புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 24-01-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 16-09-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 23/2022.
சென்னை நகர், கீழ்பாக்கம், 21, வள்ளியம்மாள் தெரு, அசோகா அக்ஷரா அடுக்குமாடி குடியிருப்பு இலக்கம் பி 1 -ல் வசிக்கும் பலிசெர்லா சுதர்சனா மகன் சீனிவாசலு ரெட்டி
-முறையீட்டாளர்
(எதிர்)
1. மும்பை நகர், என் எம் ஜோஷி மார்க், அப்பல்லோ மில்ஸ் காம்பவுண்ட், 13வது மாடியில் உள்ள ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலம்
2. சென்னை நகர், தியாகராய நகர், வெங்கட் நாராயணா சாலை, 37/38, ரமணா டவர், இரண்டாவது மாடி, ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் சென்னை தேனாம்பேட்டை கிளை அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிமூலம்
- எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்குக்காக திருவாளர்கள் கௌதமன் மற்றும் இருவர் வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும், எதிர்தரப்பினருக்காக திரு டி சந்திரசேகர், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 02-09-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் புகார், முறையீட்டாளர் தரப்பில் சாட்சியம்-1, அவரது 07 சான்றாவணங்கள், எதிர் தரப்பினரின் பதில் உரை, இரு தரப்பு வாதங்கள், சமர்ப்பிக்கப்பட்ட முன் தீர்ப்பு விவரங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து எதிர்தரப்பினர்கள் தம்மால் செலுத்தப்பட்டதொகை ரூ 9,12,834/- ஐ வட்டியுடன் திருப்பி தமக்கு அளிக்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் சிரமங்கள் ஆகியவற்றிற்கு எதிர்தரப்பினர் தமக்கு ரூ 80 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. திர் தரப்பினரின் நிறுவனத்தில் ஓய்வு ஊதிய திட்டத்தில் இணைந்து ஆண்டுக்கு ரூ 3 லட்சம் வீதம் ஏப்ரல் 2014 முதல் ஏப்ரல் 2018 வரை ரூ 15 செலுத்தினால் ஏப்ரல் 2014 முதல் பத்தாண்டுகளுக்கு ஓய்வூதியப் பணம் வழங்கப்படும் என்று எதிர் தரப்பினரின் முகவர் அளித்த தகவலின் அடிப்படையில் தாம் கடந்த 29 -04 -2014 அன்று இந்த திட்டத்தில் இணைந்து மூன்று தவணைகளில் ரூ 9 லட்சம் தாம் செலுத்தினேன் என்றும் ஆனால் இத்திட்டத்தில் இணைய பல தவறான தகவல்கள் வழங்கப் பட்டிருக்கிறது என்பதை அறிந்து உடனடியாக தமது பாலிசியை சரண்டர் செய்வதற்காக இரண்டாம் எதிர் தரப்பினரின் தரப்பினரிடம் விண்ணப்பித்தபோது ரூ 2,25,454/- ஐ கழித்துக்கொண்டு ரூ 6,74,567/- தான் வழங்க முடியும் என்று தமக்கு இரண்டாம் எதிர்தரப்பினர் தெரிவித்தார் என்றும் இதற்கு தான் ஒப்புக் கொண்ட போதிலும் இரண்டாம் எதிர்தரப்பினர் தற்போது வரை எந்தவித தொகையையும் வழங்கவில்லை என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இரண்டாம் எதிர்தரப்பினர் தனது வங்கிக் கணக்கில் ரூ 2,24,855/- மட்டும் செலுத்தி வைத்தார் என்றும் இத்தகைய எதிர் தரப்பினரின் செய்கையை நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு என்றும் எதிர் தரப்பினர் தாம் செலுத்திய ரூ 9,12,834/- தை வட்டியுடன் இந்த தொகையானது செலுத்தப்படும் வரை வழங்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் நமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் செய்கைகளுக்கு முதலாம் எதிர்தரப்பினர் பகர பொறுப்பு உடையவர் என்றும்இன்னும் பிற விவரங்களை முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. எனவே, எதிர்தரப்பினர்கள் தம்மால் செலுத்தப்பட்டதொகை ரூ 9,12,834/- ஐ வட்டியுடன் திருப்பி தமக்கு அளிக்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் சிரமங்கள் ஆகியவற்றிற்கு எதிர்தரப்பினர் தமக்கு ரூ 80 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
06. புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க வேண்டும் என்றும் முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர் ஒரு ஓய்வூதிய காப்பீட்டு பாலிசியை வழங்கியது உண்மை என்றும் அதற்கு அவர் மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் செலுத்தி வர வேண்டியது உண்மை என்றும் அதனை அவர் சரண்டர் செய்ய விண்ணப்பித்தார் என்றும் அந்த அடிப்படையில் அவருக்கு செலுத்த வேண்டிய தொகை செலுத்தப்பட்டு விட்டது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் முறையற்ற வர்த்தக நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் இதனால் முறையீட்டாளர் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்த் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
07. தீர்மானிக்க வேண்டிய பிரச்சனைகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா? முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
2) எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
பிரச்சனை எண் – 1
08. முறையீட்டாளர் தமது காப்பீட்டு பாலிசியை சரண்டர் செய்ய இரண்டாம் எதிர் தரப்பினரிடம் விண்ணப்பித்த பின்னர் இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு ஒரு கடிதம் வழங்கியுள்ளார். அந்த கடிதம் முறையீட்டாளர் தரப்பில் ஆறாவது சான்றாவணமாக குறியீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு ரூ 6,74,567/- தங்கள் தரப்பில் இருந்து செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சரண்டர் மதிப்பு தொகை நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் முறையீட்டாளர் வங்கிக் கணக்கில் ரூ 2,24,855/- மட்டும் எதிர்தரப்பினர் செலுத்தியுள்ளார். இதனை முறையீட்டாளர் தரப்பு சான்றாவணம் 7-ன் மூலம் அறிய முடிகிறது. எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டிய ரூ 6,74,567/-ற்கு பதிலாக ரூ 2,24,855/- மட்டுமே வழங்கியுள்ளனர் என்பது உண்மையாகும். இவ்வாறு எதிர் தரப்பினர்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபட்டுள்ளதால் இதனை சரி செய்யும் வகையில் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளர் செலுத்திய மொத்த பிரீமியத் தொகை ரூ9,12,834/- ஐ செலுத்த கடமைப் பட்டவர்கள் என்றும் இந்தத் தொகை முறையீட்டாளர் சரண்டர் விண்ணப்பம் செய்த தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து செலுத்த எதிர்தரப்பினர் கடமைப் பட்டவர்கள் ஆவார்கள் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
பிரச்சனை எண் – 2
09. முதலாம் எதிர் தரப்பினரின் செயல்பாடுகளால் ஏற்பட்ட சிரமங்கள் அனைத்திற்கும் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்க கடமைப்பட்டவர் ஆவார். பணத்தின் மூலம் இதனை சரி செய்துவிடமுடியாது என்றாலும் கூட ரூ 50,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்று என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
பிரச்சனை எண் – 3
10. இதர வேறு பரிகாரங்கள் எதுவும் இந்த வழக்கில் தேவைப்படுகிறது என்று கருதவில்லை. மேலும் வழக்கின் செலவு தொகைகளை அவரவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளர் செலுத்திய மொத்த பிரீமியத் தொகை ரூ9,12,834/- ஐ முறையீட்டாளர் சரண்டர் விண்ணப்பம் செய்த தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்..
02. எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு ரூ 50,000/-இழப்பீடாக இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் முதலாம் எதிர்தரப்பினர் வழங்க வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை. மேலும் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 16-09-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 29-04-2014 | விவர குறிப்பு ஏடு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 28-04-2014 | முதலாவது பிரீமிய ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 03-05-2014 | காப்பீட்டு விண்ணப்பத்தின் நிலை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 17-07-2015 | இரண்டாவது பிரீமிய ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 02-06-2016 | மூன்றாவது பிரீமிய ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 02-07-2016 | இரண்டாம் எதிர்தரப்பினர் வழங்கிய சரண்டர் மதிப்பு விவரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 05-02-2016 | வங்கி கணக்கு அறிக்கை | ஜெராக்ஸ் |
இரண்டாம் எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு சீனிவாசலு ரெட்டி – முறையீட்டாளர்
இரண்டாம் எதிர் தரப்பினர் தரப்பு சாட்சி: இல்லை
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.