புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள் (Coimbatore) : 10-01-2018
உத்தரவு பிறப்பித்த நாள் : 12-09-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 31/2022.
கோயம்புத்தூர், டாக்டர் நஞ்சப்பா சாலை, இலக்கம் 313 -ல் இருக்கும் M/s Pioneer Welding Equipments, நிர்வாக அங்கீகாரம் பெற்ற எஸ். டி. வெங்கடேஷ் மூலம் - முறையீட்டாளர்
- எதிர்-
கோயம்புத்தூர், கணபதி -ல் உள்ள டிசிஐ எக்ஸ்பிரஸ் லிமிடெட், கிளை அலுவலகம் - எதிர் தரப்பினர்
ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 இந்த புகாரில் முறையீட்டாளர் எதிர் தரப்பினர் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 12 -ன்படி புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திருவாளர்கள் கே. ஸ்ரீதரன் மற்றும் கே. நாகராஜ் வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர் மீது ஒருதலை பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்டும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 28-08-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம், முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணம்-8, மற்றும் வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
02. தாம் கடந்த 16 ஆண்டுகளாக வெல்டிங் மிஷின் விற்பனை செய்தும் பழுதுபார்த்தும் வருகிறேன் என்றும் கடந்த 12-01-2017 ஆம் தேதி ரூ 30,450/- மதிப்புள்ள வெல்டிங் மெஷின் ஒன்றை எதிர் தரப்பினர் மூலமாக M/s Mahindra Hardware & Electrical Shop, Valsad – 396 195 என்ற வாடிக்கையாளருக்கு தாம் அனுப்பி வைத்தேன் என்றும் கடந்த 19-01-2017 ஆம் தேதியில் மேற்படி வாடிக்கையாளரிடம் எதிர் தரப்பினர் தாம் அனுப்பிய இயந்திரத்தை ஒப்படைத்துள்ளார் என்றும் அதைப் பெற்ற தமது வாடிக்கையாளர் தாம் அனுப்பிய இயந்திர பார்சலை பிரித்துப் பார்க்கும்போது வெல்டிங் மிஷின் உருக்குலைந்த நிலையில் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது எனக் கூறி தமக்கு அதனை வாங்குவதை ரத்து செய்து கடிதம் எழுதியதோடு சரியான முறையில் வெல்டிங் மிஷின் தமக்கு வழங்கப்படாததால் மிகுந்த மன உளைச்சல் மற்றும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் என்றும் இதுகுறித்து எதிர் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உரிய இழப்பீட்டை பெற்று தருவதாக எதிர் தரப்பினர் உறுதி அளித்தார் என்றும் ஆனால் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் இதனால் தான் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பியும் எதிர்தரப்பினர் எவ்வித பதிலையும் தரவில்லை என்றும் எதிர் தரப்பினர் செய்கை சேவை குறைபாடு என்றும் இன்னும் பிற சங்கவைகளையும் தெரிவித்து முறையீட்டாளர் புகார் தாக்கல் செய்துள்ளார்.
03. எனவே, தம்மால் எதிர் தரப்பினர் மூலமாக அனுப்பப்பட்ட வெல்டிங் இயந்திரத்தின் மதிப்பு ரூ 30,450/- & தமது பெயருக்கு எதிர் தரப்பினர் களங்கம் ஏற்படுத்தி உள்ளதால் அதற்கு இழப்பீடாக ரூ 1,00,000/- மற்றும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூ 10,000/- தமக்கு எதிர் தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையும் சரி என கருதும் இதர தீர்வுகளையும் தமக்கு வழங்குமாறும் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
04. எதிர் தரப்பினர் இந்த ஆணையத்தின் அறிவிப்பை பெற்றுக் கொண்டு ஆணையத்தின் முன்பு தோன்றி எவ்வித பதிலையும் தராததால் எதிர் தரப்பினர் மீது ஒருதலை பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றாத தரப்பினராக முடிவு செய்யப்பட்டுள்ளார்.
05. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்து உள்ளரா?
2) எதிர் தரப்பினர் குறைபாடான சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
06. எதிர் தரப்பினர் மூலமாக வெல்டிங் மிஷின் அனுப்பியதற்கு ஆதாரமாக பணம் செலுத்திய ரசீதை முறையீட்டாளர் இந்த ஆணையத்தின் முன்பாக இரண்டாம் சான்றாவணமாக சமர்ப்பித்து உள்ளதால் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. முறையீட்டாளர் வெல்டிங் மெஷின் ஒன்றை எதிர் தரப்பினர் நிறுவனம் மூலமாக அவரது வாடிக்கையாளருக்கு அனுப்பியதற்கு ஆதாரமாக முறையீட்டாளர் தரப்பு இரண்டாவது சான்றாவணம் உள்ளது. முறையீட்டாளரால் அனுப்பப்பட்ட மிஷினை எதிர் தரப்பினர் நல்ல நிலையில் முறையீட்டாளரின் வாடிக்கையாளரிடம் சேர்க்கவில்லை என்பதை முறையீட்டாளர் தரப்பு நான்காம் சான்றாவணம் காட்டுகிறது. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் மூலம் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
எழு வினா எண் – 2
07. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் முறையீட்டாளர் புகாரில் கேட்டுள்ள பரிகாரம் அவருக்கு வழங்கத்தக்கதா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். முறையீட்டாளரால் எதிர் தரப்பினர் மூலமாக அனுப்பப்பட்ட வெல்டிங் இயந்திரத்தின் மதிப்பு ரூ 30,450/- மற்றும் தமது பெயருக்கு எதிர் தரப்பினர் களங்கம் ஏற்படுத்தி உள்ளதால் அதற்கு இழப்பீடாக ரூ 1,00,000/- ஆகியவற்றை முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் எதிர் தரப்பினர் வழங்க வேண்டும் .தவறினால் மேற்படி மொத்த தொகை ரூ 1,30,450/ க்கு 10-10-2023 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி சேர்த்து எதிர் தரப்பினர் வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
08. முறையீட்டாளரின் புகாரில் உள்ள சங்கதிகளின் தன்மையை கருதி முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினரால் ஏற்பட்ட வழக்கு செலவு தொகையாக ரூ 5,000/- ஐ இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரால் எதிர் தரப்பினர் மூலமாக அனுப்பப்பட்ட வெல்டிங் இயந்திரத்தின் மதிப்பு ரூ 30,450/- மற்றும் தமது பெயருக்கு எதிர் தரப்பினர் களங்கம் ஏற்படுத்தி உள்ளதால் அதற்கு இழப்பீடாக ரூ 1,00,000/- ஆகியவற்றை முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் எதிர் தரப்பினர் வழங்க வேண்டும். தவறினால் மேற்படி மொத்த தொகை ரூ 1,30,450/ க்கு 10-10-2023 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி சேர்த்து எதிர் தரப்பினர் வழங்க வேண்டும்.
02. முறையீட்டாளரின் புகாரில் உள்ள சங்கதிகளின் தன்மையை கருதி முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினரால் ஏற்பட்ட வழக்கு செலவு தொகையாக ரூ 5,000/- ஐ இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 12-09-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 12-01-2017 | வெளி மாநிலத்தில் பொருட்களை விற்பதற்கான படிவம் | அசல் |
ம.சா.ஆ.2 | 12-01-2017 | எதிர் தரப்பினர் வழங்கிய ரசீது | அசல் |
ம.சா.ஆ.3 | 12-01-2017 | எதிர் தரப்பினர் மூலமாக அனுப்பப்பட்ட பொருளுக்கான வாடிக்கையாளர் ரசீது | அசல் |
ம.சா.ஆ.4 | 19-01-2017 | வாடிக்கையாளர் பொருளை நிராகரித்த கடிதம் | அசல் |
ம.சா.ஆ.5 | 09-02-2017 | வழக்கறிஞர் அறிவிப்பு | அலுவலக நகல் |
ம.சா.ஆ.6 | 16-02-2017 | அஞ்சல் ஒப்புகை அட்டை | அசல் |
ம.சா.ஆ.7 | - | திரும்பி வந்த அஞ்சல் உறை | அசல் |
ம.சா.ஆ.8 | 13-02-2017 | அஞ்சல் ரசீதுகள் | அசல் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு எஸ் டி வெங்கடேஷ்
எதிர்தரப்பினர் சாட்சி: இல்லை
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.