புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 27-02-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் : 20-06-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 51/2022.
கோயம்புத்தூர், ஆர். எஸ். புரம், டிபி சாலை, இலக்கம் 178 -ல் உள்ள மேத்தா ஜூவல்லர்ஸ், உரிமையாளர் ஆஷிஷ் மேத்தா - முறையீட்டாளர்
- எதிர்-
01. கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் சாலை, இலக்கம் 300-ல் உள்ள கோயம்புத்தூர் அண்ணாமலை ஏஜென்சிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மூலம்
02. கோயம்புத்தூர், துடியலூர், ரயில்வே கேட் அருகில், வெள்ளக்கிணறு சாலை, இலக்கம் 5/86 -ல் உள்ள அண்ணாமலை ஸ் டொயோட்டோ அதன் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மூலம்
03. பெங்களூரு, விட்டால் மல்லையா சாலை, கனிரா பிளாக், பத்தாவது தளம், இலக்கம் 24 -ல் உள்ள டொயோட்டோ இந்தியா அதன் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மூலம் - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திருவாளர்கள் கே. தாயுமானவர், எஸ் ஆர் ராஜேஷ்குமார், வழக்கறிஞர்கள், முன்னிலையாகியும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களுக்கு திரு என். எஸ். இதயத்துல்லா, வழக்கறிஞர் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு திரு எஸ். ரவீந்திரன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 06-06-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள்-14, முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின் பதிலுரை, அவர்களது சாட்சியம்-01 மற்றும் சான்றாவணங்கள்-01, மூன்றாம் எதிர் தரப்பினரின் பதிலுரை மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02. நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தம்மிடம் வசூலிக்கப்பட்ட பொருட்கள் விலை ரூ 96,310/- ஐ 18 சதவீத வட்டியுடன் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூபாய் 50 ஆயிரத்தை எதிர் தரப்பினர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூ 5,000/- எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் தன்மையைக் கருதி தக்கது என கருதும் இதர பரிகாரங்களை ஆணையம் வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. கடந்த 12-07-2016 ஆம் தேதி முதலாம் எதிர் தரப்பினரிடமிருந்து தாம் இன்னோவா கிரிஸ்டா வகை காரினை விலைக்கு பெற்றேன் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் இந்த வகை காரின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையம் என்றும் மூன்றாம் எதிர் தரப்பினர் காரின் உற்பத்தியாளர் என்றும் இவ்வாறு தம்மால் வாங்கப்பட்ட கார் ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டிய நிலையில் அதனுடைய சக்கரங்கள் நல்ல நிலைமையில் இல்லை என்றும் சரியான திசையில் செல்லவில்லை என்றும் இதனால் தான் காரை இரண்டாம் எதிர் தரப்பினரிடம் சர்வீஸ் செய்வதற்காக வழங்கிய போது அவர் சக்கரங்கள் வளைந்து இருப்பதாகவும் அதனை சரி செய்யவில்லை என்றால் சரியாக வாகனத்தை இயக்க முடியாது எனக் கூறினார் என்றும் 12-08-2016 ஆம் தேதியில் தாம் வாகனத்தை இரண்டாம் எதிர் தரப்பினரிடம் ஒப்படைத்தபோது அவர் வாகனத்தில் சக்கரங்கள் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்து தற்காலிகமாக அதனை சரி செய்து வழங்கி இனிமேல் இது போன்ற பிரச்சனை இருக்காது என்றும் மீண்டும் உத்திரவாத காலத்தில் இந்த பிரச்சனை ஏற்பட்டால் சக்கரங்களை மாற்றி தருவதாக கூறினார் என்றும் மீண்டும் தமது வாகனத்தில் இதே பிரச்சனை தொடர்ந்ததால் கடந்த 03-01-2017 ஆம் தேதி வாகனத்தை இரண்டாம் எதிர் தரப்பினரிடம் பழுது நீக்க வழங்கிய போது அதனை சரி செய்து வாகனத்தை அளித்தார் என்றும் இதில் பகுதி அளவே தமக்கு திருப்தி ஏற்பட்டது என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் தவறான வாக்குறுதியை ஏற்கனவே கூறியது போல தெரிவித்தார் என்றும் மீண்டும் இதே பிரச்சினை தமது வாகனத்தில் ஏற்பட்டதால் கடந்த 08-04-2017 ஆம் தேதி எதிர் தரப்பினரிடம் தனது வாகனத்தை வழங்கினேன் என்றும் இந்த முறை வாகனத்தின் சக்கரத்திற்கான உத்தரவாத காலம் முடிந்து விட்டது என்று தெரிவித்து சக்கரங்களை தங்களால் மாற்றி தர இயலாது என அவர் தெரிவித்தார் என்றும் பலமுறை இதுகுறித்து அவரிடம் பேசியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் கடந்த 2017 அக்டோபர் மாத இறுதியில் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த போது இதே பிரச்சினை ஏற்பட்டது என்றும் இது குறித்து கடந்த 15-11-2017 ஆம் தேதி மூன்றாம் எதிர் தரப்பினருக்கு மின்னஞ்சல் மூலமும் முதலாம் எதிர் தரப்பினருக்கு பதிவு அஞ்சல் மூலமும் புகார் அனுப்பினேன் என்றும் மீண்டும் வாகனத்தை இரண்டாம் எதிர் தரப்பினரிடம் பழுது நீக்க வழங்கிய போது வாகனத்தின் சக்கரங்களையும் மாற்ற வேண்டும் என தெரிவித்ததால் வேறு வழியின்றி வாகனத்தின் சக்கரங்களை ரூ 96,310/- கொடுத்து (17-11-2017) மாற்றினேன் என்றும் எதிர் தரப்பினர்கள் தனக்கு விற்ற வாகனத்தின் சக்கரங்கள் அனைத்தும் குறைபாடு கொண்டவை என்றும் இது குறித்து 11-12-2017 ஆம் தேதியில் எதிர் தரப்பினர்களுக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியதில் இரண்டாம் எதிர் தரப்பினர் மட்டும் தவறான சங்கதிகளை கூறி பதில் வழங்கினார் என்றும் விசாரணையின் போது உற்பத்தி குறைபாடாக வழங்கப்பட்ட சக்கரங்களை ஆணையத்தின் முன்பாக சமர்ப்பிக்கிறேன் என்றும் இவ்வாறு எதிர் தரப்பினர்கள் தமக்கு குறைபாடு உள்ள பொருளை விற்பனை செய்துள்ளார்கள் என்றும் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்றும் இதனால் தனக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பெற சங்கதிகளையும் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, தம்மிடம் வசூலிக்கப்பட்ட பொருட்கள் விலை ரூ 96,310/- ஐ 18 சதவீத வட்டியுடன் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூபாய் 50 ஆயிரத்தை எதிர் தரப்பினர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூ 5,000/- எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் தன்மையைக் கருதி தக்கது என கருதும் இதர பரிகாரங்களை ஆணையம் வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
06. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
07. புகாரில் சொல்லப்பட்டுள்ள வாகனமானது ஆயிரம் கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்ட பின்பு சர்வீஸ் செய்வதற்காக வழங்கப்பட்ட போது சக்கரங்கள் குறித்து எவ்வித புகாரையும் முறையீட்டாளர் கூறவில்லை என்றும் இந்நிலையில் தங்களால் புகாரில் சொல்லப்பட்டது போல எந்தவிதமான வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்றும் இதைப் போல 03-01-2017 ஆம் தேதியில் இந்த வாகனம் 5000 கிலோமீட்டர் இயக்கப்பட்ட பின்பு தங்களிடம் சர்வேஸுக்கு வழங்கப்பட்ட போது வாகனத்தின் சக்கரங்களிலும் டயர்களிலும் எந்த சேதமும் இல்லை என்றும் இந்த சமயத்திலும் சக்கரங்கள் குறித்து எவ்வித புகாரையும் முறையீட்டாளர் கூறவில்லை என்றும் இந்நிலையில் தங்களால் புகாரில் சொல்லப்பட்டது போல எந்தவிதமான வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்றும் இதைப் போல 08-04-2017 ஆம் தேதியில் இந்த வாகனம் 10,000 கிலோமீட்டர் இயக்கப்பட்ட பின்பு தங்களிடம் சர்வேஸுக்கு வழங்கப்பட்ட போது wheel alignment, wheel rotation and wheel balance செய்து தருமாறு தங்களை கேட்டுக்கொண்டார் என்றும் அதனை செய்த தந்து தொழிலாளர் கட்டணம் மட்டும் பெற்றுக்கொள்ளப்பட்டது என்றும் புகாரில் சொல்லப்பட்டுள்ளது போல எந்த வாக்குறுதியும் தங்களால் வழங்கப்படவில்லை என்றும் பின்னர் 26-10-2017 ஆம் தேதியில் இந்த வாகனம் 20,000 கிலோமீட்டர் இயக்கப்பட்ட பின்பு தங்களிடம் சர்வேஸுக்கு வழங்கப்பட்ட போது வாகனத்தின் எல்லா சக்கரங்களும் சேதம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டது என்றும் அவை அனைத்தையும் புதிதாக மாற்றிக் கொள்ளும்படி முறையீட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டது என்றும் அப்போது வாகனத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவாதபடி அவற்றை மாற்ற முறையீட்டாளர் தங்களை கேட்டார் என்றும் தங்களது உத்தரவாத குழுவினர் வாகனத்தை ஆய்வு செய்து வாகனத்தின் சக்கரங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் வெளிப்புற காரணங்களால் ஏற்பட்டது (external factors) என்றும் இதனால் வாகனத்தின் சக்கரங்களும் டயர்களும் உத்தரவாதத்தின் அடிப்படையில் மாற்ற இயலாது என்று முறையீட்டாளருக்கு சொல்லப்பட்டது என்றும் இதன் பின்பு வாகனத்தை முறையீட்டாளர் எடுத்துச் சென்றார் என்றும் பின்னர் 13-11-2017 ஆம் தேதியில் உத்திரவாத அடிப்படையில் வாகனத்தின் சக்கரங்களை மாற்றித் தருமாறு முறையீட்டாளர் தங்களை கேட்டார் என்றும் தங்களது தொழில் நுட்ப குழுவினர் வாகனத்தை ஆய்வு செய்து வெளிப்புற காரணங்களால் வாகனத்தின் சக்கரங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறைபாடு இல்லை என்றும் தெரிவித்தனர் என்றும் 17-11-2017 ஆம் தேதியில் வாகனத்தின் டயர்களில் பிரச்சனை இருப்பதாக முறையீட்டாளர் தங்களை அணுகினார் என்றும் அப்போது வெளிப்புற காரணங்களால்தான் வாகனத்தின் சக்கரங்களில் பிரச்சனை உள்ளதாக ஒப்புக்கொண்டார் என்றும் இந்நிலையில் வானத்தின் சக்கரங்களையும் டயர்களையும் அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொண்டு நாங்கள் மாற்றி கொடுத்தோம் என்றும் தங்களால் விற்க்கப்பட்ட காரில் பொருத்தப்பட்டிருந்த சக்கரங்களும் டயர்களும் உற்பத்தி குறைபாடு உள்ளவை அல்ல என்றும் வெளிப்புற காரணங்களால் அவை சேதம் அடைந்ததால் உத்தரவாதத்தின் அடிப்படையில் அவற்றை தாங்கள் மாற்ற இயலாது என்றும் இந்நிலையில் தங்கள் தரப்பில் குறைபாடு உடைய பொருள் விற்கப்படவில்லை என்றும் எவ்வித சேவை குறைபாடும் புரியப்படவில்லை என்றும் இதனால் தங்கள் மீதான புகார் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
மூன்றாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
08. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் மூன்றாம் எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
09. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளது போல தங்களது நிறுவனத்தின் பெயர் டொயோட்டோ இந்தியா அல்ல என்றும் டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் என்றும் தங்களுக்கும் காரின் விற்பனையாளரான டீலர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களுக்கும் உள்ள ஒப்பந்தம் என்னவெனில் முழு தொகையும் கொடுத்து தங்களிடம் கார்களை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் அதன் பின்பு கார்களை விற்பனை செய்வது, சேவை புரிவது, வாடிக்கையாளர் உறவை பராமரிப்பது உள்ளிட்டவை அவர்களின் பொறுப்பு என்றும் அவர்கள் செய்யக்கூடிய தவறுகளுக்கு தாங்கள் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்றும் தங்களது வாகனத்தில் எந்த விதமான உற்பத்தியில் குறைபாடும் இல்லை என்றும் புகாரில் சொல்லப்பட்டுள்ள வாகனம் 20 ஆயிரம் கிலோ மீட்டர் இயக்கப்பட்ட பின்னர் தான் வாகனத்தின் சக்கரங்களில் பிரச்சனை இருப்பதாக முறையீட்டாளர் தெரிவித்துள்ளார் என்றும் சக்கரத்தில் வளைவுகள் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது சக்கரங்களின் வெளிப்புற அழுத்தம் காரணமாக ஏற்பட்டது என்றும் இதனால் உத்தரவாத அடிப்படையில் அவற்றை மாற்றித் தர இயலாது என்றும் இந்நிலையில் தங்கள் தரப்பில் குறைபாடு உடைய பொருள் விற்கப்படவில்லை என்றும் எவ்வித சேவை குறைபாடும் புரியப்படவில்லை என்றும் இதனால் தங்கள் மீதான புகார் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் மூன்றாம் எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார் .
10. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் குறைபாடு உள்ள பொருளை விற்று சேவை குறைபாடு புரிந்துள்ளாரா?
2) எதிர் தரப்பினர்கள் குறைபாடு உள்ள பொருளை விற்று சேவை குறைபாடு புரிந்து உள்ளனர் எனில் எத்தகைய பரிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
11. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி மூன்றாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்ட காரை முதலாம் எதிர் தரப்பினரிடம் பணம் செலுத்தி வாங்கியுள்ளார் என்பதும் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் வாகனத்தை சர்வீஸ் செய்துள்ளார் என்பதும் எதிர் தரப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதிகள் ஆகும். இதனால் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
12. முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களிடம் காரை விலைக்கு பெற்றபோது அவருக்கு வழங்கப்படும் விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய உரிமையாளர் கையேடு மற்றும் உத்தரவாத ஆவணங்களை இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை. ஆனால், இந்த ஆவணமானது எதிர் தரப்பினர்கள் சார்பில் இந்த ஆணையத்தின் முன்பு குறியீடு செய்யப்பட்டுள்ளது. அதில் வெளிப்புற காரணங்களால் வாகனத்தின் பாகங்களுக்கு சேதம் ஏற்பட்டால் உத்திரவாத அடிப்படையில் புதிதாக மாற்றி தர இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறைபாடு உடைய வாகனத்தின் சக்கரங்களை விசாரணையின் போது இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிப்பதாக முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ள போதிலும் அவை இந்த ஆணையத்தில் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டு சான்று பொருட்களாக குறியீடு செய்யப்படவில்லை. மேலும், அந்த சக்கரங்கள் குறைபாடு உள்ளவை என்பதை நிரூபிக்கும் வகையில் உறுதிப்படுத்தும் விதமாக அது தொடர்புடைய நிபுணர் ஒருவரின் சாட்சியம் அல்லது கருத்துரை சமர்ப்பிக்கப்படவில்லை. புகாரில் சொல்லப்பட்டது போல சம்பந்தப்பட்ட வாகனமானது 1000, 5,000 மற்றும் 10,000 கிலோமீட்டர்கள் இயங்கி முடிவடைந்த நிலையில் இரண்டாம் எதிர் தரப்பினர்களால் வழங்கப்பட்ட கட்டணமில்லா பொது சேவையை (free general service) பெறுவதற்காக வழங்கப்பட்டிருக்கிறது (service history) என்பதும் இந்த இவ்வாறு வாகனமானது இரண்டாம் எதிர் தரப்பினரிடம் சேவைக்காக வழங்கப்பட்ட சமயங்களில் சக்கரங்களில் குறைபாடு உள்ளது என்று எந்த புகாரையும் (job card) முறையீட்டாளர் தெரிவிக்கவில்லை என்பதும் எதிர் தரப்பினர்கள் சமர்ப்பித்துள்ள முதலாவது சான்றாவணத்தின் மூலம் அறிய முடிகிறது. இந்த வாகனம் இருபதாயிரம் கிலோமீட்டர் இயக்கப்பட்ட பின்பு கட்டணமில்லா பொது சேவைக்காக இரண்டாம் எதிர் தரப்பினரிடம் வழங்கப்பட்ட போது வாகனத்தை சோதித்த இரண்டாம் எதிர் தரப்பினர் சக்கரங்களில் சேதம் உள்ளது என்றும் அவற்றை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்த விவரத்தை எதிர் தரப்பினர்கள் சமர்ப்பித்துள்ள முதலாவது சான்றாவணத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் இந்த வாகனத்தின் சக்கரங்களை உத்தரவாத அடிப்படையில் மாற்றித் தருமாறு 13-11-2017 ஆம் தேதியில் முறையீட்டாளர் கேட்டபோது இரண்டாம் எதிர் தரப்பினர் அவர்களது தொழில்நுட்ப குழு மூலம் சோதித்து சக்கரங்கள் வெளிப்புற காரணங்களால் சேதம் அடைந்துள்ளது என்றும் உற்பத்தி குறைபாடு காரணமாக அல்ல என்றும் அறிந்து அதனை முறையீட்டாளரிடம் முறையாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புகாரில் சொல்லப்பட்டது போல சம்பந்தப்பட்ட வாகனமானது 1000, 5,000 மற்றும் 10,000 கிலோமீட்டர்கள் இயங்கி முடிவடைந்த நிலையில் இரண்டாம் எதிர் தரப்பினர்களால் வழங்கப்பட்ட கட்டணமில்லா பொது சேவையை (free general service) பெறுவதற்காக வழங்கப்பட்ட போது முறையீட்டாளர் புகாரியில் தெரிவிக்கும் பிரச்சனையை இரண்டாம் எதிர் தரப்பினரிடம் தெரிவித்துள்ளாரா என்பதை அறிய இரண்டாம் எதிர் தரப்பினரால் வழங்கப்பட்ட job cards இந்த ஆணையத்தில் முறையீட்டாளர் சமர்ப்பிக்கவில்லை. ஆனால் இவற்றை எதிர் தரப்பினர்கள் சார்பில் சமர்ப்பித்து உள்ளார்கள். அதில் முறையீட்டாளர் பிரச்சனையை தெரிவித்ததாக எந்த விவரங்களும் இல்லை. இந்நிலையில் முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ள சங்கதிகளை போதிய சாட்சியம் மற்றும் சான்றாவணங்களுடன் நிரூபிக்கவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
13. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
13. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 20-06-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
மு.சா.ஆ.1 | 12-07-2016 | கார் வாங்கிய இன்வாய்ஸ் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.2 | 13-07-2016 | காரின் பதிவு சான்றிதழ் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.3 | 12-08-2016 | சர்வீஸ் இன்வாய்ஸ் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.4 | 03-01-2017 | சர்வீஸ் இன்வாய்ஸ் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.5 | 08-04-2017 | சர்வீஸ் இன்வாய்ஸ் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.6 | 15-11-2017 | எதிர் தரப்பினர்களுக்கு சமர்ப்பித்த மின்னஞ்சல் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.7 | 15-11-2017 | முதலாம் எதிர் தரப்பினருக்கு வழங்கிய புகார் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.8 | - | ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.9 | 17-11-2017 | சக்கரங்கள் மாற்றிய ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.10 | - | சேதம் அடைந்த சக்கரங்களின் புகைப்படங்கள் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.11 | 11-12-2017 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.12 | - | ஒப்புகை அட்டை-3 | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.13 | 19-12-2017 | இரண்டாம் எதிர் தரப்பினரின் பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.14 | 22-10-2019 | குறுந்தகடு | ஜெராக்ஸ் |
முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எ. சா.ஆ.1 | 01-03-2018 | Vehicle’s service history, job card | ஜெராக்ஸ் |
மூன்றாம் எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு ஆஷிஷ் மேத்தா முறையீட்டாளர்
முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் சாட்சி: திரு ஜான் வில்லியம் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் சாட்சி: இல்லை
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.