Tamil Nadu

Namakkal

CC/117/2022

ATM ENGINEERING REP BY PROPRIETOR THIRUMALAINATHAN REP BY ITS - Complainant(s)

Versus

BRIGHT INDUSTRIAL SOLUTIONS REP BY PROPRIETOR T.D.DENZIL FRANCIS XAVIER - Opp.Party(s)

K.PALANISAMY

19 Sep 2023

ORDER

DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION
NAMAKKAL
TAMILNADU
 
Complaint Case No. CC/117/2022
( Date of Filing : 29 Jun 2022 )
 
1. ATM ENGINEERING REP BY PROPRIETOR THIRUMALAINATHAN REP BY ITS
1/229-2,MUDAHLIPALAYAM,ARASUR POST,COIMBATORE 641407
...........Complainant(s)
Versus
1. BRIGHT INDUSTRIAL SOLUTIONS REP BY PROPRIETOR T.D.DENZIL FRANCIS XAVIER
1,AKSHAYA COMPLEX,SIVATHANGAM NAGAR,SARAVANAMPATTI,COIMBATORE 641035
2. JAYASHREE MACHINE TOOLS
DHEBAR ROAD(SOUTH),NR,NEAR NEHRU NAGAR,80 FEET ROAD,B/H,SIRSH ESTATE,ATIKA INDUSTRIAL AREAD,RAJKOT-2
............Opp.Party(s)
 
BEFORE: 
  THIRU DR.V.RAMARAJ.,M.L.,Ph.D., PRESIDENT
  THIRU A.S.RATHINASAMY.,M.COM.,B.Ed.,B.L., MEMBER
 
PRESENT:
 
Dated : 19 Sep 2023
Final Order / Judgement

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்(Coimbatore) : 18-06-2018

                     உத்தரவு  பிறப்பித்த  நாள்   :19-09-2023  

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம், நாமக்கல்.

முன்னிலை  : திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  ஏ. எஸ். இரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்.,       உறுப்பினர்  I.

நுகர்வோர் புகார்  எண் (CC No):  117/2022.

 

            கோயம்புத்தூர், அரசூர் அஞ்சல், முதாலிபாளையம் இலக்கம் 1/229-2-ல் உள்ள ஏடிஎம் இன்ஜினியரிங், அதன் உரிமையாளர் திருமலை நாதன் மூலம்                                                                                                                 -முறையீட்டாளர்

- எதிர்-

1.         கோயம்புத்தூர், சரவணம்பட்டி, சிவ தங்கம் நகர், ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸில் இருக்கும் பிரைட் இண்டஸ்ட்ரியல் சொலுஷன்ஸ்,  அதன் உரிமையாளர் டி. டி. டென்சில் பிரான்சிஸ் சேவியர் மூலம்

 

2.         குஜராத், ராஜ்கோட், அடிகா இன்டஸ்ட்ரியல் ஏரியா, சார்ஸ் எஸ்டேட் நேருநகர் 80 அடி சாலை,  தேபார்தெற்கு -ல் இருக்கும் ஜெயஸ்ரீமெஷின் டூல்ஸ்.                                                                                                - எதிர் தரப்பினர்கள்

 

ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

 

01        நுகர்வோர்  பாதுகாப்பு  சட்டம் 1986, பிரிவு 12-ன்படி  முறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திரு  கே. பழனிச்சாமி, வழக்கறிஞர்  முன்னிலையாகியும் முதலாம் எதிர் தரப்பினருக்கு திரு டி தினேஷ்குமார், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இரண்டாம் எதிர்தரப்பினர் மீது ஒருதலை பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு  செய்யப்பட்டும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக      13-09-2023 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், முறையீட்டாளர்  சாட்சியம் -01, அவரது சான்றாவணங்கள் -07 முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின் தனித்தனியான பதில் உரைகள்,   இரண்டாம் எதிர் தரப்பினரின் சாட்சியம்-01, அவரது சான்றாவணங்கள் -04 மற்றும்   வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும்  ஆணையுரை.

 

முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம்

 

02.       தாம் சிண்டிகேட் வங்கி,  பீளமேடு கிளையில்   கடன் பெற்று Jaikishan Break Rear Cylinder Hydraulic Press Break Machine என்ற இயந்திரத்தை முதலாம் எதிர் தரப்பினரிடம் ரூ 15,41,000/- செலுத்தி கடந்த 15-03-2016 ஆம் தேதியில் வாங்கினேன் என்றும் இந்த இயந்திரத்துக்கு ஓராண்டு காலம் உத்தரவாதம் வழங்கப்பட்டது என்றும் இந்த இயந்திரத்தின் பராமரிப்பை உத்தரவாத காலத்தில் முதலாம் எதிர் தரப்பினர் செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் இந்த இயந்திரத்துடன் பெயர், பலகை தரவு பட்டியல் பலகை மற்றும் இயந்திரத்தை பற்றிய விவரக்குறிப்புகள் இடம் பெறவில்லை என்றும் இயந்திரத்தை பற்றிய சோதனை விளக்கம் (demo) அல்லது பயிற்சி   தமக்கு வழங்கப்படவில்லை என்றும் தாமாகவே பாலக்காட்டில் உள்ள இதே வகை இயந்திர பணிமணிக்கு சென்று இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சியை பெற்றுக் கொண்டேன் என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

03.       2016 ஜூன் இரண்டாவது வாரத்தில்   தம்மால் வாங்கப்பட்ட இயந்திரம்  இயங்கவில்லை என்றும் உடனடியாக முதலாம் எதிர் தரப்பினருக்கு தெரிவித்தும் 15 நாட்கள் கழித்து சேவை பணியாளரை அனுப்பினார்கள் என்றும் அவ்வாறு வந்த கார்த்திக் என்ற சேவை பணியாளரால் பிரச்சினையை கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் இரண்டாம் எதிர் தரப்பினருடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை செய்தார் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் சார்பில்  இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் (control panel) பிரச்சனை உள்ளதாக தெரிவிக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு இயந்திரத்தை கொண்டு வருவதற்கான  பொருத்தி (reset switch)  மூலம் சரி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது என்றும் இந்த சமயத்திலும் உபயோகிப்பாளர் கையேடு, மின் வரைபடம் மின்சார மற்றும் இயந்திர வரைபடம் (electrical, machine and hydraulic drawing) உள்ளிட்டவற்றை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்கவில்லை என்றும் கடந்த 05-03-2017 ஆம் தேதியில் இயந்திரத்தில் திடீரென முன்பக்க கைப்பகுதியில் பிரச்சனை ஏற்பட்டு இயந்திரம் பழுதடைந்து விட்டது என்றும் இதுகுறித்து அன்றைய நாளிலேயே முதலாம் எதிர் தரப்பினருக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் நான்கு மாதங்கள் கழித்து 03-06-2017 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினரின் உரிமையாளர் நேரில் வந்து இயந்திரத்தை பார்த்துவிட்டு பணியாளர்களை அனுப்புவதாக தெரிவித்தார் என்றும் பின்னர் ராதாகிருஷ்ணன் என்ற சேவை பணியாளர் ஒருவர் இயந்திரத்தை வந்து பார்வையிட்டார் என்றும் ஆனால் அவர் இயந்திரத்தை தொடக்கூட இல்லை என்றும் தமக்கு இயந்திரம் பற்றி எதுவும்  தெரியாது என்றும் இரண்டாம் எதிர் தரப்பினரை முதலாம் எதிர் தரப்பினர் மூலமாக தொடர்பு கொள்வதாக தெரிவித்தார் என்றும் இதனிடையே உபயோகிப்பாளர் கையேடு மின் மற்றும் இயந்திர வரைபடங்கள் உள்ளிட்டவற்றை முதலாம் எதிர் தரப்பினரிடம் பலமுறை கேட்டதில் முதலாம் எதிர் தரப்பினர் சில வரைபடங்களை மட்டும் அனுப்பி வைத்தார் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினரை தொடர்பு கொண்ட போது இயந்திரத்தில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தார் என்றும் கோயம்புத்தூரில் தங்களுக்கு தகுதி வாய்ந்த சேவை பணியாளர்கள் இல்லை என்றும் சேவை பொறியாளரை அனுப்பி வைத்து பிரச்சனையை சரி செய்வதாக கூறினார் என்றும் பல மாதங்கள் ஆகியும் ஆறு மாதங்கள் கடந்தும் யாரையும் இரண்டாம் வைத்திருக்கிற அனுப்பி வைக்கவில்லை என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

04.       இயந்திரத்தின் கட்டமைப்பு வடிவத்தில் (structural design failure) தோல்வி ஏற்பட்டுள்ளது என்றும் இயந்திரத்தில் மின்சார மற்றும் இயந்திர பிரச்சனைகள் உள்ளது என்றும் சுருங்கக் கூறின் இயந்திரம் உற்பத்தி குறைபாடு உள்ளது என்றும் புனையமைப்பு (fafrication) வேலைகளுக்கு உலோக  பாகங்களை வளைப்பதற்காக வாங்கப்பட்டது என்றும் ஆனால் இயந்திர பிரச்சனை காரணமாக தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது என்றும் இந்த இயந்திரத்தை மீண்டும் பயன்படுத்த இயலாது என்றும்   இருந்த போதிலும் தான் கடனை வட்டியுடன் செலுத்த வேண்டி உள்ளது என்றும் தமது வாடிக்கையாளர்கள் மத்தியில் தமக்கு இருந்த நல்ல பெயர் கெட்டுவிட்டது என்றும் இவற்றுக்கு எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாடு மற்றும் உற்பத்தி குறைபாடான இயந்திரத்தை வழங்கியதே காரணம் என்றும்    இதனால் தமக்கு மிகுந்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

05.       எனவே,   தமக்கு எதிர்தரப்பினர்கள் குறைபாடு இல்லாத தம்மால் வாங்கப்பட்ட இயந்திரம் ஒன்றை வழங்க வேண்டும் அல்லது தம்மால் வாங்கப்பட்ட இயந்திரத்துக்கு செலுத்தப்பட்ட தொகை ரூபாய் 15,41,000/- ஐ  திரும்ப தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ  98,000/-   மற்றும் அவர்களால் ஏற்பட்ட வணிக இழப்புக்கு ரூ  3,00,000/- மற்றும் இந்த வழக்கின் செலவு தொகை ஆகியவற்றை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் சரி என கருதும் இதர தீர்வுகளையும் தமக்கு வழங்குமாறும் முறையீட்டாளர் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

முதலாம்   எதிர் தரப்பினர்  தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்

 

06.       முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர்  நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும்  முதலாம் எதிர் தரப்பினர்   தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

07.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல இரண்டாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளரால் வாங்கப்பட்ட இயந்திரத்தின்   உற்பத்தியாளர் என்றும் தாங்கள் இரண்டாம் எதிர் தரப்பினரின் விநியோகஸ்தர் என்றும் இயந்திரம் தங்கள் மூலமாக முறையீட்டாளரால் வாங்கப்பட்டது உண்மை என்றும் இயந்திரத்திற்கு ரூ 15,41,000/- செலுத்தப்பட்டு வாங்கப்பட்டது என்றும் இந்த இயந்திரத்துக்கு ஓராண்டு உத்தரவாதம் உள்ளது என்றும்  உத்திரவாத காலத்தில் முதலாம் எதிர் தரப்பினர்   பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இயந்திரம் வழங்கப்பட்ட போது பெயர் பலகை,   தரவு பட்டியல் பலகை மற்றும் உபயோகிப்பாளர் கையேடு ஆகிய வழங்கப்படவில்லை என்றும் இயந்திரத்தை உபயோகிக்க பயிற்சி வழங்கப்படவில்லை என்றும் முறையீட்டாளர்  தெரிவித்திருப்பது உண்மைக்கு   புறம்பானது என்றும் புகாரில் கடந்த ஜூன் இரண்டாவது வாரத்திலும் பின்னரும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக சொல்லப்பட்டு கூறப்பட்டுள்ள சங்கதிகள் யாவும் உண்மைக்கு புறம்பானவை என்றும் முறையீட்டாளர் கேட்டுள்ள   பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கதல்ல என்றும் இந்த இயந்திரத்தை வாங்குவதற்கு முன்பாக பாலக்காட்டில் உள்ள தங்களது இயந்திரத்தை வாங்கியவரின் பணிமனையில் முறையீட்டாளருக்கு நேரடி இயந்திர இயக்கம் குறித்த விளக்கம், பயிற்சி வழங்கப்பட்டது என்றும்   திருப்தி அடைந்த முறையீட்டாளர் தங்கள் மூலமாக இரண்டாம் எதிர்   தரப்பினர் உற்பத்தி செய்த புகாரில் சொல்லப்பட்டுள்ள இயந்திரத்தை கடந்த 15-03-2016 ஆம் தேதியில் விலைக்கு வாங்கினார் என்றும்   அப்போது அவருக்கு ரூ 1,48,500/-  தள்ளுபடி   வழங்கப்பட்டது என்றும் முதலாம் எதிர் தரப்பினர்   தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார். 

 

08.       இரண்டாம் எதிர் தரப்பினரால் முறையீட்டாளருக்கு நேரடியாக இயந்திரம் வழங்கப்பட்டு அந்த இயந்திரமானது முறையீட்டாளரின் நிறுவனத்தில் பொருத்தம் (install) செய்யப்பட்டு சோதனை ஓட்டம் செய்து காண்பிக்கப்பட்டது என்றும் இயந்திரத்தில் பெயர்  பலகைக்கு பதிலாக இரண்டாம் எதிர் தரப்பினரின் அடையாளக் குறியீடு இடம்பெற்றுள்ளது என்றும் இயந்திரத்தை வழங்கிய போது உபயோகிப்பாளர் கையேடு உள்ளிட்டவை முறையீட்டாளருக்கு வழங்கப்பட்டு விட்டது என்றும் பாலக்காட்டில் உள்ள பணிமனையில் முறையீட்டாளருக்கு விற்பனை செய்யப்பட்ட இயந்திரம் இயங்கி வருவதை பார்த்து அதன் கட்டமைப்பு வடிவமைப்பை தெரிந்து கொண்டு அதன் பின்னர்தான் முறையீட்டாளர் இந்த இயந்திரத்தை வாங்கினார் என்றும் இந்த இயந்திரமானது இந்தியா முழுவதும்   விற்பனை செய்யப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகிறது என்றும் இயந்திரத்தின் பாகங்கள் தரம் வாய்ந்த   உலோகங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டது என்றும்     ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் தவறாக இயந்திரத்தை கையாண்டதன் மூலமாகவே இயந்திரம் பழுதுபட்டுள்ளது என்றும் தாங்கள் ஒரு விநியோகஸ்தர் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் தொழில்நுட்ப மற்றும் சேவை பணியாளர்கள் தான் வாடிக்கையாளர்களுக்கு   இயந்திரத்திற்கான சேவையை வழங்குகிறார்கள் என்றும் இயந்திரத்துக்கு தங்கள் தரப்பில் எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை என்றும் புகாரில் சொல்லப்பட்டுள்ள குறைபாடு இருப்பின்  விநியோகஸ்தர் என்ற முறையில் தாங்கள்   பொறுப்பாளர் அல்ல என்றும் தங்கள் தரப்பில் எவ்வித   குறைபாடும் ஏற்படவில்லை என்றும் தங்கள் மீதான புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பல சங்கதிகளை தெரிவித்தும் முதலாம் எதிர் தரப்பினர்   தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.

 

09.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:

 

1)         முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர்  கூறுவது  போல்  எதிர் தரப்பினர்கள்   உற்பத்தி குறைபாடு உடைய இயந்திரத்தை விற்பனை செய்து சேவை   குறைபாடு   புரிந்து உள்ளனரா?   

 

2)         எதிர் தரப்பினர்கள்  உற்பத்தி குறைபாடு உடைய இயந்திரத்தை விற்பனை செய்து சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?

 

3)         வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?

 

எழு வினா எண் – 1

 

10.       இரண்டாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரத்தை முதலாம் எதிர் தரப்பினர் மூலமாக முறையீட்டாளர் விலைக்கு வாங்கினார் என்று முதலாம் எதிர் தரப்பினர் பதில் உரையில் ஒப்புக் கொண்டுள்ளதால் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

11.       முறையீட்டாளர்  புகாரில் கூறி உள்ளது போல இரண்டாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளரால் வாங்கப்பட்ட இயந்திரத்தின்   உற்பத்தியாளர்,  முதலாம் எதிர் தரப்பினர் இரண்டாம் எதிர் தரப்பினரின் விநியோகஸ்தர் என்ற   சங்கதிகள் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விவரங்கள் ஆகும். முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல முறையீட்டாளர் இயந்திரத்தை ரூ 15,41,000/- செலுத்தப்பட்டு வாங்கப்பட்டது செலுத்தி வாங்கினார் என கூறப்படும் நிலையில் முறையீட்டாளருக்கு மேற்கண்ட தொகைக்கு ரசீது வழங்கிய பின்னர் அவருக்கு ரூ 1,48,500/-   தள்ளுபடி வழங்கப்பட்டு அந்தத் தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறி முதலாம் எதிர்   தரப்பினர் சமர்ப்பித்துள்ள சான்றாவணங்கள் ஏற்புடையதாக உள்ளன.  இந்நிலையில்  புகாரில் கூறியுள்ள இயந்திரத்தை   ரூ 13,92,500/- என்ற விலைக்குத்தான் முறையீட்டாளர் வாங்கியுள்ளார் என்றும் இந்த வகையில்   முறையீட்டாளர் புகாரில் உண்மையான இயந்திரத்தின் விலையை தெரிவிக்கவில்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

12.       முறையீட்டாளர் புகாரில் இயந்திரத்துக்கு ஓராண்டு காலம் உத்தரவாதம் வழங்கப்பட்டது என்றும் இந்த இயந்திரத்தின் பராமரிப்பை (periodical maintenance) உத்தரவாத காலத்தில் முதலாம் எதிர் தரப்பினர் செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் கூறும் நிலையில் முறையீட்டாளரால் எதிர் தரப்பினர்கள் வழங்கிய எந்த உத்திரவாத ஆவணத்தையும் முதலாம் எதிர் தரப்பினரின் இயந்திர பராமரிப்பு ஒப்புகையையும் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் முதலாம்  எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையில் முறையீட்டாளர் குறிப்பிடுவது போல உத்திரவாதம் வழங்கப்பட்டது என்பதையும் இரண்டாம் எதிர் தரப்பினர் இயந்திரத்தை உத்தரவாத காலத்தில் பராமரிக்க ஒப்புக்கொண்டனர் என்பதையும்   மறுத்து உள்ளார். முறையீட்டாளர் புகாரில் இயந்திரத்துக்கு ஓராண்டு காலம் உத்தரவாதம் வழங்கப்பட்டது என்றும் இந்த இயந்திரத்தின் பராமரிப்பை (periodical maintenance) உத்தரவாத காலத்தில் முதலாம் எதிர் தரப்பினர் செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டது என கூறுவது முறையீட்டாளரால் நிரூபிக்கப்படவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

13.       முறையீட்டாளர் புகாரில் இயந்திரத்துடன் பெயர் பலகை, தரவு பட்டியல் பலகை மற்றும் இயந்திரத்தை பற்றிய விவரக்குறிப்புகள் இடம் பெறவில்லை என்றும் இயந்திரத்தை பற்றிய விளக்கம் அல்லது பயிற்சி   தமக்கு வழங்கப்படவில்லை என்றும் உபயோகிப்பாளர் கையேடு, மின் வரைபடம் மின்சார மற்றும் இயந்திர வரைபடம் (electrical, machine and hydraulic drawing) உள்ளிட்டவற்றை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்கவில்லை என்றும் கூறும் நிலையில் இயந்திரத்தில் பெயர்  பலகைக்கு பதிலாக இரண்டாம் எதிர் தரப்பினரின் அடையாளக் குறியீடு (logo) இடம்பெற்றுள்ளது என முதலாம் எதிர் தரப்பினர் பதிலில் தெரிவித்துள்ளது ஏற்புடையதாக உள்ளது என்றும் இயந்திரத்தை பற்றிய சோதனை விளக்கம் அல்லது பயிற்சி   தமக்கு வழங்கப்படவில்லை என்றும் உபயோகிப்பாளர் கையேடு, மின் வரைபடம் மின்சார மற்றும் இயந்திர வரைபடம் (electrical, machine and hydraulic drawing) உள்ளிட்டவற்றை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்கவில்லை.   என எதிர் தரப்பினர்களுக்கு இயந்திரம் வாங்கிய சிறிது காலத்துக்குள் எவ்வித  கடிதத்தை    அல்லது மின்னஞ்சலை   முறையீட்டாளர் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுவதற்கு பின்னரே   இத்தகைய குற்றச்சாட்டுகளை முறையீட்டாளர் முன்வைத்துள்ள நிலையில் இவற்றை   புறம் தள்ளுவது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

14.         இரண்டாம் எதிர் தரப்பினரால் முறையீட்டாளருக்கு நேரடியாக இயந்திரம் வழங்கப்பட்டு அந்த இயந்திரமானது முறையீட்டாளரின் நிறுவனத்தில் பொருத்தம் (install) செய்யப்பட்டு சோதனை ஓட்டம் செய்து காண்பிக்கப்பட்டது என்று முதலாம் எதிர் தரப்பினர் பதில்  உரையில் தெரிவித்துள்ளார். இந்த பதில் உரையை தாக்கல் செய்த பின்னர் முறையீட்டாளரால் தாக்கல் செய்யப்பட்ட நிரூபண வாக்குமூலத்தில் மேற்கண்ட சங்கதியை முறையீட்டாளர் மறுக்கவில்லை.  முறையீட்டாளர்   தாக்கல் செய்துள்ள 5 ஆம் சான்றாவணமான மின்னஞ்சல் பரிவர்த்தனைகளில் இரண்டாம் எதிர் தரப்பினர் தமது இயந்திரத்தை வேறு நபர்கள் மூலம் சோதனை செய்யக் கூடாது என தெரிவித்துள்ளார். முறையீட்டாளர் புகாரில் இரண்டாம் எதிர் தரப்பினரை தொடர்பு கொண்ட போது   கோயம்புத்தூரில் தங்களுக்கு தகுதி வாய்ந்த சேவை பணியாளர்கள் இல்லை என்றும் சேவை பொறியாளரை அனுப்பி வைத்து பிரச்சனையை சரி செய்வதாக கூறினார் என்றும் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.  மேற்கண்ட சங்கதிகள் மூலமாக தெரிய வருவது என்னவெனில் முதலாம் எதிர் தரப்பினர் இரண்டாம் எதிர் தரப்பினால் உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரத்தை விற்பனை செய்வது மட்டுமே, அதனை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்திற்கு சென்று அமைத்து தருவது, பயிற்சி வழங்குவது பராமரிப்பது சேவை வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்வது  இரண்டாம் எதிர் தரப்பினர் ஆவார் என்பதாகும். இயந்திரத்தில்  உற்பத்தி குறைபாடு இருப்பின் அதற்கு இயந்திரத்தின் உற்பத்தியாளரே பொறுப்பு.  இந்நிலையில் முதலாம் எதிர் தரப்பினர் மீதான முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்று என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

15.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல அவரால் விலைக்கு வாங்கப்பட்ட இயந்திரம் உற்பத்தி குறைபாடு  உடையதா?  என்பதை ஆய்வு செய்யும் பொருட்டு இந்த ஆணையத்தால் ஆணையர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு அவருடன் இயந்திர பொறியாளர் ஒருவர் இணைந்து இயந்திரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்த ஆணையத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  புகாரில் சொல்லப்பட்டுள்ள இயந்திரத்தை பார்வையிட்டு சோதனை செய்த பின்னர் ஆணையர்/வழக்கறிஞர் தமது அறிக்கையை இயந்திர பொறியாளரின் ஆய்வு அறிக்கையுடன் சமர்ப்பித்துள்ளார்.  இயந்திர பொறியாளரின் ஆய்வு அறிக்கை   முறையீட்டாளரின் ஏழாவது சான்றாவணம் ஆகும்.  இந்த அறிக்கையில் இயந்திரம்   உற்பத்தி குறைபாடு உடையது என்றும் கூறப்பட்டுள்ளது.  பழுதுபட்ட பாகங்களை சரி செய்தாலும் இயந்திரம் சரியாக இயங்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆய்வு அறிக்கையின் இறுதியாக கூறப்பட்டுள்ளவற்றை கவனத்தில் கொள்ளும் போது உற்பத்தி குறைபாடுகளுடன் இயந்திரமானது முறையீட்டாளருக்கு இரண்டாம் எதிர் தரப்பினரால் வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த புகாரில் அறிவிப்பை பெற்றுக் கொண்டும் இயந்திரத்தின் உற்பத்தியாளரான இரண்டாம் எதிர் தரப்பினர் இந்த ஆணையத்தின் முன்பு தோன்றி அவரது   பதிலை முன் வைக்காத நிலையில் அவருக்கு எதிராகவே முடிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

எழு வினா எண் –2  

 

16.       முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது உற்பத்தி குறைபாடுகளுடன் இயந்திரமானது முறையீட்டாளருக்கு இரண்டாம் எதிர் தரப்பினரால் வழங்கப்பட்டுள்ளது  என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டிய பரிகாரங்கள் எவை என்பதை ஆய்வு   செய்வது அவசியமாகும். இரண்டாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு விற்பனை செய்த Jaikishan Break Rear Cylinder Hydraulic Press Break Machine என்ற இயந்திரத்தை முறையீட்டாளிடமிருந்து பெற்றுக் கொண்டு புதிதாக Jaikishan Break Rear Cylinder Hydraulic Press Break Machine என்ற இயந்திரத்தையும் இரண்டாம் எதிர் தரப்பினரால் முறையீடாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், வணிக இழப்பு உள்ளிட்ட சிரமங்களுக்கு இழப்பீடு  ரூ 1,07,500/-மும் அல்லது இந்த இயந்திரத்துக்கு முறையீட்டாளர்களுக்கு செலுத்திய ரூ 13,92,500/- மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரால் முறையீடாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், வணிக இழப்பு உள்ளிட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக இரண்டாம் எதிர்  தரப்பினர் முறையீட்டாளருக்கு ரூ 1,07,500/-  ஆக மொத்தம் ரூ 15,00,000/-   ஐ முறையீட்டாளருக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் மேற்படி 15   லட்சமும் அதற்கு 18-11-2023 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை 9% வட்டியும் முறையீட்டாளருக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

எழு வினா எண் – 3

 

17.       இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

 

01.       இரண்டாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு விற்பனை செய்த Jaikishan Break Rear Cylinder Hydraulic Press Break Machine என்ற இயந்திரத்தை முறையீட்டாளிடமிருந்து பெற்றுக் கொண்டு புதிதாக Jaikishan Break Rear Cylinder Hydraulic Press Break Machine என்ற இயந்திரத்தையும் இரண்டாம் எதிர் தரப்பினரால் முறையீடாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், வணிக இழப்பு உள்ளிட்ட சிரமங்களுக்கு இழப்பீடு  ரூ 1,07,500/-மும் அல்லது இந்த இயந்திரத்துக்கு முறையீட்டாளர்களுக்கு செலுத்திய ரூ 13,92,500/- மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரால் முறையீடாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், வணிக இழப்பு உள்ளிட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக இரண்டாம் எதிர்  தரப்பினர் முறையீட்டாளருக்கு ரூ 1,07,500/-  ஆக மொத்தம் ரூ 15,00,000/-   ஐ முறையீட்டாளருக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் மேற்படி 15   லட்சமும் அதற்கு 18-11-2023 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை 9% வட்டியும் முறையீட்டாளருக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் வழங்க வேண்டும்

 

02.       முதலாம் எதிர் தரப்பினர் மீதான முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.

 

03.       புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.வேறு எந்த பரிகாரங்களும் இல்லை

 

            இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து என்னால் திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று       19-09-2023   ஆம்  நாளன்று பகரப்பட்டது.

 

ஒம்/-                                                                                                                  ஒம்/-

உறுப்பினர் – I                                                                                            தலைவர்.    

 

முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள்:

 

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

15-03-2016

இயந்திரம் வாங்கியதற்கான ரசீது

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

05-09-2017

முதலாம் எதிர் தரப்பினருக்கு அனுப்பிய அறிவிப்பு

 ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

11-09-2017

முதலாம் எதிர் தரப்பினரின் அஞ்சல் ஒப்புகை அட்டை

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

12-09-2017

இரண்டாம் எதிர் தரப்பினரின் அஞ்சல் ஒப்புகை அட்டை

 ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

-

மின்னஞ்சல்   பரிவர்த்தனை

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

-

 புகைப்படங்கள்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

-

பொறியாளர் கருத்துரை

 ஜெராக்ஸ்

 

 

 

முதலாம் எதிர்தரப்பினர்  தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

எம.சா.ஆ.1

26-02-2016

முறையீட்டாளர் கையொப்பம் செய்த வவுச்சர்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.2

29-02-2016

முறையீட்டாளர் கையொப்பம் செய்த வவுச்சர்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.3

-

முதலாம் எதிர் தரப்பினரின் கணக்கு அறிக்கை  

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.4

21-03-2016

  மின்னஞ்சல் பரிவர்த்தனை

ஜெராக்ஸ்

 

இரண்டாம் எதிர்தரப்பினர்  தரப்பு சான்றாவணங்கள்: இல்லை

முறையீட்டாளர்   தரப்பு  சாட்சி:   திரு திருமலை நாதன், முறையீட்டாளர்

முதலாம் எதிர்தரப்பினர்  சாட்சி:  திரு  டி.டி. டென்சில் பிரான்சிஸ் சேவியர்

இரண்டாம் எதிர்தரப்பினர்  சாட்சி:  இல்லை

 

ஒம்/-                                                                                                                   ஒம்/-

உறுப்பினர் – I                                                                                            தலைவர்.                                                                            

 
 
[ THIRU DR.V.RAMARAJ.,M.L.,Ph.D.,]
PRESIDENT
 
 
[ THIRU A.S.RATHINASAMY.,M.COM.,B.Ed.,B.L.,]
MEMBER
 

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.