புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 15-11-2018
உத்தரவு பிறப்பித்த நாள் : 16-12-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண்: 27/2018.
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் காத்தான் குடிக்காடு கிராமத்தில் வசிக்கும் ராமசாமி மகன் வெங்கடாசலம் -முறையீட்டாளர்
1. அரியலூர் மாவட்டம், அரியலூர் நகர், செந்துறை சாலையில் உள்ள Y/A118 பெரம்பலூர் மாவட்ட சத்துணவு அமைப்பாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம், நிர்வாக அலுவலர். செயலாளர்,
2. அரியலூர் மாவட்டம், அரியலூர் நகர், செந்துறை சாலையில் உள்ள Y/A118 பெரம்பலூர் மாவட்ட சத்துணவு அமைப்பாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம், செயலாளர், - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திருவாளர்கள் எஸ். மகேந்திரன் மற்றும் இ. செந்தில், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் எதிர் தரப்பினருக்கு திரு ஏ. கதிரவன் அரசு வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 25-11-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-01, முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள் – 11, எதிர் தரப்பினரின் பதிலுரை, சாட்சியம்-01, சான்றாவணங்கள் – 05, மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, எதிர் தரப்பினர்கள் செய்த குறைபாட்டால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ 2 லட்சம் இழப்பீடாக எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தாம் எதிர்த் தரப்பினர்கள் வசம் செலுத்தியுள்ள நிரந்தர வைப்புத் தொகை ரூ 12,000/-, கடன் பங்குத்தொகை ரூ 10,000/- மற்றும் லாபத் தொகை ஆகியவற்றை கணக்கிட்டு தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாம் எதிர் தரப்பினர்களாக உள்ள சங்கத்தின் உறுப்பினர் என்றும் கடந்த 01-07-2014 ஆம் தேதியில் எதிர் தரப்பினர்கள் சங்கத்தில் ரூ ஒரு லட்சம் கடன் பெற்றேன் என்றும் தாம் பெற்ற கடனுக்கு தாம் 9 சதவீத வட்டி செலுத்த வேண்டும் என்றும் பெற்ற கடன் தொகைக்கு பங்குத் தொகையாக ரூ 10,000/- கடன் பெற்ற நாளில் எதிர் தரப்பினர்கள் சங்கத்தில் செலுத்தி உள்ளேன் என்றும் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து எதிர் தரப்பினர்கள் சங்கத்தில் மாதாந்திர வைப்பு நிதியாக மாதம் ரூபாய் 100/- வீதம் செலுத்தி தமது மொத்த வைப்பு நிதி ரூபாய் 12,000/- எதிர் தரப்பினர்கள் சங்கத்தில் உள்ளது என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. தாம் 31-03-2018 ஆம் தேதியில் பணி ஓய்வு பெற்று விட்டேன் என்றும் கடன் பெற்ற நாளில் இருந்து பணி ஓய்வு பெறும் வரை தமக்கு சம்பளம் வழங்கும் அலுவலகமான அரியலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் மொத்தம் ரூ 1,33,188/- எனது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு எதிர் தரப்பினர்கள் சங்கத்துக்கு செலுத்தப்பட்டுள்ளது என்றும் பணி ஓய்வு பெற்று விட்டதால் தமது மாதாந்திர வைப்புத் தொகை ரூ 12,000/- மற்றும் கடன் பங்குத்தொகை ரூ 10,000/- ஆகியவற்றை தமக்கு வழங்குமாறு எதிர் தரப்பினர்ககளிடம் கேட்டபோது அவர்கள் அதனை வழங்கவில்லை என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. தாம் எதிர் தரப்பினர்கள் சங்கத்தில் தாம் பெற்ற கடனுக்கு செலுத்திய தொகை எவ்வளவு? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டபோது எதிர் தரப்பினர்கள் தரப்பில் தாம் செலுத்திய தொகை ரூ 86,341/- என்று பதில் வழங்கப்பட்டது என்றும் ஆனால் தாம் செலுத்திய தொகை ரூ 1,33.188/- என்றும் இதிலுள்ள வித்தியாசம் ரூ 46,847/- என்றும் மேலும் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தாம் கேட்ட கேள்விகளில் தமக்கு சேரவேண்டிய நிரந்தர வைப்புத் தொகை ரூ 12,000/-, கடன் தொகை ரூ 10,000/- மற்றும் லாப பங்குத்தொகை ஆகியவற்றைப் பற்றி எதிர் தரப்பினர்கள் எந்தவித பதிலையும் தரவில்லை என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
06. எதிர் தரப்பினர்கள் தமது கடன் கணக்கை முடித்து தமக்கு சேரவேண்டிய நிரந்தர வைப்புத் தொகை ரூ 12,000/-, கடன் தொகை ரூ 10,000/- மற்றும் லாப பங்குத்தொகை ஆகியவற்றை தமக்கு அளிக்காமல் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
07. எனவே, எதிர் தரப்பினர்கள் செய்த குறைபாட்டால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ 2 லட்சம் இழப்பீடாக எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தாம் எதிர்த் தரப்பினர்கள் வசம் செலுத்தியுள்ள நிரந்தர வைப்புத் தொகை ரூ 12,000/-, கடன் பங்குத்தொகை ரூ 10,000/- மற்றும் லாபத் தொகை ஆகியவற்றை கணக்கிட்டு தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்குமாறு தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
08. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
09. முறையீட்டாளர் தங்கள் சங்கத்தின் உறுப்பினர் என்றும் அவர் 01-07-2014 ஆம் தேதியில் தங்களிடம் ரூ ஒரு லட்சம் கடன் பெற்றது உண்மை என்றும் அவருக்கு வழங்கிய கடனுக்கு 14 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டது என்றும் ஏனெனில் தாங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 12.5 சதவீத வட்டிக்கு பணம் பெற்று அதனை உறுப்பினர்களுக்கு 14% வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறோம் என்றும் ஆனால் தாம் பெற்ற கடனுக்கு தாம் 9 சதவீத வட்டி செலுத்த வேண்டும் என்று முறையீட்டாளர் புகாரில் கூறி உள்ளது தவறு என்றும் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
10. முறையீட்டாளர் பணி ஓய்வு பெற்ற நாள் வரை அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு அரியலூர் ஊராட்சி மன்றத்தின் மூலமாக தங்களுக்கு செலுத்தப்பட்ட தொகை ரூ 1,25,406/- மட்டும் என்றும் கடன் வழங்கப்படும் போது கடன் தொகையில் 10 சதவீதத்தை பிடித்து கடன் பெறுவோரின் பெயரில் இருப்பு வைக்க வேண்டும் என்பது விதியாகும் என்ற அடிப்படையில் முறையீட்டாளருக்கு கடன் வழங்கப்பட்டபோது ரூ 10,000/- பிடித்தம் செய்யப்பட்டு அவரது பெயரில் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் அவர் சங்கத்தின் மாதாந்திர வைப்பு நிதியாக ரூ 100/- செலுத்தி வந்ததில் அவரது இறுதி நிலுவை வைப்புத் தொகை ரூ 10,700/- மட்டும் என்றும் புகாரில் கூறியுள்ளது போல ரூ 12,000/- அல்ல என்றும் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
11. முறையீட்டாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்ட கேள்விகளுக்கு தங்கள் தரப்பில் போதுமான பதில் வழங்கப்பட்டுள்ளது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கடன் தொடர்புடைய விவரங்களை கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தின்படிதான் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் முறையீட்டாளர் அளித்த வழக்கறிஞர் அறிவிப்புக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் இன்னும் பிற தகவல்களை தெரிவித்தும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
12. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
13. முறையீட்டாளர் தங்கள் சங்கத்தின் உறுப்பினர் என்றும் அவர் 01-07-2014 ஆம் தேதியில் தங்களிடம் ரூ ஒரு லட்சம் கடன் பெற்றது உண்மை என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் ஒப்புக் கொண்டுள்ளதால் முறையீட்டாளர் அவர்களின் நுகர்வோர் ஆவார்.
14. புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கடன் தொடர்புடைய விவரங்களை கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தின்படிதான் விசாரிக்கப்பட வேண்டும் என்று எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள். வழக்கின் சங்கதிகள் குறித்த கேள்விகளை (questions of facts) முடிவு செய்வதற்கு முன்பாக மேற்படி சட்டம் தொடர்பான கேள்விக்கு (question of law) தீர்வு காண்பது அவசியமாகியுள்ளது.
“Section 4(1) of Consumer of Protection Act, 1986 states that “Save as otherwise expressly provided by the Central Government, by notification, this Act shall apply all goods and services”. Hence, this Complaint is maintainable”.
15. முறையீட்டாளர் தமது புகாரில் “எதிர்மனுதாரர் பல பொய்யான காரணங்களை கூறி தகவல்கள் கொடுத்த நாள் முதலும் ஒவ்வொரு நாட்களும் வழக்கிடை காரணம் (cause of action) உற்பத்தியாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார். வழக்கிடை காரணங்கள் வேறு எதனையும் அவர் வழக்கிடை காரணங்கள் என்ற பகுதியில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 11 சான்றாவணங்களில் இரண்டு சான்றாவணங்கள் தகவல் அறியும் உரிமை சட்டப்படி முறையீட்டாளர் செய்த விண்ணப்பங்கள் ஆகும். மூன்று சான்றாவணங்கள் எதிர் தரப்பினர்கள் தரப்பில் வழங்கப்பட்ட பதில்கள் ஆகும். இவ்வாறு எதிர் தரப்பினர்கள் வழங்கிய தகவல்கள் தவறானவை என்று முறையீட்டாளர் கருதினால் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள மாநில தகவல் ஆணையத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு முறையீட்டாளரின் பரிகாரத்தை பெறுவதற்கு சட்டப்படி ஒரு அமைப்பு அமைக்கப்பட்டு செயல்படும் நிலையில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டு விட்டது என்பது சேவை குறைபாடு என்று கூறி இந்த ஆணையத்தை அணுக இயலாது. இதனால் முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள இந்த புகாருக்கான வழக்கு மூலம் ஏற்புடையதல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
16. தாம் பெற்ற கடனுக்கு தாம் 9 சதவீத வட்டி செலுத்த வேண்டும் என்று முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை நிரூபிக்க கடன் ஒப்பந்தம் போன்ற எந்த ஒரு ஆவணத்தையும் அவர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள முதலாவது சான்றாவணம் மத்திய கூட்டுறவு வங்கி எதிர் தரப்பினர்களுக்கு வழங்கியுள்ள கடன் அனுமதி உத்தரவு ஆகும். இதில் எதிர் தரப்பினர்களுக்கு 12 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்று தாங்கள் தங்களது உறுப்பினர்களுக்கு 14 சதவீத வட்டியில் கடன் வழங்குகிறோம் என்று எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்திருப்பது ஏற்புடையதாக உள்ளது. இதனால் தமக்கு 9 சதவீத வட்டி செலுத்துமாறு கடன் வழங்கப்பட்டது என்று முறையீட்டாளர் கூறுவது ஏற்புடையதல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
17. முறையீட்டாளர் பணி ஓய்வு பெற்ற நாள் வரை அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக தங்களுக்கு செலுத்தப்பட்ட தொகை ரூ 1,25,406/- மட்டும் என்றும் சங்கத்தின் மாதாந்திர வைப்பு நிதியாக ரூ 100/- செலுத்தி வந்ததில் முறையீட்டாளரது இறுதி நிலுவை வைப்புத் தொகை ரூ 10,700/- மட்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் கூறுவதை நிரூபிக்க அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சான்று ஆவணங்கள் போதுமானவையாக உள்ளன. முறையீட்டாளருக்கு கடன் வழங்கப்பட்டபோது ரூ 10,000/- பிடித்தம் செய்யப்பட்டு அவரது பெயரில் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது எதிர் தரப்பினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 31-03-2018 ஆம் தேதியில் முறையீட்டாளர் தங்களிடம் பெற்ற கடனுக்காக செலுத்த வேண்டிய தொகை ரூ 13,659/- என்று எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள ஐந்தாம் சான்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையீட்டாளரது இறுதி நிலுவை வைப்புத் தொகை ரூ 10,700/-, கடன் வழங்கப்பட்டபோது பிடித்தம் செய்த தொகை ரூ 10,000/- மற்றும் லாப தொகை ஆகியவற்றை முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் மேற்படி நாளில் தர வேண்டியுள்ளது. முறையீட்டாளருக்கு எதிர்த் தரப்பினர்கள் தர வேண்டிய மேற்படி தொகையை கணக்கிட்டு அதில் இருந்து ரூ 13,659/- கடன் நிலுவை தொகையை பிடித்தம் செய்து கொண்டு மீதி தொகையை அவருக்கு மேற்படி நாளில் வழங்க வேண்டியது எதிர் தரப்பினரின் கடமையாகும் என்றும் ஆனால் இதனைச் செய்ய எதிர் தரப்பினர்கள் தவறிவிட்டார்கள் என்றும் எதிர் தரப்பினர்களின் இத்தகைய செயல்பாடுகள் சேவை குறைபாடு என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. ஆனால் புகாரில் முறையீட்டாளர் வழக்கிடை காரணத்தில் எதிர் தரப்பினர்கள் தவறான தகவல்களை கொடுத்துள்ளார்கள் என்பது மட்டுமே எதிர் தரப்பினர் மீதான குற்றச்சாட்டாக உள்ளது.
எழு வினா எண் – 2
13. வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு முறையீட்டாளரது மாதாந்திர வைப்பு இறுதி நிலுவை வைப்புத் தொகை ரூ 10,700/-, கடன் வழங்கப்பட்டபோது பிடித்தம் செய்த தொகை ரூ 10,000/- மற்றும் லாப தொகை ஆகியவற்றை கணக்கிட்டு அதில் முறையீட்டாளர் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ 13,659/- ஐ பிடித்தம் செய்து கொண்டு மீத தொகையை 31-03-2018 ஆம் தேதியிலிருந்து 6 சதவீத வட்டி சேர்த்து இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
14. எதிர் தரப்பினர்களின் செயல்பாடுகளால் ஏற்பட்ட சிரமங்கள் அனைத்திற்கும் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்க கடமைப்பட்டவர் ஆவார். எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ 20,000/- எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் இந்த தொகைக்கு 16-12-2022 தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 3
15. இதர வேறு பரிகாரங்கள் எதுவும் இந்த வழக்கில் தேவைப்படுகிறது என்று கருதவில்லை. மேலும் வழக்கின் செலவு தொகைகளை அவரவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரது மாதாந்திர வைப்பு இறுதி நிலுவை வைப்புத் தொகை ரூ 10,700/-, கடன் வழங்கப்பட்டபோது பிடித்தம் செய்த தொகை ரூ 10,000/- மற்றும் லாப தொகை ஆகியவற்றை கணக்கிட்டு அதில் முறையீட்டாளர் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ 13,659/- ஐ பிடித்தம் செய்து கொண்டு மீத தொகையை 31-03-2018 ஆம் தேதியிலிருந்து 6 சதவீத வட்டி சேர்த்து இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும்
02. எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ 20,000/- எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் இந்த தொகைக்கு 16-12-2022 தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை. மேலும் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 16-12-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
உறுப்பினர் – I உறுப்பினர்-II. தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 26-03-2018 | பணி ஓய்வு ஆணை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | - | கடன் தொகை பிடித்தம் செய்யப்பட்டதற்கான ஆணை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 17-04-2018 | தகவல் அறியும் விண்ணப்பம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 16-05-2018 | எதிர் தரப்பினர்கள் கொடுத்த பதில் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 0506-2018 | தகவல் அறியும் விண்ணப்பம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 20-07-2018 | கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கொடுத்த பதில் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 18-07-2018 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 30-08-2018 | எதிர் தரப்பினர்கள் பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | 28-09-2018 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 01-10-2018 | ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.11 | 26-10-2018 | எதிர் தரப்பினர்கள் பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | 23-06-2014 | கடன் அனுமதி உத்தரவு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | - | சிக்கன சேமிப்பு பதிவேடு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.3 | | பிரவேச புத்தகம்- | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.4 | 15-09-2022 | கடன் தொகை செலுத்திய கணக்கு அறிக்கை | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.5 | - | கடன் பேரேடு | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு வெங்கடாசலம்
எதிர்தரப்பினர்கள் சாட்சி: திரு சங்கர்
உறுப்பினர் – I உறுப்பினர்-II. தலைவர்.