C.Manikkam filed a consumer case on 30 Sep 2022 against E.Zone Chennai Express Mall in the Ariyalur Consumer Court. The case no is RBT/CC/52/2022 and the judgment uploaded on 29 Mar 2023.
புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 26-04-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 30-09-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 52/2022.
சென்னை நகர், மேடவாக்கம், ஜல்லடியன்பெட், க்ரீன் கோர்ட் பிரதானசாலை, இலக்கம் G1.4A, ONYX -ல் வசிக்கும் சி. மாணிக்கம், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி.
-முறையீட்டாளர்
1. E Zone (A division of FRL), BB Chennail Express Avenue Mall, Whites Road, Royapettah, Chennai- 600 014, Represented by its Manager.
2. M/S. Eureka Forbes Limited, Fourth Floor, No: 88, Anmol Palani, G.N.Chetty Road, Thiyagaraya Nagar, Chennai – 600 017, Represented by its managing Director
3. M/S. Eureka Forbes Limited, Customer Care, B1/B2, 701, Seventh
Floor, Marathon NexGen, Marathon Innova, Off. Ganpatrao KadamMarg, Lower Parel, Mumbai – 400 013, Represented by Ms. Vinath Heged, Head Customer Care.
- எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்குக்காக M/s. Sampathkumar Associates வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும், முதலாம் எதிர்தரப்பினர் அறிவிப்பை பெற்றுக்கொண்டு ஆணையத்தின் முன்பு தோன்றி எவ்வித பதிலையும் தராததால் அவர் மீது ஒருதலைப்பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்டும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர்களுக்காக திருவாளர்கள் கே சுப்பு ரங்க பாரதி மற்றும் மூவர், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 05-09-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் புகார், முறையீட்டாளர் தரப்பில் சாட்சியம்-1, அவரது 06 சான்றாவணங்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரின் பதில் உரை, அவர்களது சாட்சியம்-1, இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரின் எழுத்து மூலமான வாத உரை, சமர்ப்பிக்கப்பட்ட முன் தீர்ப்பு விவரங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து முதலாம் எதிர் தரப்பினரிடம் தாம் விலைக்குப் பெற்ற குடிநீர் சுத்திகரிப்பான் உபகரணத்தை மாற்றி புதிய உபகரணத்தை வழங்க வேண்டும் அல்லது தாம் செலுத்திய தொகை ரூ 22 ஆயிரத்து 500 வட்டியுடன் தமக்கு எதிர் தரப்பினர்கள் திருப்பித் தரவேண்டும் என்றும் 31 .08 .2015 முதல் தற்போது வரை தாம் குடிநீருக்காக செலவிடும் தொகை மாதமொன்றுக்கு ரூ 1500 தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் புதிய குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கப்படும் வரை அல்லது மேற்கண்டவாறு பணத்தை திருப்பி செலுத்தும் வரை ஒவ்வொரு நாளும் ரூ 50 தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் தமக்கு எதிர் தரப்பினரின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தமக்கு எதிர்த் தரப்பினர்கள் ரூ ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்றும் மற்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாம் தமது வீட்டில் குடிநீர் சுத்திகரிப்பான் உபகரணத்தை அமைக்க திட்டமிட்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர்களால் வினியோகிக்கப்படும் ஒருவகை குடிநீர் சுத்திகரிப்பு உபகரணத்தை முதலாம் எதிர் தரப்பினரிடம் கடந்த 03 -04 2015 அன்று ரூ 22,500 செலுத்தி அப்போது தாம் வசித்து வந்த சென்னை நகர், எழும்பூரில் நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் அதனை பொருத்தி பயன்படுத்தியதாகவும் பின்னர் 13 -10 -2015 அன்று வீடு மாறி சென்று அங்கு அதனை பொருத்துவதற்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு தெரிவித்து அவர்கள் தரப்பில் பிரதிநிதி வந்து அதனை பொருத்தி வழங்கினார் என்றும் அப்போது இந்த உபகரணத்தின் சில பகுதியில் வேலை செய்யவில்லை என்றும் இதனை அறிந்த மேற்படி பிரதிநிதி உத்தரவாத காலம் உள்ளதால் தாம் தமது அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்புவதாக கூறி ஒரு சீட்டு ஒன்றை தமக்கு அளித்து விட்டு சென்றார் என்றும் ஆனால் எதிர் தரப்பினர் எவ்வித நடவடிக்கையும் குறைபாட்டை சரிசெய்ய எடுக்கவில்லை என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. இதன் பின்பு பலமுறை இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரை தொடர்பு கொண்டும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் இறுதியாக 28 -03 -2016 அன்று மூன்றாம் எதிர் தரப்பினருக்கு கடிதம் அனுப்பியும் அதனை பெற்றுக்கொண்ட பின்னரும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எதிர் தரப்பினரின் இத்தகைய செய்கைகள் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஒவ்வொரு நாளும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதால் மிகுந்த செலவு ஏற்படுவதாகவும் இத்தகைய சிரமங்களுக்கு எதிர்தரப்பினர் பொறுப்பு என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
03. எனவே, முதலாம் எதிர் தரப்பினரிடம் தாம் விலைக்குப் பெற்ற குடிநீர் சுத்திகரிப்பான் உபகரணத்தை மாற்றி புதிய உபகரணத்தை வழங்க வேண்டும் அல்லது தாம் செலுத்திய தொகை ரூ 22 ஆயிரத்து 500 வட்டியுடன் தமக்கு எதிர் தரப்பினர்கள் திருப்பித் தரவேண்டும் என்றும் 31 .08 .2015 முதல் தற்போது வரை தாம் குடிநீருக்காக செலவிடும் தொகை மாதமொன்றுக்கு ரூ 1500 தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் புதிய குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கப்படும் வரை அல்லது மேற்கண்டவாறு பணத்தை திருப்பி செலுத்தும் வரை ஒவ்வொரு நாளும் ரூ 50 தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் தமக்கு எதிர் தரப்பினரின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தமக்கு எதிர்த் தரப்பினர்கள் ரூ ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்றும் மற்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள்தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
04. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகார் நிலைநிற்க தக்கதல்ல என்றும் பல சங்கதிகளை மறைத்து இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
05. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல என்றும் அவற்றை தங்கள் தரப்பில் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தற்போது முறையீட்டாளர் வசிக்கும் பகுதியில் மாசு நிறைந்த தண்ணீர் செல்வதால் உபகரணத்தில் குறைபாடு ஏற்படுகிறது என்றும் வழங்கப்பட்ட உபகரணம் எவ்வித குறைபாடும் உடையது அல்ல என்றும் விற்பனை செய்யும் போது வழங்கப்பட்ட உத்தரவாத நிபந்தனைகளில் மாசு நிறைந்த தண்ணீர் உபகரணத்க்கு உபயோகப்படுத்தினால் பிரச்சனைகள் ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது என்றும் இத்தகைய காரணங்களால் முறையீட்டாளர் புகார் ஏற்புடையது அல்ல என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடு. நியாயமற்ற வர்த்தக நடைமுறையும் இல்லை என்றும் தங்களுக்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பல சங்கதிகளையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
06. தீர்மானிக்க வேண்டிய பிரச்சனைகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு, நியாயமற்ற வர்த்தக நடைமுறை புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு, நியாயமற்ற வர்த்தக நடைமுறை புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
பிரச்சனை எண் – 1
07. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளபடி இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர்களால் வினியோகிக்கப்படும் ஒருவகை குடிநீர் சுத்திகரிப்பு உபகரணத்தை முதலாம் எதிர் தரப்பினரிடம் கடந்த 03 -04 -2015 அன்று ரூ 22,500 செலுத்தி விலைக்கு வாங்கினார் என்பது எதிர் தரப்பினரால் ஒப்புக் கொள்ளப்படும் நிலையில் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
08. முறையீட்டாளர் விலைக்கு வாங்கிய குடிநீர் சுத்திகரிப்பான் விலைக்கு விற்கப்பட்ட போது குறைபாடு உடையதாக இருந்தது என்ற வாதத்தை இங்கு முறையீட்டாளர் முன்வைக்கவில்லை. இந்நிலையில் உபகரணத்தின் உற்பத்தியாளரை எதிர் தரப்பினராக சேர்க்க வேண்டும் என்று இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரின் வாதம் ஏற்புடையதல்ல. முதலாம் எதிர் தரப்பினரை பொறுத்தவரையில் அவர் ஒரு விற்பனையாளர் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட மேற்படி கருவிக்கு முழுமையாக உத்திரவாத காலத்திலும் அதற்கு பின்னரும் சேவை செய்யும் நிறுவனம் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர் மட்டுமே என்பதால் முதலாம் எதிர்த் தரப்பினர் வழக்கில் உள்ள பிரச்சனையில் எவ்வித பொறுப்பும் இல்லை என்று இந்த ஆணையம் கருதுகிறது.
09. விலைக்கு வாங்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பான் கருவியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது உத்திரவாத காலத்தில் என்பது இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதி ஆகும். இந்நிலையில் உத்தரவாத நிபந்தனைகளுக்கு உட்பட்டு சேவை வழங்கப்பட்டதா என்பதே முக்கியமான கேள்வியாகும். வாங்கிய உபகரணத்தின் தமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து முறையீட்டாளர் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர்களை தொடர்பு கொண்டுள்ளார் என்பது முறையீட்டாளர் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியாக, மூத்த குடிமகனாக இருக்கும் முறையீட்டாளர் கடிதத்திற்கு பதிலை கூட எதிர்தரப்பினர்கள் தரவில்லை என்பது அவர்களது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. அவரது பிரச்சனைகளை சரிசெய்ய இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்த் தரப்பினர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எதனையும் இந்த ஆணையத்தின் முன்பாக சமர்ப்பிக்கவில்லை. மேலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. இத்தகைய சங்கதிகளையும் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியம் மற்றும் சான்றாவணங்களையும் பார்க்கும்போது புகாரில் கூறியுள்ளபடி சேவை குறைபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் புகாரில் கூறியுள்ளபடி சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
பிரச்சனை எண் – 2
21. இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் புகாரில் கூறியுள்ளபடி சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு அவர் விலைக்குப் பெற்ற குடிநீர் சுத்திகரிப்பான் உபகரணத்தை மாற்றி புதிய உபகரணத்தை வழங்க வேண்டும் அல்லது அவர் செலுத்திய தொகை ரூ 22,500/- ஐ 13-10-2015 ஆம் தேதியிலிருந்து ஆண்டொன்றுக்கு நூற்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு திருப்பித் தரவேண்டும் என்றும் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
22. இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் புகாரில் கூறியுள்ளபடி சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில் இந்த சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு மன உளைச்சல் மற்றும் சிரமங்கள் ஏற்படுவது என்பதை மறுக்க இயலாது. இதனை பணத்தால் சரி செய்ய இயலாது என்றாலும் கூட இதற்கான இழப்பீட்டை வழங்குவது அவசியமாகும். இதனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர்களின் சேவை குறைபாட்டிற்கும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு முறையீட்டாளருக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் ரூ 50,000/- இழப்பீடு (கோரியுள்ள இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் நான்காம் பரிகாரங்களுக்கு) வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
பிரச்சனை எண் – 3
23. இதர வேறு பரிகாரங்கள் எதுவும் இந்த வழக்கில் தேவைப்படுகிறது என்று கருதவில்லை. மேலும் வழக்கின் செலவு தொகைகளை அவரவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளருக்கு அவர் விலைக்குப் பெற்ற குடிநீர் சுத்திகரிப்பான் உபகரணத்தை மாற்றி புதிய உபகரணத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் அல்லது அவர் செலுத்திய தொகை ரூ 22,500/- ஐ 13-10-2015 ஆம் தேதியிலிருந்து ஆண்டொன்றுக்கு நூற்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.
.
02. இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர்களின் சேவை குறைபாட்டிற்கும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு (கோரியுள்ள இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் நான்காம் பரிகாரங்களுக்கு) முறையீட்டாளருக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் ரூ 50,000/- இழப்பீடு வழங்க வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை. மேலும் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 30-09-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 03-04-2015 | குடிநீர் சுத்திகரிப்பான் உபகரணம் வாங்கிய ரசீது மற்றும் வாரண்டி கார்ட், அமைக்கப்பட்டதற்கான சான்று | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 13-10-2015 | முருகன் என்பவர் பார்வையிட்டு கொடுத்த சீட்டு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 15-03-2016 | இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரின் குறுஞ்செய்தி | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 16-03-2016 | இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரின் மற்றுமொரு குறுஞ்செய்தி | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 28-03-2016 | மூன்றாம் எதிர் தரப்பினருக்கு முறையீட்டாளர் அனுப்பிய கடிதம் மற்றும் அதற்கான ஒப்புதல் அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 28-03-2016 | சேவை கோரி கொடுத்த வேண்டுகோள் விவரம் | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி:
திரு சி. மாணிக்கம்
இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர் தரப்பு சாட்சி:
திரு மணிகண்டன்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes
Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.