புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 08-05-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் : 05-09-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 93/2022.
கோயம்புத்தூர், ராமநாதபுரம், ஐந்தாவது தெரு காமராஜர் நகர், இலக்கம் 64 -ல் வசிக்கும் பி. விசாலாட்சி -முறையீட்டாளர் - எதிர்-
1. பெங்களூர், மல்லேஸ்வரம், மூன்றாவது பிரதான சாலை, 15 வது குறுக்கு சாலை, இலக்கம் 47 -ல் உள்ள மூன்றாவது மாடியில் உள்ள M/s. கிரியாஸ் இன்வெஸ்ட்மெண்ட் பிரைவேட் லிமிடெட்,
2. கோயம்புத்தூர், கோபாலபுரம், எல்ஐசி கட்டிடம் அருகில், திருச்சி சாலை, இலக்கம் 1510 ஏ, பி, சி, டி, இ-ல் உள்ள M/s. கிரியாஸ் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட், - எதிர் தரப்பினர்கள்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன்படி முறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திரு எம். கூடலிங்கம், திரு குமார்ஜி, வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு. கே கலைச்செல்வன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 02-08-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், முறையீட்டாளர் சாட்சியம் -01, அவரது சான்றாவணங்கள் -04, எதிர் தரப்பினர்களின் பதிலுரை, சாட்சியம் -01, அவரது சான்றாவணங்கள் -03 மற்றும் இரண்டு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம்
02. தாம் கடந்த 24-10-2017ஆம் தேதி அன்று முதலாம் எதிர்த்தரப்பினரின் கிளை விற்பனை நிலையமான இரண்டாம் எதிர் தரப்பினரிடம் ரூ 42,290.63/- செலுத்தி தொலைக்காட்சி பெட்டி ஒன்றை வாங்கினேன் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினரால் வழங்கப்பட்ட உபயோக கையேடு மற்றும் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி அதனை பயன்படுத்தினேன் என்றும் இருந்த போதும் தொலைக்காட்சி சரிவர வேலை செய்யாததால் கடந்த 21-11-2017 ஆம் தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் புகார் அளித்தேன் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் தொலைக்காட்சி பெட்டி உற்பத்தியாளரின் சேவை பொறியாளரை அனுப்பி வைத்ததில் தொலைக்காட்சி பெட்டியில் ஒரு குறிப்பிட்ட பாகம் (a board) 22-12-2017 ஆம் தேதியில் அவரால் மாற்றித் தரப்பட்டது என்றும் அதன் பின்னரும் தொலைக்காட்சி பெட்டி சரிவர வேலை செய்யாதது குறித்து கடந்த 03-01-2018 ஆம் தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் புகார் அளித்தேன் என்றும் அதன் அடிப்படையில் பார்வையிட்ட சேவை பொறியாளர் தொலைக்காட்சி முழுமையாக செயலிழந்து விட்டது என தெரிவித்தார் என்றும் இதுகுறித்து இரண்டாம் எதிர் தரப்பினரிடம் கேட்டபோது தொலைக்காட்சி பெட்டியை மாற்றி தர இயலாது என கூறிவிட்டார் என்றும் உற்பத்தி குறைபாடான தொலைக்காட்சி பெட்டியை தமக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் விற்பனை செய்துள்ளார் என்றும் விற்பனை செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் எடுத்துக் கொள்ள அல்லது மாற்றி தரவோ முடியாது என ரசீதில் ஏற்கனவே குறிப்பிட்டு இருப்பதாக தமக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் தெரிவித்தார் என்றும் இதுகுறித்து எதிர் தரப்பினர்களுக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் அவர்கள் தொலைக்காட்சி பெட்டியை மாற்றி தரவில்லை என்பதோடு எவ்வித பதிலையும் தரவில்லை என்றும் எதிர் தரப்பினர்களின் இத்தகைய செய்கை சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
03. எனவே, தமக்கு ரூ 48,500/- மதிப்புள்ள சாம்சங் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட தரமான தொலைக்காட்சி பெட்டி ஒன்றை எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 1,00,000/-, மற்றும் இந்த வழக்கின் செலவு தொகையையும் தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் சரியான கருதும் இதர தீர்வுகளையும் வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
04. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
05. முறையீட்டாளரால் தங்களிடம் வாங்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி சாம்சங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும் அவர்கள் நிறுவனத்தின் பொருட்களில் குறைபாடு இருந்தால் நிறுவனத்தின் தொழில் நுட்ப பணியாளர்கள் அதனை சரி செய்து தருகிறார்கள் என்றும் இந்நிலையில் தொலைக்காட்சி பெட்டியை உற்பத்தி செய்த நிறுவனம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையம் ஆகியவற்றை இந்த வழக்கில் தரப்பினராக சேர்க்காமல் முறையீட்டாளர் தங்களை மட்டும் தரப்பினராக சேர்த்து புகார் தாக்கல் செய்திருப்பது தவறான நோக்கம் கொண்டது என்றும் புகாரில் தங்கள் மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் கூறப்படவில்லை என்பதோடு தங்களிடம் எவ்வித பரிகாரங்களும் கேட்கப்படவில்லை என்றும் புகாருக்கு தக்க வழக்கு மூலம் இல்லை என்றும் தங்களிடம் கடந்த 21-11-2017 ஆம் தேதியில் புகார் கொடுத்ததாக சொல்லப்படுவது தவறு என்றும் உண்மையில் கடந்த 21-12-2017 ஆம் தேதியில் முறையீட்டாளர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் சாம்சங் நிறுவன அங்கீகரிக்கப்பட்ட மையத்துக்கு தங்களால் தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த 22-12-2017 ஆம் தேதியில் முறையீட்டாளருக்கு திருப்திகரமாக இருக்கும் வகையில் பிரச்சனை சரி செய்யப்பட்டது என்றும் மீண்டும் முறையீட்டாளர் கடந்த 02-01-2018 ஆம் தேதியில் தங்களிடம் தெரிவித்த புகார் சாம்சங் சேவை மையத்துக்கு தெரிவிக்கப்பட்டு அந்த சேவை மையத்தின் தொழில்நுட்ப பணியாளர் முறையீட்டாளருக்கு சேவை செய்ய சென்ற போது தொலைக்காட்சி பெட்டியை ஆய்வு செய்ய தர மறுத்ததோடு புதிய தொலைக்காட்சி பெட்டி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்றும் அவரால் வாங்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டிக்கு எந்த விதமான guarantee இல்லை என்றும் ஓராண்டு கால warranty மட்டும் உள்ளது என்றும் தங்களால் தொலைக்காட்சி பெட்டியானது நல்ல நிலையில் மூடி முத்திரையிட்ட பெட்டிக்குள் வைத்து உத்திரவாத அட்டை மற்றும் உபயோக கையேடு ஆகியவற்றுடன் வழங்கப்பட்டது என்றும் முறையீட்டாளர் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பிய பின்னர் தொலைபேசியில் சாம்சங் நிறுவன அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தை அணுகுமாறு அவருக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடு ஏற்படவில்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
06. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் நேர்மையற்ற வர்த்தக நடைமுறை, சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர்கள் நேர்மையற்ற வர்த்தக நடைமுறை, சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
06. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளபடி தொலைக்காட்சி பெட்டியை இரண்டாம் எதிர் தரப்பினரிடம் பணம் செலுத்தி வாங்கியதற்கான ரசீது முறையீட்டாளரால் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாலும் முதலாம் எதிர் தரப்பினர் இரண்டாம் எதிர் தரப்பினரின் தலைமை அலுவலகம் என்பதாலும் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
07. முறையீட்டாளர் புகாரில் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டியை இரண்டாம் எதிர் தரப்பினரிடம் பணம் செலுத்தி வாங்கினேன் என்று தெரிவிக்கவில்லை முறையீட்டாளர் தரப்பில் முதலாம் எதிர்த்தரப்பினரால் வழங்கப்பட்ட உபயோகிப்பாளர் கையேடு மற்றும் உத்திரவாத ஆவணத்தை இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை. முறையீட்டாளர் விலைக்கு வாங்கிய தொலைக்காட்சி பெட்டியின் உற்பத்தியாளர் இந்த புகாரில் எதிர் தரப்பினராக சேர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும், ஆனால், அதற்கான நடவடிக்கைகளை எதிர் தரப்பினர்கள் பதிலில் தெரிவித்த பின்னரும் முறையீட்டாளர் மேற்கொள்ளவில்லை. எதிர் தரப்பினர்கள் சாம்சங் நிறுவனத்தின் சேவை மையத்தில் வழங்கப்பட்ட சேவை பதிவேடுகளின் நகல்களை இந்த ஆணையத்தில் சமர்ப்பித்த பின்னரும் குறைந்தபட்சம் சேவை மையத்தை கூட இந்த புகாரில் சேர்க்க முறையீட்டாளர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. முறையீட்டாளர் புகாரில் கூறப்படும் தொலைக்காட்சி பெட்டியை சான்று பொருளாக இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை அல்லது குறைந்தபட்சம் ஒரு தொழில்நுட்ப பணியாளரின் மூலமாக தொலைக்காட்சி பெட்டியின் தற்போதைய நிலை குறித்த கருத்துரை முறையீட்டாளரால் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் முறையீட்டாளரால் தக்க சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் ஆகியவற்றை இந்த ஆணையத்தில் முன்னிலைப்படுத்தி அவரது உற்பத்தி குறைபாடு உள்ள தொலைக்காட்சி பெட்டி தமக்கு விற்பனை செய்யப்பட்டது என்ற புகாரை நிரூபிக்கப்படவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
.
எழு வினா எண் –2
08. இரண்டாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர் நேர்மையற்ற வர்த்தக நடைமுறை, சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
09. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 05-09-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 24-10-2017 | ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 20-01-2018 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 23-01-2018 | இரண்டாம் எதிர் தரப்பினரின் ஒப்புதல் அட்டை | அசல் |
ம.சா.ஆ.4 | 27-01-2018 | முதலாம் எதிர் தரப்பினரின் ஒப்புதல் அட்டை | ஜெராக்ஸ் |
எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எ.சா.ஆ.1 | 24-10-2017 | சாம்சங் நிறுவல் சேவை பதிவேடு | ஜெராக்ஸ் |
எ.சா.ஆ.2 | 21-12-2017 24-10-2017 | சாம்சங் வாடிக்கையாளர் சேவை பதிவேடு | ஜெராக்ஸ் |
எ.சா.ஆ.3 | 02-01-2018 | சாம்சங் வாடிக்கையாளர் சேவை பதிவேடு | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் சாட்சி: திருமதி பி விசாலாட்சி
எதிர் தரப்பினர்கள் சாட்சி: திரு என் சபீர் அலி
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.