புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 29-11-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 28-10-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை
திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 199/2022.
சென்னை, நங்கநல்லூர், தில்லை கங்கா நகர், 7வது தெரு, இலக்கம் 4/11-E-ல் முதல் மாடியில் வசிக்கும் கிருஷ்ணசுவாமி மகன் வெங்கடேசன்
-முறையீட்டாளர்
1. ஹரியானா மாநிலம் – 122 016, குர்கான் பகுதி 4, உத்தியோக் விகார், இலக்கம்- S 319 -ல் உள்ள M/s. Spice Jet Ltd., அதன் தலைமை செயல் அலுவலர் மூலம்.
2. சென்னை- 600 032. கிண்டி தொழிற்பேட்டை, இலக்கம் 12-ல் உள்ள அதன் கிளை தலைவர் மூலம். - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திரு கே வெங்கடேசன் மற்றும் 3, வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும், எதிர் தரப்பினர்களுக்கு திரு கே. எம். ஆனந்த் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள்முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 12-10-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், எதிர் தரப்பினகளின் பதிலுரை, ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தாம் முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டை ரத்து செய்து சேவை குறைபாடு செய்ததற்கும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 3 லட்சம் தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இதன் மூலம் தாங்கள் தங்குமிடம் முன்பதிவு செய்த வகையில் ஏற்பட்ட இழப்பு ரூ 34 ஆயிரம் எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இன்னும் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
- தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாம் சென்னையிலிருந்து 27-03-2017 ஆம் தேதியில் எதிர் தரப்பினர் இயக்கும் விமானத்தின் மூலம் பாங்காங் செல்வதற்கும் 10-04-2017 ஆம் தேதியன்று அங்கிருந்து சென்னை திரும்புவதற்கு இணையதளம் மூலமாக ரூ 11,147/-செலுத்தி பயணச்சீட்டை முன்பதிவு செய்தேன் என்றும் பாங்காங்கில் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை பணம் செலுத்தி முன்பதிவு செய்து இதர பயண ஏற்பாடுகளை செய்து முடித்து இருந்தேன் என்றும் இந்நிலையில் 25-03-2017 ஆம் தேதியில், அதாவது பயணத்துக்கு இரண்டு நாட்கள் முன்பாக, முன்பதிவு செய்திருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக தமக்கு எதிர் தரப்பினர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது என்றும் இத்தகைய செய்தி சேவை குறைபாடு என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எதிர் தரப்பினர்கள் சார்பில் விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணமாக கோடை காலம் என தெரிவிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் புயல், அதிக மழை போன்ற இயற்கை காரணங்களால் விமான நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது விமானத்தை ரத்து செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றும் அதே நேரத்தில் எதிர் தரப்பில் சொந்த வணிக காரணங்களுக்காக விமானத்தை ரத்து செய்துள்ளனர் என்றும் இத்தகைய சேவை குறைபாட்டால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இத்தகைய சிரமங்களுக்கு எதிர் தரப்பினர்கள் பொறுப்பு என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. எனவே, தாம் முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டை ரத்து செய்து சேவை குறைபாடு செய்ததற்கும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 3 லட்சம் தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இதன் மூலம் தாங்கள் தங்குமிடம் முன்பதிவு செய்த வகையில் ஏற்பட்ட இழப்பு ரூ 34 ஆயிரம் எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இன்னும் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
06. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
07. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல தங்களிடம் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்து இருந்தார் என்றும் அவர் தெரிவித்து உள்ளது போல அவர் முன் பதிவு செய்யப்பட்ட விமானம் இயக்குவது ரத்து செய்யப்பட்டது என்றும் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதிவில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
08. தங்களது விமானம் இயக்குவது திடீரென ரத்து செய்யப்பட்டது என்று முறையீட்டாளர் தெரிவித்துள்ளது தவறானது என்றும் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது கோடை மற்றும் குளிர் காலங்களில், விமான இயக்க அட்டவணை மாற்றப்படுவது வழக்கம் என்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் அலுவலகத்தில் அங்கீகாரம் பெற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வாடிக்கையான ஒன்று என்றும் உயர் அமைப்பான விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் அலுவலகம் தங்களுக்கு பயண அட்டவணையை மாற்றுவதற்கு அளித்த அங்கீகாரத்தின்படி முறையீட்டாளர் முன்பதிவு செய்திருந்த விமான இயக்கம் ரத்து செய்யப்பட்டது என்றும் உடனடியாக அவர் செலுத்திய தொகை அவர் திரும்ப வழங்கப்பட்டது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடு இல்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் எதிர்தரப்பினர்கள் தமது உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
09. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
10. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல எதிர் தரப்பினரிடம் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்து இருந்தார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளது போல அவர் முன் பதிவு செய்யப்பட்ட விமானம் இயக்குவது ரத்து செய்யப்பட்டது என்பதையும் சாட்சியம் மற்றும் சான்று ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டிய கடமை முறையீட்டாளருக்கு உண்டு. ஆனால் அவர் இந்த ஆணையத்தின் முன்பாக சாட்சியம் மற்றும் சான்று ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. ஆனால் இந்த விவரங்களை எதிர் தரப்பினர் தங்களது பதிலுரையில் ஒப்புக் கொண்டுள்ளதால் அவை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
11. தங்களது விமானம் இயக்குவது திடீரென ரத்து செய்யப்பட்டது என்று முறையீட்டாளர் தெரிவித்துள்ளது தவறானது என்றும் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது கோடை மற்றும் குளிர் காலங்களில், விமான இயக்க அட்டவணை மாற்றப்படுவது வழக்கம் என்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் அலுவலகத்தில் அங்கீகாரம் பெற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வாடிக்கையான ஒன்று என்றும் உயர் அமைப்பான விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் அலுவலகம் தங்களுக்கு பயண அட்டவணையை மாற்றுவதற்கு அளித்த அங்கீகாரத்தின்படி முறையீட்டாளர் முன்பதிவு செய்திருந்த விமான இயக்கம் ரத்து செய்யப்பட்டது என்றும் எதிர் தரப்பினருக்கு ஊர் பொது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
12. 01-08-2016 ஆம் தேதியை விமான போக்குவரத்து இயக்ககத்தின் நெறிமுறைகளில் 3.3.4 என்ற பிரிவில் விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மீறி அசாதாரண சூழ்நிலையில் விமானம் ரத்து செய்யப்பட்டால் இழப்பீடு தர வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே ஆவணத்தில் 1.4 & 1.5 என்ற பிரிவுகளில் அசாதாரண சூழ்நிலை என்பது விளக்கப்பட்டிருக்கிறது
.
13. இவற்றில் கோடை மற்றும் குளிர் காலங்களில் விமான இயக்க அட்டவணை போக்குவரத்து தலைமை இயக்குனர் அலுவலகத்தில் அங்கீகாரம் பெற்று மாற்றப்படுவது அசாதாரண சூழ்நிலை என்று குறிப்பிடப்படவில்லை. இந்த அட்டவணை மாற்றமும் எதிர் தரப்பினர்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டு மேற்படி இயக்குனரகம் அங்கீகாரம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு எதிர்தரப்பினர் தங்களது வசதிக்காக விமான அட்டவணை மாற்றத்தை மேற்படி அலுவலகத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்ற நிலையில் முன்பதிவை ரத்து செய்வது என்பது ஏற்புடையதல்ல. இந்நிலையில் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்றும் போதிய இழப்பீட்டை முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டியது அவசியம் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
14. எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என தீர்மானிக்கப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு எதிர்தரப்பினர்கள் தர வேண்டியவர்கள் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. பணத்தின் மூலம் இதனை சரி செய்ய இயலாது என்றும் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய இயலாது என்றாலும் சேவை குறைபாட்டிற்கும் மன உளைச்சல்களுக்கும் ரூ 50,000/- முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் 28-10-2022 தேதி முதல் ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 50,000/- தொகையுடன் முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
15. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை. மேலும் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளருக்கு ஏற்பட்ட சேவை குறைபாட்டிற்கும் மன உளைச்சல்களுக்கும் ரூ 50,000/- முறையீட்டாளர்களுக்கு எதிர் தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும். தவறினால் 28-10-2022 தேதி முதல் ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 50,000/- தொகையுடன் முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர் வழங்க வேண்டும்.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள்அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 28-10-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: இல்லை
எதிர்தரப்பினர் தரப்பு சாட்சி: இல்லை
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.