புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 16-05-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் : 01-08-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 103/2022.
கோவை, ஆர். எஸ். புரம், பி. எம். சாமி காலனி, மூன்றாவது தெரு இலக்கம் 6/125 -ல் வசிக்கும் சண்முக நாடார் மகன் எஸ் ஜெயராமன் -முறையீட்டாளர் - எதிர்-
கோவை -641 001, சொக்கம்புதூர் சாலை, பொன்னையா ராஜபுரம், கதவு 77/1 -ல் உள்ள வீர் பழமுதிர் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்
- எதிர் தரப்பினர்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன்படி முறையீட்டாளர் எதிர் தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு அவரே முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு பி. கார்த்திகேயன், அரசு வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 05-07-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள்-04, எதிர் தரப்பினர்களின் பதிலுரை, சாட்சியம்-1, மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
02. தாம் கடந்த 19-03-2018 ஆம் தேதியில் எதிர் தரப்பினரின் கடையில் கங்காரு பஞ்சிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை வாங்கினேன் என்றும் அதன் மொத்த தொகை ரூ 225/- என்றும் கங்காரு பஞ்சிங் மெஷின் பாக்கெட்டில் அதிகபட்ச விலை ரூ 68/- என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆனால், எதிர்தரப்பினர் வழங்கிய ரசீதில் அதன் அதிக பட்ச விலை ரூ 120/- என்று தெரிவித்து ரூ 95/- தன்னிடம் பெற்றார்கள் என்றும் இதனால் தமக்கு மன உளைச்சல் ஏற்பட்டு கடந்த 31-03-2018 ஆம் தேதியில் எதிர் தரப்பினருக்கு பதிவு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினேன் என்றும் ஆனால், அதனை பெறாமல் அவர் விட்டு விட்டதால் not claimed என அந்த அஞ்சல் திரும்பி வந்தது என்றும் அதனை பெறாமல் விட்டுவிட்டதும் சேவை குறைபாடு என்றும் பொருளின் அதிகபட்ச விலையை விட கூடுதல் விலையை தன்னிடம் வசூலித்தது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986, பிரிவு 29(r)(1) -ன்படி முறையற்ற வணிக பழக்கமாகும் என்றும் எனவே, எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ 15,000/-, வழக்கு செலவிற்கு ரூ 6,000/- மற்றும் அதிகபட்ச விலையை விட கூடுதலாக பெறப்பட்டுள்ள ரூ 27/- ஐ 12 சதவீத வட்டியுடனும் எதிர் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்று தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
03. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் புகாரில் முறையீட்டாளர் குறிப்பிட்டுள்ள பஞ்சிங் மெஷின் தங்களிடம் வாங்கப்பட்டது அல்ல என்றும் தங்களிடம் வாங்கப்பட்ட பஞ்சிங் மெஷின் அளவில் பெரியது என்றும் அதன் அதிகபட்ச விலை ரூ 120/- என்ற நிலையில் தங்களால் ரூ 95/-க்கு விற்கப்பட்டது என்றும் முறையீட்டாளர் தான் வாங்கிய பெரிய கங்காரு பஞ்சிங் மெஷின் பொருளின் அளவை மறைத்து வேறு ஒரு கடையில் வாங்கிய சிறிய அளவிலான கங்காரு பஞ்சிங் மெஷின் பொருளை காண்பித்து உண்மைக்கு புறம்பான தீய வழியில் பணம் சம்பாதிக்க முயற்சித்து இந்த புகாரை தாக்கல் செய்துள்ளார் என்றும் இதனால் முறையீட்டாளரின் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் எதிர்தரப்பினர்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள் .
04. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர் கூடுதல் விலையை வசூலித்து சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர் கூடுதல் விலையை வசூலித்து சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
05. எதிர்தரப்பினரிடம் புகாரில் சொல்லப்பட்டுள்ள பொருளை வாங்கியுள்ளார் என்பதற்கு ஆதாரமாக அவர்கள் தரப்பு முதலாவது சான்றாவணமான எதிர் தரப்பினர் வழங்கியுள்ள ரசீது உள்ளதால் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. “தங்களிடம் வாங்கப்பட்ட பஞ்சிங் மெஷின் அளவில் பெரியது என்றும் அதன் அதிகபட்ச விலை ரூ 120/- என்ற நிலையில் தங்களால் ரூ 95/-க்கு விற்கப்பட்டது என்றும் முறையீட்டாளர் தான் வாங்கிய பெரிய கங்காரு பஞ்சிங் மெஷின் பொருளின் அளவை மறைத்து வேறு ஒரு கடையில் வாங்கிய சிறிய அளவிலான கங்காரு பஞ்சிங் மெஷின் பொருளைசமர்ப்பித்துள்ளார்” என்று எதிர் தரப்பினர் கூறும் நிலையில் புகாரை நிரூபிக்க வேண்டியது முறையீட்டாளரின் கடமையாகும். எதிர் தரப்பினரின் கடையில் வாங்கப்பட்ட பஞ்சிங் மெஷின் சான்று பொருளாக ஆணையத்தின் முன்பு முறையீட்டாளர் சமர்ப்பித்து அதில் உள்ள குறியீடுகளும் ஆணையத்தில் முறையீட்டாளர் தரப்பில் மூன்றாவது முதலாவது சான்றாவணமான பஞ்சிங் மெஷின் கவர் புகைப்படத்தில் உள்ள குறியீடுகளும் ஒன்று என்று காட்டுவதன் மூலம் முறையீட்டாளர் தமது புகாரை நிரூபித்திருக்கலாம் அல்லது எதிர் தரப்பினரின் கடையில் வாங்கப்பட்ட பஞ்சங் மெஷின் மற்றும் மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள அசல் கவர் ஆகியவற்றை இந்த ஆணையத்தின் முன்பு சான்று பொருளாக சமர்ப்பித்து இரண்டும் ஒன்றுக்கொன்று பொருத்தமானவையாக உள்ளனவா என்பதை அறிவதன் மூலம் முறையீட்டாளர் தமது புகாரை நிரூபித்திருக்கலாம் அல்லது பஞ்சிங் மெஷின் உற்பத்தியாளர் நிறுவனமான கங்காரு நிறுவனத்தில் இருந்து எதிர் தரப்பினரிடம் வாங்கப்பட்ட பஞ்சிங் மிஷினில் உள்ள குறியீட்டுக்கு உரிய அதிகபட்ச விலை என்ன என்பதை கேட்டு பெற்று முறையீட்டாளர் தமது புகாரை நிரூபித்திருக்கலாம். இது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் முறையீட்டாளர் மேற்கொண்டு தமது புகாரை தக்க சாட்சியம் மற்றும் சான்றாவணங்களுடன் நிரூபிக்கவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 2 & 3
05. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 01-08-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
மு.சா.ஆ.1 | 19-03-2018 | எதிர்த் தரப்பினரால் வழங்கப்பட்ட ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.2 | - | அதிகபட்ச விலை ரூ 68 என காட்டும் கங்காரு பஞ்சிங் மெஷின் கவர் புகைப்படம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.3 | 31-03-2018 | எதிர் தரப்பினருக்கு அனுப்பப்பட்ட கடிதம் | அசல் |
மு.சா.ஆ.4 | 12-4-2018 | எதிர் தரப்பினரிடம் இருந்து திரும்பி வந்த அஞ்சல் உறை | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு எஸ் ஜெயராமன், முறையீட்டாளர்
எதிர் தரப்பினர்கள் சாட்சி: திரு எம் அருண் பிரகாஷ்
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.