புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 13-01-2021
உத்தரவு பிறப்பித்த நாள் : 18-11-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண்: 04/2021.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், சோழன் குடிக்காடு, வட மேற்கு தெருவில் வசிக்கும் சதாசிவம் மகன் சரவணன் -முறையீட்டாளர்
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், அசவீரன் குடிக்காட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, அசவீரன் குடிக்காடு கிளை, கிளை மேலாளர் - எதிர் தரப்பினர்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்காக அவரது பிரதிநிதி திரு ஏ. சிங்காரவேலு முன்னிலையாகியும், எதிர்தரப்பினருக்காக திரு எஸ். சங்கர், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 11-11-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் புகார், முறையீட்டாளர் தரப்பில் சாட்சியம்-1, அவரது 09 ஆவணங்கள் (குறியீடு செய்யப்படவில்லை), எதிர் தரப்பினரின் பதில் உரை, வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 2019, பிரிவு 35-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து எதிர்தரப்பினர் தமது கடன் கணக்கை ஆறுமாத தவணைகளாக அல்லது ஆண்டு தவணையாக மறு நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் தாம் வங்கியில் கடன் பெறுவதற்கு முன்பு வைப்பீடு செய்த தொகை ரூ 4,50,000/-த்தை கடன் வழங்கிய நாளில் தமது கடன் கணக்கில் கழிக்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு ரூ 2 லட்சம் இழப்பீட்டை எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இவ்வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாம் எதிர் தரப்பினரை டிராக்டர் வாங்குவதற்கு கடன் வழங்குமாறு கேட்டு அணுகினேன் என்றும் ரூ 4,50,000/-த்தை வங்கியில் வைப்பீடு செய்தால் டிராக்டர் கடன் வழங்கப்பட்ட பின்பு மேற்படி தொகை தரப்படும் என்று எதிர்த் தரப்பினர் தெரிவித்தார் என்றும் இதனால் தாம் மேற்படி தொகையை எதிர்தரப்பினர் வங்கியில் வைப்பீடு செய்தேன் என்றும் கடந்த 16-08-2017 ஆம் தேதியில் தமக்கு ட்ராக்டர் வாங்குவதற்கு ரூ. 9,10,000/- கடனை எதிர்தரப்பினர் வழங்கினார் என்றும் இந்த தொகையை 60 தவணைகளில் செலுத்துமாறு தமக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் தாம் மாதாந்திர தவணை தொகை செலுத்தும் வகையில் கடன் கோரவில்லை என்றும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தவணைத் தொகை செலுத்தும் வகையில் கடன் கேட்டு இருந்தேன் என்றும் ஆனால் அதற்கு முரணாக எதிர்தரப்பினர் மாதாந்திர தவணைத் தொகை செலுத்தும் வகையில் கடன் வழங்கினார் என்றும் இவ்வாறு கடன் வழங்கப்பட்டு டிராக்டர் வாங்கிய பின்னர் தாம் வைப்பீடு செய்த மேற்படி தொகையை திருப்பித் தரவில்லை என்றும் எவ்வித வட்டியும் இல்லாமல் எதிர் தரப்பினர் வங்கியிலேயே தமது பணம் இருந்தது என்றும் கடன் பெற்று 27 மாதங்கள் கழித்து தமது டிராக்டரை எதிர் தரப்பினர் கையகப்படுத்திக் கொண்டு தாம் வைப்பீடு செய்த மேற்படி தொகையை கணக்கில் கழித்து விட்டார் என்றும் எதிர்த் தரப்பினர் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் நீதிநெறிகளை காற்றில் பறக்கவிட்டு சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் தமக்கு பெருத்த சிரமமும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது என்றும் இது குறித்து அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் தனது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
04. எனவே, தமது கடன் கணக்கை ஆறுமாத தவணைகளாக அல்லது ஆண்டு தவணையாக மறு நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் தாம் வங்கியில் கடன் பெறுவதற்கு முன்பு வைப்பீடு செய்த தொகை ரூ 4,50,000/-த்தை கடன் வழங்கிய நாளில் தமது கடன் கணக்கில் கழிக்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு ரூ 2 லட்சம் இழப்பீட்டை எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இவ்வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
05. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர்தரப்பினர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.
06. முறையீட்டாளர் அடமானம் இல்லாத தக்கால் திட்டத்தின் கீழ் டிராக்டர் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார் என்றும் அவரது விண்ணப்பம் தங்களது தரப்பில் விதிகளை பின்பற்றி பரிசீலிக்கப்பட்டது என்றும் தக்கால் கடன் திட்ட விதிகள் விதிமுறைகளின்படி வழங்கப்படும் கடன் தொகையில் 50 சதவீதத்தை கடன் பெறுபவர் வங்கியில் வைப்பீடு செய்ய வேண்டும் என்றும் அந்த வைப்பீடு பிணையத் தொகையாக இருக்குமென்றும் இதனை ஒப்புக் கொண்டு முறையீட்டாளர் ரூ 4,50,000/-த்தை தங்களது வங்கியில் வைப்பீடு செய்தார் என்றும் இதன் பின்னர் அவருக்கு தாங்கள் ரூ. 9,10,000/- கடன் வழங்கி அதன்மூலம் டிராக்டர் ஒன்றை அவர் வாங்கினார் என்றும் கடன் வழங்குவதற்கு முன்பே அவர் மாதாந்திரத் தவணை தொகையாக கடனை திருப்பிச் செலுத்தும் அட்டவணை அவருக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் முறையாக தவணை தொகையை செலுத்தாததால் அவர் கணக்கு வராக்கடன் என முடிவு செய்யப்பட்டது என்றும் பின்னர் முறையீட்டாளர் தமது மேற்படி வைப்பீட்டை கடன் கணக்கிற்கு மாற்றி கொள்ள சம்மதம் கடிதம் கொடுத்த அடிப்படையில் அந்த வைப்பு தொகை கடன் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளப்பட்டது என்றும் வங்கியின் விதிமுறைகளின்படி வட்டி கணக்கிடப்பட்டது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித விதிமுறைகளும் விதி மீறல்களும் இல்லை என்றும் இந்நிலையில் தங்கள் மீது கூறியுள்ள புகார் உண்மை அல்ல என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடு ஏற்படவில்லை என்றும் இத்தகைய காரணங்களால் முறையீட்டாளர் புகார் ஏற்புடையது அல்ல என்றும் தங்களுக்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பல சங்கதிகளையும் எதிர் தரப்பினர் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்.
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
08. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ள சங்கதிகளின் உண்மை தன்மையை அறியவும் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரங்கள் அவருக்கு வழங்கப்பட வேண்டுமா? என்பதை ஆய்வு செய்யவும் முறையீட்டாளருக்கும் எதிர் தரப்பினருக்கும் ஏற்பட்ட கடன் ஒப்பந்தத்தில் நகல் மிக அவசியமான ஒன்றாகும். ஆனால் மேற்படி கடன் ஒப்பந்தத்தின் நகலை முறையீட்டாளர் இந்த ஆணையத்தின் முன்பாக சமர்ப்பிக்கவில்லை. இந்த நகல் தமக்கு வழங்கப்படவில்லை என்று எந்த குற்றச்சாட்டையும் புகாரில் முறையீட்டாளர் முன்வைக்கவில்லை. இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சுமார் 22 மாதங்கள் கடந்த நிலையிலும் கடன் ஒப்பந்த நகலை எதிர் தரப்பினர் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை விண்ணப்பம் எதனையும் முறையீட்டாளர் சமர்ப்பிக்கவில்லை.
09. முறையீட்டாளருக்கு வழங்கப்பட்ட கடன் அரசு மானியம் தரும் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது அல்ல என்பதும் தக்கால் என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவருகிறது. இந்நிலையில் கடன் வழங்குவர் தாம் வழங்கும் கடனை பெறுபவர் மாதாந்திரத் தவணை தொகையை திருப்பித் தர வேண்டுமா அல்லது காலாண்டு அல்லது அரையாண்டு அல்லது ஆண்டு தவணைகளாக திருப்பித் தர வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டுமே தவிர கடன் கேட்பவர் அதனை நிர்ணயம் செய்ய இயலாது என்று இந்த ஆணையம் கருதுகிறது.
10. கடன் வழங்கப்பட்டு டிராக்டர் வாங்கப்பட்டு அதனை முறையீட்டாளர் உபயோகப்படுத்தி வந்த பின்னர் சரி வர கடன் திருப்பி செலுத்தபடாததால் எதிர் தரப்பினர் வராக்கடன் ஆக முடிவு செய்து டிராக்டரை கையகப்படுத்திய பின்னர் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக இந்த வழக்கில் சொல்லப்பட்டுள்ள கோரிக்கைகள் எதனையும் எதிர் தரப்பினரிடம் முறையீட்டாளர் கேட்டார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் முறையீட்டாளர் தரப்பில் இங்கு சமர்ப்பிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் எதிர் தரப்பினருக்கு அவர் ஒரு கடிதம் எழுதியதாக கூட எந்த ஆதாரமும் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கப்படவில்லை. இத்தகைய நிலையில் முறையீட்டாளரின் கணக்கு வரா கடனாக முடிவு செய்யப்பட்டு டிராக்டர் கையகப்படுத்தப்பட்ட பின்னர் உருவான சிந்தனைகளாகதான் (after thought) அவரது கோரிக்கைகள் உள்ளன என்று இந்த ஆணையம் கருதுகிறது.
11. மேற்கண்ட 8, 9 & 10 ஆம் பத்திகளில் விவரிக்கப்பட்டுள்ள காரணங்களினாலும் முறையீட்டாளர் தமது புகாரை தக்க சாட்சியம் மற்றும் சான்று ஆவணங்கள் மூலம் நிரூபிக்காத காரணத்தாலும் அவரது புகார் ஏற்புடையதல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 2 & 3
12. முதல் எழு வினாவை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 18-11-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியல் (குறியீடு செய்யப்படவில்லை)
S.No | Date | Description | Note |
01 | - | வங்கி கணக்கு புத்தகம் | ஜெராக்ஸ் |
02 | 17-11-2020 | வங்கி கணக்கு அறிக்கை | ஜெராக்ஸ் |
03 | 27-11-2020 | முறையீட்டாளர் தரப்பு அறிவிப்பு | ஜெராக்ஸ் |
04 | 01-12-2020 | அஞ்சல் ஒப்புதல் அட்டை | ஜெராக்ஸ் |
05 | 03-04-2021 | முறையீட்டாளர் பிராந்திய மேலாளருக்கு எழுதிய கடிதம் | ஜெராக்ஸ் |
06 | 14-06-2021 | முறையீட்டாளர் தரப்பு கடிதம் | ஜெராக்ஸ் |
07 | 10-08-2021 | வங்கி அறிவிப்பு | ஜெராக்ஸ் |
08 | 19-08-2021 | முறையீட்டாளர் வங்கி மேலாளருக்கு எழுதிய கடிதம் | ஜெராக்ஸ் |
09 | 29-09-2021 | முறையீட்டாளர் வங்கி Ombudsman -க்கு எழுதிய கடிதம் | ஜெராக்ஸ் |
எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு சரவணன்
எதிர் தரப்பினர் தரப்பு சாட்சி: இல்லை
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.