புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 20-03-2020
உத்தரவு பிறப்பித்த நாள் : 05-09-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 17/2020.
நாமக்கல், மோகனூர் சாலை, பாரதி நகர், இலக்கம் 3/139-ல் வசிக்கும் கா. சுப்பராயன் - முறையீட்டாளர்
- எதிர்-
நாமக்கல், பரமத்தி சாலை, இலக்கம் 1 -ல் உள்ள கண்ணா சூப்பர் மார்க்கெட்ஸ் உரிமையாளர் - எதிர் தரப்பினர்
ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 இந்த புகாரில் முறையீட்டாளர் எதிர் தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு அவரே முன்னிலையாகியும் எதிர் தரப்பினருக்கு திருவாளர்கள் எஸ். முத்துக்குமார், எம். முருகேசன், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 02-08-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம், முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணம்-1, சான்று பொருள்-1, எதிர் தரப்பினரின் பதிலுரை அவரது சாட்சியம், மற்றும் இருதரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
02. கடந்த 31-01-2020 ஆம் தேதியில் எதிர் தரப்பினரிடம் ரூ 28/- விலை கொடுத்து நாப்தலின் உருண்டைகள் அடங்கிய ஒரு பொட்டலத்தை தாம் வாங்கினேன் என்றும் இந்த பொட்டலத்தின் மீது தயாரிப்பு நாள், காலாவதி நாள், நிகர எடை, தயாரித்தவர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் அச்சிடப்படவில்லை என்றும் இது குறித்து ரசீது வழங்குபவரிடம் கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தி விட்டார் என்றும் இத்தகைய செய்கை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 பிரிவு 2(1) (10) -ன் படியும் எடை மற்றும் அளவைகள் தரச் சட்டம் 1976 மற்றும் விதிகள் 1977-ன்படியும் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் படியும் எதிர் தரப்பினரின் செய்கை குறைபாடு உடையது என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். எனவே, தான் வாங்கிய நாப்தலின் பொட்டலத்திற்கான ரூ 28/- ஐ தமக்கு எதிர் தரப்பினர் திரும்ப வழங்க வேண்டும் என்றும் தம்மிடம் எதிர்த் தரப்பினர் அலட்சியமாக நடந்து கொண்டதற்காகவும் தமக்கு விற்பனை செய்யப்பட்ட பொருளின் மீது விவரங்களை வழங்காதற்காகவும் எதிர் தரப்பினருக்கு ரூ 50,000/- அபராதம் விதித்து அதனை நுகர்வோர் நல நிதியில் சேர்க்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 25,,000/- தமக்கு எதிர் தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூ 10,000/- தமக்கு எதிர் தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
03. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
04. முறையீட்டாளர் புகாரில் கூறுவது போல கடந்த 31-01-2020 ஆம் தேதியில் ரூ 28/- விலை கொடுத்து நாப்தலின் உருண்டைகள் அடங்கிய ஒரு பொட்டலத்தை தங்களிடம் வாங்கியது உண்மை என்றும் முறையீட்டாளர் பொருளுக்கான பணத்தை செலுத்தி ரசீது வழங்குபவரிடம் பொருளின் மீது தகவல்கள் அடங்கிய பதிவு இல்லை என்று தெரிவித்த போது அவர் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் பொருளின் தகவல்கள் அடங்கிய சீட்டை வேண்டுமென்றே முறையீட்டாளர் நீக்கிவிட்டு புகார் தெரிவித்துள்ளார் என்றும் அமலில் உள்ள சட்டங்களை பின்பற்றாமல் தாங்கள் செயல்பட்டு உள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளது தவறு என்றும் முறையீட்டாளர் வாங்கிய பொட்டலத்தின் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, அதிகபட்ச விலை, தயாரிப்பாளரின் முகவரி ஆகியவை ஒட்டப்பட்டு இருந்தது என்றும் உண்மையை மறைத்து தீய லாபம் அடைவதற்காக புகாரை முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ளார் என்றும் புகாரானது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி விசாரிக்க தக்கது அல்ல என்றும் இந்த பிரச்சனை உரிமையியல் நீதிமன்றங்களில் மட்டுமே விசாரிக்க இயலும் என்றும் தமது தரப்பில் எவ்வித தவறும் புரியவில்லை என்றும் முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் தெரிவித்து எதிர் தரப்பினர் தமது பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்
05. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர் குறைபாடான பொருளை விற்பனை செய்து சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர் குறைபாடான பொருளை விற்பனை செய்து சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
06. கடந்த 31-01-2020 ஆம் தேதியில் எதிர் தரப்பினரிடம் ரூ 28/- விலை கொடுத்து நாப்தலின் உருண்டைகள் அடங்கிய ஒரு பொட்டலத்தை தாம் வாங்கினேன் என்று புகாரில் தெரிவித்து அதற்கு ஆதாரமாக முறையீட்டாளர் தரப்பு முதலாவது சான்றாவனமான எதிர் தரப்பினரால் வழங்கப்பட்ட ரசீதை சமர்ப்பித்துள்ளார் என்பதாலும் எதிர் தரப்பினரும் பதில் உரையில் முறையீட்டாளர் புகாரில் கூறும் பொருளை தங்களிடம் வாங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளதாலும் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் என்றும் இந்நிலையில் இந்த புகாரை விசாரிக்க இந்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
07. புகாரில் முறையீட்டாளர் தம்மால் எதிர் தரப்பினரிடம் வாங்கப்பட்ட நாப்தலின் உருண்டைகள் அடங்கிய பொட்டலத்தின் மீது தயாரிப்பு நாள், காலாவதி நாள், நிகர எடை, தயாரித்தவர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் அச்சிடப்படவில்லை என்றும் இது குறித்து ரசீது வழங்குபவரிடம் கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தி விட்டார் என்றும் தெரிவித்துள்ளார். எதிர் தரப்பினர் அவரது பதில் உரையில் முறையீட்டாளர் பொருளுக்கான பணத்தை செலுத்தி ரசீது வழங்குபவரிடம் பொருளின் மீது தகவல்கள் அடங்கிய பதிவு இல்லை என்று தெரிவித்த போது அவர் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் பொருளின் தகவல்கள் அடங்கிய சீட்டை வேண்டுமென்றே முறையீட்டாளர் நீக்கி விட்டு புகார் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர் தரப்பினரின் ரசீது போடும் பணியை செய்து வரும் பணியாளர் தம்மை அலட்சியமாக நடத்தினார் என்பதையும் தம்மால் வாங்கப்பட்ட பொருளில் எதிர் தரப்பினர் கூறுவது போல விவரப்பட்டியல் ஒட்டப்படவில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டிய கடமை முறையீட்டாளரை சார்ந்ததாகும். எதிர் தரப்பினர் மீதான புகாரை நிரூபிக்க போதிய சாட்சியம் மற்றும் சான்றாவணங்களை முறையீட்டாளர் இந்த ஆணையத்தின் முன்பு முன்னிலைப்படுத்தவில்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்றும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2 & 3
08. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
04. சான்று பொருட்களை மேல்முறையீடு காலத்தில் பின்பு அழித்து விட உத்தரவிடப்படுகிறது
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 05-09-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 31-01-2020 | ரசீது | அசல் |
முறையீட்டாளர் தரப்பு சான்று பொருள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | - | நாப்தலின் பொட்டலம் | அசல் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: கா. சுப்பராயன்
எதிர்தரப்பினர்கள் சாட்சி: மாதேஸ்வரன்
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.