புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 23-04-2015
உத்தரவு பிறப்பித்த நாள் : 16-05-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 14/2015.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கொளக்காட்டுப்புதூர், இலக்கம் 79 பி -ல் வசிக்கும் பாலு என்ற பிரவீன் பாலா மகன் வேலவன் - முறையீட்டாளர்
- எதிர்-
01. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், மோகனூர் சாலை, பிஎஸ் மருத்துவமனை பின்புறம் உள்ள ஸ்ரீராம் சிட்ஸ் தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட், அதன் கிளை மேலாளர் மூலம்,
02. சென்னை, அஞ்சப்ப நாயக்கன் தெரு, இலக்கம் 123 -ல் பதிவு அலுவலகம் உள்ள ஸ்ரீராம் சிட்ஸ் தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட்,
03. ஹைதராபாத், பைனான்சியல் டிஸ்ட்ரிக்ட், கச்சிபௌலி, ராம்கி செலினியஸ், பிளாட் எண்கள் 32, 33 -ல் தலைமை அலுவலகம் உள்ள ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு அவரே முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு பி. குமரேசன் வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 17-04-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள்-05, எதிர் தரப்பினர்களின் பதிலுரை, எதிர் தரப்பினர்களின் சாட்சியம்-1, எதிர் தரப்பினர்களின் சான்றாவணங்கள்-08 மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02. நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, எதிர் தரப்பினர்களின் முறையற்ற வணிகம் மற்றும் சேவை குறைபாட்டால் பாதிப்படைந்துள்ள தமக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடும் தமது பாலிசிகளுக்கு உரிய தொகையும் இந்த வழக்கின் செலவு தொகையையும் எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்று ஆணையிட கோரி முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தான் கடந்த 2010 ஆம் ஆண்டு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரகளிடம் தலா ரூபாய் 50 ஆயிரத்திற்கான இரண்டு சீட்டு குழுக்களில் சேர்ந்து சந்தா தொகை செலுத்தி வந்தேன் என்றும் அப்போது முதலாம் எதிர் தரப்பினரின் மேலாளர் செந்தில் குமார் வலுக்கட்டாயத்தினால் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு தங்களது பரிசுத்தொகை ரூபாய் 30 ஆயிரத்தை செலுத்தி மூன்றாம் எதிர் தரப்பினரின் நிறுவனத்தின் காப்பீடு தன்னுடைய பெயரிலும் தனது மனைவியின் பெயரிலும் பாலிசியை பெற்றோம் என்றும் தாங்கள் சீட்டுத் தொகைக்கு பாலிசியை பெறுவதற்கான அதிகார கடிதம் முதலாம் எதிர் தரப்பினருக்கு வழங்கவில்லை என்றும் முதலாம் எதிர் தரப்பினரின் மேலாளராக இருந்த செந்தில் குமார் மூன்றாவது எதிர் தரப்பினரின் முகவராக இருந்ததால் தமது சீட்டு பரிசு தொகைகளை நேரடியாக மூன்றாம் எதிர் தரப்பினரிடம் செலுத்தி பாலிசியை வழங்கிவிட்டார் என்றும் பெற்று அவற்றை முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் நிறுவனத்தின் உத்திரவாதத்திற்காக வைத்துக் கொண்டனர் என்றும் தான் கடந்த 16-07-2011 ஆம் தேதி முதல் 24-10-2013 ஆம் தேதி வரை ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன் என்றும் இந்த நேரத்தில் தமது மனைவியிடமும் தமது தந்தையிடமும் சீட்டுக்கான பணத்தை முதலாம் எதிர் தரப்பினர் பெற்றுக் கொண்டுள்ளார் என்றும் கடந்த 19-01-2015 ஆம் தேதி முதலாம் எதிர் தரப் பின்னர் மேலாளராக இருந்த சிவப்பிரகாஷ் என்பவரை சந்தித்து தமது பாலிசிகள் குறித்து கேட்டபோது அவை தானாகவே ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார் என்றும் ஆனால் மேற்படி இரண்டு பாலிசிகளையும் மோசடியாக கையொப்பம் செய்து ஒப்படைப்பு செய்து பணத்தைப் பெற்று முதலாம் எதிர் தரப்பினரின் நிறுவனத்தில் வரவு வைத்துள்ளார்கள் என்றும் இதுகுறித்து கேட்டபோது முதலாம் எதிர் தரப்பினரின் மேலாளர் கொலை மிரட்டல் விடுதலை விடுத்தார் என்றும் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளேன் என்றும் மூன்றாம் எதிர் தரப்பினரிடம் தமது மற்றும் தமது மனைவியின் பாலிசிகளை ஒப்படைப்பு செய்ததன் மூலமாக சுமார் ரூ 19,000/- பணத்தை முதலாம் மற்றும் இரண்டாவது தரப்பினர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்றும் இவ்வாறு பெற்றுக் கொண்ட பணத்தை தங்களது சீட்டுக்கு வரவு வைத்ததாக பொய்யாக கடிதம் கொடுத்துள்ளார் என்றும் இது குறித்து காவல்துறையின் கடிதம் எழுதியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் தான் சிறையில் இருந்த காலத்தில் துணை சீட்டு பதிவாளர் மற்றும் சீட்டு நிதி நடுவர் அவர்களுடன் மோசடியாக மனு தாக்கல் செய்து ஒருதலைப்பட்ச பற்றிய தீர்ப்பானை பெற்றுள்ளார்கள் என்றும் தமது பாலிசிகளை மோசடியாக ஒப்படைப்பு செய்து பணம் பெற்றுக் கொண்டது சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் என்றும் இதனால் தமக்கு பெருத்த மன உளைச்சலும் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் தெரிவித்து முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, எதிர் தரப்பினர்களின் முறையற்ற வணிகம் மற்றும் சேவை குறைபாட்டால் பாதிப்படைந்துள்ள தமக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடும் தமது பாலிசிகளுக்கு உரிய தொகையும் இந்த வழக்கின் செலவு தொகையையும் எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்று தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
05. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
06. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளபடி அவர் தங்களிடம் இரண்டு சீட்டு பிரிவுகளில் சேர்ந்திருந்தார் என்றும் அவரது மனைவி இரண்டு சீட்டு பிரிவுகளில் சேர்ந்திருந்தார் என்றும் அவரது மனைவி சேர்ந்த சீட்டு பிரிவுகள் அவரால் பணம் செலுத்தாத காரணத்தால் அவரது வேண்டுகோளின் பேரில் வேறு நபர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டது என்றும் முறையீட்டாளர் சேர்ந்து இருந்த இரண்டு சீட்டு பிரிவுகளில் பரிசுத் தொகையை பெற்ற பிறகும் பணம் செலுத்தாததால் துணை சீட்டு பதிவாளர் மற்றும் சீட்டு நிதி நடுவர் நாமக்கல் அவர்களிடத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் மனு தாக்கல் செய்து முறையீட்டாளருக்கு எதிராக தீர்ப்பு ஏற்பட்டு விட்டது என்றும் அதன் பின்னர் அதனை எதிர்த்து முறையீட்டாளர் தாக்கல் செய்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்து செய்யப்பட்டு விட்டது என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளது போல வலுக்கட்டாயமாக மூன்றாம் எதிர் தரப்பினரின் காப்பீடு பெறவில்லை என்றும் பெறப்பட்ட பாலிசிகளை அவர் முதலாம் எதிர் தரப்பினிடம் சேர்ந்து இருந்த சீட்டுக்காக உத்திரவாதத்திற்காக வழங்கியிருந்தார் என்றும் சீட்டுத் தொகையை வழங்க தவறினால் பாலிசிகளை ஒப்படைப்பு செய்து பணத்தை பெற்றுக்கொள்ள அவர் அதிகாரம் வழங்கியிருந்தார் என்றும் இதனால் அவர் சீட்டு பணத்தை கட்ட தவறியதால் மூன்றாம் எதிர் தரப்பினரின் ஒப்படைப்பு செய்து கிடைக்கப்பெற்ற பணம் அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் முறையீட்டாளர் காவல் துறையில் புகார் கொடுத்த சங்கதியில் அவரே நிருபிக்க வேண்டும் என்றும் இந்த புகாரை 03-2-2012 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி இரண்டு ஆண்டுகளுக்குள் புகார் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் 13 மாதங்கள் கழித்து இந்த புகார் தாக்கல் செய்துள்ளதால் இந்த புகார் நிலை நிற்க தக்கது அல்ல என்றும் தங்கள் தரப்பில் சேவை குறைபாடு எதுவும் புரியவில்லை என்றும் முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
.
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோரா? சட்டப்படி உரிய கால வரையறைக்குள் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?
2) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
3) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனர் எனில் எத்தகைய பரிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்?
4) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1 & 2
08. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின் நிறுவனத்தில் சீட்டு குழு ஒன்றில் உறுப்பினராக முறையீட்டாளர் இணைந்துள்ளார் என்று எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலில் ஒப்புக்கொண்டுள்ளதாலும் மூன்றாம் எதிர் தரப்பினரிடம் காப்பீட்டு பாலீசிகளை முறையீட்டாளர் பெற்றிருந்ததாக அவர்களது எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலில் ஒப்புக்கொண்டுள்ளதாலும் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
09. முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினரிடம் சேர்ந்த ஒரு சீட்டு 15-02- 2013-ல் ஆம் தேதியில் முடிவடைந்து விட்டது என்பதையும் மற்றொரு சீட்டு 14-12-2012 ஆம் தேதியில் முடிவடைந்து விட்டது என்பதையும் எதிர் தரப்பினர்கள் சான்றாவணங்கள் ஒன்று மற்றும் இரண்டு மூலம் ஆகியவற்றில் உள்ள விவரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இதில் ஏதும் நுகர்வோர் தகராறு இருப்பின் 15-01-2015 ஆம் தேதிக்குள் இந்த ஆணையத்தில் புகார் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த புகார் மேற்படி தேதிக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி உள்ள கால வரையறைக்குள் இந்த புகார் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் இதனால் இந்த புகார் நிலை நிறுத்தத்தக்கது அல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
10. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல முதலாம் எதிர்த்தரப்பினரின் மேலாளர் வலுக்கட்டாயமாக தங்களை மூன்றாம் எதிர் தரப்பினரிடம் பாலிசிகளை பெற வைத்தார் என்பதற்கும் முதலாம் எதிர் தரப்பினரின் மேலாளர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்பதற்கும் இதர குற்றச்சாட்டுகளுக்கும் நிரூபிக்க முறையீட்டாளர் தரப்பில் போதுமான சாட்சியம் மற்றும் சான்றாவனங்கள் இல்லை.
11. தாம் புகாரில் கூறியுள்ளது போல மூன்றாம் எதிர் தரப்பினரிடம் பெற்ற பாலிசிகளை முதலாம் எதிர்த்தரப்பினர் அவரே வைத்துக் கொண்டார் என்றும் தாம் சிறையில் இருந்த காலத்தில் தமது கையெழுத்துக்களை மோசடியாக செய்து பணத்தைப் பெற்று முதலாவது தரப்பினர் வைத்துக் கொண்டார் என்றும் முறையீட்டாளர் கூறும் நிலையில் எதிர் தரப்பினர்கள் சமர்ப்பித்துள்ள சான்றாவணங்கள் மூலம் தெரிய வருவது என்னவென்றால் மூன்றாம் எதிர் தரப்பினரிடம் பெற்ற பாலிசிகளை முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினர்களுக்கு அவரது சீட்டுக்களுக்காக உத்தரவாதம் அளித்து சமர்ப்பித்துள்ளார் என்பதும் முறையீட்டாளர் சீட்டு தொகைகளை செலுத்தாததால் ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி முதலாம் எதிர் தரப்பினர் அந்த பாலிசி ஆவணங்களை மூன்றாம் எதிர் தரப்பினரிடம் சமர்ப்பித்து பணத்தைப் பெற்று முறையீட்டாளரின் சீட்டு கணக்கில் வர வைத்துள்ளார் என்பதாகும். மேலும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் சார்பில் சீட்டு பதிவு நடுவர் அவர்களிடம் முறையீட்டாளர் மீது இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்குகளில் முறையீட்டாளருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இதன் மீது முறையீட்டாளர் செய்த மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதையும் எதிர் தரப்பினர்கள் சமர்ப்பித்துள்ள சான்றாவணங்கள்-1,2, 7 காட்டுகின்றன.
13. மேற்கண்ட 09, 10, 11, 12 ஆம் பத்திகளில் உள்ள விவரிக்கப்பட்ட காரணங்களினால் முறையீட்டாளர் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி உள்ள கால வரையறைக்குள் புகாரை தாக்கல் செய்யவில்லை என்றும் அவரால் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தக்க சாட்சியங்கள் மற்றும் சான்றாவணங்கள் மூலம் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
14. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது புகார் உரிய கால வரையறைக்குள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் –4
15 இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 16-05-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
மு.சா.ஆ.1 | 28-01-2015 | முதலாம் எதிர்த்தரப்பினர் வழங்கிய கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.2 | 31-01-2015 | காவல்துறை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்த புகார் நகல் மற்றும் ஒப்புகை அட்டைகள் உள்ளிட்டவை | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.3 | 09-02-2015 | வழக்கறிஞர் அறிவிப்பு, ஒப்புகை அட்டை, திரும்பி வந்த பதிவு தபால் | ஜெராக்ஸ், அசல், அசல் |
மு.சா.ஆ.4 | 19-02-2015 | முதலாம் எதிர் தரப்பினர் அனுப்பிய கடிதமும் சீட்டு பதிவாளரின் தீர்ப்பும் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.5 | 17-04-2014 | தகவல் உரிமை சட்டப்படி கிடைக்கப்பெற்ற கடிதம் | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எத.சா.ஆ.1 | 29-12-2011 | சீட்டு நிதி நடுவர் பிறப்பித்த உத்தரவு | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.2 | 29-12-2011 | சீட்டு நிதி நடுவர் பிறப்பித்த உத்தரவு | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.3 | | முறையீட்டாளர் மனைவியின் பெயரில் செய்யப்பட்ட காப்பீட்டு பாலிசி | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.4 | | முறையீட்டாளர் பெயரில் செய்யப்பட்ட காப்பீட்டு பாலிசி | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.5 | | முறையீட்டாளர் எடுத்த பரிசு தொகைக்காக அவரது மனைவி தனது பெயரில் உள்ள பாலிசியை ஜாமீன் கொடுத்ததற்கான கடிதம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.6 | | முறையீட்டாளர் எடுத்த பரிசு தொகைக்காக அவரது பாலிசியை ஜாமீன் கொடுத்ததற்கான கடிதம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.7 | 21-09-2015 | முறையீட்டாளர் சீட்டு பதிவு நடுவரின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்-2 | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.8 | 11-08-2016 | முறையீட்டாளரின் மனைவி சீட்டுக்கான தொகையை முழுவதையும் செலுத்தி விட்டு நிறுவனத்திலும் இருந்து பெற்றுக்கொண்ட கடிதம் | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி:
திரு வேலவன் முறையீட்டாளர்
எதிர் தரப்பினர்கள் சாட்சி: திரு யுவராஜா
திரு செல்வம் வங்கி மேலாளர்
உறுப்பினர் – I தலைவர்.