புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 14-05-2018
உத்தரவு பிறப்பித்த நாள் : 05-09-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 98/2022.
ஈரோடு மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர், ஆனந்தாபுரம், ஆரம்ப சுகாதார மைய குடியிருப்பில் இருக்கும் சங்கர் மனைவி எஸ். கௌதமி - முறையீட்டாளர்
- எதிர்-
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை, மருதூர் அஞ்சல், புங்கம்பாளையம் இலக்கம் 211 கே -ல் வசிக்கும் வழக்கறிஞர் ஆர் அருண்குமார் - எதிர் தரப்பினர்
ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 இந்த புகாரில் முறையீட்டாளர் எதிர் தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திருவாளர்கள் பி. பரமசிவம் மற்றும் எம். தர்மராஜன் வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் எதிர் தரப்பினருக்கு திரு எம் சரவணகுமார், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 23-08-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம், முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள்-13, எதிர் தரப்பினரின் பதிலுரை, அவரது சாட்சியம், சான்றாவணம்-1 மற்றும் இருதரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
- தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
02. தமது கணவர் தம்மிடமிருந்து விவாகரத்துக் கேட்டு கோயம்புத்தூர் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் HMOP 10/2014 என்ற எண்ணில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் என்றும் தாம் கணவருடன் வாழ்வதற்காக HMOP 22/2015 என்ற எண்ணில் வழக்கு தாக்கல் செய்து இருந்தேன் என்றும் இந்த வழக்குகளை நடத்தி வந்த நிலையில் எதிர் தரப்பினர் தமக்கு முகநூல் மூலம் அறிமுகமானார் என்றும் அந்த வழக்குகளை கொடுத்தால் நல்ல முறையில் நடத்தி தருவதாக எதிர் தரப்பினர் தம்மிடம் தெரிவித்தார் என்றும் இந்த வழக்குகளை நடத்த தம்மிடம் ரூபாய் 25 ஆயிரத்தை கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்திலும் தமது நண்பர் நாகராஜ் மூலமாக ரூபாய் ஐந்தாயிரத்தை வங்கி பரிவர்த்தனை மூலமாகவும் கடந்த 12-10-2017 ஆம் தேதியில் ரூபாய் 10 ஆயிரத்தை தன்னிடம் இருந்தும் பெற்றுள்ளார் என்றும் M.C., & GWOP ஆகிய வழக்குகளை தாக்கல் செய்ய கடந்த 18-01-2018 ஆம் தேதியில் தம்மிடமிருந்து ரூபாய் 30 ஆயிரத்தை எதிர் தரப்பினர் பெற்றுக் கொண்டார் என்றும் கடந்த 30-01-2018 ஆம் தேதியில் பண பரிவர்த்தனை மூலமாக ரூ 5,000/- மற்றும் பின்னர் ரூ 2,000/- ஆகியவற்றை எதிர் தரப்பினருக்கு தாம் கொடுத்தேன் என்றும் இவ்வாறு எதிர் தரப்பினர் தம்மிடமிருந்து ரூ 82,000/- பெற்றுக் கொண்டுள்ளார் என்றும் இதன் பின்னரும் ரூபாய் ஒரு லட்சத்துக்கு மேல் செலவாகும் என்று கூறி வங்கியில் கடன் பெற்று பணம் தருமாறு எதிர் தரப்பினர் தம்மிடம் கூறினார் என்றும் தம்மிடம் மேற்கண்டவாறு பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் தமக்கு வாக்களித்தது போல எந்த ஒரு வழக்கையும் தாக்கல் செய்யவில்லை என்றும் தம்மிடம் கூறியது போல உயர் நீதிமன்றத்திற்கு வழக்குகளை மாற்றி தரவில்லை என்றும் இது பற்றி கேட்ட போது உயர்நீதிமன்றத்தில் முதல் வாதம் முடிந்து விட்டதாகவும் இன்னும் இரண்டு வாதம் செய்ய வேண்டும் என்றும் எதிர் தரப்பினர் கூறியதாகவும் ஆனால் தமது வழக்குகள் உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்படவில்லை என்றும் தமக்கு சட்ட அறிவு இல்லை என்பதை பயன்படுத்தி தன்னை ஏமாற்றி உள்ளார் என்றும் இதுகுறித்து கேட்டபோது தவறாக பதில் அளித்தார் என்றும் எதிர் தரப்பினரின் செய்கை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கு புறம்பானது என்றும் இதன் மூலம் தமக்கு எதிர் தரப்பினரால் சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றும் இது குறித்து வழக்கறிஞர் அறிவிப்பு கடந்த 27-03-2018 ஆம் தேதியில் எதிர் தரப்பினருக்கு அனுப்பியதில் அவர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி பதில் வழங்கியுள்ளார் என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் முறையீட்டாளர் புகாரில் தெரிவித்து எதிர்தரப்பினரால் ஏற்பட்ட சேவை குறைப்பாட்டிற்கும் மன உளைச்சலுக்கும் கால விரையத்துக்கும் இழப்பீடு ரூ 3,00,000/- மற்றும் வழக்கின் செலவு தொகையாக ரூ 20,000/- எதிர் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் ஆகியவற்றை தமக்கு எதிர் தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கிற்கு உகந்தது என கருதும் இதர தீர்வுகளையும் வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
03. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
04. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளது போல முறையீட்டாளர் தமக்கு முகநூல் மூலமாக அறிமுகமானார் என்றும் அப்போது அவர் கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தாமும் கணவர் என்னை அழைத்து வாழ வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்ததாகவும் செய்துள்ளதாகவும் முறையீட்டாளர் தம்மிடம் தெரிவித்து இந்த வழக்குகளை நடத்தி தருமாறு வேண்டுகோள் முன் வைத்தார் என்றும் இதனால் அவரது வேண்டுகோளை ஒப்புக்கொண்டு அவரது வழக்குகளை நடத்தினேன் என்றும் மேற்கண்ட வழக்குகளில் முறையீட்டாளருக்காக ஆஜரானேன் என்றும் அப்போதுதான் நான் முறையீட்டாளருக்கு இந்த வழக்குகளில் தான் ஒன்பதாவது வழக்கறிஞர் என்று தெரிந்து கொண்டேன் என்றும் இதற்கு முன்பு ஒவ்வொரு வழக்கறிஞராக மாற்றி மாற்றி எட்டு வழக்கறிஞர்களை அமர்த்தியுள்ளார் என்பது தெரிய வந்தது என்றும் புகாரில் தெரிவித்திருப்பது போல தம்மைப் பற்றி பெருமையாக தாம் எதுவும் முறையீட்டாளிடம் தெரிவிக்கவில்லை என்றும் மற்ற வழக்கறிஞர்கள் பற்றியும் தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கற்பனையாக இத்தகைய சங்கதிகளை முறையீட்டாளர் தெரிவித்துள்ளார் என்றும் மேற்கண்ட இரண்டு வழக்குகளில் ஆஜராகவும் GWOP வழக்கை தாக்கல் செய்யவும் முறையீட்டாளர் அவரது வங்கி மூலம் ரூ 17, 000/- வழங்கி உள்ளார் என்றும் அதனைத் தவிர எந்த ஒரு தொகையும் அவர் தம்மிடம் வழங்கவில்லை என்றும் வழக்கு செலவுகளுக்காக கடன் வாங்கி ரூபாய் ஒரு லட்சம் தருமாறு தான் கேட்டதாக முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளது உண்மைக்கு புறம்பானது என்றும் தம்மிடம் மேற்கண்ட இரண்டு இந்து திருமண அசல் மனுக்களில் முறையீட்டாளருக்காக ஆஜராகி வழக்கு நடத்துமாறும் புதிய வழக்காக GWOP மனுவை தாக்கல் செய்யுமாறும் ஆனால் நான் சாப்பாட்டிற்கு சிரமப்படுவதாக முறையீட்டாளர் சொன்னார் என்றும் அவரிடம் இலவச சட்ட உதவி மையத்தை அணுகுமாறு தாம் தெரிவித்தேன் என்றும் இருப்பினும் சிரமப்பட்டாவது ரூ 25,000/- கொடுத்து விடுவதாக அவர் தம்மிடம் தெரிவித்ததால் வழக்குகளை ஏற்றுக் கொண்டேன் என்றும் கடந்த 06-03-2018 ஆம் தேதியில் மனுவை தாக்கல் செய்த பின்னர் மீத தொகையை கேட்டதால் முறையீட்டாளர் வழக்குகோப்புகளை கேட்டு பெற்றுக் கொண்டு விட்டார் என்றும் முறையீட்டாளர் அனுப்பிய சட்ட அறிவிப்புக்கு உரிய பதில் அறிவிப்பு தம்மால் அனுப்பப்பட்டது என்றும் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி தருவதாக தாம் வாக்குறுதி அளித்ததாக புகாரில் சொல்லப்பட்டுள்ளது தவறானது என்றும் புகாரில் உள்ள குற்றச்சாட்டுகள் முறையீட்டாளராலும் அவரது வழக்கறிஞராலும் கற்பனையாக உருவாக்கப்பட்டவை என்றும் புகாரில் உள்ள சங்கதிகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் முறையீட்டாளர் ரூபாய் மூன்று லட்சம் இழப்பீடு வேண்டும் என்று கேட்டுள்ளதெல்லாம் “அவ்வளவு ஒர்த் (worth) இல்லாத பண்டத்துக்கு பிரபஞ்சத்தையே நஷ்ட ஈடாக கேட்கும் வேலை” என்றும் முறையீட்டாளரும் அவரது வழக்கறிஞரும் தமக்கு மான நஷ்டம் ஏற்படுத்தியதற்காக ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் தெரிவித்து எதிர் தரப்பினர் தமது பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
05. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? இந்த புகாரை விசாரிக்க மாவட்ட நுகர்வோர் ஆணையத்துக்கு அதிகார வரம்பு உள்ளதா?
2) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர் சேவை குறைபாடுபுரிந்து உள்ளாரா?
3) எதிர் தரப்பினர் குறைபாடான சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
4) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
06. எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையில் முறையீட்டாளர் தமக்கு ரூபாய் 17 ஆயிரத்தை இந்து திருமண அசல் மனுக்களில் ஆஜராகவும் புதிதாக GWOP அசல் மனுவை தாக்கல் செய்யவும் கொடுத்தார் என்று ஒப்புக்கொண்டுள்ளதால் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
07. வழக்கறிஞரின் சட்ட சேவை குறைபாட்டிற்காக மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் தாக்கல் செய்து செய்தால் அதனை விசாரிக்க இந்த ஆணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்ற வாதத்தை எதிர் தரப்பினர் அவரது பதில் உரையில் முன் வைக்கவில்லை.
08. The Consumer Forums are empowered to give appropriate relief according to section 14 of CPA and also other relief like, a client can recover the fee paid to the lawyer for any deficiency in service. If it is yet to be paid, the lawyer forfeits his right to recover the fee. In C.S. Sarmav. P.V. Venkatswamy, the complainant had paid fee for filing the suit but the lawyer did not file the suit. The lawyer was directed to pay fee with interest. 1997 CPJ 425 (AP SCDRC) Likewise, in Virender Kumar Gupta v. Anil Kumar Jain, where in an execution proceeding, while representing the petitioner, the respondent (advocate) did not appear and the same was dismissed for default the petitioner was awarded Rs.1 lakh as compensation for mental agony and harassment caused by deficiency in service on the part of the respondent. 2011 (3) CPJ 409 : 2012(1) CLT 180(NC). Hence, this commission decides that deficiency of the service of an advocate is coming under the Consumer Protection Act, 1986 and 2019. எவ்வாறு இருப்பினும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 பிரிவு 107-ல் சொல்லப்பட்டுள்ள அம்சத்தை கருதி வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ன்படி எதிர் தரப்பினர் செய்துள்ள சேவை குறைபாடா? அல்லது வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகளுக்கு மீறலா? என்பதை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் குழுமம் தீர்மானிப்பதே சரியாக இருக்கும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் –2
08. முறையீட்டாளரின் கணவர் தாக்கல் செய்திருந்த இந்து திருமண அசல் மனுவிலும் முறையீட்டாளர் தாக்கல் செய்திருந்த இந்து திருமண அசல் மனுவிலும் எதிர் தரப்பினர் ஆஜராகி வழக்கு நடத்தவும் GWOP மனுவை தாக்கல் செய்யவும் எதிர் தரப்பினருக்கு முறையீட்டாளர் ரூ 82,000/- கொடுத்ததாக புகாரில்கூறும் நிலையில் எதிர் தரப்பினர் அதனை மறுத்து ரூ ரூ 25,000/- என கட்டணம் நிர்ணயம் செய்து அதில் ரூ 17,000/- மட்டுமே முறையீட்டாளர் செலுத்தியதாக எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார். முறையீட்டாளர் எதிர் தரப்பினருக்கு ரூ 82,000/- செலுத்தியதற்கு போதுமான சாட்சியங்களும் சான்றாவணங்களும் முறையீட்டாளரால் இந்த ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் என்ன சட்ட சேவைகளை வழங்க வேண்டும் என்பதை புகாரில் முறையீட்டாளர் தெரிவிக்கவில்லை. முறையீட்டாளர் புகாரில் கூறும் வழக்குகளை சென்னைக்கு மாற்றம் செய்வது குறித்து எத்தகைய அறிவுறுத்தல்கள் எதிர் தரப்பினருக்கு வழங்கப்பட்டது? என்றும் அவர் அந்த பணிகளை செய்ய ஒப்புக்கொண்டு அதற்கான சேவை கட்டணத்தை எப்போது? எவ்வளவு? கட்டணம் பெற்றார் என முறையீட்டாளரால் குறிப்பிட்ட புகாரை இந்த ஆணையத்தின் முன்பு வைக்கவில்லை. முறையீட்டாளர் சமர்ப்பித்துள்ள நான்காம் சான்றாவணமான வாட்சப் மூலமாக முறையீட்டாளரும் எதிர் தரப்பினரும் செய்து கொண்ட தகவல் பரிவர்த்தனைகள் முறையீட்டாளர் மீது எதிர் தரப்பினர் மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்களாக இல்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
09. தம்மால் அறிவுறுத்தப்பட்டவாறு இந்து திருமண அசல் வழக்குகளை எதிர் தரப்பினர் நடத்தவில்லை என்றும் தம்மால் அறிவுறுத்தப்பட்டவாறு மனுவை தாக்கல் செய்யவில்லை என்றும் தம்மிடம் வாக்குறுதி அளித்தபடி வழக்குகளை சென்னைக்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து தரவில்லை என்றும் பொதுவாக எதிர் தரப்பினர் மீது முறையீட்டாளர் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளாரே தவிர அவற்றை தக்க சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் மூலம் மேற்கண்ட சேவை குறைபாடுகளை வழக்கறிஞராகிய எதிர் தரப்பினர் செய்துள்ளார் என்று முறையீட்டாளர் நிரூபிக்கவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
10. மேற்கண்ட இரண்டு வழக்குகளில் ஆஜராகவும் GWOP வழக்கை தாக்கல் செய்யவும் முறையீட்டாளர் அவரது வங்கி மூலம் ரூ 17, 000/- வழங்கி உள்ளார் என்று எதிர் தரப்பினர் பதில் உரையில் கூறி உள்ள நிலையில் எதிர் தரப்பினர் மேற்கண்ட இரண்டு இந்து திருமண அசல் வழக்குகளில் ஆஜராகவில்லை என்று முறையீட்டாளரால் குற்றம் சாட்டப்படவில்லை. ஆனால் GWOP மனுவை தாக்கல் செய்யவில்லை என்று முறையீட்டாளர் எதிர் தரப்பினர் மீது குற்றம் சாட்டியுள்ளது ஆய்வு செய்ய வேண்டியதாக உள்ளது. ரூபாய் 17 ஆயிரத்தை எந்த தேதியில் அல்லது எந்தெந்த தேதிகளில் முறையீட்டாளர் எதிர் தரப்பினருக்கு வழங்கினார் என்பது எதிர் தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் உரையில் இல்லை. இந்நிலையில் முறையீட்டாளருக்காக மனுவை கோயம்புத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் தம்மால் தாக்கல் செய்யப்பட்டதாக கூறி அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டு அந்த நீதிமன்றத்தால் திருப்பப்பட்ட (Petition, which is returned from the court with citing defects) அசல் மனுவை இந்த ஆணையத்தின் முன்பாக எதிர் தரப்பினர் அவரது தரப்பு முதலாவது சான்றாவணமாக தாக்கல் செய்துள்ளார்.
11. எதிர் தரப்பினர் பதில் உரையில் கடந்த 06-03-2018 ஆம் தேதியில் முறையீட்டாளர் வழக்கு கோப்புகளை தம்மிடமிருந்து பெற்று சென்று விட்டார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதே நாளில் (06-03-2018) தாக்கல் செய்யப்பட்ட GWOP மனுவானது (எதிர் தரப்பினர் தரப்பு முதலாவது சான்றாவணம்) 08-03-2018 ஆம் தேதியில் நீதிமன்றத்தில் இருந்து குறைகளை சுட்டிக்காட்டி திருப்பப்பட்டு உள்ளது. இந்த மனுவானது எதிர் தரப்பினரால் முறையீட்டாளரால் நீதிமன்றத்தில் party in person என்ற அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டதாகும். கடந்த 06-03-2018 ஆம் தேதியில் முறையீட்டாளர் வழக்கு கோப்புகளை முறையீட்டாளர் பெற்றுக் கொண்டு எதிர் தரப்பினர் தமக்கு வழக்கறிஞராக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் 08-03-2018 ஆம் தேதியில் நீதிமன்றத்தில் இருந்து குறைகளை சுட்டிக்காட்டி திருப்பப்பட்ட GWOP மனுவானது எவ்வாறு எதிர் தரப்பினருக்கு கிடைத்தது? என்ற விவரத்தை எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவிக்கவில்லை. எவ்வாறு இருப்பினும் முறையீட்டாளருக்கு சொந்தமான மேற்படி மனுவை முறையீட்டாளருக்கு அவரை நேரில் அழைத்து அல்லது அஞ்சல் மூலமாக இந்த ஆணையத்தின் முன்பு எதிர் தரப்பினரால் முதலாவது சான்றாவனமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்றத்தில் திருப்பப்பட்ட அந்த மனுவை வழங்க வேண்டியது எதிர் தரப்பினரின் கடமை என்றும் அதனை செய்யாமல் 06-09-2018 முதல் 31-12-2019 ஆம் தேதி வரை அதனை வைத்திருந்து 31-12-2019 ஆம் தேதியில் அதனை தமது தரப்பு சான்றாவனமாக எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ளது எதிர் தரப்பினர் செய்துள்ள சேவை குறைபாடா? அல்லது வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகளுக்கு மீறலா? என்பதை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 பிரிவு 107-ல் சொல்லப்பட்டுள்ள அம்சத்தை கருதி வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ன் படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமம் தீர்மானிப்பதே சரியாக இருக்கும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
12. எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையில் புகாரில் உள்ள சங்கதிகள் அனைத்தும் முறையீட்டாளர் மற்றும் அவரது வழக்கறிஞரால் ஜோடிக்கப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது. முறையீட்டாளர் கூறும் சங்கதிகளை உள்ளது உள்ளபடியே அவரது அறிவுறுத்தலின்படி புகாராக தயாரித்து அதனை சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள அமைப்பில் தாக்கல் செய்வது வழக்கறிஞரின் பணி என்பது வழக்கறிஞராக உள்ள எதிர் தரப்பினர் அறியாதது அல்ல. இவ்வாறான நிலையில் வழக்கறிஞரை குற்றம்சாட்டி எவ்வித சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் இல்லாமல் எதிர் தரப்பினரின் பதில் உரை அமைந்துள்ளது சரியானது அல்ல என்றும் ஒரு வழக்கறிஞரின் கண்ணியத்துக்கு களங்கம் உருவாக்கும் செயல் என்றும் இதைப் போலவே முறையீட்டாளரை குற்றம் சாட்டி எவ்வித சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் இல்லாமல் எதிர் தரப்பினரின் பதில் உரை அமைந்துள்ளது சரியானது அல்ல என்றும் புகாரில் “முறையீட்டாளர் ரூபாய் மூன்று லட்சம் இழப்பீடு வேண்டும் என்று கேட்டுள்ளதெல்லாம் அவ்வளவு ஒர்த் (worth) இல்லாத பண்டத்துக்கு பிரபஞ்சத்தையே நஷ்ட ஈடாக கேட்கும் வேலை” என வழக்கறிஞர் ஆகிய எதிர் தரப்பினர் கூறியுள்ளது வழக்கு தாக்கல் செய்துள்ள முறையீட்டாளராகிய ஒரு பெண்ணின் கண்ணியத்துக்கு களங்கம் உருவாக்கும் செயல் என்றும் இந்த ஆணையம் கருதுகிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 பிரிவு 107-ல் சொல்லப்பட்டுள்ள அம்சத்தை கருதி வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ன்படி இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமம் தீர்மானிப்பதே சரியாக இருக்கும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
12. இரண்டாம் எழு வினாவானது புகாரில் உள்ள பிரச்சனை குறித்து வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமம் தீர்மானிப்பதே சரியாக இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அந்த அமைப்பின் விசாரணைக்கு பின்னரே முறையீட்டாளருக்கு பரிகாரம் வழங்குவது குறித்து முடிவு செய்ய இயலும் என்பதால் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் தற்போது வழங்கத்தக்கதல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் –4
13. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. வழக்கின் தன்மையை கருதி எதிர் தரப்பினர் மீதான புகாரை இங்கு தாக்கல் செய்த புகார், எதிர் தரப்பினர் தாக்கல் செய்த பதில் உரை மற்றும் அவரது சான்றாவணம் ஆகியவற்றோடு இந்த ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆணை ஆகியவற்றை இணைத்து முறையீட்டாளர் வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ன்படி இயங்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் குழுமத்தில் புகாராக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இந்த புகார் இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது.
02. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 05-09-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 05-06-2017 | எதிர்தரப்பினரின் விசிட்டிங் கார்டு | நகல் |
ம.சா.ஆ.2 | 26-09-2013 | முறையீட்டாளரின் கணவர் தாக்கல் செய்துள்ள இந்து திருமண அசல் மனு | நகல் |
ம.சா.ஆ.3 | 27-01-2015 | முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள இந்து திருமண அசல் மனு | நகல் |
ம.சா.ஆ.4 | - | முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் அனுப்பிய வாட்ஸ் அப் செய்திகள் | நகல் |
ம.சா.ஆ.5 | 12-10-2017 | முறையீட்டாளர் எதிர் தரப்பினருக்கு பணம் செலுத்திய வங்கி செலுத்து சீட்டு | நகல் |
ம.சா.ஆ.6 | 12-10-2017 | கொரியர் ரசீது | நகல் |
ம.சா.ஆ.7 | 18-12-2017 | முறையீட்டாளரின் ஹாஸ்டல் ரசீது | நகல் |
ம.சா.ஆ.8 | 10-03-2018 | முறையீட்டாளர் எதிர் தரப்பினருக்கு வழக்கு நடத்த கொடுத்த வக்காலத்தை திரும்ப பெற்றுக் கொண்டதற்கான கடிதம் | நகல் |
ம.சா.ஆ.9 | 10-03-2018 | அஞ்சலக ரசீது | நகல் |
ம.சா.ஆ.10 | 27-10-2018 | வழக்கறிஞர் அறிவிப்பு | நகல் |
ம.சா.ஆ.11 | 03-04-2018 | அஞ்சலக ஒப்புகை அட்டை | நகல் |
ம.சா.ஆ.12 | 07-04-2018 | எதிர்தரப்பினரின் பதில் அறிவிப்பு | நகல் |
ம.சா.ஆ.13 | 14-07-2018 | முறையீட்டாளரின் ஆதார் அட்டை | நகல் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | 06-03-2018 | முறையீட்டாளர் குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு | நகல் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திருமதி எஸ் கௌதமி, முறையீட்டாளர்
எதிர்தரப்பினர்கள் சாட்சி: திரு ஆர் அருண்குமார், எதிர் தரப்பினர்
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.