புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 11-04-2019
உத்தரவு பிறப்பித்த நாள் : 10-05-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட்., பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 13/2019.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், புதுப்பாளையம் ஒட்டர் தெரு குடித்தெரு, கதவு இலக்கம் 3/87 - ல் வசிக்கும் பாலசுப்பிரமணி மனைவிபி பார்வதி -முறையீட்டாளர்
- எதிர்-
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் நாமக்கல் நகரில் பரமத்தி சாலையில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், கோட்ட மேலாளர். - எதிர் தரப்பினர்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திரு ஏ. குணசேகரன், முன்னிலையாகியும் எதிர் தரப்பினருக்கு திரு பி. ராஜவேலு, வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 17-04-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது நிரூபண வாக்குமூலம்-1, அவரது சான்றாவணங்கள் -10, எதிர் தரப்பினரின் பதில் உரை, அவரது நிரூபண வாக்குமூலம்-1, அவரது சான்றாவணங்கள் -05, மற்றும் இரு தரப்பு வாதங்கள்ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தமக்கு வழங்க வேண்டிய முழு காப்பீட்டு தொகை ரூ 16 லட்சத்தை வட்டியுடன் எதிர் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் உரிய காலத்தில் காப்பீடு வழங்காததற்கு இழப்பீடாக ரூபாய் 3 லட்சமும் எதிர் தரப்பினரின் செயலால் ஏற்பட்ட மன உளைச்சல், மன வேதனைக்கு மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூபாய் ஒரு லட்சமும் எதிர் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம்
03. தமது TN 28 AK 0524 என்ற பதிவு எண் கொண்ட கனரக வாகனத்தை தான் எதிர் தரப்பினரிடம் 23-05-2016 ஆம் தேதியில் ரூ 33,265/- பிரிமியம் செலுத்தி ஓராண்டுக்கு காப்பீட்டு பாலிசியை பெற்றிருந்தேன் என்றும் இந்த வாகனமானது தமது வாகன ஓட்டுனரின் பொறுப்பில் இருந்த நிலையில் காணாமல் போய்விட்டது என்றும் இதுகுறித்து காவல் நிலையத்தில் முறையீட்டாளர் தரப்பில் புகார் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் ஆனால் காவல்துறையினர் காலதாமதம் செய்து வந்ததால் உயர் காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட பின்னர் சங்ககிரி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டது என்றும் தமது வாகனம் காணாமல் போனது குறித்து எதிர் தரப்பினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் 02-11-2016 ஆம் தேதியில் இழப்பீட்டு கோரிக்கை படிவம் எதிர் தரப்பினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் காவல்துறையின் இறுதி அறிக்கை சமர்ப்பித்தால் மட்டுமே தங்களால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று எதிர் தரப்பினர் தெரிவித்ததால் தகவல் பெறும் உரிமை சட்டப்படி காவல்துறையின் இறுதி அறிக்கையை பெற்று எதிர் தரப்பினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் இருப்பினும் தொடர்ந்து எதிர்த் தரப்பினர் தமக்கு காப்பீட்டு தொகை வழங்குவதை காலம் கடத்தி வந்ததால் 05-02-2019 ஆம் தேதியில் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டது என்றும் ஆனால் எதிர்த் தரப்பினர் தமது காப்பீட்டு இழப்பீட்டு கோரிக்கை மீது எவ்வித முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதும் தொகையை தராமல் இருப்பதும் சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. எனவே, தமக்கு வழங்க வேண்டிய முழு காப்பீட்டு தொகை ரூ 16 லட்சத்தை வட்டியுடன் எதிர் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் உரிய காலத்தில் காப்பீடு வழங்காததற்கு இழப்பீடாக ரூபாய் 3 லட்சமும் எதிர் தரப்பினரின் செயலால் ஏற்பட்ட மன உளைச்சல், மன வேதனைக்கு மற்றும் வழக்கு செலவுதொகையாக ரூபாய் ஒரு லட்சமும் எதிர் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
06. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
07. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி இரண்டு ஆண்டு காலத்திற்குள் புகாரை இந்த ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்பது காலவரை ஆகும். ஆனால் முறையீட்டாளர் கால வரையறை முடிந்த பின்பு இந்த புகாரை தாக்கல் செய்துள்ளதால் அவரது புகார் நிலை நிற்கத்தக்கது அல்ல என்றும் முறையீட்டாளர் தனது வாகனம் சங்ககிரியில் உள்ள ராஜலட்சுமி பணிமனை அருகில் நிறுத்தப்பட்டு மறுநாள் சென்று பார்த்தபோது திருட்டுப் போய்விட்டதாக கூறியுள்ளதை அவரே நிருபிக்க வேண்டும் என்றும் வாகனத்திற்கான பயண விவரம் புத்தகத்தை (Trip sheet) தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சங்ககிரி காவல் நிலையத்திற்கு பலமுறை சென்ற போதும் புகாரை பெற்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்படவில்லை என்பது தவறானது என்றும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதில் 58 நாட்கள் கால தாமதத்திற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்றும் வாகனம் காணாமல் போன பின்னர் 14 நாட்கள் கழித்து தான் முறையீட்டாளர் தங்களுக்கு தகவல் அளித்துள்ளார் என்றும் முறையீட்டாளர் சமர்ப்பித்துள்ள கோரிக்கை படிவத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் தமது தரப்பில் அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முறையீட்டாளர் கூறுவது தவறானது என்றும் முறையீட்டாளர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல் கடிதம் மூலமும் வழக்கறிஞர் அறிவிப்பின் மூலமும் தெரிவித்த பிறகும் தங்களால் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை முறையீட்டாளர் சமர்ப்பிக்கவில்லை என்றும் தவறான சங்கதிகளுடன் முறையீட்டாளர் தரப்பில் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பப்பட்டது என்றும் இதற்கும் தமது தரப்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது என்றும் காவல்துறை வழங்கும் இறுதி அறிக்கையை அவர் முறைப்படி சமர்ப்பிக்கவில்லை என்றும் சட்டவிரோதமாக லாபம் அடைவதற்காக இந்த ஆணையத்தை முறையீட்டாளர் அணுகியுள்ளார் என்றும் தாங்கள் வழங்கிய பாலிசி நிபந்தனைகளை கடைபிடிக்காமல் சுய லாபத்துக்காக புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் முறையீட்டாளர் தமது புகாரின் தெரிவித்துள்ளதை நிரூபிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் எதிர் தரப்பினர் தங்களது பதிலையில் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்
08. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
01) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி புகார் தாக்கல் செய்ய விதிக்கப்பட்டுள்ள காலத்திற்குள் இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?
02) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளனரா?
03) எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்து உள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
03) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன?
எழு வினா எண் – 1
09. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி முறையீட்டாளர் எதிர் தரப்பினரிடம் காப்பீடு செய்துள்ளார் என்பதை எதிர் தரப்பினர் வழங்கியுள்ள முறையீட்டாளர் தரப்பு முதலாவது சான்றாவணமான காப்பீட்டு பாலிசியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
10. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி இரண்டு ஆண்டு காலத்திற்குள் புகாரை இந்த ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்பது காலவரை ஆகும் என்றும் ஆனால் முறையீட்டாளர் கால வரையறை முடிந்த பின்பு இந்த புகாரை தாக்கல் செய்துள்ளதால் அவரது புகார் நிலை நிற்கத்தக்கது அல்ல என்றும் எதிர் தரப்பினர் அவரது பதில் உரையில் தெரிவித்துள்ளார். முதலாவதாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இரண்டாவதாக, எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு 19-09-2020 ஆம் தேதியில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த தேதியை வழக்கு மூலமாக கணக்கிடப்பட்டால் உரிய காலத்தில் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றே கருத முடியும் என்றும் இந்நிலையில் இந்த புகார் முறையீட்டாளரால் உரிய கால வரையறைக்குள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 2
10. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி அவரது வாகனம் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் தாக்கல் செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது முறையீட்டாளர் தரப்பு சான்றாவணம்-6 மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் அளித்த இறுதி அறிக்கையானது அவரது தரப்பில் குறியீடு செய்யப்பட்டுள்ள சான்றாவணம்-7 மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இந்நிலையில் காணாமல் போன வாகனத்தை கண்டுபிடிக்க இயலவில்லை என்பதை நிரூபித்துள்ளார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
09. முறையீட்டாளர் இழப்பீட்டுத் தொகை கேட்டு கோரிக்கை படிவத்தை சமர்ப்பித்துள்ளார் என்பதை எதிர் தரப்பினர் அவரது பதில் உரையில் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், எதிர் தரப்பினரின் வாதம் என்னவெனில் தாங்கள் கேட்ட ஆவணங்கள் முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை என்பதே ஆகும். இந்நிலையில் தற்போது வரை எதிர் தரப்பினர் முறையீட்டாளரின் கோரிக்கையை நிராகரித்து எவ்வித கடிதத்தையும் முறையீட்டாளருக்கு வழங்கவில்லை. அவ்வாறான சங்கதி எதனையும் எதிர் தரப்பினர் அவரது பதில் உரையில் தெரிவிக்கவும் இல்லை
அத்தகைய ஆவணம் எதனையும் எதிர் தரப்பினர் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவும் இல்லை. முறையீட்டாளரின் வாகனம் காணாமல் போனது குறித்து கடந்த 19-09-2016 ஆம் தேதியில் தங்களுக்கு முறையீட்டாளர் தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது என்பதை எதிர் தரப்பினர் பதிலில் ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் முறையீட்டாளரின் கோரிக்கையை முடிவு செய்ய தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு எதிர் தரப்பினர் கடிதங்கள் மூலம் கேட்டுள்ளார் என்பதும் சான்றாவணங்கள் மூலம் தெரிய வருகிறது என்றும் இதனால் முறையீட்டாளரின் புகார் ஏற்புடையதல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இருப்பினும் முறையீட்டாளரின் புகார் புகாரில் உள்ள பிரச்சனையில் எதிர் தரப்பினர் இன்னும் முடிவு மேற்கொள்ளாத சூழ்நிலையில் முறையீட்டாளருக்கு மாற்று பரிகாரத்தை வழங்குவது அவசியம் என்று இந்த ஆணையம் கருதுகிறது
10. முறையீட்டாளருக்கு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு எதிர் தரப்பினர் எழுதிய கடிதங்கள் அவரது தரப்பில் சான்றாவணங்கள்-1,2, 5 என குறியீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் அனுப்பியுள்ள 05-03-2019 ஆம் தேதியிட்ட முதலாவது கடிதத்தில் கீழ்க்கண்டவற்றை சமர்ப்பிக்குமாறு முறையீட்டாளர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
01. Orignal Insurance Policy
02. Duplicate Keys
03. Orignal RC book , permit with finance clearance
04. Final Investigation Report
05. Non tracable certificate
06. Letter of Subrogation
07. Indemnity bond
08. Detailed letter for delay in submission documents
ஆனால், முறையீட்டாளர் தரப்பில் எதிர் தரப்பினருக்கு கொடுக்கப்பட்ட 15-10-2018 ஆம் தேதிய பதில் அறிவிப்பில், அதாவது எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவனம் மூன்றில், “எமது கட்சிக்காரர் தங்கள் கட்சிக்காரரிடம் எடுத்த பாலிசி தொகை ரூபாய் 16 லட்சத்தை எமது கட்சிக்காரர் வாகனம் திருடு போன தேதி முதல் தங்கள் கட்சிக்காரர் தொகை செலுத்தும் தேதி வரை 12% செய்து வட்டியுடன் செலுத்தும் பட்சத்தில் எமது கட்சிக்காரர் அசல் ஆவணங்களை ஒப்படைக்க தயாராக உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாங்கள் கூறிய ஒப்படைப்பு கடிதம் தற்பொழுது கொடுக்க இயலாது அசல் பதிவு புத்தகம் லாரியுடன் திருடு போய்விட்டது எமது கட்சிக்காரர் எந்த காலத்திலும் எச்பி போடவில்லை தற்பொழுது letter of subrogation and indeminity form ஆகியன இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது”. என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த புகாரை தாக்கல் செய்யும்போது இழப்பீட்டு கோரிக்கை படிவத்துடன் எதிர்த்தரப்பினரால் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் முறையீட்டாளரால் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முறையீட்டாளர் அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு இழப்பீட்டு கோரிக்கை தொகையை எதிர் தரப்பினர் வழங்கவில்லை என்று கூறுவது சரியல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இருப்பினும் முறையீட்டாளரின் இழப்பீட்டு கோரிக்கையை எதிர் தரப்பினர் இன்னும் முடிவு செய்யாத நிராகரித்து முடிவு மேற்கொள்ளாத நிலை நீடிப்பதால் முறையீட்டாளருக்கு நீதியின் நலன் கருதி இதர பரிகாரமாக இன்னும் சில கால அவகாசம் அளித்து தேவையான ஆவணங்களை வழங்க வாய்ப்பளிப்பது சரியானது என்று இந்த ஆணையம் கருதுகிறது.
11. மேற்கண்ட பத்தியில் கூறப்பட்டுள்ளபடி எதிர் தரப்பினர் கேட்டுள்ளவற்றில் 01. Orignal Insurance Policy, 02. Duplicate Keys, 03. Orignal RC book திருடு போன போது வாகனத்திலேயே சென்று விட்டது என்ற நிலையில் duplicate permit with finance clearance, 04. Letter of Subrogation, 05. Indemnity bond, 06.லாரியின் அசல் சாவி திருடு வாகனத்திலேயே போனபோது சென்று விட்டது என்ற நிலையில் Duplicate Keys, 07. Final Investigation Report, Non tracable certificate என்பதற்காக முறையீட்டாளர் தரப்பில் இந்த வழக்கில் ஏழாவது சான்றாவனமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது போதுமானது என்ற நிலையில் இந்த ஆணையத்தால் சான்றிட்ட நகல்கள் ஆகியவற்றை இந்த உத்தரவு வழங்கப்பட்ட நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளர் எதிர் தரப்பினரிடம் அவரது அலுவலகத்துக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதனை பெற்றுக் கொள்ளும் எதிர் தரப்பினர் அதற்கு ஒப்புகை கடிதம் வழங்க வேண்டும். இவற்றை எதிர் தரப்பினர் பெற்றுக் கொண்டு பெற்றுக்கொண்ட நாளிலிருந்து நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளருக்கு செலுத்த வேண்டிய ரூபாய் 16 லட்சத்தை காப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் மேலே சொல்லப்பட்டவற்றை முறையீட்டாளர் எதிர் தரப்பினரிடம் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கவில்லை என்றாலும் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களும் இதரவையும் திருப்திகரமாக இல்லை என்றாலும் எதிர் தரப்பினர் தக்க முடிவை மேற்கொண்டு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து எட்டு வாரங்களுக்குள் முறையீட்டாளருக்கு பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இதற்குப் பின்னரும் இழப்பீட்டு கோரிக்கையை நிராகரித்து எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு கடிதம் வழங்கினால் புதிதாக நுகர்வோர் புகாரை தாக்கல் செய்ய முறையீட்டாளருக்கு உரிமை உண்டு என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
12. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. வழக்கின் தன்மையை கருதி மாற்று பரிகாரமாக எதிர் தரப்பினர் கேட்டுள்ளவற்றில் 01. Orignal Insurance Policy, 02. Duplicate Keys, 03. Orignal RC book திருடு போன போது வாகனத்திலேயே சென்று விட்டது என்ற நிலையில் duplicate permit with finance clearance, 04. Letter of Subrogation, 05. Indemnity bond, 06.லாரியின் அசல் சாவி திருடு வாகனத்திலேயே போனபோது சென்று விட்டது என்ற நிலையில் Duplicate Keys, 07. Final Investigation Report, Non tracable certificate என்பதற்காக முறையீட்டாளர் தரப்பில் இந்த வழக்கில் ஏழாவது சான்றாவனமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது போதுமானது என்ற நிலையில் இந்த ஆணையத்தால் சான்றிட்ட நகல்கள் ஆகியவற்றை இந்த உத்தரவு வழங்கப்பட்ட நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளர் எதிர் தரப்பினரிடம் அவரது அலுவலகத்துக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதனை பெற்றுக் கொள்ளும் எதிர் தரப்பினர் அதற்கு ஒப்புகை கடிதம் வழங்க வேண்டும் என்றும் இவற்றை எதிர் தரப்பினர் பெற்றுக் கொண்டு பெற்றுக்கொண்ட நாளிலிருந்து நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளருக்கு செலுத்த வேண்டிய ரூபாய் 16 லட்சத்தை காப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் மேலே சொல்லப்பட்டவற்றை முறையீட்டாளர் எதிர் தரப்பினரிடம் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கவில்லை என்றாலும் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களும் இதரவையும் திருப்திகரமாக இல்லை என்றாலும் எதிர் தரப்பினர் தக்க முடிவை மேற்கொண்டு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து எட்டு வாரங்களுக்குள் முறையீட்டாளருக்கு பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் இதற்குப் பின்னரும் இழப்பீட்டு கோரிக்கையை நிராகரித்து எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு கடிதம் வழங்கினால் புதிதாக நுகர்வோர் புகாரை தாக்கல் செய்ய முறையீட்டாளருக்கு உரிமை உண்டு என்றும் இந்த ஆணையம் உத்தரவிடுகிறது.
03. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து என்னால் திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 10-05-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | - | வாகன காப்பீட்டுச் சான்றிதழ் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | - | வாகன பதிவுச் சான்றிதழ் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | - | ஓட்டுனர் உரிமம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 19-09-2016 | இழப்பீட்டு தகவல் படிவம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | | இழப்பீட்டு கோரிக்கை படிவம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 03-01-2016 | முதல் தகவல் அறிக்கை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 10-11-2017 | தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெறப்பட்ட காவல் துறையின் இறுதி அறிக்கை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 05-02-2019 | முறையீட்டாளர் வழங்கிய வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | 04-12-2019 | எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு அனுப்பிய கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 10-12-2019 | எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு அனுப்பிய கடிதம் | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர் சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | 05-03-2019 | எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு அனுப்பிய கடிதம் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | 01-10-2019 | எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.3 | 15-10-2019 | முறையீட்டாளர் வழங்கிய பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.4 | 09-09-2019 | முறையீட்டாளருக்கு அறிவிப்பு சார்வு செய்த அறிவிப்பு அத்தாட்சி | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.5 | 19-06-2020 | முறையீட்டாளருக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பு | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் சாட்சி: திருமதி பார்வதி
எதிர் தரப்பினர் சாட்சி: திரு செல்லத்துரை
உறுப்பினர் – I தலைவர்.