புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 25-07-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 02-12-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 111/2022.
சென்னை, மாதவரம், பொன்னியம்மன்மேடு, பஜனை கோயில் தெரு, இலக்கம் 26/100 எ-ல் வசிக்கும் ராமதாஸ் மகன் முரளி -முறையீட்டாளர்
1. சென்னை, தேனாம்பேட்டை, சத்தியமூர்த்தி நகர், அண்ணாசாலை, இலக்கம் 635-ல் உள்ள M/s. General Motors India Pvt Ltd, அதன் மேலாளர் மூலம்.
2. சென்னை அண்ணாசாலை இலக்கம் 108-ல் உள்ள M/s.சுந்தரம் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட், அதன் மேலாளர் மூலம்
3. ஹரியானா, குர்கான், செக்டார் 32, பிளாட் எண் 3, இப்கோ காம்ப்ளக்ஸ், சுரேந்தர் ஜஹார் பவன், டவர் பி, மூன்றாவது மாடியில் உள்ள அதன் நிர்வாக இயக்குனர் மூலம்
- எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திருவாளர்கள் வீ. திருமலை இரண்டு வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் முதலாம், மூன்றாம் எதிர் தரப்பினர்களுக்கு திருவாளர்கள் பி. சங்கர் மற்றும் திருமதி லாவண்யா சங்கர். வழக்கறிஞர்களுக்கு முன்னிலையாகியும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு திரு துவரகேஷ் பிரபாகரன், வழக்கறிஞர் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 14-11-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியமாக நிரூபண வாக்குமூலம், முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள் – 16, முதலாம், மூன்றாம் எதிர் தரப்பினரின் பதிலுரை, சாட்சியம்-01, சான்றாவணங்கள் – 07, இரண்டாம் எதிர் தரப்பினரின் பதிலுரை, சாட்சியம்-01, சான்றாவணங்கள் – 02 மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தாம் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் வாங்கிய உற்பத்தி குறைபாடு உள்ள வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வழங்குமாறு அல்லது தாம் அதற்கு செலுத்திய ரூ 8,40,000/- ஐ வழங்குமாறு எதிர் தரப்பினர்களுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 10,00,000/- இழப்பீட்டை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
- தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாம் கடந்த 29-11-2016 ஆம் தேதி அன்று ரூ 8,40,000/- செலுத்தி இரண்டாம் எதிர் தரப்பினரிடம் முதலாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்ட Chevrolet Enjoy Disel Car என்ற வகை நான்கு சக்கர வாகனத்தை வாங்கினேன் என்றும் இந்த வாகனம் TN 05 BJ 0759 என்ற பதிவு எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வாகனத்தை பெற்ற முதல் நாளிலேயே குளிர்சாதன கருவியிலிருந்து (Front side) அதிக சப்தம் ஏற்பட்டதோடு குறைந்த அளவிலான குளிரும் தண்ணீர் மட்டுமே வெளிப்பட்டது என்றும் இது குறித்து தாம் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் புகார் தெரிவித்து அவரது சேவை மையத்தில் 05-12-2016 ஆம் தேதியில் வாகனத்தை வழங்கி 07-12-2016 ஆம் தேதியில் திரும்ப பெற்றேன் என்றும் அப்போது குளிர்சாதன கருவியில் கம்பரசர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள் என்றும் வாகனத்தை பெற்று சோதனை ஓட்டம் செய்தபோது குளிர் சாதன கருவியின் ஒரு பகுதியில் (Rear side) குறைந்த குளிரும் தன்மை மட்டுமே இருந்தது என்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் பணியாளரிடம் தெரிவித்தபோது முதலாவது இலவச வாகன சோதனையின்போது சரி செய்து தருவதாக தெரிவித்தார்கள் என்றும் 03-01-2017 ஆம் தேதியில் முதலாவது இலவச வாகன சேவைக்கு வாகனத்தை இரண்டாம் எதிர் தரப்பினரிடம் வழங்கி ஆம் 04-01-2017தேதியில் அதனைப் பெற்று உபயோகிக்க தொடங்கிய ஒரு வாரத்தில் மீண்டும் குளிர் சாதன கருவியின் ஒரு பகுதியில் (Rear side) குறைந்த குளிரும் தன்மை மட்டுமே இருந்தது என்றும் 17-01-2017 ஆம் தேதியில் மீண்டும் வாகனமானது இரண்டாம் எதிர் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு இந்த பிரச்சினையை சரி செய்து தருமாறு தெரிவித்தபோது அவர்கள் பிரச்சனையை சரி செய்து விட்டோம் என்று கூறி 19-01-2017 ஆம் தேதியில் வாகனத்தை தம்மிடம் வழங்கினார்கள் என்றும் மீண்டும் ஐந்து அல்லது ஆறு நாட்களில் அதே பிரச்சனை வாகனத்தில் ஏற்பட்டது என்றும் 08-02-2017 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினரின் வாடிக்கையாளர் சேவை பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டது என்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் தொழில்நுட்ப பணியாளர்கள் தமது வீட்டிற்கு வந்து வாகனத்தை 13-02-2017 ஆம் தேதியில் எடுத்துச்சென்று 17-02-2017 ஆம் தேதியில் திரும்ப வழங்கினார்கள் என்றும் இந்த முறை சத்தம் வருவது சற்று குறைந்து இருந்தது என்றாலும் முழுவதுமாக இந்த பிரச்சனையை சரி செய்யப்படவில்லை என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. அதிர்ச்சியடையும் வகையில் கடந்த 22-02-2017 ஆம் தேதியில் மீண்டும் குளிர் சாதன கருவியின் முன்பகுதியில் அதிக சத்தம் வரத் தொடங்கியது என்றும் உடனடியாக இது குறித்து புகார் அளித்ததில் இரண்டாம் எதிர்தரப்பினர் வீட்டிற்கு வந்து காரை 02-03-2017 ஆம் தேதியில் எடுத்துச் சென்றார்கள் என்றும் தாம் இரண்டாவது எதிர் தரப்பினரின் சேவை மையத்துக்குச் சென்று வாகனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டேன் என்றும் இந்த முறை தென்மண்டல அலுவலர் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் குளிர் சாதன கருவியின் கம்ப்ரஸர் -ல் பிரச்சனை உள்ளது என்றும் சரி செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார் என்றும் கடந்த 04-03-2017 ஆம் தேதியில் சோதனை ஓட்டத்துக்கு வாகனத்தை எடுத்துச் சென்றபோது குளிரூட்டும் கருவி முன்பகுதியில் குளிரும் தன்மை மிக குறைவாக இருந்ததை அறிந்தேன் என்றும் இதனை சரி செய்வதற்கு பதிலாக தம்மை சமாதானப்படுத்த வே இரண்டாம் எதிர்தரப்பினர் முயற்சித்தார் என்றும் 18-03-2017 ஆம் தேதியில் எதிர்தரப்பினர்களின் சார்பில் ஒரு மின்னஞ்சல் தமக்கு வந்தது என்றும் வாகனத்தில் ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்ய தொழில்நுட்ப குளிர்சாதன கருவி மற்றும் அது தொடர்பான பகுதிகள் முழுவதும் மாற்றப்பட்டு பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது என்றும் ஆனால் இந்த தகவல் உண்மையானது அல்ல என்றும் இதனால் தாம் 20-03-2022 ஆம் தேதியில் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பினேன் என்றும் அதனால் எவ்வித பலனும் ஏற்படவில்லை என்றும் வாகனத்தை பணம் கொடுத்து வாங்கி நான்கு மாத காலத்திற்குள்ளாக ஆறு முறை பழுது நீக்க எதிர் தரப்பினரை தாம் அணுக வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டதற்கு உற்பத்தி குறைபாடுள்ள வாகனம் தமக்கு விற்கப்பட்டது காரணம் என்றும் அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட பின்னரும் சரியான சேவை தமக்கு எதிர்த் தரப்பினர்கள் தரப்பில் வழங்கப்படவில்லை என்றும் இதனால் மிகுந்த இழப்பும் சிரமங்களும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. எனவே, தாம் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் வாங்கிய உற்பத்தி குறைபாடு உள்ள வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வழங்குமாறு அல்லது தாம் அதற்கு செலுத்திய ரூ 8,40,000/- ஐ வழங்குமாறு எதிர் தரப்பினர்களுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 10,00,000/- இழப்பீட்டை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலாம், மூன்றாம் எதிர்தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
06. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் முதலாம், மூன்றாம் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
07. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல கடந்த 29-11-2016 ஆம் தேதி அன்று ரூ 8,40,000/- செலுத்தி இரண்டாம் எதிர் தரப்பினரிடம் முதலாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்ட Chevrolet Enjoy Disel Car என்ற வகை நான்கு சக்கர வாகனத்தை வாங்கியது உண்மை என்றும் தாங்கள் வாகனத்தை விற்பனை செய்யும் போது உரிமையாளர்களின் குறிப்பேடு என்ற புத்தகத்தை உத்தரவாத ஆவணத்துடன் வழங்குகிறோம் என்றும் அதன்படி புதிய வாகனத்தின் உத்தரவாதம் என்பது கட்டணம் இல்லாமல் பழுது ஏற்படும் போது அதனை நீக்கி தருவதும் பழுது ஏற்படும் போது ஏதேனும் பாகங்கள் மாற்ற வேண்டியது இருந்தால் அதனை மாற்றி தருவதும் உத்தரவாத காலம் முடிவடையும் வரை இத்தகைய சேவைகளை மாற்றுவதும் வாகனத்தில் பாகங்கள் ஏதேனும் குறைபாடு இருப்பின் அவற்றிற்கு புதிதாக அந்தப் பாகங்கள் உத்தரவாத காலத்தில் மாற்றி தருவதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் முழுமையாக வாகனம் மாற்றித் தருவது அல்லது வாகனத்தின் முழு தொகையும் திருப்பித் தருவது போன்றவை உத்தரவாத ஒப்பந்தத்தில் அடங்காது என்றும் முறையீட்டாளர் வாகனத்தை பெற்றுக் கொள்ளும்போது ஒப்படைப்பதற்கு முந்தைய சோதனை செய்யப்பட்டு அவர் திருப்தி அடைந்த பின்பு அவரது கையொப்பம் பெறப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது என்றும் வாகனத்தில் குளிர்சாதன கருவியில் பிரச்சனை என்று முறையீட்டாளர் தெரிவித்த பின்பு தங்கள் தரப்பில்குளிர்சாதன கருவியின் கம்பரசர் மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது என்றும் எவ்வித கட்டணமும் இல்லாமல் மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது என்றும் முறையீட்டாளர் வாகனத்தில் குளிர்சாதன கருவியில் சப்தம் வருகிறது மற்றும் குளிரூட்டும் தன்மை குறைவாக உள்ளது என்று புகார் தெரிவித்த ஒவ்வொருமுறையும் தங்கள் தரப்பில் இரண்டாம் எதிர்த் தரப்பினர் வாகனத்தை சோதனை செய்து தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார் என்றும் தங்கள் தரப்பில் A/C Evaporator thermal expansion valve கட்டணம் பெறாமல் புதிதாக மாற்றி தரப்பட்டுள்ளது என்றும் தங்கள் தரப்பில் உற்பத்தியில் குறைபாடு உள்ள வாகனம் விற்பனை செய்யப்படவில்லை என்றும் முறையீட்டாளருக்கு போதிய விற்பனைக்கு பிந்தைய சேவை செய்யப்பட்டுள்ளது என்றும் முறையீட்டாளர் தங்கள் தரப்பிடம் இருந்து வாங்கிய வாகனத்தில் உற்பத்தியில் குறைபாடு உள்ளது என்று வாகனம் தொடர்பான நிபுணர் ஒருவரின் கருத்துரையை பெற்று தாக்கல் செய்யவில்லை என்றும் வாகனத்தில் உள்ள குளிர்சாதன கருவியில் சத்தம் ஏற்படுகிறது என்பதும் குறைந்த குளிரூட்டும் தன்மை கொண்டதாக குளிர்சாதன கருவி இயங்குகிறது என்றும் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் முறையீட்டாளர் அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பிற்கு தக்க பதில் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தங்கள் தரப்பில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்தில் உள்ள எந்த ஒரு பகுதியிலும் உற்பத்தியில் எவ்வித குறைபாடும் இல்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் முதலாம், மூன்றாம் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
இரண்டாம் எதிர்தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
06. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
07. கடந்த டிசம்பர் 2016 -ல் முறையீட்டாளர் தங்களிடம் குளிர்சாதன கருவியிலிருந்து அதிக சப்தம் வருகிறது என்ற புகாரை தெரிவித்தார் என்றும் சோதனை செய்து பார்த்ததில் வழக்கமான இயக்கத்தில்தான் வாகனம் இருந்தது என்றும் அதிக சப்தம் வருவதாக வழக்கமான சத்தத்தை அதிகமான சத்தம் என்று முறையீட்டாளர் கருதிக் கொண்டார் என்றும் இருந்த போதிலும் நல்லெண்ண அடிப்படையில் குளிர்சாதன கருவிக்கு உத்தரவாத காலம் இருந்த காரணத்தால் கட்டணம் ஏதுமின்றி அதன் சில பகுதிகள் மாற்றம் செய்து தரப்பட்டுள்ளன என்றும் 03-01-2017 ஆம் தேதியில் வாகனம் 904 கிலோமீட்டர் வாகனம் இயக்கப்பட்ட பின்னர் குளிர்சாதன கருவியிலிருந்து சத்தம் வருவதாக எந்தவித புகாரையும் முதலாவது இலவச சேவையின் போது தெரிவிக்கவில்லை என்றும் அப்போது வாகனத்தில் குளிர்சாதன கருவியில் குளிரும் தன்மை குறைவாக உள்ளது என்று தெரிவித்தார் என்றும் அந்த சிறிய குறைபாடும் சரி செய்து தரப்பட்டது என்றும் 04-01-2017, 18-01-2017, 13-02-2017, 02-03-2017, 17-04-2017 ஆகிய தேதிகளில் வாகனத்தை வழக்கமான சோதனைகளுக்கு எடுத்து வந்தபோது குளிர்சாதன கருவியிலிருந்து அதிகமான சத்தம் வருகிறது என்று தெரிவித்ததன் காரணமாக முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரிடம் ஆலோசனை செய்து குளிர்சாதன பெட்டி கம்பரசர் முழுவதுமாக மாற்றி தரப்பட்டுள்ளது என்றும் 17-04-2017 ஆம் தேதியில் வாகனம் 3147 கிலோமீட்டர் வாகனம் இயக்கப்பட்ட பின்னரும் வாகனம் நல்ல முறையில் இருந்தது என்றும் ஒவ்வொருமுறையும் வாடிக்கையாளரின் திருப்திகேட்ப சேவை செய்யப்பட்டு உள்ளது என்றும் உத்தரவாத நிபந்தனைகளின்படி தங்கள் தரப்பில் சேவை செய்யப்பட்டுள்ளது என்றும் குளிர் சாதன கருவியின் உற்பத்தி குறைபாடு உள்ளது என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும் இரண்டாவது இலவச வாகன சோதனை மற்றும் சேவைக்குப் பிறகு முறையீட்டாளர் வேறு ஒரு முதலாம் எதிர் தரப்பினரின் சேவை மையத்திற்கு செல்வது அறியப்பட்டது என்றும் மூன்றாவது இலவச வாகன சோதனை மற்றும் சேவையின் போது அங்கு முறையீட்டாளர் குளிர்சாதனப்பெட்டி கருவி வேலை செய்யவில்லை என்று எந்த புகாரையும் தெரிவிக்கவில்லை என்றும் தாங்கள் முறையீட்டாளருடன் நேரடியாக வணிக பரிவர்த்தனையில் இல்லாத காரணத்தால் அவர் அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்புக்கு பதில் அனுப்பவில்லை என்றும் மாறாக முதலாம் எதிர்தரப்பினரான உற்பத்தியாளர் பதில் அளித்துள்ளார் என்றும் எங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் இரண்டாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
08. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் குறைபாடுள்ள வாகனத்தை விற்பனை செய்து சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர்கள் குறைபாடுள்ள வாகனத்தை விற்பனை செய்து சேவை குறைபாடு புரிந்து புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
09. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல கடந்த 29-11-2016 ஆம் தேதி அன்று ரூ 8,40,000/- செலுத்தி இரண்டாம் எதிர் தரப்பினரிடம் முதலாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்ட Chevrolet Enjoy Disel Car என்ற வகை நான்கு சக்கர வாகனத்தை வாங்கியது உண்மை என்று முதலாம், மூன்றாம் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இந்த அடிப்படையில் முறையீட்டாளர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் நுகர்வோர் ஆவார்.
10. மூன்றாம் எதிர்தரப்பினர் மீது முறையீட்டாளரின் புகாரில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை என்பதாலும் மூன்றாம் எதிர் தரப்பினருக்கும் முறையீட்டாளருக்கு எவ்வித பரிவர்த்தனையும் இல்லை என்பதாலும் மூன்றாம் எதிர் தரப்பினரிடம் முறையீட்டாளர் எவ்வித பரிகாரத்தையும் பெற தக்கவர் அல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
11. தாம் வாங்கிய வாகனத்தில் பிரச்சனை ஏற்படும் போது மனவேதனை அடைவது வாடிக்கையாளரின் இயல்பு என்றாலும் ஒரு வாகனத்தை வாங்கிய பின்னர் அதில் ஒரு பகுதியில் பிரச்சனை ஏற்படும்போது வாகனத்தை முழுமையாக மாற்றி தர வேண்டும் அல்லது வாகனத்தின் முழு தொகையையும் திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்புடையது அல்ல என்று உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பல தீர்ப்புகள் உள்ள நிலையில் இந்த வழக்கில் வாகனத்தின் குளிர்சாதன கருவிகளும் அதன் அமைப்பு முறையிலும் பிரச்சனை ஏற்பட்டு சத்தம் வருகிறது என்றும் குளிரூட்டும் தன்மை குறைவாக உள்ளது என்றும் முறையீட்டாளர் குற்றம் சாட்டப்படும் நிலையில் முழுமையாக வாகனம் உபயோகத்துக்கு தகுதியற்றது என்ற நிபுணர் ஒருவரின் கருத்துரை அல்லது சாட்சியம் எதனையும் சமர்ப்பிக்காமல் வாகனத்தை மாற்றி தர வேண்டும் அல்லது வாகனத்தை பெற்றுக்கொண்டு தாம் செலுத்திய முழு தொகையும் தர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
12. எதிர் தரப்பினர்களின் பதிலுரைகள், இருதரப்பு சாட்சியங்கள் மற்றும் சான்று ஆவணங்களை பரிசீலனை செய்யும்போது முறையீட்டாளர் வாங்கிய முதலாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்டு இரண்டாம் எதிர் தரப்பினரால் விற்பனை செய்யப்பட்ட வாகனத்தில் குளிர்சாதன கருவி மற்றும் அமைப்பு முறைகளில் குறைபாடுகள் இருந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. இதனால் தான் இரண்டாம் எதிர்தரப்பினர் குளிர் சாதன குளிர் சாதன கருவியின் கம்பரசர் மற்றும் A/C Evaporator thermal expansion valve ஆகியவற்றை மாற்றி தந்துள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக மேற்படி வாகனத்தில் குளிர்சாதனக் கருவி மற்றும் அதன் அமைப்பு முறையில் உற்பத்தி குறைபாடு இருந்தது என்று முறையீட்டாளர் நிரூபித்துள்ளதாக இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இதனை முழுமையாக மாற்றி தர வேண்டிய கடமையும் இத்தகைய குறைபாட்டிற்கு இழப்பீடு வழங்க வேண்டிய கடமையும் வாகனத்தின் உற்பத்தியாளர் என்ற முறையில் முதலாம் எதிர் தரப்பினருக்கு உண்டு என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளர் கோரும் பரிகாரத்தை வழங்க வேண்டியவர் அல்ல என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
13. வாகனத்தில் குளிர்சாதன கருவி மற்றும் அமைப்பு முறைகளில் குறைபாடுகள் இருந்துள்ளன என்றும் இதனை முழுமையாக மாற்றி தர வேண்டிய கடமையும் இத்தகைய குறைபாட்டிற்கு இழப்பீடு வழங்க வேண்டிய கடமையும் வாகனத்தின் உற்பத்தியாளர் என்ற முறையில் முதலாம் எதிர் தரப்பினருக்கு உண்டு என்றும் தீர்மானிக்கப்பட்ட நிலையில் வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு முதலாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்டு இரண்டாம் எதிர் தரப்பினரால் விற்பனை செய்யப்பட்ட Chevrolet Enjoy Disel Car வகை நான்கு சக்கர (பதிவு எண் TN 05 BJ 0759 ) வாகனத்தின் குளிர்சாதன கருவி மற்றும் அமைப்பு முறை (entire A/C system and its alied assembly parts) முழுவதையும் முதலாம் எதிர்தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளருக்கு செய்து தரவேண்டும் மாற்றி தர வேண்டும் அல்லது இழப்பீடாக ரூ ரூ 75,000/- முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் இந்த தொகைக்கு 02-12-2022 தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும். முதலாம் எதிர் தரப்பினரின் செய்கையால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு ரூ ரூ 75,000/- இழப்பீடு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
14. இதர வேறு பரிகாரங்கள் எதுவும் இந்த வழக்கில் தேவைப்படுகிறது என்று கருதவில்லை. மேலும் வழக்கின் செலவு தொகைகளை அவரவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முதலாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்டு இரண்டாம் எதிர் தரப்பினரால் விற்பனை செய்யப்பட்ட Chevrolet Enjoy Disel Car என்ற வகை நான்கு சக்கர (பதிவு எண் TN 05 BJ 0759 ) வாகனத்தின் குளிர்சாதன கருவி மற்றும் அமைப்பு முறை (entire A/C system and its alied assembly parts) முழுவதையும் முதலாம் எதிர்தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளருக்கு மாற்றி தர வேண்டும் அல்லது இழப்பீடாக ரூ 75,000/- முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் இந்த தொகைக்கு 02-12-2022 தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்.
02. முதலாம் எதிர் தரப்பினரின் செய்கையால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு ரூ 75,000/- இழப்பீடு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை. மேலும் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 02-12-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 19-11-2016 | முன்பதிவு படிவம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | - | பணம் செலுத்திய ரசீதுகள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 29-11-2016 | வாகனம் ஒப்படைப்பு ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 02-12-2016 | பதிவு புத்தகம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 30-11-2016 | காப்பீட்டு ஆவணம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 07-12-2016 | உத்திரவாத ஆவணம் மற்றும் ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 19-01-2017 | சேவை கட்டண ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 13-02-2017 | வாகனத்தை எடுத்துச் செல்லுதல் அதிகார சீட்டு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | 17-02-2017 | சேவை கட்டண ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 02-03-2017 | வாகனத்தை எடுத்துச் செல்லுதல் அதிகார சீட்டு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.11 | 04-03-2017 | உத்திரவாத ஆவணம் மற்றும் ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.12 | 15-03-2017 | முதலாம் எதிர் தரப்பினருக்கு அனுப்பிய மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.13 | 20-03-2017 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.14 | 12-01-2017 | முதல் எதிர் தரப்பினரின் பதில் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.15 | 17-01-2017 | வாகனத்தை எடுத்துச் செல்லுதல் அதிகார சீட்டு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.16 | 19-01-2017 | சேவை கட்டண ரசீது | ஜெராக்ஸ் |
இரண்டாம் எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | - | உரிமையாளர் குறிப்பேட்டில் சம்பந்தப்பட்ட பகுதிகள் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | - | வாகனம் தொடர்பான சரித்திரம் | ஜெராக்ஸ் |
முதலாம், மூன்றாம் எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: |
எம.சா.ஆ.3 | 05-12-2016 | பழுது நீக்குதல் ஆதரவு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.4 | 03-01-2017 | பழுது நீக்குதல் ஆதரவு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.5 | 04-01-2017 | பழுது நீக்குதல் ஆதரவு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.6 | 18-01-2017 | பழுது நீக்குதல் ஆதரவு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.7 | 13-02-2017 | பழுது நீக்குதல் ஆதரவு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.8 | 02-03-2017 | பழுது நீக்குதல் ஆதரவு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.9 | 17-04-2017 | பழுது நீக்குதல் ஆதரவு | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு முரளி
முதலாம், மூன்றாம் எதிர்தரப்பினர்கள் சாட்சி: திரு மகேஷ் ரவீந்திரன்
இரண்டாம் எதிர்தரப்பினர் சாட்சி திரு எஸ் சீனிவாசன்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.