புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 11-06-2014
உத்தரவு பிறப்பித்த நாள் : 16-05-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 26/2014.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், வரகூர் கிராமம் ஆசிரியர் காலனியில் வசிக்கும் ஜெயராமன் மகன் சிவமணி - முறையீட்டாளர்
- எதிர்-
01. நாமக்கல் மாவட்டம், வரகூர் கிளை, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, கிளை மேலாளர்,
02. தூத்துக்குடி நகர், வி இ சாலை, இலக்கம் 57 -ல் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைவர். - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு, திரு. எஸ். செல்வம், வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு டி. வி. ரகு, வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 25-04-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள்-18, எதிர் தரப்பினர்களின் பதிலுரை, அவர்கள் தரப்பு சாட்சியம்-1, சான்றாவணங்கள்-23 மற்றும் இருதரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தம்மிடம் முதலாம் எதிர் தரப்பினர் வசூலித்த தொகை ரூபாய் 75 ஆயிரத்தை அசல் தொகை ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரத்திலிருந்து கழித்துவிட்டு மீத தொகையை சட்டப்படியான வட்டியுடன் சேர்த்து 84 மாத தவணைகளாக நிர்ணயம் செய்து 2013 ஜூன் மாதம் முதல் வசூலித்துக் கொள்ளும் வகையில் உத்தரவிட வேண்டும் என்றும் காலக்கெடு தொடங்குவதற்கு முன்பாகவே கல்வி கடனை வசூலிக்க எதிர் தரப்பினர்கள் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 2 லட்சத்தையும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாடு காரணமாக தமக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தையும் இந்த வழக்கின் செலவு தொகையும் தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இந்த வழக்கின் தன்மையைக் கருதி தக்கது என கருதும் இதர பரிகாரங்களை ஆணையம் வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாம் கடந்த 2009 ஆம் ஆண்டு ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரத்தை முதலாம் எதிர்த்தரப்பினரிடம் கல்வி கடனாக பெற்றேன் என்றும் 2012 ஆம் ஆண்டு தாம் படிப்பை முடித்து விட்டேன் என்றும் தமது கல்வி கடனை வட்டியுடன் கணக்கிட்டு தவணைத் தொகையினை நிர்ணயித்து எதிர் தரப்பினர்கள் வசூலிக்க தொடங்க வேண்டிய காலம் ஜூன் 2013 என்றும் ஆனால், தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே அரசிடமிருந்து தமது கல்வி கடனுக்காக வழங்கப்பட்ட மானிய தொகையை எதிர் தரப்பினர்கள் பெற்றுக் கொண்டு அதனை கடன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்கள் என்றும் இத்தகைய அவர்களது செய்கை சேவை குறைபாடு என்றும் இப்படி கடனை திருப்பி செலுத்த தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தமது தரப்பிலிருந்து வழங்கப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கடனில் ரூபாய் 70 ஆயிரத்தை கட்டாயப்படுத்தி எதிர் தரப்பினர்கள் வசூலித்து விட்டார்கள் என்றும் தமது தாயார் தங்கம்மாள் பெற்ற விவசாய கடனில் அவரது அனுமதி இன்றி ரூ 16,600/- எடுத்து தமது கடன் கணக்கில் வரவைத்து கொண்டார்கள் என்றும் கடந்த 27-04-2013 ஆம் தேதியில் தமது கடன் காலம் கடந்து விட்டதாக (over due) தெரிவித்து ரூ 5,000/- தமது அனுமதி இல்லாமல் கல்வி கடன் கணக்கில் வரவு வைத்துவிட்டு ரூ 5,000/- திரும்ப செலுத்துமாறு எதிர் தரப்பினர்கள் கூறுகிறார்கள் என்றும் தமது இல்லத்தில் வாடகைக்கு வசித்து வந்த முதலாம் எதிர் தரப்பினரின் ஊழியர் திரு ராம்குமார் என்பவரை கட்டாயப்படுத்தி தமது கல்வி கடனுக்காக அவர் தமக்கு செலுத்த வேண்டிய நான்கு மாத வாடகை பணத்தை அவரிடமிருந்து பெற்று கல்வி கடன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்கள் என்றும் மேலும் தம்மையும் தமது குடும்பத்தினரையும் சட்டத்துக்கு புறம்பாக கடனை செலுத்துமாறு எதிர் தரப்பினர்கள் மிரட்டி வருகிறார்கள் என்றும் கூடுதல் வட்டியை நிர்ணயம் செய்து அதனை வசூலிக்கிறார்கள் என்றும் இத்தகைய எதிர் தரப்பினர்களின் நடவடிக்கைகள் சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த மன உளைச்சலும் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் தெரிவித்து முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, தம்மிடம் முதலாம் எதிர் தரப்பினர் வசூலித்த தொகை ரூபாய் 75 ஆயிரத்தை அசல் தொகை ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரத்திலிருந்து கழித்துவிட்டு மீத தொகையை சட்டப்படியான வட்டியுடன் சேர்த்து 84 மாத தவணைகளாக நிர்ணயம் செய்து 2013 ஜூன் மாதம் முதல் வசூலித்துக் கொள்ளும் வகையில் உத்தரவிட வேண்டும் என்றும் காலக்கெடு தொடங்குவதற்கு முன்பாகவே கல்வி கடனை வசூலிக்க எதிர் தரப்பினர்கள் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 2 லட்சத்தையும் எதிர்த்தரப்பினர்களின் சேவை குறைபாடு காரணமாக தமக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தையும் இந்த வழக்கின் செலவு தொகையும் தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இந்த வழக்கின் தன்மையைக் கருதி தக்கது என கருதும் இதர பரிகாரங்களை ஆணையம் வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
05. முதலாம் எதிர் தரப்பினர் பதில் உரை தாக்கல் செய்து அதனை இரண்டாம் எதிர் தரப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார். முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
06. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல முறையீட்டாளர் தர்மபுரியில் உள்ள சப்தகிரி பொறியியல் கல்லூரியில் இளம் பொறியியல் பட்டத்தை 2008 முதல் 2012 ஆம் வரையிலான நான்காண்டுகள் படிப்பு காலம் கொண்ட இளம் பொறியியல் படிப்பில் சேர்ந்து ஓராண்டு கழித்து தங்களிடம் கல்வி கடனுக்காக அணுகினார் என்றும் அவருக்கு ரூ 1,30,000/-கல்விக்கடன் அனுமதிக்கப்பட்டது என்றும் இந்த கடன் கணக்கிற்கு முறையீட்டாளரின் தந்தை ஜெயராமன் பிணையாளராக இருந்தார் என்றும் இவ்வாறு தங்களிடம் கடன் பெற்ற தொகையை முறையீட்டாளர் அவரது மேற்படி கல்வி காலத்தை முடித்த ஆறு மாத காலத்தில் அல்லது அவர் வேலை ஏதேனும் ஒன்றில் சேர்ந்த ஒரு மாத காலத்தில் மாதாந்திர தவணை தொகையை 60 மாதங்களில் மாதம் ரூ 2,165/- வீதம் தங்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்றும் அந்த அடிப்படையில் 02-04-2013 ஆம் தேதி முதல் மாதாந்திர தவணை தொகையை செலுத்த வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது என்றும் ஆரம்பத்தில் 02-09-2013 ஆம் தேதி முதல் மாதாந்திர தவணை தொகையை செலுத்த வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது என்றும் 20-08-2014 ஆம் தேதிக்கு பிறகு அசல் மற்றும் வட்டியை கணக்கிட்டு மாதாந்திர தவணை தொகை கணக்கிடப்பட்டுள்ளது என்றும் அனுமதிக்கப்பட்ட கல்வி கடனில் முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் ஏற்கனவே முறையீட்டாளரால் செலுத்தப்பட்டு விட்டதால் அந்தத் தொகை அவரது கடன் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்பட்டது என்றும் கல்வி கடனுக்காக அரசால் வழங்கப்பட்ட மானிய தொகை ரூ 38,151/- முறையீட்டாளரின் கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்றும் மேற்கண்டவாறு முறையீட்டாளரின் கடன் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை ரூ 46,173/- மட்டுமே என்றும் முறையீட்டாளர் கூறுவது போல ரூ 75 ஆயிரம் அல்ல என்றும் பெற்ற கடனில் ரூ 75 ஆயிரத்தை கழித்துக் கொண்டு ரூபாய் 55,000/- க்கு 84 மாதாந்திர தவணைத் தொகைகளாக பிரிக்க வேண்டும் என்று முறையீட்டாளர் கூறுவது சரியல்ல என்றும் ஒப்பந்தப்படி கடன் பெற்றுக் கொண்டு தன்னிச்சையாக ஒப்பந்தத்தின் அம்சங்களை முறையீட்டாளர் மாற்ற இயலாது என்றும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
07. 27-03-2014 ஆம் தேதியில் முறையீட்டாளர் தன்னிச்சையாக அவரது கடன் கணக்கில் ரூ 5,000/- செலுத்தியுள்ளார் என்றும் அவ்வாறு ரூ 5,000/- செலுத்தி விட்டு தாங்கள் திரும்ப அதனை கேட்டதாக கூறுவது தவறு என்றும் தாங்கள் தன்னிச்சையாக முறையீட்டாளரின் தாயாருக்கு விவசாய கடன் ரூபாய் 80 ஆயிரத்தை ரூபாய் ஒரு லட்சத்துக்கு உயர்த்தி பின்னர் ரூ 16,600/- ஐ முறையீட்டாளரின் கடன் கணக்கில் வரவு வைத்ததாக புகாரில் உள்ளது தவறு என்றும் முறையீட்டாளரின் தாயார் தனது கடனை ரூபாய் ஒரு லட்சமாக உயர்ந்த கடிதம் அளித்துள்ளார் என்றும் முறையீட்டாளரின் கடன் கணக்கில் ரூ 16,600/- செலுத்துவதற்கான செலுத்து சீட்டில் கையொப்பம் செய்து தானாகவே செலுத்தி உள்ளார் என்றும் தங்களது வங்கியின் ஊழியர் ராம்குமார் என்பவர் முறையீட்டாளரின் வீட்டில் வாடகைதாரராக இருந்தது இருந்து வந்து அவரை நிர்பந்தம் செய்து முறையீட்டாளருக்கு செலுத்த வேண்டிய நான்கு மாத வாடகை பணத்தை முறையீட்டாளரின் வங்கிக் கணக்கில் கடன் கணக்கில் செலுத்தி வரவு வைக்கப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பானது என்றும் அதனை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் உண்மையில் முறையீட்டாளரின் வாடகைதாரர் ராம்குமார் என்பவர் தானாகவே முறையீட்டாளரின் வேண்டுகோளின்படி இரண்டு முறை மட்டும் முறையீட்டாளரின் கடன் கணக்கில் இணையதளம் வழியாக பணம் செலுத்தியுள்ளார் என்றும் முறையீட்டாளர் பணம் செலுத்த தொடங்க வேண்டிய காலத்துக்கு முன்பே தங்கள் தரப்பில் கடன் கணக்கில் பணம் செலுத்துமாறு நிர்பந்தம் செய்யப்பட்டது என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் வழங்கப்பட்ட கடனுக்கு ஒப்பந்தத்தை விட கூடுதலாக வட்டி தொகை கேட்டதாக கூறுவதும் ஆதாரம் அற்றது என்றும் தங்கள் தரப்பில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அமலில் உள்ள இதர விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் கடன் வாங்கிய பின்பு முறையீட்டாளர் ஒப்புக்கொண்டபடி செயல்படாமல் ஒப்பந்தத்தை மீறி உள்ளார் என்றும் முறையீட்டாளர் 27-03-2014 ஆம் தேதி வரை பலமுறை தன்னிச்சையாக வந்து பணம் செலுத்தி உள்ளார் என்றும் அவ்வாறு செலுத்தப்பட்ட காலங்களில் எவ்வித குற்றச்சாட்டையும் வங்கியின் மீது வைக்கவில்லை என்றும் தங்கள் தரப்பில் சேவை குறைபாடு எதுவும் புரியவில்லை என்றும் முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
.
08. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனர் எனில் எத்தகைய பரிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
09. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல அவர் தங்களிடம் கடன் பெற்றுள்ளார் என்று எதிர் தரப்பினர்கள் பதிலில் ஒப்புக் கொண்டுள்ளதால் முறையீட்டாளர் அவர்களின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
10. முறையீட்டாளர் புகாரில் கடன் தொகையை செலுத்துவதற்கான தவணை விடுப்பு காலத்திலேயே தமது தரப்பிலிருந்து ரூபாய் 70 ஆயிரத்தை எதிர்த்தரப்பினர்கள் வசூலித்துள்ளார்கள் என்று கூறும் நிலையில் எந்த எந்த தேதிகளில் எவ்வளவு எவ்வளவு தொகைகள் முறையீட்டாளர் தரப்பில் எதிர் தரப்பினர்களுக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலையும் அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையில் கடன் தொகையில் முதலாம் ஆண்டு கல்வி கட்டணமான முதலாவது தவணை ரூ 32,500/- முறையீட்டாளருக்கு முறையீட்டாளர் முதலாம் ஆண்டு படிப்பை முடித்த பின்னர் கல்வி கடன் அனுமதி வழங்கப்பட்டதால் அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள் என்றும் முறையீட்டாளர் ரூபாய் 46,173/-மட்டுமே தங்களிடம் திரும்பச் செலுத்தி உள்ளார்கள் என்றும் ரூ 75,000/- தங்களால் செலுத்தப்பட்டது என கூறுவது தவறு என்றும் தங்களால் செலுத்தப்பட்ட ரூ 75,000/- பணத்தை கழித்துக் கொண்டு அசல் தொகையாக மீதத்தை நிர்ணயம் செய்து அசல் கடன் அனுமதி ஆவணத்தில் 60 மாதங்கள் கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற நிலையை மாற்றி 84 மாதங்கள் செலுத்தும் வகையில் மாதா தவணை தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறுவது சரியல்ல என்றும் எத்தனை மாதங்கள் திரும்ப செலுத்த வேண்டும் என்று அசல் ஒப்பந்தத்தில் நிர்ணயம் செய்த பின்னர் ஒரு தலை பட்சமாக முறையீட்டாளர் கூறுவதை ஏற்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்கள். எவ்வாறு இருப்பினும் எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள சான்றாவனம-17 -ல் (எதிர் தரப்பினர்கள் 02-07-2014 ஆம் தேதி வழங்கிய கடிதத்தில்) அரசு வழங்கிய மானிய தொகை ரூ 36,215/- மற்றும் முறையீட்டாளர் தரப்பில் செலுத்தப்பட்ட தொகை ரூ 46,173/- ஆகிய கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது மட்டுமல்லாது அசல் ஒப்பந்தத்தை மாற்றி அமைத்து 84 மாதங்களுக்கு தவணை தொகைகள் செலுத்தும் வகையில் மாத தவணைத் தொகை 20-08-2014 ஆம் தேதிக்கு பிறகு நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
11. கடன் வழங்கப்பட்ட பிறகு விடுப்பு காலம் முடிந்து மாத தவணைத் தொகை 20-08-2014 ஆம் தேதிக்கு பிறகு நிர்ணயம் செய்யப்படும் என்ற நிலையில் முறையீட்டாளர் தரப்பில் மேற்படி நாளுக்கு முன்னதாக கடன் கணக்கில் ரூ 46,173/- செலுத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. ஆனால் மேற்படி நாளுக்கு முன்னதாக செலுத்தப்பட்ட தொகைகளை எதிர் தரப்பினர்கள் கட்டாயப்படுத்தி வசூலித்தார்கள் என்று நிரூபிக்க வேண்டிய கடமை முறையீட்டாளருடையது ஆகும். முறையீட்டாளரின் வீட்டில் வாடகைதாரராக இருந்து வந்த எதிர் தரப்பினர்கள் வங்கியின் ஊழியரிடம் கட்டாயப்படுத்தி முறையீட்டாளருக்கு தரவேண்டிய நான்கு மாத வாடகை பணத்தை கடன் கணக்கில் அவரிடமிருந்து பெற்று வரவு வைத்தார்கள் என முறையீட்டாளர் கூறும் நிலையில் அதனை நிரூபிக்க போதுமான சாட்சியங்களும் சான்றாவணங்களும் முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. தமது தாயாரின் விவசாய கடனை ரூபாய் 80 ஆயிரத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சத்துக்கு உயர்த்தி அதன் பின்பு ரூ 16,600/- ஐ முறையீட்டாளரின் தாயாரின் கணக்கிலிருந்து தன்னிச்சையாக அவரது அனுமதியின்றி எடுத்து தமது கடன் கணக்கில் எதிர் தரப்பினர்கள் வரவு வைத்துக் கொண்டார்கள் என்று முறையீட்டாளர் கூறும் நிலையில் முறையீட்டாளரின் தாயார் தனது விவசாய கடனை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட கேட்டுக் கொண்ட கடிதத்தையும் முறையீட்டாளரின் தாயார் கையொப்பம் செய்து முறையீட்டாளரின் கடன் கடனுக்கு ரூ 16,600/- ஐ செலுத்திய செலுத்து சீட்டும் எதிர் தரப்பினர்கள் தரப்பில் சான்றாவணங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 27-04-2013 ஆம் தேதியில் தமது கடன் காலம் கடந்து விட்டதாக (over due) தெரிவித்து ரூ 5,000/- தமது அனுமதி இல்லாமல் கல்வி கடன் கணக்கில் வரவு வைத்துவிட்டு ரூ 5,000/- திரும்ப செலுத்துமாறு எதிர் தரப்பினர்கள் கூறுகிறார்கள் என முறையீட்டாளர் கூறும் நிலையில் முறையீட்டாளரின் தந்தை 27-03-2014 ஆம் தேதியில் ரூ 5,000/- முறையீட்டாளரின் கடன் கணக்கிற்காக அவர் கையொப்பம் செய்த பணம் செலுத்தும் சீட்டு எதிர் தரப்பினர்களின் பத்தாவது சான்றாவணமாக குறியீடு செய்யப்பட்டுள்ளது. எதிர் தரப்பினர்கள் கட்டாயப்படுத்தி கடன் விடுப்பு காலத்தில் கடனை வசூலித்தார்கள் என்பதற்கு ஆதாரமாக முறையீட்டாளரின் முறையீட்டாளரின் தாய், தந்தை மற்றும் முறையீட்டாளரின் வீட்டில் குடியிருந்த எதிர் தரப்பினர் வங்கி ஊழியர் போன்றவர்கள் முறையீட்டாளருக்கு ஆதரவாக சாட்சியமும் அளிக்கவில்லை. மேலும் கடனை வசூலிக்க எதிர் தரப்பினர்கள் சார்பில் முறையீட்டாளர் மீதும் அவரது தந்தை மீதும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வரும் நிலையில் முறையீட்டாளர் தரப்பில் 84 மாத தவணைகளாக தொகையைப் பெற்றுக் கொள்ள எதிர் தரப்பினர்களுக்கு ஆணையிட வேண்டும் என்பது தேவையற்ற அவசியம் இல்லாத ஒன்று என்றும் மேலே விவரிக்கப்பட்ட காரணங்களினால் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளரின் கல்வி கடன் திருப்பி செலுத்த வேண்டிய நாளை கடன் விடுப்பு காலம் முடிவதற்கு முன்பே முறையீட்டாளரையும் அவரது குடும்பத்தினரையும் கட்டாயப்படுத்தி கூடுதல் வட்டியை நிர்ணயம் செய்து நியாயமற்ற வர்த்தக நடைமுறை மூலம் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை போதிய சாட்சியம் மற்றும் சான்றாவணங்களுடன் முறையீட்டாளர் நிரூபிக்கவில்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
12. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
13 இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 16-05-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
மு.சா.ஆ.1 | 05-9-2014 | ஒம்புட்ஸ்மேன்முறையீட்டாளருக்கு வழங்கிய கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.2 | 07-08-2014 | எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளரின் தந்தைக்கு வழங்கிய கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.3 | 20-05-2014 | எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளரின் தந்தைக்கு வழங்கிய கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.4 | 02-07-2014 | எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளரின் தந்தைக்கு வழங்கிய கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.5 | 03-03-2014 | கடன் கணக்கு புத்தகம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.6 | 29-03-2014 | முறையீட்டாளரின் தந்தை எதிர் தரப்பினருக்கு அனுப்பிய கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.7 | 17-05-2014 | எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு வழங்கிய கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.8 | 12-09-2013 | பணம் செலுத்திய சீட்டு | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.9 | 11-06-2014 | முறையீட்டாளரின் தந்தை மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பித்த கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.10 | 30-07-2014 | முறையீட்டாளரின் தந்தை எதிர் தரப்பினருக்கு அனுப்பிய கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.11 | - | மாத தவணை விவர பட்டியல் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.12 | - | கடன் கணக்கு புத்தகம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.13 | - | கடன் கணக்கு புத்தகம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.14 | 12-09-2013 | கடன் கணக்கு புத்தகம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.15 | 29-03-2014 | முறையீட்டாளரின் தந்தை எதிர் தரப்பினருக்கு அனுப்பிய கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.16 | 02-04-2013 | அஞ்சல் ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.17 | 15-04-2014 | அஞ்சல் ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.18 | 09-04-2014 | எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளரின் தந்தைக்கு வழங்கிய கடிதம் | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எத.சா.ஆ.1 | 19-03-2009 | முறையீட்டாளரின் தந்தை எதிர் தரப்பினருக்கு அனுப்பிய கடிதம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.2 | 12-05-2009 | முறையீட்டாளரின் தந்தை எதிர் தரப்பினருக்கு அனுப்பிய கடிதம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.3 | 20-06-2009 | கடன் ஒப்பந்தம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.4 | - | கணக்கு அறிக்கை | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.5 | 12-09-2013 | முறையீட்டாளரின் தாயார் கொடுத்த கடிதம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.6 | 12-09-2013 | முறையீட்டாளரின் தாயார் கையொப்பம் செய்த வவுச்சர் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.7 | 12-09-2013 | முறையீட்டாளரின் தாயார் கையொப்பம் செய்த பணம் எடுக்கும் சீட்டு | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.8 | 12-09-2013 | பணம் செலுத்திய வவுச்சர் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.9 | 02-01-2014 | பணம் செலுத்திய வவுச்சர் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.10 | 27-03-2014 | பணம் செலுத்திய வவுச்சர் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.11 | 20-06-2009 | கடன் அனுமதி ஒப்புகை கடிதம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.12 | 03-02-2015 | நிதி அமைச்சக கடிதம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.13 | - | மாதிரி ஒப்பந்தம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.14 | 26-02-2011 | இந்திய வங்கிகள் சங்க செய்தி குறிப்பு | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.15 | 03-02-2015 | நிதி அமைச்சக கடிதம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.16 | 10-05-2009 | முறையீட்டாளர் தரப்பு உறுதிமொழி கடிதம் மற்றும் தவணைத் தொகை காலம் அடங்கிய ஒப்பந்தம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.17 | 27-05-2014 | முறையீட்டாளரின் தந்தைக்கு கொடுத்த பதில் கடிதம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.18 | 26-02-2011 | முறையீட்டாளருக்கு கொடுத்த பதில் கடிதம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.19 | - | திருத்தி அமைக்கப்பட்ட மாத தவணை திட்ட விவரங்கள் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.20 | 02-07-2012 | இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.21 | 01-12-2014 | மத்திய நிதி அமைச்சரின் கடிதம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.22 | 08-06-2015 | முதலாம் எதிர் தரப்பினரால் முறையீட்டாளர் மற்றும் அவரது தந்தை மீது தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் வழக்கின் பிராது | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.23 | 18-03-2016 | முதலாம் எதிர் தரப்பினரால் முறையீட்டாளர் மற்றும் அவரது தந்தை மீது தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் வழக்கில் முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலுரை | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு ஜே சிவமணி முறையீட்டாளர்
எதிர் தரப்பினர்கள் சாட்சி: திரு என் கிருஷ்ணன் வங்கி மேலாளர்
உறுப்பினர் – I தலைவர்.