புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 16-02-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் 05-09-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 43/2022.
கோயம்புத்தூர், எஸ் ஆர் கே வி, அஞ்சல், பெரியநாயக்கன்பாளையம், செட்டியார் தெரு, இலக்கம் 15/18 -ல் வசிக்கும் ஹரி பிரசாத் மனைவி கே கவிதா -முறையீட்டாளர்
- எதிர்-
1. கோயம்புத்தூர், ஜோதிபுரம் அஞ்சல், சாமி செட்டி பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி கிளினிக் மருத்துவர் வி தமிழ்ச்செல்வி,
2. கோயம்புத்தூர், ஜோதிபுரம், உதகமண்டலம் பிரதான சாலையில் இலக்கம் 604, கே-1-ல் உள்ள டி ஜே ஹாஸ்பிட்டல் மருத்துவர் டாக்டர் ஜெயவர்த்தனன் - எதிர் தரப்பினர்கள்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன்படி முறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திருவாளர்கள் பி. ரமேஷ்பாபு, எஸ். முருகானந்தம், பி. வினோத் மற்றும் என். கார்த்திகேயனி, வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு ஆர். மனோகர், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 22-08-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், முறையீட்டாளர் சாட்சியம் -01, அவரது சான்றாவணங்கள் -06, முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின் தனித்தனியான பதில் உரைகள், முதலாம் எதிர் தரப்பினரின் சாட்சியம் அவரது சான்றாவணங்கள் -03, இரண்டாம் எதிர் தரப்பினரின் சாட்சியம் மற்றும் இரண்டு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம்
02. கடந்த 2016 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக கருவுற்ற போது முதலாம் எதிர் தரப்பினரிடம் சிகிச்சைக்காக சென்றேன் என்றும் அப்போது அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்ட பின்னர் தாம் நல்ல நிலையில் சுகப்பிரசவத்திற்கு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்ததோடு இரண்டாம் எதிர் தரப்பினர் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர வேண்டும் என தெரிவித்தார் என்றும் இதன்படி கடந்த 30-05-2017 ஆம் தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினர் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டேன் என்றும் எனக்கு பிரசவ வலி வராத போதும் எதிர் தரப்பினர்களின் வற்புறுத்தலின் பேரில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதித்தேன் என்றும் இதனால் கடந்த 31-05-2017 ஆம் தேதியில் பெண் குழந்தை பிறந்தது என்றும் பிரசவம் முடிந்து நான்கு மணி நேரம் வரை மயக்கம் விலகாத நிலையில் தான் வைக்கப்பட்டிருந்தேன் என்றும் தமக்கு சுயநினைவு வந்தவுடன் வயிற்றில் மிகுந்த வலி இருந்ததையும் காய்ச்சல் இருந்ததையும் உணர முடிந்தது என்றும் இது குறித்து எதிர் தரப்பினரிடம் தெரிவித்த போது அறுவை சிகிச்சை செய்ததற்கு தையல் போட்டதால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக வலி இருக்கும் - காய்ச்சல் சாதாரணமான ஒன்றுதான் என எனக்கு தெரிவித்தனர் என்றும் இதன் பின்னர் ஆம் 05-06-2017 தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினர் மருத்துவமனையில் இருந்து சிறுநீர் பையுடன் மிகுந்த வலி இருந்த நிலையில் விடுவிப்பு செய்யப்பட்டேன் என்றும் எனக்கு வலி குறையாததால் எதிர் தரப்பினர்களை அணுகி கேட்டபோது கோயம்புத்தூர், சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் உள்ள பெரியசாமி என்ற மருத்துவரிடம் அனுப்புவதாகவும் அங்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறும் வேறு மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் மருத்துவமனை விடுவிப்பு தொகுப்புரை வழங்க மாட்டோம் என தெரிவித்தனர் என்றும் தமக்கு வலி தாங்க முடியாத அளவுக்கு இருந்த காரணத்தால் எதிர் தரப்பினர்களின் வார்த்தையை நம்பி கடந்த 12-06-2017 ஆம் தேதியில் அபிராமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு தமக்கு சிறுநீர் குழாய் வழியாக சிறுநீரகத்துக்கு நுண்ணிய புகைப்பட கருவியை அனுப்பி உட்புற அமைப்பை கண்டறியும் (crcstoscopy) என்ற பரிசோதனை செய்யப்பட்டது என்றும் மறுநாள் காலையில் சிறுநீர் வெளியேறாமல் மிகவும் சிரமம் ஏற்பட்டும் மருத்துவர் வந்து பார்க்கவில்லை என்றும் இது குறித்து அங்கு வேலை செய்பவர்களிடம் கேட்டபோது பெரியசாமி மருத்துவர் வெளியூர் சென்று இருப்பதாகவும் எப்போது வருவார் என தங்களுக்கு தெரியாது என தெரிவித்து விட்டனர் என்றும் இதனால் அபிராமி மருத்துவமனையில் இருந்து சிறுநீர்ப்பைவுடன் கடந்த 14-06-2017 ஆம் தேதியில் விடுவிப்பு செய்யப்பட்டு கோவை ஆர் எஸ் புறத்தில் உள்ள வேதநாயகம் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்ந்தேன் என்றும் அங்கே சிகிச்சை பெற்ற போதுதான் தமது இடது சிறுநீரகம் வேலை செய்யவில்லை என்பதும் சிறுநீரக குழாயிலும் காயம் ஏற்பட்டுள்ளது என்பதும் அதனை மறைத்து அறுவை சிகிச்சைக்காக தையல் செய்ததால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தம்மை சிறுநீர் பையோடு விடுவிப்பு செய்துள்ளனர் என்பதும் தமக்கு தெரிய வந்தது மருத்துவ அவர்களால் வழங்கப்பட்ட மருத்துவர் விடுவிப்பு தொகுப்புரையில் எனது சிறுநீர்ப்பை சாதாரண நிலையில் உள்ளது என்றும் அதில் சிறிது நசுக்கம் மட்டுமே உள்ளது என்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தாம் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளனர் என்றும் முதலாம் எதிர் தரப்பினர் அவரது வெளி நோயாளிகளை கவனிப்பதில் முனைப்பு காட்டி கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால் தமக்கு சிறுநீர் பையில் காயம் ஏற்பட்டது என்றும் இதனை மறைக்கவே அவசரகதியில் தம்மை மருத்துவமனையில் இருந்து விடுவித்தார்கள் என்றும் சிறுநீரக சிகிச்சைக்கு அபிராமி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்கள் என்றும் அவ்வாறு செல்லவில்லை என்றால் மருத்துவமனை விடுவிப்பு தொகுப்புரை வழங்க மாட்டேன் என்று தெரிவித்தார்கள் என்றும் இவ்வாறு எதிர் தரப்பினர்கள் கவனக்குறைவான சிகிச்சை வழங்கியதால் தமக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டதோடு தொடர்ந்து அறுவை சிகிச்சைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் வேதநாயகம் மருத்துவமனையில் தமக்கு 28-06-2017 ஆம் தேதியில் சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டு பின்னர் 05-07-2017 ஆம் தேதியில் “left boari flap reconstruction along with left percutaneous neprostomy tupe removal” சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு 27-07-2017 ஆம் தேதி வரை தமக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் எதிர் தரப்பினரின் கவனக்குறைவான சிகிச்சையால் தமக்கு தொடர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலையும் மனவேதனையும் ஏற்பட்டது என்றும் ரெண்டாம் எதிர் தரப்பினர் காயத்தின் தன்மை தெரிந்தும் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அவரால் வழங்கப்பட்ட மருத்துவமனை விடுவிப்பு தொகுப்புரையிலும் சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால்தான் முன்பு போல உடல் நிலை இல்லாமல் சிரமப்படுகிறேன் என்றும் கடந்த 08-10-2018 ஆம் தேதியில் எதிர் தரப்பினர்களுக்கு வழக்கறிஞர் அறிவிப்பை அனுப்பினேன் என்றும் அதைப் பெற்றுக் கொண்ட எதிர் தரப்பினர்கள் 15-11-2017 ஆம் தேதியில் உண்மைக்கு புறம்பான பதிலை வழங்கினார்கள் என்றும் எதிர் தரப்பினர்கள் அலட்சியமாக சிகிச்சை செய்து சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் இதனால் தனக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, தம்மால் மருத்துவ சிகிச்சைக்கு செய்யப்பட்ட செலவு தொகை ரூபாய் மூன்று லட்சத்தையும் எதிர் தரப்பினர்களின் கவனக்குறைவான நடவடிக்கையால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் இதர சிரமங்களுக்கு ரூபாய் 10 லட்சத்தையும் இவ்வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 20 ஆயிரத்தையும் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் சங்கதிகளுக்கு ஏற்ப தேவையான இதர தீர்வுகளையும் வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
05. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் முதலாம் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார் .
06. முதலாம் எதிர் தரப்பினராகிய தாமும் இரண்டாம் எதிர் தரப்பினரும் மருத்துவர்கள் என்றும் முறையே ஸ்ரீ சக்தி மற்றும் டிஜே ஹாஸ்பிடல் ஆகியவற்றை கோயம்புத்தூரில் ஜோதிபுரத்தில் நடத்தி வருவது உண்மை என்றும் கடந்த 30-05-2017 ஆம் தேதியில் முறையீட்டாளர் இரண்டாம் எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் பிரசவ பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அதற்கு மறுநாள் அவருக்கு பிரசவ வலி தூண்டப்பட்ட போது கர்ப்பப்பையில் இருந்து குழந்தை இயற்கையாக பிறப்பதற்கு மிகுந்த சிரமமான சூழ்நிலை காணப்பட்டது என்றும் இது குறித்து முறையீட்டாளரின் உதவியாளர்களிடம் விளக்கப்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவதற்கான சம்மதம் பெறப்பட்டது என்றும் அறுவை சிகிச்சையின் போது குழந்தையின் தலை நிலை சிரமமானதாக இருந்ததால் குழந்தையை பிரசவம் செய்வதற்கு சிரமம் ஏற்பட்டது என்றும் இதனால் கர்ப்பப்பையை சற்று விரிவாக்கம் செய்த போது ரத்தப்போக்கு ஏற்பட்டது என்றும் உடனடியாக முறையீட்டாளரின் உதவியாளர்களிடம் தையல் போடுவது அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது என்றும் இதய செயல்பாடு சிறுநீரக குழாய்க்கு அருகாமையில் இருப்பதால் சிறுநீரக காயம் உடனடியாகவோ அல்லது அறுவை சிகிச்சை செய்த பின்பு அல்லது பிற்காலத்திலோ ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சிறுநீரக மருத்துவ நடவடிக்கைகள் மூலம் சரி செய்யப்பட வேண்டும் என்று எடுத்துச் சொல்லப்பட்டு சம்மதம் பெறப்பட்டது என்றும் வேதநாயகம் மருத்துவமனையில் வழங்கப்பட்ட மருத்துவமனை விடுப்பு தொகுப்புரையிலும் சரியான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் முறையீட்டாளருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது வேறு நோயாளிகளை கவனிப்பதற்கே முதலாம் எதிர் தரப்பினர் முனைப்பு காட்டினார் என்று கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என்றும் தம்மால் வழங்கப்பட்ட மருத்துவமனை விடுவிப்பு தொகுப்புரையில் சிறுநீரக குழாய் நல்ல நிலையில் உள்ளது- சிறிய அளவிலான நெரிசல் உள்ளது - நல்ல உடல் நிலையுடன் முறையீட்டாளர் விடுவிக்கப்பட்டார் என என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனையில் இருந்து அவசர கதியில் முறையீட்டாளர் விடுவிக்கப்பட்டார் என கூறப்படுவது தவறானது என்றும் அபிராமி மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக்காக சிகிச்சை பெற வேண்டும் என தங்களால் வற்புறுத்தப்பட்டது என்பது தவறானது என்றும் அறுவை சிகிச்சை முடிவடைந்த உடன் முறையீட்டாளருக்கு சுயநினைவு திரும்பி விட்டது என்றும் பின்னர் அவர் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார் என்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்திய பார்வையில் சில நேரம் வைக்கப்பட்டிருந்தார் என்றும் சிறுநீர் குழாயில் சற்று நெரிசல் இருப்பதால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பது உதவியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் மருத்துவ மனை விடுவிப்பு தொகுப்புரையிலும் இந்த விவரம் தங்களால் குறிப்பிடப்பட்டது என்றும் அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் தமக்கு அடிவயிற்றில் வலி இருப்பதாகவும் காய்ச்சல் இருப்பதாகவும் முறையீட்டாளர் தெரிவிக்கவில்லை என்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் யு எஸ் ஜி பரிசோதனை அடிவயிற்றில் செய்யப்பட்டபோது அவர் நல்ல நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது என்றும் முறையீட்டாளர் நல்ல நிலையில் சிறுநீரகப் பையுடன் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்றும் இவ்வாறு விடுவிக்கப்பட்ட பின்னர் ஒரு வாரம் கழித்து முறையீட்டாளர் மருத்துவ ஆய்வு செய்வதற்காக தங்களது மருத்துவமனைக்கு வந்த போதும் அடிவயிற்றில் வலி அல்லது காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கவில்லை என்றும் அப்போது நல்ல சிறுநீரக மருத்துவ நிபுணரின் கருத்துரையை பெற்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து இருப்பதாக தெரிவித்ததால் தங்களால் அபிராமி மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் பெரியசாமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது என்றும் அங்கு அவர் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்றார் என்றும் தம்மால் முறையீட்டாளருக்கு கவனக்குறைவாக சிகிச்சை வழங்கப்பட்டது என்றும் சிறுநீரக பையில் காயம் உள்ளதை இரண்டாம் எதிர் தரப்பினர் தெரிந்து கொண்டு அதனை தெரிவிக்காமல் தக்க சிகிச்சையும் வழங்கவில்லை என்றும் புகாரில் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல என்றும் தம்மால் முறையீட்டாளருக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்பட்டது என்றும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யும்போது சிறுநீரக பாதையில் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ நூல்களும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன என்றும் சிறுநீர்ப்பையில் காயம் ஏற்பட்டதாக வேதநாயகம் மருத்துவமனையில் வழங்கப்பட்ட மருத்துவமனை விடுவிப்பு தொகுப்புரையிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் இந்நிலையில் தங்கள் தரப்பில் கவனக்குறைவான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது சேவை குறைபாடு ஏற்பட்டது என்பதும் சரியானது அல்ல என்றும் முறையீட்டாளர் புகாரில் கூறுவது போல எவ்வித மருத்துவ அலட்சியமான சிகிச்சையும் தங்கள் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் முதலாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
இரண்டாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
07. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் சங்கதிகளை மறைத்து கற்பனை சங்கதிகளுடன்தீய வழியில் லாபம் அடைவதற்காக இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார் .
08. எந்த ஒரு மருத்துவராலும் இயற்கையான முறையில் பிரசவம் நடக்கும் என்ற வாக்குறுதியை அளிக்க இயலாது என்றும் 30-05-2017 ஆம் தேதியில் முறையீட்டாளர் தங்களது எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் பிரசவ பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வரை சிறப்பு கவனம் செலுத்தப்பட்ட போதிலும் போதுமான பிரசவ வலி ஏற்படாததால் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவம் செய்வது அவசியம் என முறையீட்டாளரின் கணவருக்கும் உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு சம்மதம் பெறப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிரசவம் செய்யப்பட்டது என்றும் அறுவை சிகிச்சை முடிந்த உடன் முறையீட்டாளர் சுய நினைவுடன் இருந்தார் என்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பார்வையில் கவனிக்கபட்ட போது முறையீட்டாளர் நல்ல நிலைமையில் இருந்தார் என்றும் enedma காரணமாக கர்ப்பப்பையில் கீரல் உள்ளது என்று முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கும் அவரது உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளார் என்றும் முறையீட்டாளர் கூறுவது போல அவருக்கு வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுவது அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்பட்டது என்பது உண்மைக்கு புறம்பானது என்றும் முறையீட்டாளரின் உடல் நலனுக்காக செயற்கை வடிகுழாயுடன் கூடிய சிறுநீரகப்பையுடன் அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டார் என்றும் சிறுநீரக மருத்துவ சிகிச்சைக்கு முறையீட்டாளரின் மருத்துவ காப்பீடு இணைந்த மருத்துவமனை ஒன்றை கேட்டதால் தங்களது தரப்பில் அபிராமி மருத்துவமனை பரிந்துரை செய்யப்பட்டது என்றும் அபிராமி மருத்துவமனையில் மருத்துவ அறிவுறுத்தலுக்கு மாறாக முறையீட்டாளர் மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு பெற்றுள்ளார் என்றும் தங்களது மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது முறையீட்டாளர் நல்ல உடல் நிலையுடன் இருந்தார் என்றும்அபிராமி மருத்துவமனை மற்றும் வேதநாயகம் மருத்துவமனையில் வழங்கப்பட்ட மருத்துவமனை விடுவிப்பு தொகுப்புரைகளில் குழந்தை பிரசவத்தின் போது செய்த அறுவை சிகிச்சையின் காரணமாக சிறுநீரகத்தில் காயம் ஏற்பட்டதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் வேதநாயகம் மருத்துவமனையில் வழங்கப்பட்ட மருத்துவமனை விடுவிப்பு தொகுப்புரையில் தங்கள் தரப்பில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை கவனக்குறைவாக செய்யப்பட்டது அல்லது தவறாக ஆய்வு செய்யப்பட்டது அல்லது தவறான சிகிச்சை வழங்கப்பட்டது என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் சிறுநீரகத்தில் அல்லது சிறுநீரகக் குழாயில் உடனடியாகவோ அல்லது பின்னரோ காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று நல்ல எண்ணத்தின் அடிப்படையில் முறையீட்டாளருக்கு தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்றும் தங்கள் தரப்பில் வழங்கப்பட்ட மருத்துவமனை விடுவிப்பு தொகுப்புரையில் எந்த சங்கதிகளையும் மறைக்கவில்லை என்றும் தங்கள் தரப்பில் தரமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டது என்றும் தங்களுக்கு மிகுந்த அறிவும் அனுபவமும் இந்த சிகிச்சைகளில் உள்ளது என்றும் தமது தரப்பில் தொழில் தர்மத்தை பின்பற்றி நோயாளிகளுக்கு பணியாற்றி வரப்படுகிறது என்றும் நோயாளிகள் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் கிடையாது என்றும் தங்கள் தரப்பில் அலட்சியமான மருத்துவ சிகிச்சையை செய்து சேவை குறைபாடு எதுவும் புரியவில்லை என்றும் தவறான நோக்கத்துடன் முறையீட்டாளர் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் இரண்டாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
09. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? எதிர் தரப்பினர்கள் அலட்சியமான மருத்துவ சிகிச்சையை வழங்கி சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர் தரப்பினர்கள் அலட்சியமான மருத்துவ சிகிச்சையை வழங்கி சேவை குறைபாடு புரிந்து உள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
10. முறையீட்டாளர் இரண்டாம் எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலாம் எதிர் தரப்பினரால் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்பது எதிர் தாப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986 பிரிவு 2(1) d-ன்படியும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019, பிரிவு 2(7)-ன்படியும் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
12. புகாரில் கூறியுள்ளது போல கடந்த 30-05-2017 ஆம் தேதியில் முறையீட்டாளர் இரண்டாம் எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் பிரசவ பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இரண்டாம் எதிர் தரப்பினரால் 31-05-2017 ஆம் தேதியில் முறையீட்டாளருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது என்பது இரண்டு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதிகள் ஆகும். தாங்கள் முறையீட்டாளரை மருத்துவமனையில் இருந்து விடுவித்து அனுப்பிய போது அவரது உடல் நலனுக்காக செயற்கை வடி குழாயுடன் கூடிய சிறுநீரகப் பையுடன் (catheter) அனுப்பினோம் என்றும் இதனை தங்களது மருத்துவமனை விடுவிப்பு தொகுப்புரையில் தெரிவித்துள்ளோம் என்றும் எதிர் தரப்பினர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள் இந்த அறுவை சிகிச்சையின் போது முதலாம் எதிர் தரப்பினர் கவனக்குறைவாக சிகிச்சை செய்ததன் விளைவாக முறையீட்டாளருக்கு சிறுநீரக மற்றும் சிறுநீர் குழாய்களில் காயம் (bladder and ureteric injury) போன்றவை எதுவும் ஏற்பட்டு அவருக்கு பிரச்சனை ஏற்பட்டதா? என்பதுதான் ஆய்வு செய்யப்பட வேண்டிய வினாவாக உள்ளது.
13. மேற்கண்ட அறுவை சிகிச்சை முடிந்தது முதலே (31-05-2017) முறையீட்டாளருக்கு காய்ச்சலும் அடிவயிற்றில் அதிக வலியும் இருந்ததாக முறையீட்டாளர் கூறும் நிலையில் மேற்கண்ட அறுவை சிகிச்சைக்கு 14 நாட்கள் கழித்து வேதநாயகம் மருத்துவமனையில் உள் நோயாளியாக முறையீட்டாளர் சேர்க்கப்பட்ட போது “தமக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சலும் வலியும் உள்ளதாக” முறையீட்டாளர் தெரிவித்ததாக முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்றாவது சான்றாவணமான வேதநாயகம் மருத்துவமனையின் விடுவிப்பு தொகுப்புரை தெரிவிக்கிறது. புகாரில் கூறியுள்ளது போல மேற்கண்ட அறுவை சிகிச்சை முடிந்தது முதலே (31-05-2017) முறையீட்டாளருக்கு காய்ச்சலும் அடிவயிற்றில் அதிக வலியும் இருந்ததாக கூறப்படுவதற்கு எவ்வித சாட்சியமும் சான்றாவணங்களும் முறையீட்டாளர் தரப்பில் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கப்படவில்லை. சிறுநீர் குழாயில் சற்று நெரிசல் இருப்பதால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பது உதவியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் மருத்துவ மனை விடுவிப்பு தொகுப்புரையிலும் இந்த விவரம் தங்களால் குறிப்பிடப்பட்டது என்றும் எதிர் தரபினர்கள் பதிலில் தெரிவித்துள்ளார்கள். குழந்தை பிரசவத்துக்காக எதிர் தரப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் நடைமுறைகளில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக முறையீட்டாளருக்கு சிறுநீரகத்திலும் சிறுநீரக குழாயிலும் பிரச்சனை ஏற்பட்டதால் அதனை சரி செய்ய தங்களால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று வேதநாயகம் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மருத்துவமனை விடுவிப்பு தொகுப்புரையில் குறிப்பிடப்படவில்லை. இந்த ஆவணத்தில் முறையீட்டாளருக்கு சிறுநீரகத்திலும் சிறுநீரக குழாயிலும் காயம் இருக்கும் என்று சந்தேகப்படுவதாக குறிப்பிடப்பட்டு அதன் பின்னர் தக்க ஆய்வுகள் மேற்கொண்டதாகவும் இறுதியில் பி. சி. என் (PCN) என்ற வகையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் மறுநாள் முறையீட்டாளருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை வடிகாலுடன் கூடிய சிறுநீரகப்பை அகற்றப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (Percutaneous nephrostomy (PCN) is a medical procedure used to treat patients with blockages of the urinary system. The objective of this procedure is to temporarily drain the urine by inserting a nephrostomy catheter through skin into the renal pelvis. Percutaneous nephrostomy (PCN) is a medical procedure that involves the placement of a small, flexible rubber tube or catheter through the skin into the kidney to drain the urine while using imaging as a guidance). எவ்வாறு இருப்பினும் வேதநாயகம் மருத்துவமனையில் முறையீட்டாளருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு எதிர் தரப்பினர்கள் கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததுதான் காரணம் என்று முறையீட்டாளர் தரப்பில் தக்க மருத்துவச் சாட்சியம் அல்லது கருத்து உரை எதனையும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் முறையீட்டாளர் தரப்பில் புகாரில் கூறியுள்ள சங்கதிகளை நிரூபித்து எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்பது தக்க சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் மூலமாக நிரூபிக்கப்படவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் –2
14. இரண்டாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
15. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 05-09-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 05-06-2017 | இரண்டாம் எதிர் தரப்பினர் வழங்கிய விடுவிப்பு தொகுப்புரை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 13-06-2017 | அபிராமி மருத்துவமனை வழங்கிய விடுவிப்பு தொகுப்புரை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 14-07-2017 | வேதநாயகம் மருத்துவமனை வழங்கிய விடுவிப்பு தொகுப்புரை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 08-10-2017 | எதிர் தரப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 15-11-2017 | எதிர் தரப்பினர்கள் கொடுத்த பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 15-11-2017 | மருத்துவ செலவு பட்டியல் மற்றும் ரசீதுகள் 13 | அசல் |
முதலாம் எதிர் தரப்பினர் சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எ.சா.ஆ.1 | 05-06-2017 | இரண்டாம் எதிர் தரப்பினர் வழங்கிய விடுவிப்பு தொகுப்புரை | உண்மை நகல் |
எ.சா.ஆ.2 | 31-05-2017 | சிகிச்சைக்காக முறையீட்டாளர் வழங்கிய சம்மத கடிதம் | உண்மை நகல் |
எ.சா.ஆ.3 | - | சிகிச்சை குறிப்புகளின் ஆவணம் | உண்மை நகல் |
இரண்டாம் எதிர் தரப்பினர் சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திருமதி கவிதா, முறையீட்டாளர்
முதலாம் எதிர் தரப்பினர் சாட்சி: மருத்துவர் திருமதி தமிழ்ச்செல்வி
இரண்டாம் எதிர் தரப்பினர் சாட்சி: மருத்துவர் திரு பி ஜெயவர்த்தனன்
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.