Tamil Nadu

Ariyalur

RBT/CC/36/2022

K.Saikumar - Complainant(s)

Versus

M/s.Emirates Airlines - Opp.Party(s)

K.Kumaran

23 Dec 2022

ORDER

Heading1
Heading2
 
Complaint Case No. RBT/CC/36/2022
 
1. K.Saikumar
-
...........Complainant(s)
Versus
1. M/s.Emirates Airlines
-
............Opp.Party(s)
 
BEFORE: 
 HON'BLE MR. DR.V.RAMARAJ M.L.,Ph.D., PRESIDENT
 
PRESENT:
 
Dated : 23 Dec 2022
Final Order / Judgement

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 15-02-2017 (Chennai South)

                     உத்தரவு  பிறப்பித்த  நாள்   : 23-12-2022  

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம், அரியலூர்.

முன்னிலை  : திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  என்.பாலு.பி..ஏ.பி.எல்.,      உறுப்பினர்.  I 

திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II

நுகர்வோர் புகார்  எண் (RBT CC No):  36/2022.

 

            சென்னை, அரும்பாக்கம், ஜெய் நகர், இரண்டாம் பிரதான சாலை, இலக்கம் 16/28 -ல் வசிக்கும் கே. சாய் குமார்                            -முறையீட்டாளர்

 

1.         சென்னை, ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலை, இலக்கம் 129 முதல் 140 வரை, தரைத்தளத்தில் உள்ள எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், அதன் நிர்வாக இயக்குனர் மூலம்                                      

 

2.         ஹரியானா மாநிலம், குர்கான் பகுதி 1, செக்டார் 20,  உத்தியோக் விகார், எஸ்பி இன்போ சிட்டி டவர் ஏ-ல் உள்ள M/s. Make My Trip India Pvt. Ltd., அதன் நிர்வாக இயக்குனர் மூலம்.                                               - எதிர் தரப்பினர்கள்

 

01        இந்த  புகாரில் முறையீட்டாளருக்கு திரு கே குமரன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் முதலாம் எதிர்தரப்பினருக்கு Ms. Rupa J Tharayil, வழக்கறிஞர் முன்னிலையாகியும் இரண்டாம் எதிர்தரப்பினருக்கு M/s.King Stubb & Kaisiva & N.Kishore Kumar, வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக      01-12-2022 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-01, அவரது சான்றாவணங்கள் – 07, முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின் பதில் உரைகள், சாட்சியம்-02, சான்றாவணம் – 05  மற்றும் வாதங்கள், சமர்ப்பிக்கப்பட்ட முன் தீர்ப்பு நகல்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும் 

 

உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தமது மகனிடம் கூடுதல் பேக்கேஜ்க்காக வசூலிக்கப்பட்ட தொகை ரூ 12, 365/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு 09-09-2015 ஆம் தேதி முதல் வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 1,00,000/- இழப்பீடு தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் செலவுத் தொகையாக ரூ 15,000/- எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.

 

  • ர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:

 

03.       தமது மகன் கார்த்திக் சிவாவிற்கு புளோரிடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்கு சேர்க்கை அனுமதி கிடைத்தது என்றும் இந்நிலையில் முதலாம் எதிர் தரப்பினரின் விமானத்தில் பயணம் செய்தால் மாணவர் விசா உள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு பேக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது என்ற தகவலை தான் அறிந்து இரண்டாம் எதிர் தரப்பினரின் இணையதளம் மூலமாக சென்னையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து புளோரிடா செல்வதற்கு 09-09-2015 ஆம் தேதியில் பயணம் செய்ய ரூ 62,531/- செலுத்தி 09-08-2015 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினரின் விமான சீட்டை முன்பதிவு செய்தேன் என்றும் முறையீட்டாளர் தமது தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

04.       மாணவர் விசா உள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு பேக்கேஜ் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் என்ற உறுதிமொழிக்கு மாறாக முன்பதிவு செய்த விமான பயண சீட்டை அச்சிட்டு பார்த்தபோது 2 பேக்கேஜ் கொண்டு செல்ல அனுமதி மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது என்றும் மாணவர் விசாவில் மூன்றாவது பேக்கேஜ் எவ்வித கட்டணமும் இன்றி எடுத்துச் செல்லலாம் என்ற நிலையில் முன்பதிவு சீட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது தமக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் பயணச் சீட்டை முன் பதிவு செய்ததற்கு மறுநாள் 10-08-2015 ஆம் தேதியில் முதலாம் எதிர்தரப்பினரை தொடர்பு கொண்ட போது மாணவர்களுக்கு மூன்று பேக்கேஜ் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் அனுமதிக்கப்படும் என்று அவர்களது பணியாளர் உறுதிப்படுத்தினார் என்றும் பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தமது மகன் கடந்த 08-09-2015 ஆம் தேதியில் 13.00 மணிக்கு தமது மகன் இரண்டாம் எதிர் தரப்பினரை தொடர்பு கொள்ள முயற்சித்தார் என்றும் இவ்வாறு தொடர்பு கொண்ட இரண்டாம் எதிர் தரப்பினரின் கட்டணமில்லா தொலைபேசியில் யாரும் தமது மகனின் அழைப்பை பெற்று பதில் அளிக்கவில்லை என்றும் பயணம் செய்வதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பாக 09-09-2015 ஆம் தேதியில் 09.55 மணிக்கு இரண்டாம் எதிர் தரப்பினரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை என்றும் இருப்பினும் முதலாம் எதிர்தரப்பினர் அளித்த உறுதிமொழியை நம்பி தமது மகன் 09-09-2015 ஆம் தேதியில் விமான நிலையத்திற்கு சென்றார் என்றும் முறையீட்டாளர் தமது தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

05.       சென்னை விமான நிலையத்தில் முதலாம் எதிர் தரப்பினரிடம் தமக்கு பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பப்பட்ட சேர்க்கை கடிதம் மற்றும் மாணவர்களுக்கான விசா ஆகியவற்றை தமது மகன் காண்பித்து மூன்று பேக்கேஜ்களுக்கு அனுமதி கோரிய போது அவர்கள்  இரண்டு பேக்கேஜ்களுக்கு மட்டுமே கட்டணம் இல்லாமல் கொண்டு செல்லும் அனுமதி வழங்க முடியும் எனவும் மூன்றாம் பேக்கேஜ்க்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர் என்றும் உடனடியாக விமான நிலையத்தில் இருந்து இரண்டாம் எதிர் தரப்பினருக்கு பல தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டும் எந்த ஒரு தொலைபேசி அழைப்பையும் அவர்கள் பெற்று பதிலளிக்கவில்லை என்றும் வேறுவழியின்றி மூன்றாவது பேக்கேஜ்க்கு தமது மகன் முதலாம் எதிர் தரப்பினரிடம் ரூ 12, 365/- செலுத்தினார் என்றும் அப்போது முதலாம் எதிர்தரப்பினர் மாணவர் என்பதற்கான ஆவணங்களை பின்னர் சமர்ப்பித்தால் பணம் திரும்ப வழங்கப்படும் என்று கூறினார்கள் என்று இதனடிப்படையில் தமது சேர்க்கை அனுமதி, மாணவர் விசா மற்றும் மேற்படி கட்டண ரசீது ஆகியவற்றை இரண்டாம் எதிர் தரப்பினருக்கு அனுப்பி பணத்தை திரும்ப வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது என்றும் முறையீட்டாளர் தமது தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

06.       தமது மகனுக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்தும் செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப தருமாறும் எதிர் தரப்பினர்களிடம் பலமுறை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்றும் இந்த மின்னஞ்சல் பரிவர்த்தனைகளின் போது கட்டணம் இல்லாமல் கூடுதலாக ஒரு பேக்கேஜ் கொண்டு செல்ல முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற சில முன் நிபந்தனைகளை எதிர் தரப்பினர்கள் தெரிவிப்பது தவறானது என்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும்போது இதற்கான வசதி இருக்கவில்லை என்றும் மின்னணு யுகத்தில் முன்பதிவு சமயத்தில் இணையதளத்தில் ஆணா? பெண்ணா? குழந்தையா? 18 வயது நிரம்பியவரா? போன்ற விவரங்களை கேட்கக் கூடிய நிலையில் மாணவரா? என்று கேட்டு அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு இணையதளத்தில் வடிவமைக்க முடியும்.  இத்தகைய வசதியை வழங்க வேண்டியது இரண்டாம் எதிர் தரப்பினரின் கடமையாகும் என்றும் இவ்வாறு தகவல்களை சமர்ப்பிக்க அவரது இணையதளத்தில் வசதி இல்லாத சூழ்நிலையில் மாணவர் என்பதற்கான ஆதாரங்களை பார்த்து அதற்கான சலுகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்வது இரண்டாவது எதிர் தரப்பினரின் கடமையாகும் என்றும் மேற்கண்டவாறு எதிர்த் தரப்பினர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி கூடுதலாக ஒரு பேக்கேஜ் கட்டணம் இல்லாமல் எடுத்து செல்ல அனுமதி மறுத்தது சேவை குறைபாடு என்றும் இது குறித்து வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியதில் முதலாம் எதிர்தரப்பினர் தமது பொது அதிகார ஆவணத்தை தமது வழக்கறிஞருக்கு வழங்க வேண்டுமென்று பதில் அறிவிப்பு அனுப்பியது தவறு என்றும் இதனால் தங்களுக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பிற சங்கதிகளை தெரிவித்தும் முறையீட்டாளர் தமது புகாரை தாக்கல் செய்துள்ளார்.

 

07.       எனவே, தமது மகனிடம் கூடுதல் பேக்கேஜ்க்காக வசூலிக்கப்பட்ட தொகை ரூ 12, 365/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு 09-09-2015 ஆம் தேதி முதல் வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 1,00,000/- இழப்பீடு தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் செலவுத் தொகையாக ரூ 15,000/- எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

முதலாம் எதிர்தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

08.       புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் முதலாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

09.       தமது மகன் கார்த்திக் சிவாவிற்காக இந்த புகாரை முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ளார் என்றும் கார்த்திக் சிவா 18 வயது நிறைவு பெற்றவர் என்ற நிலையில்அவரால் வழங்கப்பட்ட அனுமதி போன்ற ஏதேனும் ஒரு ஆவணம் இல்லாமல் புகாரை தாக்கல் செய்ய முறையீட்டாளருக்கு அதிகாரம் இல்லை என்பதால் வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்றாகும் என்றும் மேலும் முறையீட்டாளர் தங்களது நிறுவனத்தின் பயணி அல்ல என்றும் இன்னிலையில் அவரது மகனுக்கும் தங்களது பணியாளர்களுக்கும் என்ன உரையாடல் நடைபெற்றது என்பது அவருக்கு தெரியாது என்றும் இதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்று என்றும் முதலாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

10.       இந்தப் புகார் பயணச்சீட்டை வழங்கிய இரண்டாம் எதிர் தரப்பினருக்கு மட்டும் எதிரானதாகவே உள்ளது ஏனெனில் இலவச பேக்கேஜ் சலுகையை அவர்தான் சேர்த்து இருக்க வேண்டும் என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்தான் மேற்படி சலுகையை பயணச் சீட்டில் அச்சிட்டு வழங்கி இருக்க வேண்டும் என்றும் ஆனால் 27-09-2015 ஆம் தேதி இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூடுதல் பேக்கேஜ் வழங்க வேண்டும் என்று தங்களிடம் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் பயணச் சீட்டு வாங்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பயணி மாணவர் அடையாள அட்டை அல்லது பல்கலைக்கழக சேர்க்கை கடிதம் அல்லது மாணவர் விசா போன்றவற்றை அவரிடம் சமர்ப்பித்து பயணச் சீட்டில் கூடுதல் பேக்கேஜ் சலுகையை அச்சிட்டு வாங்கி இருக்க வேண்டும் என்றும் இவ்வாறு இல்லாத நிலையில் கூடுதல் பேக்கேஜ் கொண்டு வந்தால் அதற்குரிய கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூடுதல் பேக்கேஜ் சலுகை பெற முறையீட்டாளர் அல்லது பயணி தேவையான ஆவணங்களுடன் இரண்டாம் எதிர் தரப்பினரை தொடர்பு கொண்டார் என்பதற்கு எந்த ஆவணங்களையும் எந்த சாட்சியங்களையும் முறையீட்டாளர் சமர்ப்பிக்கவில்லை என்றும் முதலாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

11.       தாங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு பேக்கேஜ் சலுகை வழங்குவது உண்மை என்றும் ஆனால் அதனைப் பெற பயணச்சீட்டு வழங்கும் நிறுவனத்திடம் பயணிக்கும் மாணவர் தங்களது அடையாள அட்டை அல்லது சேர்க்கை ஆணை அல்லது மாணவர்களுக்கான விசா போன்றவற்றை காண்பித்து பயணச்சீட்டை பெறவேண்டும் என்றும் முறையீட்டாளர் பயணச்சீட்டை பெறும்போது இரண்டாம் எதிர்  தரப்பினரிடம் தமக்கு சலுகையை வழங்க கேட்டு பயணச்சீட்டில் அதனை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் முறையீட்டாளரின் மகன் மாணவர் என்று தங்களுக்கு தெரியாதென்றும் தங்களிடம் பல்கலைக்கழக சேர்க்கை அனுமதி ஆணை போன்ற எந்த ஆதாரங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை என்றும் பயணச் சீட்டை முன் பதிவு செய்ததற்கு மறுநாள் 10-08-2015 ஆம் தேதியில் தங்களை தொடர்பு கொண்டபோது மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு பேக்கேஜ் கொண்டு செல்ல சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பொதுவாக வழங்கப்படும் சலுகைகளை பற்றி தாங்கள் தெரிவித்ததாகவும் எந்த ஒரு சலுகையும் பெற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தோம் என்றும்  முன்கூட்டியே சலுகையை பெற பதிவு செய்யாமல் விமான நிலையத்தில் வந்து மாணவர் என்ற அடிப்படையில் கூடுதலாக ஒரு பேக்கேஜ் கொண்டு செல்ல சலுகை கேட்கும் போது வழங்க இயலாது  என்றும் கூடுதல் பேக்கேஜ் கொண்டு செல்ல பணம் செலுத்தி விட்டு பின்னர் மாணவர் என்று அடையாளத்தை நிரூபித்தால் பணத்தை திரும்ப வழங்குகிறோம் என்று தங்கள் தரப்பில் ஒருபோதும் கூறப்படவில்லை என்றும் முதலாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

12.       முறையீட்டாளர் தரப்பில் கூடுதல் பேக்கேஜ்க்கு செலுத்தப்பட்ட தொகையை கேட்டு தங்களுக்கும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன என்றும் அதற்கு தங்கள் தரப்பில் பதில் வழங்கப்பட்டுள்ளது என்றும் மேற்படி தொகையை கேட்டு தங்களுக்கு வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கிடைக்கப் பெற்றது என்றும் அதற்கு தாங்கள் பதில் வழங்கியுள்ளோம் என்றும் தரவு பாதுகாப்பு காரணங்களுக்காக பயணியின் எழுத்து மூலமான சம்மதமின்றி அவர் குறித்த விவரங்கள் வழங்கப்படமாட்டாது என பதிலில் தெரிவித்துள்ளோம் என்றும் தங்கள் தரப்பில் எவ்வித நியாயமற்ற வர்த்தக நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் சேவை குறைபாடு ஏற்படவில்லை என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் முதலாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

இரண்டாம் எதிர்தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

13.       புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

14.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி இரண்டாம் எதிர்தரப்பினர் விமானத்தில் பயணிக்க தங்கள் மூலமாக முன் பதிவு செய்தது உண்மை என்றும் பயணச்சீட்டானது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் இதனை மாற்றியமைப்பதற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் தங்களது இணையதளத்தில் மாணவர் என்ற பிரிவை தேர்ந்தெடுப்பதற்கும் அல்லது தள்ளுபடி கட்டணத்தில் பயணச்சீட்டை பெறவும் வசதி இல்லை என்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பிரிவில் மாணவர்களுக்கான சலுகை பயணச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவு செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தங்களை கலந்து ஆலோசிக்காமல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

15.       முறையீட்டாளருக்கு மூன்று இலவச பேக்கேஜ்களை முதலாம் எதிர் தரப்பினரின் விமானத்தில் கொண்டு செல்ல ஒரு போதும் சலுகை வழங்கவில்லை என்றும் அவ்வாறு ஏதேனும் சலுகை இருப்பினும் கூட, அதாவது மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு பேக்கேஜ் கொண்டு செல்லலாம் என்ற சலுகை இருப்பின், அதனை வழங்குவது முதலாம் எதிர் தரப்பினரின் பணி என்றும் தங்களது கடமை அல்ல என்றும்  தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் இரண்டாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.

16.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:

 

            1)         முறையீட்டாளர்  கூறுவது  போல்  எதிர்தரப்பினர்கள்   சேவை குறைபாடு  புரிந்து உள்ளாரா?

 

            2)         எதிர்தரப்பினர்கள்   சேவை குறைபாடு  புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?  ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?

 

            3)         இம் முறையீட்டாளர்  பெற தக்க இதர பரிகாரங்கள்  என்ன?

 

எழு வினா எண் – 1

 

17.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி இரண்டாம் எதிர் தரப்பினரின் இணையதளம் மூலமாக சென்னையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து புளோரிடா செல்வதற்கு 09-09-2015 ஆம் தேதியில் பயணம் செய்ய ரூ 62,531/- செலுத்தி 09-08-2015 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினரின் விமான சீட்டை முறையீட்டாளர் முன்பதிவு செய்துள்ளார் என்பதை எதிர் தரப்பினர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். முறையீட்டாளர் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் பணம் செலுத்தி தனது மகன் முதலாம் எதிர் தரப்பினரின் விமானத்தில் பயணிக்க முன் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, பிரிவு 2(7) -ன்படி மேற்படி சேவையை பெற பணம் செலுத்திய முறையீட்டாளரும் அவரது அனுமதியுடன் சேவையை பயன்படுத்திய அவரது மகனும் நுகர்வோர்கள் ஆவார்கள் என்றும் இதனால் முறையீட்டாளர் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவரது மகனின் அனுமதி பெற வேண்டியது அவசியம் இல்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

18.       தாங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு பேக்கேஜ் சலுகை வழங்குவது உண்மை என்றும் ஆனால் அதனைப் பெற பயணச்சீட்டு வழங்கும் நிறுவனத்திடம் பயணிக்கும் மாணவர் தங்களது அடையாள அட்டை அல்லது சேர்க்கை ஆணை அல்லது மாணவர்களுக்கான விசா போன்றவற்றை காண்பித்து பயணச்சீட்டை பெறவேண்டும் என்றும் முறையீட்டாளர் பயணச்சீட்டை பெறும்போது இரண்டாம் எதிர்  தரப்பினரிடம் தமக்கு சலுகையை வழங்க கேட்டு பயணச்சீட்டில் அதனை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் முறையீட்டாளரின் மகன் மாணவர் என்று தங்களுக்கு தெரியாதென்றும் தங்களிடம் பல்கலைக்கழக சேர்க்கை அனுமதி ஆணை போன்ற எந்த ஆதாரங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை என்றும் பயணச் சீட்டை முன் பதிவு செய்ததற்கு மறுநாள் 10-08-2015 ஆம் தேதியில் தங்களை தொடர்பு கொண்டபோது மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு பேக்கேஜ் கொண்டு செல்ல சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பொதுவாக வழங்கப்படும் சலுகைகளை பற்றி தாங்கள் தெரிவித்ததாகவும் எந்த ஒரு சலுகையும் பெற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தோம் என்றும்  முன்கூட்டியே சலுகையை பெற பதிவு செய்யாமல் விமான நிலையத்தில் வந்து மாணவர் என்ற அடிப்படையில் கூடுதலாக ஒரு பேக்கேஜ் கொண்டு செல்ல சலுகை கேட்கும் போது வழங்க இயலாது  என்றும் கூடுதல் பேக்கேஜ் கொண்டு செல்ல பணம் செலுத்தி விட்டு பின்னர் மாணவர் என்று அடையாளத்தை நிரூபித்தால் பணத்தை திரும்ப வழங்குகிறோம் என்று தங்கள் தரப்பில் ஒருபோதும் கூறப்படவில்லை என்றும் இந்தப் புகார் பயணச்சீட்டை வழங்கிய இரண்டாம் எதிர் தரப்பினருக்கு மட்டும் எதிரானதாகவே உள்ளது ஏனெனில் இலவச பேக்கேஜ் சலுகையை அவர்தான் சேர்த்து இருக்க வேண்டும் என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்தான் மேற்படி சலுகையை பயணச் சீட்டில் அச்சிட்டு வழங்கி இருக்க வேண்டும் என்றும் ஆனால் 27-09-2015 ஆம் தேதி இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூடுதல் பேக்கேஜ் வழங்க வேண்டும் என்று தங்களிடம் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார் என்றும் முதலாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையில்  தெரிவித்துள்ள நிலையில் முதலாம் எதிர் தரப்பினரிடம் முறையீட்டாளர் மகன் தாம் மாணவர் என்பதற்கு ஆவணங்களை காட்டினார் என நிரூபிக்க முறையீட்டாளர் தரப்பில் சாட்சியங்கள் எதுவுமில்லை. 

 

19.       முறையீட்டாளர் தரப்பில் இரண்டாம் சான்றாவணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மின்னஞ்சல் கடிதங்களில் முறையீட்டாளர் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு எழுதியுள்ள மின்னஞ்சலில், “Emirates could not reply us it is the booking agent viz. (MAKEMYTRIP) your are only fault” (page 9 of type set) என்றும்“Make my trip is solely responsible for denying the legitimate extra baggage provision of Student Visa when the rule is clear” (page 11 of type set) என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் மீது மட்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

20.       மேற்கண்ட 18, 19 ஆம் பத்திகளில் கூறப்பட்டுள்ள காரணங்களினால் முதலாம் எதிர்தரப்பினர் மீது புகாரில் முறையீட்டாளர் கூறியுள்ளது போல சேவை குறைபாடு எதுவும் புரியவில்லை என்றும் மேலும் முதலாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாட்டுக்கு பொறுப்பாவார் என்று கூறி முறையீட்டாளர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட முன் தீர்ப்பு நகல்கள் இந்த வழக்கிற்கு பொருந்துவதாக இல்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

21.       தங்களது இணையதளத்தில் மாணவர் என்ற பிரிவை தேர்ந்தெடுப்பதற்கும் அல்லது தள்ளுபடி கட்டணத்தில் பயணச்சீட்டை பெறவும் வசதி இல்லை என்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பிரிவில் மாணவர்களுக்கான சலுகை பயணச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவு செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தங்களை கலந்து ஆலோசிக்காமல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளது ஆய்வு செய்ய வேண்டியதாகும்.  இணையதளம் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு வணிகத்தை மேற்கொள்ளும் இரண்டாம் எதிர்தரப்பினர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் சேவை புரியும் விமான நிறுவனம் வழங்கும் சலுகைகளை பெறுவதற்கு வசதியாக முன்பதிவு படிவத்தில் அதற்கான வசதியும் வழங்க வேண்டும் என்பது நுகர்வோரின் சட்டபூர்வமான எதிர்பார்ப்பாகும். மாறாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பகுதியில் நுகர்வோர் முன்பதிவு செய்வதற்கு முன்பாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதும் சலுகைகளை பெற நேரில் அணுக வேண்டும் என்பதும் சரியானது அல்ல என்று இந்த ஆணையம் கருதவில்லை.

 

22.       முறையீட்டாளர் தரப்பில் இரண்டு பேக்கேஜ் மட்டும் என்று பயணச் சீட்டில் அச்சிட்டு கிடைக்கப்பெற்ற பின்னர் இரண்டாம் எதிர் தரப்பினரை தொடர்பு கொண்டும் பயணத்துக்கு 48 மணி நேரங்களுக்கு முன்பு கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்று பதிலளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இரண்டாம் எதிர்தரப்பினர் சமர்ப்பித்துள்ள பதிலில் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.  முறையீட்டாளர் தரப்பில் தொலைபேசியில் அழைத்ததற்கு ஆதாரமாக நான்காம் சான்றாவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

23.       முறையீட்டாளர் தரப்பில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டின் மூலமாக முதலாம் எதிர்தரப்பினர் கூடுதல் பேக்கேஜ் கொண்டு செல்லகேட்ட தொகையை செலுத்தி பின்னர் பயணம் மேற்கொண்ட பின்னர் பலமுறை மின்னஞ்சல் மூலம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.  ஆனால் அவற்றிற்கு தகுந்த பதிலை இரண்டாம் எதிர்தரப்பினர் மின்னஞ்சல் மூலமாக  தெரிவிக்கவில்லை.  மேலும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு அனுப்பப்பட்ட வழக்கறிஞர் அறிவிப்புக்குஅவர் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. முதலாம் எதிர்தரப்பினர் கூடுதல் பேக்கேஜ் கொண்டு செல்லகேட்ட தொகையை செலுத்திய பணத்தை முறையீட்டாளர் திரும்பபெற தக்கவர் அல்ல என்ற பதிலை இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு அனுப்பி அவரது புகாரை முடித்து வைக்கவும் இல்லை. 

 

 

 

 

24.       மேற்கண்ட 21, 22, 23 ஆம் பத்திகளில் கூறப்பட்டுள்ள காரணங்களினால் இரண்டாம் எதிர்தரப்பினர் மீது புகாரில் முறையீட்டாளர் கூறியுள்ளது போல இரண்டாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

எழு வினா எண் – 2

 

25.       இரண்டாம் எதிர் தரப்பினரின் செய்கைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு பரிகாரம் வழங்க கடமைப்பட்டவர் ஆவார்.  இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளர் மகனிடம் கூடுதல் பேக்கேஜ்க்காக வசூலிக்கப்பட்ட தொகை ரூ 12, 365/- ஐ இரண்டாம் எதிர் தரப்பினர்  09-09-2015 ஆம் தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்று  இந்த ஆணையம் தீர்மானிக்கிறது

 

26.       இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் இரண்டாம் எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ 50,000/- இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும் என்றும் தவறினால் இந்த தொகைக்கு 23-12-2022 தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

எழு வினா எண் – 3

 

27.       இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழக்கின் செலவு தொகையாக ரூ 5,000/- இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

 

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

 

01.       இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளர் மகனிடம் கூடுதல் பேக்கேஜ்க்காக வசூலிக்கப்பட்ட தொகை ரூ 12, 365/- ஐ இரண்டாம் எதிர் தரப்பினர்  09-09-2015 ஆம் தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்

 

02.       இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் இரண்டாம் எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ 50,000/- இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும். தவறினால் இந்த தொகைக்கு 23-12-2022 தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்.

 

03.       இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழக்கின் செலவு தொகையாக ரூ 5,000/- இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும்.

 

04.       முதலாம் எதிர்தரப்பினர் மீதான புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது

 

            இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று  23-12-2022   ஆம்  நாளன்று பகரப்பட்டது.

 

                                                                                    தலைவர்.    

                       

 

                                                                                    உறுப்பினர் – I

 

 

                                                                                    உறுப்பினர்-II.

முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

09-08-2015

விமான பயணச்சீட்டு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

-

முதலாம் எதிர் தரப்பினரின் பேக்கேஜ் விதிமுறைகள்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

-

மின்னஞ்சல் பரிவர்த்தனைகள்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

-

அழைப்பு விவர அறிக்கை

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

-

இரண்டாம் எதிர் தரப்பினரின் இணையதள பக்க புகைப்படம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

28-03-2016

வழக்கறிஞர் அறிவிப்பும் அஞ்சல் ஒப்புதல் அட்டையும்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

01-04-2016

முதலாம் எதிர் தரப்பினரின் பதில் மின்னஞ்சல் பதில்

ஜெராக்ஸ்

 

 

இரண்டாம் எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

எம.சா.ஆ.1

03-08-2015

இணையதள விளம்பரம்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.2

-

இரண்டாம் எதிர் தரப்பினருக்கும் உபயோகிப்பாளருக்கும் இடையே ஒப்பந்தம்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.3

01-04-2016

முதலாம் எதிர் தரப்பினரின் பதில் மின்னஞ்சல் பதில்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.4

01-10-2015

முதலாம் எதிர் தரப்பினரின் பதில் மின்னஞ்சல்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.5

03-08-2015

முதலாம் எதிர் தரப்பினரின் திருத்தப்பட்ட பேக்கேஜ் விதிமுறைகள்

ஜெராக்ஸ்

 

 

முறையீட்டாளர்   தரப்பு  சாட்சி:  திரு கே. சாய் குமார்

முதலாம் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் சாட்சி:  திரு எஸ்சா சுலைமான்

இரண்டாம் எதிர்தரப்பினர்கள் சாட்சி: திரு            இகங் மெஹரா                                                                 

                                                                                    தலைவர்.

           

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II.

 
 
[HON'BLE MR. DR.V.RAMARAJ M.L.,Ph.D.,]
PRESIDENT
 

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.