புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 24-01-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் : 01-08-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 36/2022.
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், ஜக்கர்பாளையம் வழி, ஸ்ரீ குழந்தை அஞ்சல், குருவே கவுண்டன் பாளையம், இலக்கம் 7/11 -ல் வசிக்கும் ரங்கன் மகன் செந்தில்குமார் -முறையீட்டாளர்
- எதிர்-
1. கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், நெகமம், பல்லடம் சாலை,, இலக்கம் 1/49-ல் உள்ள டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட்-ன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகிஸ்தர் ஸ்ரீ லட்சுமி ஏஜென்சிஸ், உரிமையாளர் ரமேஷ்,
2. கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் அஞ்சல், கோவை பிரதான சாலை, இலக்கம் 6/141 -ல் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆட்டோ ஸ், நிர்வாக இயக்குனர் கனகராஜ் ,
3. சென்னை-600 006, ஜெயலட்சுமி எஸ்டேட், ஹாடோஸ் சாலை, இலக்கம் 29 -ல் உள்ள டிவிஎஸ் கிரெடிட் சர்வீஸ் லிமிடெட், மேலாளர், எதிர்தரப்பினர்கள்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன்படி முறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திரு கே மகேந்திரன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் முதலாம் எதிர் தரப்பினருக்கு திரு பி. முத்துக்குமார் மற்றும் திரு ஆர் முருகேசன், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இரண்டாம் எதிர் தரப்பினர் மீது ஒருதலைப் பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்படும் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு திரு ஏ. மாலவன் மற்றும் மூன்று வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 05-07-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், முறையீட்டாளர் சாட்சியம் -01, அவரது சான்றாவணங்கள் -07, முதலாம் எதிர் தரப்பினரின் பதிலுரை, அவரது சாட்சியம், மூன்றாம் எதிர் தரப்பினரின் பதிலுரை, அவரது சாட்சியம் ஒரு சான்றாவணம் மற்றும் இரண்டு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம்
02. இரண்டாம் எதிர் தரப்பினர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் என்றும் முதலாம் எதிர் தரப்பினர் இரண்டாம் எதிர் தரப்பினரின் சார்பில் டிவிஎஸ் மோட்டார் வாகனங்களை விற்பனை செய்பவர் என்றும் மூன்றாம் எதிர் தரப்பினர் வாகனங்களை வாங்குவதற்கு நிதி உதவி வழங்குபவர் என்றும் தாம் கடந்த 2017 ஏப்ரல் மாதத்தில் டிவிஎஸ் எக்ஸெல் சூப்பர் மோட்டார் சைக்கிளை சொந்த உபயோகத்திற்காக வாங்க திட்டமிட்டு முதலாம் எதிர் தரப்பினரை அணுகினேன் என்றும் அவர் தம்மிடம் ரூபாய் 10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு வாகனத்தின் மீதத் தொகைக்கு மூன்றாம் எதிர் தரப்பினரிடம் கடன் பெற்று செலுத்திய பின்னர் வாகனத்தை வழங்கி TN 41 AR 1379 என்ற எண்ணில் பதிவு செய்து கொடுத்தார் என்றும் தான் கடந்த 05-10-2017 ஆம் தேதியில் தம்மால் வாங்கப்பட்ட முழு கடனையும் மூன்றாம் எதிர் தரப்பினரிடம் செலுத்தி விட்டேன் என்றும் இதற்கு அவர் தாம் எவ்வித தொகையும் செலுத்தவில்லை என்று சான்றிதழ் வழங்கியுள்ளார் என்றும் இதன் பின்னர் தாம் கடன் பெற்றது குறித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கடன் குறிப்பை ரத்து செய்து தமக்கு அசல் வாகன பதிவு புத்தகத்தை தருமாறு பலமுறை எதிர் தரப்பினர்களை கேட்டும் அவர்கள் அதனை செய்து தரவில்லை என்றும் இதனால் கடந்த 07-12-2017 ஆம் தேதியில் வழக்கறிஞர் அறிவிப்பு எதிர் தரப்பினர்களுக்கு அனுப்பியும் அவர்கள் தமக்கு பதில் வழங்கவில்லை என்பதோடு மேற்கண்டவாறு கடன் குறிப்பை நீக்கி தரவில்லை என்றும் எதிர் தரப்பினர்களின் இத்தகைய செய்கை சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
03. எனவே, TN 41 AR 1379 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தின் அசல் பதிவு சான்று புத்தகத்தை தமக்கு வழங்கி பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் இதர சிரமங்களுக்கு ரூபாய் இரண்டு லட்சமும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூபாய் ஐந்தாயிரமும் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் சரி என கருதும் இதர தீர்வுகளையும் வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
04. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் முதலாம் எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
05. இரண்டாம் எதிர் தரப்பினர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனைக்கான விநியோகஸ்தர் என்றும் தாம் அவரது துணை விநியோகஸ்தர் என்றும் புகாரில் கூறியுள்ளது போல முறையீட்டாளர் தங்களிடம் முறையீட்டாளர் ரூ 10,000/- செலுத்தி இருசக்கர வாகனத்தை வாங்க முன் வந்தார் என்றும் அதனைப் பெற்றுக் கொண்டு மூன்றாம் எதிர் தரப்பினர் மூலம் அவருக்கு கடனுதவி வழங்கப்பட்ட பின்னர் முறையீட்டாளர் கேட்ட வாகனம் அவருக்கு வழங்கப்பட்டு பதிவு செய்து கொடுக்கப்பட்டது என்றும் தங்கள் தரப்பில் முறையீட்டாளரை ஏமாற்றி விட்டோம் எனக் கூறுவது தவறானது என்றும் அசல் வாகன புத்தகத்தை மூன்றாம் எதிர் தரப்பினரிடம் இருந்து அல்லது பிரதான இரு சக்கர விநியோகஸ்தரான இரண்டாம் எதிர் தரப்பினரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டியது முறையீட்டாளரின் கடமை என்றும் தங்களுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் புரியப்படவில்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்
மூன்றாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
06. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் மூன்றாம் எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
07. புகாரில் கூறியுள்ள வாகனத்தை வாங்குவதற்காக முறையீட்டாளர் தங்களிடம் 17-03-2017 ஆம் தேதியில் கொள்முதல் ஒப்பந்தம் (hire purchase agreement) ஒன்றை செய்து கொண்டு கடன் பெற்றிருந்தார் என்றும் அந்த கடனை அவர் முழுமையாக செலுத்தி விட்டதால் தங்கள் தரப்பில் கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழும் பதிவு புத்தகத்தில் உள்ள கொள்முதல் ஒப்பந்தத்தின் குறிப்பை ரத்து செய்ய தேவையான ஆவணங்களையும் வழங்கி விட்டோம் என்றும் தங்களிடம் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு தேவையான ஆவணங்களை வழங்கிய பின்னர் ஒரு போதும் தாங்கள் முறையிட்டாளரின் அசல் வாகன பதிவு புத்தகத்தை வைத்துக் கொள்ளவில்லை என்றும் {Para II (iii)} முறையீட்டாளர் கடனை செலுத்தி முடித்தவுடன் அவருக்கு கடன் நிலுவையில் இல்லை என்பதற்கான சான்றிதழை வழங்கியதோடு வாகன அசல் பதிவு புத்தகத்தையும் மற்றும் இதர ஆவணங்களையும் வழங்கி விட்டோம் {Para II (v)} என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் புரியப்படவில்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் மூன்றாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
08. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
09. முறையீட்டாளர் தங்களிடம் வாகனத்தை வாங்கினார் என்று முதலாம் எதிர் தரப்பினர் பதிலில் ஒப்புக் கொண்டுள்ளதாலும் புகாரில் கூறியுள்ள வாகனத்தை விற்பனை செய்ததற்கான ரசீதை இரண்டாம் எதிர் தரப்பினர் வழங்கியுள்ளதாலும் மூன்றாம் எதிர் தரப்பினர் தாங்கள் முறையீட்டாளருக்கு புகாரில் கூறியுள்ள வாகனத்தை வாங்க கடன் வழங்கினோம் என்று பதிலில் ஒப்புக்கொண்டுள்ளதாலும் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
10. முறையீட்டாளர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களிடம் புகாரில் கூறியுள்ள வாகனத்தின் அசல் பதிவு புத்தகத்தை கொடுத்ததற்கு எந்த விதமான சாட்சியமும் சான்றாவணமும் இல்லை என்பதோடு அவர்களிடம் அதனை வழங்க வேண்டிய சூழலும் இல்லை என்று இந்த ஆணையம் கருதுகிறது. மூன்றாம் எதிர் தரப்பினரிடம் முறையீட்டாளர் பெற்ற கடன் முழுவதையும் அவர் செலுத்திய பின்பு மூன்றாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அடமான பதிவை ரத்து செய்வதற்கான படிவத்தையும் வழங்கிவிட்டார் என்பதற்கு முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள் ஆதாரங்களாக உள்ளன. இவற்றை வழங்கிய மூன்றாம் எதிர் தரப்பினர் அசல் பதிவு புத்தகத்தை வழங்கவில்லை என்பதற்கு எவ்வித சாட்சியமும் சான்றாவணங்களும் கிடையாது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
11. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து என்னால் திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 01-08-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 23-02-2017 | முதலாம் எதிர் எதிர் தரப்பினர் வாகனத்தை ஒப்படைப்பதற்கான ரசீது | அசல் |
ம.சா.ஆ.2 | 30-03-2017 | இரண்டாம் எதிர் தரப்பினரின் விலை பட்டியல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 05-05-2017 | தவணை கட்டண புத்தகம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 12-10-2017 | கடன் நிலுவையில் இல்லை என்பதற்கான சான்றிதழ் | அசல் |
ம.சா.ஆ.5 | 12-10-2017 | கொள்முதல் ஒப்பந்த ரத்து செய்வதற்கான கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 07-12-2017 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 08-12-2017 | அஞ்சல் ஒப்புகை அட்டைகள்-3 | அசல் |
மூன்றாம் எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எ.சா.ஆ.1 | - | அங்கீகார கடிதம் | அசல் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி : திரு செந்தில்குமார்
முதலாம் எதிர் தரப்பினர் சாட்சி: திரு ரமேஷ்
மூன்றாம் எதிர் தரப்பினர்: சாட்சி திரு எம் ரகு
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.