புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 26-04-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 23-09-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 71/2022.
விருத்தாச்சலம் நகர், ஐயர் மடம் முதல் தெரு, இலக்கம் 8-ல் வசிக்கும் ராமசாமி மகன் கோவிந்தசாமி - அவரது பிரதிநிதி வி விஜயசாரதி மூலம்.
-முறையீட்டாளர்
1. ஹரியானா மாநிலம், குர்கான் பகுதி 4, உத்தியோக் விகார், இலக்கம்- 319 -ல் உள்ள M/s. Spice Jet Ltd., அதன் நிர்வாக இயக்குனர் மூலம்.
2. சென்னை நகர், திரிசூலம், காமராஜர் உள்நாட்டு விமான முனையத்தில் அலுவலகம் வைத்துள்ள M/s. Spice Jet Ltd., அதன் மேலாளர் மூலம்.
3. ஹரியானா மாநிலம், குர்கான் பகுதி 4, உத்தியோக் விகார், எஸ்பி இன்போ சிட்டி டவர் ஏ-ல் உள்ள M/s. Make My Trip India Pvt. Ltd., அதன் நிர்வாக இயக்குனர் மூலம்.
4. சென்னை நகர், நுங்கம்பாக்கம், காதர் நவாஸ் கான் சாலை, இலக்கம் 10, முதல் மாடியில் உள்ள M/s. Make My Trip India Pvt. Ltd., அதன் மேலாளர் மூலம்.
- எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்குக்காக திருவாளர்கள் கே ஆர் நீலாம்பர் மற்றும் எஸ் ராஜேஸ்வரி வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும், முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்களுக்காக M/s. Chennai Law Associates, வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் மூன்றாம் நான்காம் எதிர்தரப்பினர்களுக்காக திருவாளர்கள் நிர்மல் ராய் சஞ்சீவி மற்றும் மூவர், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 06-09-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் புகார், முறையீட்டாளர் தரப்பில் சாட்சியம்-1, அவரது 11 சான்றாவணங்கள், முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் பதில் உரை, அவர்களது சாட்சியம்-1, மூன்றாம் நான்காம் எதிர் தரப்பினரின் பதில் உரை, அவர்களது சாட்சியம்-1, அவர்களது 03 சான்றாவணங்கள், முறையீட்டாளரின் எழுத்து மூலமான மூலமான வாத உரை, முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் எழுத்து மூலமான வாத உரை, மூன்றாம் நான்காம் எதிர் தரப்பினரின் எழுத்து மூலமான வாத உரை, சமர்ப்பிக்கப்பட்ட முன் தீர்ப்பு விவரங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து எதிர்தரப்பினர்கள் தம்மிடம் கூடுதலாக வசூலித்த பயண கட்டண தொகை மற்றும் பயணச்சீட்டை ரத்து செய்ததால் ஏற்பட்ட இழப்பு ரூ 4,774/-ஐ தமக்கு எதிர்தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் எதிர்தரப்பினரின் கவனக்குறைவு மற்றும் சேவை குறைபாடுகளுக்கு இழப்பீடாக ரூ 1,00,000/- மற்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 2,00,000/- மற்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாமும் தமது நண்பர்களும் அவர்களது குடும்பத்தினரும் அடங்கிய 27 நபர்கள் கொண்ட குழுவாக தாங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டோம் என்றும் இதற்காக நண்பர் விஜயசாரதி அவர்களை தங்குமிடம் மற்றும் பயணச்சீட்டு பெறுதல் உள்ளிட்ட பயண ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டோம் என்றும் 06-03-2015 ஆம் தேதியில் சென்னையிலிருந்து போர்ட் பிளேயர் செல்ல முதலாம் எதிர் தரப்பினரின் SG-274 என்ற எண் கொண்ட விமானத்தில் பயணச்சீட்டு பெறுவதற்கும் 10-03-2015 ஆம் தேதியில் போர்ட் பிளேயர்லிருந்து சென்னை திரும்புவதற்கு முதலாம் எதிர் தரப்பினரின் SG-274 என்ற எண் கொண்ட விமானத்தில் பயணச்சீட்டு பெறுவதற்கும் 29-11-2014 ஆம் தேதியில் மூன்றாம் எதிர்தரப்பினர் மூலமாக ரூ 16,822/- செலுத்தி விமானப் பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்பட்டன என்றும் அன்றே பயணச் சீட்டுகள் பெறும்போது பயணம் உறுதிப்படுத்தப்பட்டது என்ற நிலையில் அவை வழங்கப்பட்டன என்றும் இந்த பயணச்சீட்டுகள் 30-01-2015, 24-02-2015 & 06-03-2015 ஆகிய தேதிகளில் எதிர் தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. கடந்த 06-03-2015 அன்று அதிகாலையில் சென்னை விமான நிலையத்திற்கு சென்று முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் அலுவலகத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமானத்தில் செல்வதற்கான சீட்டை (Boarding Pass) பெறுவதற்கு அலுவலக பணியாளர்களிடம் கேட்டபோது தம்முடைய போர்ட் பிளேயர் செல்வதற்கும் சென்னை திரும்புவதற்கும் பெறப்பட்ட பயணச் சீட்டும் தமது குழுவில் உள்ளவர்களின் பயணச் சீட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர் என்றும் இதனால் தாம் முன்பதிவு செய்யப்பட்ட விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதை அறிந்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன் என்றும் இவ்வாறு விமான பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்ட விவரங்கள் தங்களுக்கு எதிர் தரப்பினரால் ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் அலுவலக பணியாளர்கள் தாம் முன்பதிவு செய்த விமானத்தில் இருக்கைகள் காலியாக உள்ளதால் அன்றைய நாளில் உள்ள விமான கட்டணத்தை செலுத்தி பயணிக்கலாம் என்று தெரிவித்தனர் என்றும் தாமும் நண்பர்களும் பயணத்திட்டத்தை ரத்து செய்வதற்கு விருப்பம் இல்லாத காரணத்தால் பணத்தை ஏற்பாடு செய்து அன்றைய தேதியில் உள்ள விமான கட்டணத்தைச் செலுத்தி பயணச்சீட்டை பெற்றேன் என்றும் தங்களது குழுவில் 27 நபர்களில் இவ்வாறு 15 நபர்கள் மட்டுமே பணத்தை ஏற்பாடு செய்து அன்றைய தேதியில் விமான கட்டணத்தை செலுத்தி சீட்டுகளைப் பெற முடிந்தது என்றும் நண்பர் டாக்டர் மேகர் அலி என்ற ராஜா என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இவ்வாறு பயணச் சீட்டுகளை பெற முடியாத சூழல் ஏற்பட்டு பயணத்தை ரத்து செய்து விட்டனர் என்றும் இதனால் தங்குமிடம் உள்ளிட்டவற்றுக்கு செய்த ஏற்பாடுகள் வீணாகி விட்டன என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
06. தாம் ஏற்கனவே சென்னையிலிருந்து போர்ட் பிளேயர் செல்லவும் அங்கிருந்து திரும்புவதற்கும் செலுத்திய விமான கட்டணம் ரூ 16,822/- என்றும் ஆனால் அவை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் பயண தேதியில் விமான நிலையத்தில் புதிய விமான சீட்டு பெற செலுத்திய கட்டணம் ரூ 17,590/- என்றும் இதன் மூலம் தமக்கு ரூ 768/- இழப்பு ஏற்பட்டது என்றும் மேலும் முன்பதிவு செய்யப்பட்ட விமான சீட்டுகளை தமக்குத் தெரியாமல் ரத்து செய்து பின்னர் அதில் ரூ 12,815/- மட்டும் தமக்கு திருப்பி வழங்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பு ரூ 4,006/- என்றும் ஆக மொத்தம் விமான பயண கட்டணத்தில் தமக்கு எதிர்தரப்பினர்களால் ஏற்பட்ட இழப்பு ரூ 4,774/-என்றும் எதிர் தரப்பினரின் செய்கைகள் சேவை குறைபாடு என்பதாலும் தமக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதாலும் தாம் மேற்கண்ட பயணத்துக்கு கூடுதலாக செலவிட்ட பயண கட்டணம் மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களும் மன உளைச்சலுக்கும் இழப்பீடு கேட்டு வழக்கறிஞர் அறிவிப்பு எதிர் தரப்பினர்களுக்கு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
07. எனவே, எதிர்தரப்பினர்கள் தம்மிடம் கூடுதலாக வசூலித்த பயண கட்டண தொகை மற்றும் பயணச்சீட்டை ரத்து செய்ததால் ஏற்பட்ட இழப்பு ரூ 4,774/-ஐ தமக்கு எதிர்தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் எதிர்தரப்பினரின் கவனக்குறைவு மற்றும் சேவை குறைபாடுகளுக்கு இழப்பீடாக ரூ 1,00,000/- மற்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 2,00,000/- மற்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள்தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
08. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகார் நிலைநிற்க தக்கதல்ல என்றும் பல சங்கதிகளை மறைத்து இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த எதிர் தரப்பினர்களுக்கு எதிராக எந்த வழக்கு மூலமும் இல்லை என்றும் வழக்கு எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
09. புகாரில் தெரிவித்துள்ளபடி 06-03-2015 ஆம் தேதியில் சென்னையிலிருந்து போர்ட் பிளேயர் செல்ல தங்களது SG-274 என்ற எண் கொண்ட விமானத்தில் பயணச்சீட்டு பெறுவதற்கும் 10-03-2015 ஆம் தேதியில் போர்ட் பிளேயர்லிருந்து சென்னை திரும்புவதற்கு தங்களது SG-274 என்ற எண் கொண்ட விமானத்தில் பயணச்சீட்டு பெறுவதற்கும் 29-11-2014 ஆம் தேதியில் மூன்றாம் எதிர்தரப்பினர் மூலமாக விமானப் பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்பட்டன என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது என்றும் ஆனால் தங்களிடம் இந்த பயணச்சீட்டுகள் நேரடியாக பணம் செலுத்தி பெறப்படவில்லை என்றும் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர் மூலமாக இந்த பயணச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளன என்றும் தங்களுக்கும் முறையீட்டாளருக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை என்றும் முறையீட்டாளர் தங்களது நுகர்வோர் அல்ல என்றும் இதனால் தங்கள் மீது புகார் தாக்கல் செய்திருப்பது ஏற்புடையது அல்ல என்றும் புகாரில் தெரிவித்துள்ள முன்பதிவு செய்யப்பட்ட விமான பயணச் சீட்டுகளை மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர் ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டதால் தாங்கள் அதனை ரத்து செய்து விட்டோம் என்றும் இதன் பின்னர் தங்கள் தரப்பில் பெறப்பட்ட விமான கட்டணத்தில் உரிய கழிவுகளை பிடித்துக்கொண்டு மீதிப் பணத்தை மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினரிடம் திருப்பி அளித்து விட்டோம் என்றும் இவ்வாறு முறையீட்டாளருக்கும் தங்களுக்கும் எவ்வித நேரடி பரிவர்த்தனையும் இல்லை என்றும் முறையீட்டாளர் கேட்கும் எந்த ஒரு பரிகாரத்தையும் அவர் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினரிடம் கேட்க வேண்டுமே தவிர தங்களிடம் அல்ல என்றும் அதற்கு தாங்கள் கடமைப்பட்டவர்கள் அல்ல என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
10. எனவே, தங்கள் தரப்பில் சேவை குறைபாடு புரியவில்லை என்பதால் தங்களுக்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள்தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
11. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகார் நிலைநிற்க தக்கதல்ல என்றும் முறையீட்டாளர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் ஆவார் என்றும் உண்மைகளை மறைத்து புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்த் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
12. இந்த வழக்கில் முக்கியமான பிரச்சினையாக பார்க்கப்படுவது முன்பதிவு செய்யப்பட்ட விமான சீட்டுக்கள் ரத்து செய்யப்பட்டன என்பதேயாகும் என்றும் “Unfortunately, all the bookings for the opposite party 1 & 2 made in November 2014 were getting cancelled due to some operational issues at their end” என்றும் பின்னர் பயணிகள் தரப்பில் முன்பதிவை ரத்து செய்யுமாறு வேண்டுகோள் இணையதளம் மூலம் 21-12-2014 ஆம் தேதியில் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் இவ்வாறு முன்பதிவு ரத்து செய்யப்பட்ட பின்பு விமான நிறுவனத்தால், அதாவது முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்களால், திருப்பி அளிக்கப்பட்ட பயணக்கட்டணம் தங்களால் முறையீட்டாளருக்கு திருப்பி வழங்கப்பட்டுவிட்டது என்றும் விமான பயண சீட்டு ரத்து செய்யப்பட்டதில் தங்களுக்கு எவ்வித பொறுப்பும் இல்லை என்றும் தாங்கள் எவ்வித சேவை குறைபாடும் புரியவில்லை என்றும் இன்னும் பல சங்கதிகளையும் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
13. எனவே, தங்கள் தரப்பில் சேவை குறைபாடு புரியவில்லை என்பதால் தங்களுக்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
14. தீர்மானிக்க வேண்டிய பிரச்சனைகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
பிரச்சனை எண் – 1
13. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளபடி 06-03-2015 ஆம் தேதியில் சென்னையிலிருந்து போர்ட் பிளேயர் செல்ல முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்களின் SG-274 என்ற எண் கொண்ட விமானத்தில் பயணச்சீட்டு பெறுவதற்கும் 10-03-2015 ஆம் தேதியில் போர்ட் பிளேயர்லிருந்து சென்னை திரும்புவதற்கு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்களின் SG-274 என்ற எண் கொண்ட விமானத்தில் பயணச்சீட்டு பெறுவதற்கும் 29-11-2014 ஆம் தேதியில் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர்களின் மூலமாக விமானப் பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்பட்டன என்பது எதிர்த் தரப்பினர்கள் சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
14. முறையீட்டாளருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் களுக்கும் எவ்வித நேரடி தொடர்பு என்பது இல்லை என்பதையும் விமானத்தில் செல்லும் சேவையை பெற நேரடியாக முறையீட்டாளர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு எவ்வித பணத்தையும் செலுத்தவில்லை என்பதையும் சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் மூலம் அறிய முடிகிறது.
15. புகாரில் கூறியுள்ள விமானப் பயணச் சீட்டுகள் முன்பதிவு பணியானது மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர்களால் முறையீட்டாளரிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு செய்யப்பட்டுள்ளது என்பதை மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். “Unfortunately, all the bookings for the opposite party 1 & 2 made in November 2014 were getting cancelled due to some operational issues at their end” என்று மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர் தங்கள் பதிலில் தெரிவித்துள்ளார்கள். அதாவது முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தங்களது விமானங்களை இயக்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக கடந்த நவம்பர் 2014 ஆம் ஆண்டு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் விமானத்தில் பயணிக்க மேற்கொள்ளப்பட்ட விமான முன்பதிவு பயணச் சீட்டுக்கள் அனைத்தும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் தரப்பில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதேயாகும். இதனைப் பார்க்கும்போது புகாரில் கூறப்பட்டுள்ள முன்பதிவு பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டதற்கு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்தான் காரணம் என்று மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்த் தரப்பினர்கள் கூறுகிறார்கள் என்பதே பொருளாகும். ஆனால் இத்தகைய கூற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர்கள் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை.
16. மேற்கண்டவாறு நவம்பர் 2014-ல் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் விமானங்களில் பயணிக்க மேற்கொள்ளப்பட்ட பயணச் சீட்டுக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர் தெரிவிக்கும் நிலையில் இதுகுறித்து மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்த் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு மேற்கண்ட காரணத்தால் முன்பதிவு செய்யப்பட்ட விமான பயணச் சீட்டுக்கள் ரத்து செய்யப்பட்டு விட்டது என்பது தெரிவிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதனையும் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்த் தரப்பினர்கள் இங்கு சமர்ப்பிக்கவில்லை. இந்த வகையில் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்த் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்றே இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
17. மேற்கண்டவாறு நவம்பர் 2014-ல் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் விமானங்களில் பயணிக்க மேற்கொள்ளப்பட்ட பயணச் சீட்டுக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர் தெரிவிக்கும் நிலையில் அதன் பின்னர் பயணிகள் தரப்பில் முன்பதிவை ரத்து செய்யுமாறு வேண்டுகோள் இணையதளம் மூலம் 21-12-2014 ஆம் தேதியில் சமர்ப்பிக்கப்பட்டது என்று மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்களால் இரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டை எவ்வாறு மீண்டும் ரத்து செய்ய இயலும் என்று மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் விளக்கமளிக்க தவறிவிட்டனர். முறையீட்டாளர் தரப்பில் பதிவுசெய்யப்பட்ட பயணச் சீட்டுகளை ரத்து செய்யுமாறு எந்த தேதியில் எந்த விதத்தில் கோரப்பட்டது உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க எந்தவித ஆதாரங்களையும் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை.
18. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் புகாரில் கூறியுள்ள முன்பதிவு விமான சீட்டுகளை தங்களிடம் பெற்றது மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்த் தரப்பினர்கள் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டதால் மேற்கண்டவாறு முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டது என்றும் கூறி அதற்கான சான்றாவணங்களையும் தாக்கல் செய்துள்ளார்கள். ஆனால் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் களின் விமான இயக்கத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக அவர்கள் தரப்பில் விமான சீட்டுகள் ரத்து செய்யப்பட்டன என்று கூறுவதற்கு எந்தவிதமான ஆதாரங்களையும் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்த் தரப்பினர்கள் தங்களது சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் மூலம் நிரூபிக்கவில்லை.
19. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் நேரடியாக முறையீட்டாளருடன் எவ்வித வர்த்தகத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் இதனால் முறையீட்டாளர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் நுகர்வோர் அல்ல என்றும் புகாரின் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்புடையது அல்ல என்றும் இதனால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
20. மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் புகாரில் கூறியுள்ளபடி சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்பது முறையீட்டாளர் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என்று இந்த ஆணையம் கருதுகிறது. எனவே, மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் புகாரில் கூறியுள்ளபடி சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
பிரச்சனை எண் – 2
21. மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் புகாரில் கூறியுள்ளபடி சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு புகாரில் கூறியுள்ள பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்பட்ட கூடுதல் செலவு ரூ 4,774/-ஐ மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்த் தரப்பினர்கள் வழங்க கடமைப்பட்டவர்கள் என்றும் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
22. மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் புகாரில் கூறியுள்ளபடி சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில் இந்த சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு மன உளைச்சல் மற்றும் சிரமங்கள் ஏற்படுவது என்பதை மறுக்க இயலாது. இதனை பணத்தால் சரி செய்ய இயலாது என்றாலும் கூட இதற்கான இழப்பீட்டை வழங்குவது அவசியமாகும். இதனால் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர்களின் சேவை குறைபாட்டிற்கும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு முறையீட்டாளருக்கு மூன்றாம் நான்காம் எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் ரூ 75,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
பிரச்சனை எண் – 3
23. இதர வேறு பரிகாரங்கள் எதுவும் இந்த வழக்கில் தேவைப்படுகிறது என்று கருதவில்லை. மேலும் வழக்கின் செலவு தொகைகளை அவரவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளருக்கு புகாரில் கூறியுள்ள பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்பட்ட கூடுதல் செலவு ரூ 4,774/-ஐ மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.
02. மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர்களின் சேவை குறைபாட்டிற்கும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு முறையீட்டாளருக்கு மூன்றாம் நான்காம் எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் ரூ 75,000/- இழப்பீடு வழங்க வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை. மேலும் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 23-09-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 24-02-2017 | அங்கீகார கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 29-11-2014 | விமான பயண சீட்டு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 09-01-2015 | முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 30-01-2015 | விமான பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டதற்கான ஆதரவு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 24-02-2015 | விமான பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டதற்கான ஆதரவு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 28-02-2015 | சக்கர நாற்காலி குறித்த விவரம் | |
ம.சா.ஆ.7 | 06-03-2015 | விமான பயணச்சீட்டு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 20-03-2015 to 24-03-2015 | மின்னஞ்சல் பரிவர்த்தனை விவரங்கள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | 08-05-2015 | முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 01-07-2015 | மூன்றாம் நான்காம் எதிர் தரப்பினரின் பதில் மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.11 | 26-01-2016 | எதிர் தரப்பினருக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | - | உரையாடல் விபரங்களும் அதற்கான குறுந்தகடும் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | - | உரையாடல் விபரங்களும் அதற்கான குறுந்தகடும் | ஜெராக்ஸ் |
மூன்றாம் நான்காம் எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.3 | - | முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் விமான நிறுவனம் பற்றிய செய்தி நகல் | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி:
திரு வி விஜயசாரதி
முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் தரப்பு சாட்சி:
திரு அங்கீத் கரவ்
மூன்றாம் நான்காம் எதிர் தரப்பினர் தரப்பு சாட்சி:
திரு அங்கிதா மிஸ்ரா
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.