முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தனித்தனியாக ஒவ்வொருவரும் தலா ரூ 25, 000/- முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும். இந்தத் தொகைக்கு வழக்கு தாக்கல் செய்த நாள் முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை ஆறு சதவீத வட்டி சேர்த்து இந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நான்கு வாரங்களுக்குள் எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 3
இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு அவரது தரப்பில் இருந்து பெறப்பட்ட பயண கட்டணம் ரூ 800/- இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் திருப்பி வழங்க வேண்டும்.
02. வழக்கின் தன்மையை கருதி முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தனித்தனியாக ஒவ்வொருவரும் தலா ரூ 25, 000/- முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும். இந்தத் தொகைக்கு வழக்கு தாக்கல் செய்த நாள் முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை ஆறு சதவீத வட்டி சேர்த்து இந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நான்கு வாரங்களுக்குள் எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும்.
03. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து என்னால் திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 18-04-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 21-04-2017 | முதலாம் எதிர்தரப்பினர் மின்னஞ்சல் மூலம் வழங்கிய பயண சீட்டு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 24-04-2017 | முறையீட்டாளர் தரப்பில் எதிர் தரப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட புகார் மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 24-04-2017 | இரண்டாம் எதிர் தரப்பினரின் மின்னஞ்சல் மூலமாக பதில் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 03-12-2017 | முதலாம் எதிர் தரப்பினருக்கு முறையீட்டாளர் அனுப்பிய கடிதம்/ அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 12-10-2017 | முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு அனுப்பிய மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | - | மருத்துவ சிகிச்சை ஆதாரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | - | மருத்துவ சிகிச்சை ஆதாரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | - | மருத்துவ சிகிச்சை ஆதாரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | - | மருத்துவ சிகிச்சை ஆதாரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | - | மருத்துவ சிகிச்சை ஆதாரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.11 | - | மருத்துவ சிகிச்சை ஆதாரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.12 | - | மருத்துவ சிகிச்சை ஆதாரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.13 | - | மருத்துவ சிகிச்சை ஆதாரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.14 | - | மருத்துவ சிகிச்சை ஆதாரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.15 | - | மருத்துவ சிகிச்சை ஆதாரம் | ஜெராக்ஸ் |
எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: வி கிருஷ்ணமூர்த்தி எதிர்தரப்பினர்கள் சாட்சி: இல்லை
உறுப்பினர் – I தலைவர்.