புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 14-02-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 18-11-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 32/2022.
சென்னை, சாலிகிராமம், மதியழகன் நகர், கேகே தெரு, இலக்கம் 16/37 -ல் வசிக்கும் குணசேகரன் மகன் ராஜகுமாரன்
-முறையீட்டாளர்
1. பூனே – 411 006, விமான நிலைய சாலையில் உள்ள ஜி இ பிளாசாவில் அலுவலகம் வைத்துள்ள பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் அதன் இயக்குனர் மூலம்
2. சென்னை, பூந்தமல்லி சாலை, புதிய இலக்கம் 497 மற்றும் 498 உள்ள பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் கிளை மேலாளர் மூலம்
- எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திருவாளர்கள் M/s BFS Legal Associaties, வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் எதிர் தரப்பினருக்கு திருவாளர்கள் திரு கே குமரன்முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 08-11-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், எதிர் தரப்பினரின் பதிலுரை, எதிர் தரப்பினரின் சான்றாவணங்கள் – 03 மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தமது வாகனத்துக்கு செய்யப்பட்ட காப்பீட்டு தொகையான ரூ 3 லட்சத்து 50 ஆயிரத்தை வட்டியுடன் எதிர்த் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர்தரப்பினர்களின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
- தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தமது TN 10 AM 2497 என்ற பதிவு எண் கொண்ட காருக்கு தாம் எதிர் தரப்பினர்களின் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தேன் என்றும் காப்பீட்டுக்கான முன்மொழிவை அளித்தபோது எனது வாகனம் வாடகை உபயோகத்துக்கு(tourist taxi) பயன்படுத்த கூடியதா? அல்லது தனியார் உபயோகத்துக்கு (private taxi) பயன்படுத்த கூடியதா? என்ற விவரங்களை எதிர் தரப்பினர்கள் கேட்கவில்லை என்றும் வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை மட்டும் சமர்ப்பித்த நிலையில் எதிர்த் தரப்பினர்கள் தெரிவித்த பிரீமியத் தொகையை 18-09-2014 ஆம் தேதியில் செலுத்தினேன் என்றும்19-09-2013 முதல் 18-09-2014 வரையான காலத்திற்கு காப்பீட்டு பாலிசி எதிர்த் தரப்பினர்கள் சார்பில்தமது காருக்கு வழங்கப்பட்டது என்றும் இந்நிலையில் தமது வாகனம் கடந்த 14-10-2014 ஆம் தேதியன்று காணாமல் போய்விட்டது என்றும் இது குறித்து எதிர் தரப்பினர்களிடம் தெரிவித்து இழப்பீட்டு கோரிக்கையை கேட்ட போது வாகனமானது வாடகை உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில் தனியார் வாகனத்திற்கான பிரீமிய தொகையை செலுத்தி காப்பீட்டை செய்துள்ள காரணத்தினாலும் வாகனம் காணாமல் போன உடனே தகவல் தெரிவிக்கவில்லை என்பதாலும் காவல்துறையிடம் இருந்து தேட இயலவில்லை என்ற சான்றிதழை உரிய காலத்தில் பெற்று சமர்ப்பிக்கதா காரணத்தாலும் இழப்பீட்டு கோரிக்கையை ஏற்க முடியாது என்று எதிர் தரப்பினர்கள் தெரிவித்து விட்டார்கள் என்றும் தமது வாகனத்திற்கான காப்பீட்டுக்கு முன்மொழிவை தெரிவித்தபோது இணையதளம் மூலம் சமர்ப்பித்த போது வாகனம் எந்த உபயோகத்துக்கு பயன்படுத்தபடுகிறது என்ற கேள்வி கேட்கப்படவில்லை என்ற நிலையில் வாகனம் காணாமல் போன பின்பு கோரிக்கையை நிராகரிக்க தவறான பதிலை எதிர் தரப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள் என்றும் அவர்கள் தமது காப்பீட்டு தொகையை வழங்க கடமைப்பட்டவர்கள் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கை சேவை குறைபாடு என்றும் இத்தகைய சேவை குறைபாட்டால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. எனவே, தமது வாகனத்துக்கு செய்யப்பட்ட காப்பீட்டு தொகையான ரூ 3 லட்சத்து 50 ஆயிரத்தை வட்டியுடன் எதிர்த் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர்தரப்பினர்களின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
06. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
07. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளபடி அவரது வாகனத்திற்கு தங்களிடம் காப்பீடு செய்தது உண்மை என்றும் ஆனால் அவரது வாகனம் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுவது என்று தெரிவித்து அதற்கான பிரீமியத்தை செலுத்தி காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் வாகனம் காணாமல் போன பின்னர் கோரிக்கை விண்ணப்பம் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பின்னர் ஆய்வு செய்த போது வாகனமானது வாடகை உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுவது என பதிவு சான்றிதழ் மூலம் தெரியவந்தது என்றும் வாடகை உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில் தனியார் வாகனத்திற்கான பிரீமிய தொகையை செலுத்தி காப்பீட்டை செய்துள்ள காரணத்தினாலும் வாகனம் காணாமல் போன உடனே தகவல் தெரிவிக்கவில்லை என்பதாலும் காவல்துறையிடம் இருந்து தேட இயலவில்லை என்ற சான்றிதழை உரிய காலத்தில் பெற்று சமர்ப்பிக்கதா காரணத்தாலும் இழப்பீட்டு கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் தங்களால் முறையீட்டாளரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்றும் இந்நிலையில்தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் இல்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில்உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
08. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
09. முறையீட்டாளர் புகாரில் தமது TN 10 AM 2497 என்ற பதிவு எண் கொண்ட காருக்கு தாம் எதிர் தரப்பினர்களின் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தேன் என்றும் காப்பீட்டுக்கான முன்மொழிவை அளித்தபோது எனது வாகனம் வாடகை உபயோகத்துக்கு(tourist taxi) பயன்படுத்த கூடியதா? அல்லது தனியார் உபயோகத்துக்கு (private taxi) பயன்படுத்த கூடியதா? என்ற விவரங்களை எதிர் தரப்பினர்கள் கேட்கவில்லை என்றும் வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை மட்டும் சமர்ப்பித்த நிலையில் எதிர் தரப்பினர்கள் தெரிவித்த பிரீமியத் தொகையை செலுத்தினேன் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர் தரப்பினர்கள் தரப்பு இரண்டாவது சான்று ஆவணத்தில் தமது வாகனம் சொந்த உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்று எதிர் தரப்பினர்களின் பிரதிநிதியிடம் தெரிவித்துள்ளார் என்பதை அறியமுடிகிறது. இவ்வாறு தவறான தகவலை தெரிவித்து முறையீட்டாளர் காப்பீட்டு பாலிசியை பெற்றுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முறையீட்டாளர் காப்பீட்டுக்கான முன்மொழிவு படிவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது தனியார் வாகனத்திற்குதான் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது காப்பீட்டு பாலிசியை பெற்ற பின்பு குறை இருப்பின் அதனை தெரிவித்து வாடகை உபயோகத்துக்கான வாகன பாலிசி என மாற்றம் செய்ய வேண்டியது முறையீட்டாளரின் கடமையாகும். ஆனால் அத்தகைய நடவடிக்கை எதனையும் முறையீட்டாளர் மேற்கொள்ளவில்லை என்பதை அறிய முடிகிறது. இந்த வழக்கில் தாக்கல் செய்யவில்லை என்பது மட்டுமல்லாது எந்த ஆவணங்களையும் குறியீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முறையீட்டாளர் நிரூபண வாக்குமூல சாட்சியம் மற்றும் சான்று ஆவணங்கள் மூலம் தனது புகாரை நிரூபிக்கவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2 & 3
10. முதல் எழு வினாவை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 18-11-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | - | காப்பீட்டு பாலிசி | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | - | குரல் பதிவு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.3 | 28-01-2015 | எதிர்தரப்பினர் களின் கடிதம் | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: இல்லை
எதிர்தரப்பினர்கள் சாட்சி: திருமதி திலகவதி
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.