புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 28-05-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் : 01-08-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 110/2022.
கோயம்புத்தூர்- 641 006, கோயம்புத்தூர் வடக்கு, 2, ஆவாரம்பாளையம், ஜெயசிம்மன் வீதி, இலக்கம் 15 -ல் வசிக்கும் நடராஜ் மகன் என். இராஜேந்திரன் -முறையீட்டாளர்
- எதிர்-
1. சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, பழைய எண் 312, புதிய எண் 453 -ல் நான்காவது தளத்தில் உள்ள பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ், அதன் மேலாளர்
2. கோயம்புத்தூர்-641 018, அவிநாசி சாலை, ஜெயா என்கிளேவ் அருகில் உள்ள. பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ், அதன் மேலாளர் - எதிர் தரப்பினர்கள்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன்படி முறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திரு எம். ஏழுமலை, திருமதி வி. கிருஷ்ண பிரியா, வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு மகேந்திர பன்சாலி, திரு கண்ணன், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 19-06-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், முறையீட்டாளர் சாட்சியம் -01, அவரது சான்றாவணங்கள் -07, எதிர் தரப்பினர்களின் பதில் உரை, சாட்சியம்-01, அவரது சான்றாவணங்கள் -04 மற்றும் இரண்டு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம்
02. தாம் எதிர் தரபினர்கள் நிறுவனத்தில் 18 ஆண்டுகளுக்கான காப்பீட்டு திட்டம் ஒன்றில் 07-10-2011 ஆம் தேதியில் இணைந்தேன் என்றும் தமக்கு 005146379 என்ற பாலிசி எண்ணிட்ட காப்பீட்டு ஆவணம் வழங்கப்பட்டது என்றும் இந்த திட்டப்படி ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் தாம் செலுத்திய தொகை மற்றும் அதற்கு உண்டான போனஸ் வட்டி ஆகியவற்றை தருவதாக எதிர் தரப்பினர்களின் அலுவலர்கள் கூறினார்கள் என்றும் தாம் தொடர்ந்து ஐந்தாண்டுகள் மாதாந்திர பிரிமியம் செலுத்தி வந்த நிலையில் ஐந்தாவது ஆண்டு முடிவடைந்த பின்னர் மேற்கண்டவாறு பணம் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் ஆறாவது ஆண்டும் மாதம் தோறும் தமது வங்கி கணக்கில் இருந்து எதிர் தரப்பினர்கள் பிரிமிய தொகையை பிடித்து வந்தார்கள் என்றும் இது குறித்து கேட்டபோது சரியான பதில் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் இதனால் 26-10-2017 ஆம் தேதியில் வழக்கறிஞர் அறிவிப்பை முதலாம் தரப்பினருக்கு அனுப்பினேன் என்றும் ஆனால் அந்த அறிவிப்பு திரும்ப வந்துவிட்டது என்றும் அதன் நகலை பெற்ற இரண்டாவது தரப்பினருக்கு 21-11-2017 ஆம் தேதியில் பதில் கொடுத்தார் என்றும் தம்மிடம் கூறியவாறு ஐந்தாண்டு தமது காப்பீட்டு பாலிசி நிறைவடைந்தது தமக்கு வழங்க வேண்டிய ரூபாய் 85 ஆயிரத்தை வழங்காமல் எதிர் தரப்பினர்கள் இருந்து வருவது சேவை குறைபாடு என்றும்இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
03. எனவே, தாம் எதிர் தரப்பினரிடம் செலுத்தியுள்ள 07-10-2011 ஆம் தேதி முதல் செலுத்தியுள்ள மொத்த தொகை மற்றும் அதற்குண்டான போனஸ், வட்டி ஆகியவற்றையும் இந்த வழக்கின் செலவு தொகையையும் திரும்ப தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்று தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
04. முறையீட்டாளரின் புகார் உண்மைக்கு புறம்பாகவும் மோசடியாகவும் உள்ளது என்றும் சட்டப்படி நியாயப்படி நிலை நிற்கத்தக்கதல்ல என்றும் முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல ஐந்து ஆண்டுகள் கழித்து அவர் செலுத்திய பணம் மற்றும் அதற்குரிய போனஸ் வட்டி ஆகியவற்றை தரத்தக்க வகையில் அவருக்கு தங்களால் பாலிசி வழங்கப்படவில்லை என்றும் அவருக்கு வழங்கப்பட்ட பாலிசி 18 ஆண்டுகள் கால அளவைக் கொண்டது என்றும் அவர் 18 ஆண்டுகளுக்கு பணம் செலுத்திய பின்னர் இறுதியாக அவரது காப்பீட்டுத் தொகை போனஸ் மற்றும் வட்டி ஆகியவை வழங்கப்படும் என்றும் மூன்றாண்டுகள் தொடர்ந்து பிரிமியம் செலுத்தி வந்தால் அதனை அவர் சரண் செய்து பணமாக விதிகளின்படி எடுத்துக் கொள்ள முடியும் என்றும் இந்நிலையில் ஐந்தாண்டுகளில் பணம் பெறக்கூடிய வகையில் பாலிசியை தாம் எடுத்துள்ளதாக கூறுவது தவறானது என்றும் தங்கள் தரப்பில் பாலிசி அனுப்பப்பட்ட போது அவர் தாக்கல் செய்த முன்மொழிவின் நகலையும் அத்துடன் அனுப்பியுள்ளோம் என்றும் அவர் விருப்பத்துக்கு மாறாக பாலிசி இருந்தால் 15 நாட்களில் அதனை ரத்து செய்ய அவருக்கு உரிமை வழங்கியிருந்தோம் என்றும் ஆனால் அத்தகைய நடவடிக்கைகளை எதுவும் அவர் மேற்கொள்ளவில்லை என்றும் இந்நிலையில் தவறாக இந்த புகாரை தாக்கல் செய்துள்ளார் என்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசி என்பது ஒரு ஒப்பந்தம் என்றும் ஒப்பந்த விதிமுறைகளின்படி தாங்கள் செயல்பட்டு வருவதாகவும் முறையீட்டாளர் கூறும் பரிகாரம் கிடைக்கத்தக்கது அல்ல என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் என்ற பெயரில் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள முகவரியில் தங்கள் அலுவலகம் இல்லை என்றும் அந்த அலுவலகத்தில் ஆம்புட்ஸ்மேன் அமைப்பு செயல்பட்டு வருகிறது என்றும் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்புக்கு முறையான பதில் அறிவிப்பை தாங்கள் முதலாம் எதிர் தரப்பினர் அலுவலகத்தில் இருந்து வழங்கியுள்ளோம் என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் புரியப்படவில்லை என்றும் இதனால் அவரது புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
05. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
06. எதிர் தரப்பினர்களிடம் ஆயுள் காப்பீடு பாலிசியை பிரிமியம் செலுத்தி பெற்றிருந்தார் என்று எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையில் ஒப்புக் கொண்டுள்ளதால் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
07. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள எதிர் தரப்பினர்களால் வழங்கப்பட்ட காப்பீட்டு ஆவணமான முதலாவது சான்றாவனத்தில் மற்றும் எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள இரண்டாவது சான்றாவணமான முறையீட்டாளரின் காப்பீட்டுக்கான முன்மொழிவு படிவத்திலும் முதல் ஐந்தாண்டு பிரிமியம் செலுத்தியவுடன் பிரீமிய தொகை, அதற்குண்டான போனஸ், வட்டி ஆகியவை திரும்ப வழங்கப்படும் வகையில் எந்த உறுதிமொழியும் இல்லை என்பதாலும் ஆயுள் காப்பீடு ஒரு ஒப்பந்தம் என்ற நிலையில் ஒப்பந்தத்தில் இல்லாத ஒன்றை முறையீட்டாளர் கூறுவது சட்டப்படி சரியில்லை என்பதாலும் முறையீட்டாளர் தமது கோரிக்கையை தக்க சாட்சியம் மற்றும் சான்றாவனங்கள் மூலம் நிரூபிக்கவில்லை என இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 2
08. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
09. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து என்னால் திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 01-08-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 07-10-2011 | காப்பீட்டு ஆவணம் | அசல் |
ம.சா.ஆ.2 | 31-10-2017 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | - | அஞ்சல் ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 21-11-2017 | எதிர் தரப்பினரின் பதில் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 26-10-2017 | திரும்பி வந்த அஞ்சல் உறை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | - | ஆதார் அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | - | வங்கி கணக்கு அறிக்கை | ஜெராக்ஸ் |
எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எ.சா.ஆ.1 | 11-08-2017 | பெயர் மாற்றம் குறித்த அறிவிக்கை | அசல் |
எ.சா.ஆ.2 | 04-10-2011 | முன்மொழிவு படிவம் | ஜெராக்ஸ் |
எ.சா.ஆ.3 | - | காப்பீட்டு நிபந்தனைகள் | ஜெராக்ஸ் |
எ.சா.ஆ.4 | - | வங்கிக்கு கொடுத்த உத்தரவு | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சிகள்: திருஎன். இராஜேந்திரன்
எதிர்தரப்பினர்கள் சாட்சி: திரு மோகன்ராஜ் கிளை தலைவர்
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.