புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 08-08-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 18-11-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 115/2022.
சென்னை, பொன்னியம்மன்மேடு, ஏழுமலை நகர், இலக்கம் 3/25 -ல் வசிக்கும் பாப்பையன் மகன் மகேஷ் -முறையீட்டாளர்
1. சென்னை, இலக்கம் 196, அண்ணா சாலை, வாசன் அவன்யூ, ஹபீப் டவர்ஸ் -ல் உள்ள எச்சிஎல் சர்வீசஸ் லிமிடெட், அதன் கிளை மேலாளர் மூலம்
2. சென்னை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் சாலை, இலக்கம் 4, விஜயா டவர்ஸ், 5வது மாடியில் உள்ள லெனோவா இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மூலம் - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திருவாளர்கள் பாலாஜி சங்கரமூர்த்தி மற்றும் இரு வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் முதலாம் எதிர் தரப்பினருக்கு திருவாளர்கள் வீ சவுந்தர்ராஜன் மற்றும் எஸ் குணசேகரன், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இரண்டாம் எதிர் தரப்பினர் மீது ஒருதலைப்பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்ற தரப்பினராக வைக்கப்பட்டும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 02-11-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது நிரூபண வாக்குமூலம், சான்றாவணங்கள் – 08, முதலாம் எதிர் தரப்பினரின் பதிலுரை, அவரது நிரூபண வாக்குமூலம், சான்றாவணங்கள் – 06 மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தம்மிடம் முதலாம் எதிர்தரப்பினர் பழுது நீக்க பணிக்காக பெற்ற தமது மொபைல் போனை நன்கு வேலை செய்யும் நிலையில் தமக்கு முதலாம் எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் அல்லது மாற்று பரிகாரமாக அதன் விலை ரூ 10,500/- வட்டியுடன் தமக்கு முதலாம் எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் எதிர்தரப்பினர்களின் சேவையை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு தமக்கு எதிர் தரப்பினர்கள் ரூ 50,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
- தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. கடந்த 07-11-2016 அன்று இரண்டாம் எதிர்தரப்பினர் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட Model No: Lenova Z 90 என்ற வகை கைபேசியை ரூ 10,500/-க்கு தாம் விலைக்கு பெற்றதாகவும் ஒரு வருட காலம் உத்தரவாதம் வழங்கப்பட்டது என்றும் வாங்கிய சில மாதங்களில் சரிவர இந்த கைபேசி வேலை செய்யவில்லை என்றும் குறிப்பாக தானாகவே கைபேசியின் இயக்கம் நின்று விடுகிறது என்றும் மீண்டும் இயக்கும்போது தொடர்பு எண்கள் அழிந்துவிடுகின்றன என்றும் இதனால் கடந்த 13-03-2017ஆம் தேதி அன்று கைபேசி உற்பத்தியாளர் ஆன இரண்டாம் எதிர் தரப்பினரின் சேவை நிறுவனமான முதலாம் எதிர் தரப்பினரிடம் பிரச்சனையை எடுத்துக் கூறி பழுது நீக்க வழங்கினேன் என்றும் பழுது நீக்கப்பட்ட பின்பு பெறும்போது கைபேசியின் பின்பகுதியில் ஒழுக்கமற்ற வடிவம் காணப்பட்டதாகவும் இதனை முதலாம் எதிர் தரப்பினரிடம் கேட்டபோது சரியாக பதில் அளிக்கவில்லை என்றும் இதன் பின்பு சில நாட்களில் ஏற்கனவே இருந்த பிரச்சினை மீண்டும் கைபேசியில் ஏற்பட்டதாகவும் இதனால் மீண்டும் எதிர் தரப்பினரிடம் 27-04-2017 ஆம் தேதியில் பழுது நீக்கி தருமாறு சமர்ப்பித்த பின்னர் இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும் பலமுறை தொடர்பு கொண்ட நிலையில் அதனை அவர் திருப்பித் தரவில்லை என்றும் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் இவ்வாறு எதிர்தரப்பினர் சேவை தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்றும் மேற்கண்ட வகையில் மேற்கண்ட செய்தி செய்கை எதிர் தரப்பினரின் சேவை குறைபாடு என்றும் அவர்களின் சேவை குறைபாடு என்றும் இத்தகைய சேவை குறைபாட்டால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. எனவே, தம்மிடம் முதலாம் எதிர்தரப்பினர் பழுது நீக்க பணிக்காக பெற்ற தமது மொபைல் போனை நன்கு வேலை செய்யும் நிலையில் தமக்கு முதலாம் எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் அல்லது மாற்று பரிகாரமாக அதன் விலை ரூ 10,500/- வட்டியுடன் தமக்கு முதலாம் எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் எதிர்தரப்பினர்களின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு தமக்கு எதிர் தரப்பினர்கள் ரூ 50,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
06. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் முதலாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
07. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளபடி அவரது கைபேசியை பழுது நீக்க தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது உண்மை என்றும் அதனை தாங்கள் சரி செய்து வழங்கி விட்டோம் என்றும் அவ்வாறு வழங்கப்பட்ட போது கைபேசியில் பின்பகுதியில் ஒழுங்கற்ற வடிவம் காணப்பட்டது என்று முறையீட்டாளர் கூறுவது தவறான குற்றச்சாட்டு என்றும் மீண்டும் இரண்டாம் முறை கைபேசியில் பிரச்சினை ஏற்பட்டு தங்களிடம் பழுது நீக்க சமர்ப்பிக்கப்பட்டது என்பது உண்மை என்றும் ஆனால் முதலாவது ஏற்பட்ட அதே பிரச்சனை இரண்டாவது முறையும் ஏற்பட்டது என்று கூறுவது உண்மையில்லை என்றும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பிரச்சனை ஏற்பட்டது என்றும் அந்த விவரங்கள் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சான்று ஆவணங்களில் உள்ளன என்றும் மின்னணு சாதனங்களில் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று என்றும் இரண்டாவது முறை ஏற்பட்ட பிரச்சினைக்கு சில உதிரிபாகங்கள் தேவைப்பட்டதால் முறையீட்டாளரிடம் தெரிவித்துவிட்டு உற்பத்தியாளருக்கு தகவல் தெரிவித்து அவரது வழிகாட்டுதலின் பேரில் உற்பத்தியாளரின் வேறு ஒருசேவை நிறுவனத்திடம் பழுது நீக்க கைபேசி வழங்கப்பட்டது என்றும் முறையீட்டாளரின் சட்ட அறிவிப்பிற்கு பதில் கொடுக்கப்பட்டது என்றும் மேற்படி கைபேசி பழுது நீக்கப்பட்டு தங்களிடம் கிடைக்கப் பெற்ற பின்னர் அதனை பெற்றுக் கொள்ளுமாறு பதில் அறிவிப்பு மூலம் முறையீட்டாளருக்கு தெரிவித்தும் அவர் வந்து அதனை பெற்றுக் கொள்ளவில்லை என்றும் தங்களால் கால தாமதம் ஏற்படவில்லை என்றும் தங்கள் தரப்பில் சேவை குறைபாடு ஏற்படவில்லை என்றும் இதனால் முறையீட்டாளரின் புகார் நிலை நிற்க தக்கது அல்ல என்றும் தள்ளுபடி செய்ய வேண்டியது ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் முதலாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில்உரையை தாக்கல் செய்துள்ளார்.
08. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
08. முறையீட்டாளரிடமிருந்து அவரது கைப்பேசியை முதலாம் எதிர்தரப்பினர் 13-03-2017 ஆம் தேதியன்று பெற்று பழுது நீக்கி அவரிடம் வழங்கியுள்ளனர் என்பது இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு வழங்கப்பட்ட போது கைபேசியின் பின்பகுதியில் ஒழுங்கற்ற வடிவம் இருந்ததாக முறையீட்டாளர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான சாட்சியங்களும் ஆவணங்களும் இல்லை என்று இந்த ஆணையம் கருதுகிறது. எனவே, முதலாவது முறை கைபேசி பழுது நீக்க சேவை செய்யப்பட்டபோது முதலாம் எதிர் தரப்பினரின் சேவை குறைபாடு எதுவும் இல்லை என்று தான் தீர்மானிக்கிறது.
09. மீண்டும் அதே கைபேசியில் பிரச்சனை ஏற்பட்ட பழுது நீக்க சேவைக்காக முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினரிடம் சமர்ப்பித்தார் என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை. மேற்படி இரண்டு முறையும் ஒரே பிரச்சினை தான் ஏற்பட்டது என்று முறையீட்டாளர் கூறும் நிலையில் ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பிரச்சனை ஏற்பட்டது என்று முதலாம் எதிர் தரப்பினர் தங்களது பதில் உரையில் தெரிவித்துள்ளார். ஆனால் பழுது நீக்கி தருவதற்கு சில உதிரி பாகங்கள் தேவைப்பட்டது என்றும் அந்த பாகங்கள் தங்களிடம் இல்லை என்பதால் உற்பத்தியாளர் இன் அவரின் வழிகாட்டுதலின்படி அவரது வேறு ஒரு சேவை மையத்துக்கு மேற்படி கைபேசி அனுப்பி வைக்கப்பட்டது என்று முதலாம் எதிர்தரப்பினர் கூறும் நிலையில் அத்தகைய சங்கதிகள் தமக்கு தெரிந்ததாக முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவிக்கவில்லை. மேற்படி கைபேசி வேறு ஒரு சேவை மையத்துக்கு அனுப்பப்பட்டது என்ற விவரத்தை கடிதம் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் எந்த வடிவத்திலும் முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளரிடம் தெரிவித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிய முடிகிறது. தாங்கள் கைபேசியை வேறு இடத்துக்கு அனுப்பி வைத்த விவரத்தை சொல்ல வேண்டிய கடமை முதலாம் எதிர்தரப்பினருக்கு உண்டு என்றும் ஆனால் அதனை முதலாம் எதிர்தரப்பினர் செய்ய தவறிவிட்டார் என்றும் இந்த ஆணையம் கருதுகிறது.
10. கடந்த 27-04-2017 ஆம் தேதியில் பழுது நீக்க சேவைக்காக மேற்படி கைபேசியை தாங்கள் பெற்றோம் என்ற நிலையில் கைபேசி சரி செய்யப்பட்ட பின்னர் பெற்றுக்கொள்ளுமாறு முறையீட்டாளரிடம் முதலாம் எதிர்தரப்பினர் தொலைபேசி மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் அல்லது கடிதம் மூலம் தெரிவித்தோம் என்று கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் முதலாம் எதிர தரப்பினரிடம் இல்லை. 31-05-2017 ஆம் தேதியில் முதலீட்டாளர் எதிர் தரப்பினருக்கு சட்ட அறிவிப்பு அனுப்பிய பின்னரும் உடனடியாக எந்த பதிலையும் முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு வழங்கவில்லை என்பதை அறிய முடிகிறது. மாறாக சட்ட அறிவிப்பு கிடைக்கப்பெற்ற சுமார் இரண்டு மாதங்கள் கழித்து மேற்படி கைபேசி சரி செய்யப்பட்டு உள்ளது என்றும் அதனை பெற்றுக் கொள்ளுமாறு கொள்ளுமாறும் பதில் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு உடனடியாக பதில் வழங்காதது முதலாம் எதிர்தரப்பினரின் சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
11. எவ்வாறு இருப்பினும் மேற்படி கைபேசி பழுது நீக்க பணிக்காக வழங்கப்பட்டு மூன்று மாதங்கள் சரி செய்யப்படவில்லை என்றும் பழுது நீக்கம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் முதலாம் எதிர் தரப்பினரின் பதில் சட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களை வைத்து அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு ஏற்பட்ட காலதாமதம் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல என்றும் இத்தகைய செய்கை சேவை குறைபாடு என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
12. மேற்படி 9, 10 & 11 ஆம் பத்திகளில் விவரிக்கப்பட்டுள்ள காரணங்களினால் முதலாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இரண்டாம் எதிர்த் தரப்பினர் மீது இந்த புகாரில் குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதோடு முறையீட்டாளர் அவருக்கு கடிதம், மின்னஞ்சல், வழக்கறிஞர் அறிவிப்பு போன்றவற்றின் மூலமாக தமது பிரச்சினையை தெரிவிக்கவில்லை என்பதாலும் அவர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று கூற இயலாது என்று இந்த ஆணையம் தீர்மானித்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
எழு வினா எண் – 2
13. புகாரில் கூறியுள்ளபடி முதலாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு அவரிடமிருந்து பெற்ற கைபேசியை நன்கு வேலை செய்யும் நிலையில் முதலாம் எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் அல்லது கைபேசி வாங்கப்பட்ட விலை ரூ 10,500/- மற்றும் இத்தொகை முதலாம் எதிர் தரப்பினரிடம் கைபேசி ஒப்படைக்கப்பட்ட 27-04-2017 ஆம் நாளிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு ரூ 100க்கு 6 சதவீத வட்டி ஆகியவற்றை வழங்க வேண்டும். இதனை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் எதிர்தரப்பினர் நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
14. புகாரில் கூறியுள்ளபடி முதலாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில் இந்த சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு மன உளைச்சல் மற்றும் சிரமங்கள் ஏற்படுவது என்பதை மறுக்க இயலாது. இதனை பணத்தால் சரி செய்ய இயலாது என்றாலும் கூட இதற்கான இழப்பீட்டை வழங்குவது அவசியமாகும். இதனால் முதலாம் எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டிற்கும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு முறையீட்டாளருக்கு முதலாம் எதிர் தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் ரூ 20,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
15. இதர வேறு பரிகாரங்கள் எதுவும் இந்த வழக்கில் தேவைப்படுகிறது என்று இந்த ஆணையம் கருதவில்லை. மேலும் வழக்கின் செலவு தொகைகளை அவரவரே ஏற்றுக்கொள்ள வேண்டியது இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளருக்கு அவரிடமிருந்து பெற்ற கைபேசியை நன்கு வேலை செய்யும் நிலையில் முதலாம் எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் அல்லது கைபேசி வாங்கப்பட்ட விலை ரூ 10,500/- மற்றும் இத்தொகை முதலாம் எதிர் தரப்பினரிடம் கைபேசி ஒப்படைக்கப்பட்ட 27-04-2017 ஆம் நாளிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு ரூ 100க்கு 6 சதவீத வட்டி ஆகியவற்றை வழங்க வேண்டும். இதனை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் எதிர்தரப்பினர் நிறைவேற்ற வேண்டும். முறையீட்டாளரின் இரண்டாவது எதிர்தரப்பினர் மீதான புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. முதலாம் எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டிற்கும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு முறையீட்டாளருக்கு முதலாம் எதிர் தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் ரூ 20,000/- இழப்பீடு வழங்க வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை. மேலும் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 18-11-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 04-11-2016 | கைபேசி வாங்கியதற்கான விலை ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | - | உத்தரவாத விவரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | - | முதலாவது பழுது நீக்க சேவை வரலாறு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | - | இரண்டாம் பழுது நீக்க சேவை வரலாறு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 27-04-2017 | பழுது நீக்க சேவை பணி பதிவு சீட்டு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 12-05-2017 | எதிர் தரப்பினருக்கு அனுப்பிய மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 31-05-2017 | சட்ட அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | - | அஞ்சலக ஒப்புதல் அட்டை | ஜெராக்ஸ் |
முதலாம் எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | 30-08-2017 | பொது அதிகார கடிதம் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | 26-04-2017 | பழுது நீக்க சேவை பணி பதிவு ஆவணங்கள் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.3 | 13-07-2017 | மின்னஞ்சல்கள் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.4 | 31-05-2017 | சட்ட அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.5 | 26-07-2017 | பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.6 | - | சேவை குறித்த நிபந்தனைகள் | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு பி மகேஷ்
முதலாம் எதிர்தரப்பினர் சாட்சி: திரு கலைமணி
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.