புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 07-03-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 25-11-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 47/2022.
சென்னை, ஆலந்தூர், பெயபாளையத்தான் தெரு, இலக்கம் 8 -ல் வசிக்கும் லோகநாதன் மகன் சம்பத்குமார் -முறையீட்டாளர்
சென்னை, மயிலாப்பூ,ர் வடக்கு மாட வீதி, இலக்கம் 60 -ல் உள்ள ஸ்ரீ பாலாஜி கேன்சர் கிளினிக்கில் உள்ள புற்றுநோயியல் நிபுணர்-மருத்துவர் எஸ். சிவகுமார் - எதிர் தரப்பினர்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்காக திருவாளர்கள் கே. பி. ஸ்ரீதர் மற்றும் இரு வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும், எதிர்தரப்பினருக்காக திருவாளர்கள் டாக்டர் பி சேரன் மற்றும் திரு எம் நாகரத்தினம். வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 11-11-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் புகார், முறையீட்டாளர் தரப்பில் சாட்சியம்-1, அவரது 19 சான்றாவணங்கள், எதிர் தரப்பினரின் பதில் உரை, அவரது சாட்சியம்-1, அவரது 17 சான்றாவணம், சமர்ப்பிக்கப்பட்ட முன் தீர்ப்பு நகல்கள், வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து தாம் எதிர் தரப்பினரிடம் சிகிச்சைக்காக செலுத்திய ரூ 72,000/- ஐ எதிர்தரப்பினர் தமக்கு திருப்பி தரவேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் கவனக்குறைவான சிகிச்சையால் ஏற்பட்ட தமது மனைவியின் இறப்பிற்கு இழப்பீடாக ரூ 15.00,000/- ஐ எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் தமக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு ரூ 4,00,000/- ஐ எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவுத் தொகையை எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. கடந்த 16-08-2014 ஆம் தேதியன்று தமது மனைவி திருமதி எஸ் தேவி அவர்களுக்கு அடிவயிற்றில் தீவிரமான வலி ஏற்பட்டு ஆலந்தூரில் உள்ள ராஜேந்திரன் நர்சிங் ஹோம்க்கு மருத்துவர் ராதா ராஜேந்திரன் அவர்களிடம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்தபோது அவரது கர்ப்பப்பையில் நீர்க்கட்டி (cyst in ovary) இருந்தது தெரியவந்தது என்றும் இதனால் அறுவைச் சிகிச்சை மூலம் அவரது கர்ப்பப்பை கடந்த 22-08-2014 ஆம் தேதி அன்று நீக்கப்பட்டதை என்றும் 23-08-2014 ஆம் தேதியன்று மேற்படி நீர்க்கட்டிபரிசோதனைக்காக (மனித உடலில் இருக்கும் திசுக்களைப் பரிசோதித்தல் – biopsy) ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது என்றும் 09-09-2014 ஆம் தேதி அன்று கிடைக்கப்பெற்ற ஆய்வு அறிக்கையின்படி மேற்படி நீர்கட்டி யில் புற்றுநோய் வளர்ச்சி (cancerous growth) இருந்ததாக தெரிவிக்கப்பட்டது என்றும் மேற்படி மருத்துவர் ராதா ராஜேந்திரன் தனது மனைவியை புற்றுநோய் நிபுணரிடம் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியதால் தாம் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று தமது மருத்துவமனையை பரிசோதித்த போது அங்கும் அவருக்கு புற்றுநோய் உள்ளது என்று உறுதி செய்யப்பட்டது என்றும் தமது மனைவியை மருத்துவர் ஞானசேகரன் அவர்களிடம் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர் என்றும் அந்த மருத்துவர் எதிர்தரப்பினரான மருத்துவர் சிவக்குமாரை பரிந்துரைத்தார் என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. தாம் கடந்த 09-10-2014 ஆம் தேதியில் தனது மனைவியை எதிர் தரப்பினரிடம் அழைத்துச் சென்றபோது அவர் மருத்துவ பரிசோதனைகள் செய்தார் என்றும் தமது மனைவிக்கு 10-10-2014-ஆம் தேதியில் ஹீமோதெரபி (chemotherapy: the treatment of disease by the use of chemical substances, especially the treatment of cancer by cytotoxic and other drugs) சிகிச்சை முதலாவதாக வழங்கப்பட்டது என்றும் சீரான இடைவெளியில் இச்சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு இறுதியாக 28-01-2015 ஆம் தேதியில் தேதியில் தனது மனைவிக்கு ஹீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது என்றும் ஹீமோதெரபி முறையிலான சிகிச்சை சிகிச்சையை தமது மனைவி எதிர் தரப்பினரிடம் ஆறுமுறை மேற்கொண்டுள்ளார் என்றும் இதன் பின்னர் தமது மனைவி சீரான இடைவெளிகளில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு வந்து உடல்நலம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என எதிர் தரப்பினர் அறிவுறுத்தினார் என்றும் கடந்த 26-02-2015 ஆம் தேதி அன்று தமது மனைவியை பரிசோதனைக்காக அழைத்து வருமாறு தெரிவித்தார் என்றும் மேற்படி நாளில் எதிர் தரப்பினரை சந்திக்கச் சென்றபோது எதிர் தரப்பினர் இல்லாத காரணத்தால் 07-04-2015 ஆம் தேதி அன்று தமது மனைவி எதிர் தரப்பினரை மருத்துவ ஆலோசனைக்காக சந்தித்தார் என்றும் அப்போது தனது மனைவிக்கு தொடர்ந்து எடை இழப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் மற்ற சிரமங்களையும் தெரிவித்தபோது அவர் Antoxy1Fort capsule என்ற மருந்தை பரிந்துரைத்தார் என்றும் புற்றுநோய் காரணமாக இத்தகைய சிரமங்கள் ஏற்படுவதாகும் இந்த மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் குணமாகிவிடும் என்று தெரிவித்தார் என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. கடந்த 02-01-2016 ஆம் தேதியில் தனது மனைவிக்கு கடுமையான காய்ச்சலும் அடிவயிற்றில் கடுமையான எரிவது போன்ற உணர்வும் ஏற்பட்டதால் எதிர் தரப்பினரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது அவர் சாதாரணமாக காய்ச்சலுக்கான சிகிச்சையை வழங்கி ஐந்து நாட்களுக்கு Zanocin என்ற வலி நீக்கும் மாத்திரையை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார் என்றும் இதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து தமது மனைவிக்கு அடி வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட்டதன் காரணமாக அவரை மருத்துவர் நாராயண வர்மா அவர்களிடம் அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது பிரச்சினையின் தீவிரத் தன்மையை அறிந்து தனது மனைவிக்கு அவர் மருத்துவ பரிசோதனைகள் செய்தார் என்றும் பின்னர் தனது மனைவி மருத்துவ சிகிச்சையால் கட்டுப்படுத்த முடியாத அளவிலான புற்றுநோயின் இறுதி நிலைக்கு நிலையில் (Stage IV) உள்ளார் என தெரிவித்தார் என்றும் எதிர்த் தரப்பினர் ஹீமோதெரபி சிகிச்சை முடிவடைந்த பின்னர் தமது மனைவி முழுமையாக குணம் அடைந்து விட்டதாக தெரிவித்த நிலையில் மேற்கண்ட மருத்துவரின் கருத்துரை தமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
06. தமது மனைவிக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டவுடன் தாம் அவரை எதிர் தரப்பினரிடம் அழைத்துச் சென்று புற்றுநோயின் ஆரம்ப நிலை முதல் அவர் சிகிச்சை அளித்து வந்தார் என்றும் வேறு எந்த மருத்துவரிடமும் தனது மனைவியை இரண்டாவது மருத்துவ ஆலோசனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றும் எதிர்தரப்பினர் அறிவுறுத்திய பரிசோதனைகளை செய்து கொண்டதாகவும் அவரது சிகிச்சைகளை மேற்கொண்டதாகவும் அவர் வழங்கிய மருந்துகளை உட்கொண்டதாகவும் தமது மனைவிக்கு எதிர்தரப்பினர் கவனக்குறைவாக சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்றும் அவரது ஹீமோதெரபி சிகிச்சைக்குப் பின்னர் கடுமையான காய்ச்சலும் அடிவயிற்றில் கடுமையான வலியும் ஏற்பட்டு அவரை சந்தித்தபோது சாதாரண காய்ச்சலுக்கான மருந்தையும் வலி நீக்கும் மாத்திரையையும் அவர் அளித்துள்ளார் என்றும் அந்த சமயத்தில் அவர் சரியாக பரிசோதித்து தேவையான சிகிச்சை வழங்கவில்லை என்பது அவரது கவனக் குறைவை காட்டுகிறது என்றும் மேற்கண்ட காய்ச்சல் ஏற்பட்டது என்பது புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அறிகுறி அல்ல என்று எதிர்த் தரப்பினர் கூற இயலாது என்றும் எதிர் தரப்பினரின் கவனக்குறைவான சிகிச்சையின் காரணமாக தமது மனைவி கடந்த 23-03-2016 ஆம் தேதி அன்று புற்றுநோயின் இறுதி நிலையை அடைந்ததன் காரணமாக இறந்து விட்டார் என்றும் தமது மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை அளிக்குமாறு 26-05-2016 ஆம் தேதியில் எதிர் தரப்பினருக்கு தாம் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியதாகவும் ஆனால் எதிர் தரப்பினர் 11-06-2016 ஆம் தேதியில் ஒரு பதில் அறிவிப்பு அனுப்பினார் என்றும் 18-08-2016 ஆம் தேதியிலும் தாம் மீண்டும் ஒரு வழக்கறிஞர் அறிவிப்பு வழங்கினேன் என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
07. தமது மனைவி 47 வயதில் இறந்துவிட்டார் என்றும் சரியான முறையில் சிகிச்சை வழங்கி இருந்தால் இன்னும் இருபது ஆண்டுகள் உயிர் வாழ்ந்து இருப்பார் என்றும் அவரது இறப்பிற்குப் பின்னர் தாம் தனது தந்தை, தாயார், மகன் மற்றும் மகள் ஆகியோரை கவனிக்கவேண்டிய முழுமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தமது மனைவிக்கு வேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் குறைபாடு இருந்தது என்று எதிர் தரப்பினர் கூற இயலாது என்றும் ஏனெனில் அவ்வாறு இருந்திருந்தால் அதனை தமது மனைவியை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போதே தெரிவித்திருக்க வேண்டும் என்றும் தமது மனைவியின் இறப்பிற்கு எதிர் தரப்பினரின் கவனக்குறைவான சிகிச்சைதான் காரணம் என்றும் இதன்மூலம் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
08. எனவே, தாம் எதிர் தரப்பினரிடம் சிகிச்சைக்காக செலுத்திய ரூ 72,000/- ஐ எதிர்தரப்பினர் தமக்கு திருப்பி தரவேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் கவனக்குறைவான சிகிச்சையால் ஏற்பட்ட தமது மனைவியின் இறப்பிற்கு இழப்பீடாக ரூ 15.00,000/- ஐ எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் தமக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு ரூ 4,00,000/- ஐ எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவுத் தொகையை எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
09. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர்தரப்பினர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.
10. முறையீட்டாளரின் மனைவி கர்ப்பப்பையை நீக்கும் செய்யும் அறுவைசிகிச்சை செய்துகொண்ட பின்னர் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பிந்திய ஹீமோதெரபி சிகிச்சையானது தம்மால் தேசிய விரிவாக்க புற்றுநோய் அமைப்பின் (The National Comprehensive Cancer Network is a not-for-profit alliance of 32 leading cancer centers devoted to patient care, research, and education) வழிகாட்டுதலில் உள்ளபடி வழங்கப்பட்டது என்றும் ஐந்து முறை ஹீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் தமக்கு PET-CT ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டுமென்று முறையீட்டாளரின் மனைவி தெரிவித்தார் என்றும் அவ்வாறு செய்தால்தான் தான் ஆறாவது கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தார் என்றும் இதன் பின்னர் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் “significant reduction of the left adnexal lesion with near complete resolution of metobolic activity and not active disease found” என தெரியவந்தது என்றும் இந்த அறிக்கையில் தெரிவித்த விவரங்களை அறிந்த பின்னரே திருப்தி அடைந்து முறையீட்டாளரின் மனைவி தம்மை ஆறாவது கீமோ தெரபி சிகிச்சை உட்படுத்திக் கொண்டார் என்றும் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்
11. கடந்த 26-02-2015 ஆம் தேதி அன்று தமது மனைவியை பரிசோதனைக்காக அழைத்து வருமாறு தெரிவித்தார் என்றும் மேற்படி நாளில் எதிர் தரப்பினரை சந்திக்கச் சென்றபோது எதிர் தரப்பினர் இல்லாத காரணத்தால் 07-04-2015 ஆம் தேதி அன்று தமது மனைவி எதிர் தரப்பினரை மருத்துவ ஆலோசனைக்காக சந்தித்தார் என்றும் முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளது உண்மை அல்ல என்றும் முறையீட்டாளரின் மனைவி கடந்த 05-03-2015 ஆம் தேதியன்று தம்மிடம் வழக்கமான மருத்துவ ஆலோசனைக்கு வந்தார் என்றும் அப்போது அவருக்கு வழக்கமான கல்லீரல் செயல்பாடு மற்றும் கட்டி குறிப்பான் (tumor marker CA-125) சோதனைகள் செய்யப்பட்டது என்றும் அந்த சோதனைகள் சரியான விகிதத்தில் உள்ளதாக அறிய வந்தது என்றும் 05-03-2015 ஆம் தேதி அவர் தம்மிடம் மருத்துவ ஆலோசனைக்கு வந்ததும் சோதனையும் மேற்கொண்டதும் வேண்டுமென்றே முறையீட்டாளரால் மறைக்கப்பட்டுள்ளது என்றும் மீண்டும் இரண்டாவது மறுபரிசீலனைக்கு 07-04-2015 ஆம் தேதி என்று வருமாறு தாம் அவரை கேட்டுக் கொண்டேன் என்றும் மேற்படி நாளில் முறையீட்டாளரின் மனைவி வழக்கமான மருத்துவ ஆலோசனைக்காகதான் தம்மிடம் வந்தார் என்றும் புகாரில் உள்ளது போல அவரிடம் எவ்வித எடை குறைபாடும் இருக்கவில்லை என்றும் அதனால் அவருக்கு வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலம் உள்ள மாத்திரை மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது என்றும் 01-06-2015 ஆம் தேதிய தமது பரிசோதனையின்போது அவருக்கு எவ்வித குறைபாடும் இருக்கவில்லை என்றும் 07-09-2015 ஆம் தேதிய பரிசோதனையின்போது அவருக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது என்றும் வீட்டு வேலை இதற்கு காரணம் என்றும் தமது மருத்துவக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
12. கடந்த 02-01-2016 ஆம் தேதியில் முறையீட்டாளரின் மனைவி தம்மை சந்தித்து காய்ச்சல் உள்ளதாகவும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவதாகவும் தெரிவித்தார் என்றும் கர்ப்பப்பையை புற்றுநோய் மீண்டும் வர காய்ச்சல் அறிகுறி அல்ல என்றும் அவரின் அடிவயிற்றை பரிசோதனை செய்தபோது அதில் கட்டி எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்றும் இந்த விவரம் தமது மருத்துவக் குறிப்பில் எழுதப்பட்டுள்ளது என்றும் சிறு நீர் சோதனை மற்றும் ரத்த பரிசோதனை செய்யுமாறு அவர் அறிவுறுத்தப்பட்டார் என்றும் அவரது ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்றும் சிறுநீர் செல்லும் பாதையில் தொற்று ஏற்பட்டு இருந்தது என்றும் இதன் காரணமாகவே Zanocin Plus என்ற நுண்ணுயிர்க்கொல்லி மாத்திரை அவருக்கு வழங்கப்பட்டது என்றும் புகாரில் கூறியுள்ளது போல ஒருபோதும் தாம் வலிமிகும் மாத்திரையை அவருக்கு வழங்கவில்லை என்றும் கடந்த 02-03-2016 ஆம் தேதியில் முறையீட்டாளர் மட்டும் அவரது மனைவி இன்றி மருத்துவமனைக்கு வந்து தம்மை சந்தித்தார் என்றும் அப்போது அவரது மனைவிக்கு காய்ச்சல் மற்றும் அல்லது அடிவயிற்றில் வலி போன்றவை இல்லை என்றும் அவரது மனைவிக்கு மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் என்றும் கடந்த 02-01-2016 ஆம் தேதியில் தாம் அவரை மருத்துவ பரிசோதனை செய்து சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டதற்கு தாம் அளித்த சிகிச்சை சரியானது என்பதை இது காட்டுகிறது என்றும் முறையீட்டாளர் அவரது மனைவியை புற்றுநோய் தாக்கிய ஆரம்ப நிலையிலேயே தம்மிடம் அழைத்து வந்ததாக கூறுவது உண்மை அல்ல என்றும் ஹீமோ தெரபி சிகிச்சை வழங்கப்பட்ட பின்பு மருத்துவரீதியாக முதல்வரின் மனைவி பரிசோதனைகள் செய்யப்பட்டார் என்றும் அவர் நவம்பர் 2015 மற்றும் ஜனவரி 2016 மாதங்களில் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்ட போது மீண்டும் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் தென்படாத காரணத்தால் கதிர்வீச்சு சோதனை, ஸ்கேன் பரிசோதனை, லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை போன்ற முறைகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் தேவையற்ற நிலையில் மேற்கண்ட சோதனைகளுக்கு உட்படுத்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும் என்றும் கடந்த 02-03-2016 ஆம் தேதியில் முறையீட்டாளர் மட்டும் அவரது மனைவி இன்றி மருத்துவமனைக்கு வந்து தம்மை 15-02-2016 ஆம் தேதிய PET – CT அறிக்கையை காட்டினார் என்றும் தாம் அவரது மனைவியை பார்க்க வேண்டும் என்று தெரிவித்த போது அவர் படுத்த படுக்கையாக இருப்பதாக தெரிவித்தார் என்றும் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
13. முறையீட்டாளரின் மனைவி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தம்மிடம் சிகிச்சை பெற்று சுமார் ஒன்றரை ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் இருந்துள்ளார் என்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்ட அவருக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று கூற இயலாது என்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்வதற்கு தம்மிடம் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்து கையப்பம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆறாவது முறை முறையீட்டாளரின் மனைவிக்கு கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் தாம் எந்த ஒரு சிகிச்சையும் அவருக்கு வழங்கவில்லை என்று புகாரில் கூறப்படுவது உண்மையல்ல என்றும் தாம் ஒருபோதும் புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து விடுவார் என்று உறுதி அளிக்கவில்லை என்றும் கர்ப்பப்பை புற்றுநோய் புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பது சிக்கல்கள் நிறைந்த நடைமுறைகள் கொண்டது என்றும் இத்தகைய நோய் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கு பின்பும் 75% மீண்டும் நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் தமது தரப்பில் கவனக்குறைவாக சிகிச்சை அளிக்கப்பட்டு சேவை குறைபாடு ஏற்படவில்லை என்றும் புகாரை நிரூபிக்க போதுமான மருத்துவ நிபுணரின் அறிக்கை அல்லது ஆதாரமாக தக்க புத்தகங்களை முறையீட்டாளர் சமர்ப்பிக்கவில்லை என்றும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் எதிர் தரப்பினர் தமது பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்
14. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர் கவன குறைவாக சிகிச்சை அளித்துசேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
15. முறையீட்டாளர் தரப்பு சான்றாவணம் 17 -ல் முறையீட்டாளரின் மனைவிக்கு கீமோதெரபி சிகிச்சை டாக்டர் ராய் நினைவு மருத்துவமனையில் ஆறு முறை அளிக்கப்பட்டதாக உள்ள நிலையில் முறையீட்டாளர் தரப்பில் எதிர் தரப்பினரான மருத்துவருக்கு செலுத்திய சேவை கட்டணத்துக்கு ஆதாரமாக ரசீது அல்லது வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் போன்ற எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. முறையீட்டாளர் தரப்பு சான்றாவணம் 17 -ல் சிகிச்சைக்கு செய்யப்பட்ட ரசீதுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் எவை ஒன்றிலும் எதிர் தரப்பினரான மருத்துவருக்கு செலுத்தப்பட்ட கட்டண விவரம் எதுவும் இல்லை. மேற்படி மருத்துவமனையும் இந்த வழக்கில் தரப்பினராக சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
16. முறையீட்டாளர் தரப்பில் முறையீட்டாளர் மனைவிக்கு 23-03-2016 ஆம் தேதியன்று ஏற்பட்ட இறப்பின் காரணம் குறித்த மருத்துவ அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் அவர் புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டு முற்றிய நிலை தோன்றியதன் காரணமாக இறந்தார் என்று முறையீட்டாளர் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என கருதப்பட வேண்டிய நிலை உள்ளது.
17. எதிர் தரப்பினரின் கவனக்குறைவான சிகிச்சையால் முறையீட்டாளர் மனைவி 23-03-2016 ஆம் தேதியன்று இறந்தார் என்பதை நிரூபிக்க தக்க மருத்துவ நிபுணரின் சாட்சியம் அல்லது கருத்துரை இந்த ஆணையத்தின் முன்பு முறையீட்டாளர் தரப்பில் முன்வைக்கப்படவில்லை.
18. முறையீட்டாளர் தமது புகாரில் தனது மனைவிக்கு எதிர் தரப்பினரிடம் மட்டுமே மருத்துவ ஆலோசனை பெற்றதாகவும் வேறு யாரிடமும் இரண்டாம் கருத்துரை பெறவில்லை அல்லது சிகிச்சை பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனைவிக்கு மருத்துவர் நாராயண வர்மா அவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற்றதாக தனது புகாரில் மற்றொரு இடத்தில் தெரிவித்துள்ளார். இத்தகைய முரண்பாடு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
19. முறையீட்டாளர் தமது புகாரில் கடந்த 26-02-2015 ஆம் தேதி அன்று தமது மனைவியை பரிசோதனைக்காக அழைத்து வருமாறு தெரிவித்தார் என்றும் மேற்படி நாளில் எதிர் தரப்பினரை சந்திக்கச் சென்றபோது எதிர் தரப்பினர் இல்லாத காரணத்தால் 07-04-2015 ஆம் தேதி அன்று தமது மனைவி எதிர் தரப்பினரை மருத்துவ ஆலோசனைக்காக சந்தித்தார் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 05-03-2015 ஆம் தேதி அன்று முறையீட்டாளரின் மனைவி எதிர் தரப்பினரிடம் மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளார் என்ற விவரம் எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணம் 5 மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய முரண்பாடு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
20. எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணம் 6 –ல் “significant reduction of the left adnexal lesion with near complete resolution of metobolic activity and not active disease found” என்று உள்ளதை வைத்து பார்க்கும்போது எதிர் தரப்பினரின் சிகிச்சையில் முறையீட்டாளரின் மனைவியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.
21. எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணம் 13 என்பது “The Washington Manual of Oncology” என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் ஆகும். அறுவைச் சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை உள்ளிட்ட தரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் 75% நோயாளிகளுக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இவ்வாறு மீண்டும் புற்றுநோய் ஏற்படும்போது குணப்படுத்த இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நூலிலுள்ள விபரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதையும் அவ்வாறு ஏற்படும் போது இழப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டியதாக உள்ளது.
22. முறையீட்டாளரின் மனைவிக்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியை அகற்ற ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெறப்பட்டுள்ளது கீமோதெரபி சிகிச்சை எதிர் தரப்பினரிடம் பெறப்பட்டுள்ளது இதன் பின்பு மற்றொரு மருத்துவர் நாராயண வர்மா அவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெறப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கீமோதெரபி சிகிச்சை முழுவதும் ராய் நினைவு மருத்துவமனையில் பெறப்பட்டதாக முறையீட்டாளர் சான்றாவணம் தெரிவிக்கிறது. இந்நிலையில் எதிர்தரப்பினர் மட்டும் கவனக்குறைவாக செயல்பட்டு சேவை புரிந்துள்ளார் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள இயலாது.
23. எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணம் 4 என்பது முறையீட்டாளரின் மனைவிக்கு எதிர்தரப்பினர் சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பு முறையீட்டாளரின் மனைவிகொடுத்த சம்மத ஆவணமாகும். இதில் முறையீட்டாளரும் சாட்சியாக கையொப்பமிட்டு செய்துள்ளார். இந்த ஆவணத்தில் “It has also been explained to me that disease may not respond or may come back after initial response with adequate treatment in some cases” என குறிப்பிடப்பட்டுள்ளது மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதாகும்.
24. எதிர் தரப்பினர் தரப்பில் சான்று ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ நூல்களில் உள்ள கருத்துக்கள் ஏற்புடையதாக உள்ளன. இக்கருத்துக்கள் எதிர்தரப்பினர் கவனமுடன் செயல்பட்டு சேவை புரிந்துள்ளார் என்பதை காட்டும் வகையில் அமைந்துள்ளன.
25. மேற்படி 15 முதல் 24 வரையான பத்தியில் உள்ள காரணங்களினால் எதிர்த் தரப்பினர் கவனக் குறைவாக சிகிச்சை அளித்து சேவை புரிந்துள்ளார் என்று முறையீட்டாளர் வாதம் ஏற்புடையதல்ல என்றும் முறையீட்டாளர் தமது புகாரை தக்க சாட்சியங்கள் மற்றும் சான்றாவணங்கள் மூலம் நிரூபிக்க வில்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2 & 3
26. முதலாவது எழு வினாவை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 25-11-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
A.1 | 16.08.2014 | Abdomen pelvic Scan Report of Complainant’s wife by Anderson Diagnostics lab. | Xerox |
A.2 | 27.08.2014 | Discharge summary of complainant’s wife from Dr.Raha Rajendran Nursing Home Channai – 16. | Xerox |
A.3 | 09.09.2014 | Biopsy Report of M.R. Biopsy Centre of Complainant’s wife. | Xerox |
A.4 | 16.09.2014 | Histo Pathology of Report Complainant’s wife. | Xerox |
A.5 | 31.10.2014 | Pet Scan Report | Xerox |
A.6 | 23.01.2015 | Pet Scan Report Complainant’s wife | Xerox |
A.7 | 07.04.2015 | Prescription of Opposite Party | Xerox |
A.8 | 18.11.2015 | Prescription of opposite Party | Xerox |
A.9 | 02.01.2016 | Haematology Report of Complainant’s wife | Xerox |
A.10 | 15.02.2016 | Whole abdomen Scan Report of Complainant’s wife | Xerox |
A.11 | 02.03.2016 | Prescription of Opposite Party | Xerox |
A.12 | 23.03.2016 | Death Certificate of Complainant’s Wife | Xerox |
A.13 | 26.05.2016 | Notice by Complainant’s advocate to the opposite Party | Xerox |
A.14 | 11.06.2016 | Reply Notice by Opposite Party | Xerox |
A.15 | 18.08.2016 | Rejoinder Notice by Complainant’s advocate | Xerox |
A.16 | 21.08.2014 to 02.03.2016 | Medical Bills from 21.08.2014 to 02.03.2016 | Xerox |
A.17 | 10.10.2014 | Dr. Rai Memorial Medical Centre Centaury Plaza 562 Annasalai Teynampet,Chennai – 600 018 | Xerox |
A.18 | | Complainant Address Proof | Xerox |
A.19 | - | Complainant I.D. Proof. | Xerox |
எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Remarks | Note |
B.1 | - | NCCN Guidelines version 1.2016 Epithelial ovarian cancer,. staging | Justifiction for staging of Mrs.Devi’s Cancer | Xerox |
B.2 | - | NCCN Guideines version 1.2016 Epityhelial ovarian cancer , Principles of Systemic therapy | Justifiction for the Treatment given for Mrs.Devi | Xerox |
B.3 | 07-01-2015 | St. Isabel’s Hospital .Discharge summary for 5th cycle. | Consent signed by the complainant. The consent form says that the Cancer might recur inspite of adequate treatment | Xerox |
B.4 | 29.01.2015 | St. Isabel’s Hospital Discharge summary for 6th cycle | Consent signed by the Complainant .The consent form says that the Cancer might recur inspite of adequate treatment l. | Xerox |
B.5 | 05.03.2015 | OppositeParty,Clininc OP reception-Patient registration note book | Patient was brought to the Opposite party’s clinic on this day and the bloo tests done on tis day were normal | Xerox |
B.6 | 05.03.2015 | WinPath Lab-Patient’s Bio-Chemistry and Tumor Marker Blood Report | Normal Tumor Marker Level. For the patient | Xerox |
B.7 | 02.01.2016 | Win Path Lab- Patient’s Blood and Urine Report | High WBC count - indicate Infection.Pus Cells (5 per HPF) seen in the urine of Mrs. Devi | Xerox |
B.8 | - | Oxford Hand Book of Clinical Haematology-3rd edition pages 12, 13 and 808 | Literatue in support of Mrs.Devi’s infection | Xerox |
B.9 | - | Institute for the study of Urologic diseases—Normal values for blood and Urine tests. | To indicate the significance of Pus cells in Mrs. Devi’s urine sample | Xerox |
B.10 | - | Harrison’s Principle of Internal Medicine, 15th Edition, Volume 2 - pages 1620 | Liteature about Urinary tract Infection and its symptoms—the symproms that Mrs. Devi had. | Xerox |
B.11 | - | CANCER- Principles and Practice of Oncoogy-10th Edition, Pages 1077 and 1090 | Symptoms of Ovarian Cancer , and Guide lines of Surveillance after First line Chemotherapy—Highlighting when an what is to be done, during the Serial physician visits and investigations to be done after completing the Chemotherapy cycles. | Xerox |
B.12 | - | The Beethesda Hand Book of Clinical Oncology—3rdEdition , pagae 227 | To show that Fever is not a symptom of Epithelial ovarian Cancer. | Xerox |
B.13 | - | The Washington Manual of Oncolocy, 2n Eition –Pages 262 and 263 | About recurrent ovarian Cancer disease and median survival in ovarian Cancer | Xerox |
B.14 | - | Cancer Management - A Multi disciplinary Approach, 3rd Edition,Page 963-966. | Diagnostic criteria for “ significant weight loss.” | Xerox |
B.15 | - | CANCER –Principles and Practice of Oncology—10th Edition. Pages 2105-2111. | Causes of weight loss in cancer patients, which includes infectin | Xerox |
B.16 | 24.08.2016 | Second Reply Notice of Opposite party, to the complainant’s advocate rejoinder notice dated 18.08.2016 | All Concised | Xerox |
B.17 | - | SEQUENCE OF EVENTS | - | Xerox |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு எல். சம்பத்குமார்
எதிர் தரப்பினர் தரப்பு சாட்சி: மருத்துவர் எஸ் சிவகுமார்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.