புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 25-07-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 04-11-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை
திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 112/2022.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், மேலூர் சாலையில் அமைந்துள்ள ஆனந்த் அவென்யூவில் சி பிளாக், எப்-4 வீட்டில் வசிக்கும் சிவகுருநாதன் மகன் பாலசுப்ரமணியன் -முறையீட்டாளர்
1. சென்னை, மேற்கு மாம்பலம், தம்பையா சாலை, இலக்கம் 68 -ல் உள்ள SRM Axis Intellects (I) Pvt Ltd., அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலம்.
,
2. சென்னை, ராமாபுரம், பாரதி சாலையில் உள்ள ஈஸ்வரி பொறிஇயல் கல்லூரியின் முதல்வர் திரு கே கதிரவன். - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திரு எஸ் வேல்முருகன், வழக்கறிஞர் முன்னிலையாகியும், எதிர் தரப்பினர்களுக்கு திருவாளர்கள் சி வி ராமச்சந்திர மூர்த்தி மற்றும் ஜோசப் பாலசுந்தர், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 19-10-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியமாக நிரூபண வாக்குமூலம், முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள் – 10, எதிர் தரப்பினர்களின் பதிலுரை, எதிர் தரப்பினர்களின் தரப்பு சான்றாவணங்கள் -13, மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தாம் எதிர் தரப்பினரிடம் செலுத்திய தொகை ரூ 2 லட்சத்து 26 ஆயிரத்தை தமக்கு எதிர் தரப்பினர்கள் திருப்பி வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் நியாயமற்ற வர்த்தக நடைமுறை காரணமாக தனக்கு ஏற்பட்ட மன வலி, துன்பம், வேதனை ஆகியவற்றிற்கு இழப்பீடாக ஐம்பதாயிரம் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
- தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தமது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழக தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை 2016-ல் வழங்கப்பட்ட சேர்க்கை ஒதுக்கீட்டின்படி தமது மகள் இரண்டாம் தரப்பினரின் கல்லூரியில் சேருவதற்காக கல்லூரி கட்டணமாக ரூ 1,10,000/-, விடுதிக் கட்டணம் ரூ 1,10,000/-, வல்லியம்மை சொசைட்டி என்ற பெயரில் ரூ 6,000/- செலுத்தி சேர்க்கை பெற்றார் என்றும் இந்நிலையில் மருத்துவக் கல்வி இயக்குனரகம் வழங்கிய பல் மருத்துவப் படிப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணையின்படி தமது மகள் எதிர் தரப்பினரிடம் தாம் செலுத்திய கட்டண தொகைகள், சமர்ப்பித்த அசல் சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ் கேட்டபோது அசல் சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ் மட்டும் வழங்கிவிட்டு கட்டண தொகை திருப்தி அளிக்கவில்லை என்றும் இத்தகைய செய்கை சேவை குறைபாடு என்றும் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றும் இத்தகைய நடவடிக்கை ஏற்புடையது அல்ல என்றும் இத்தகைய சேவை குறைபாட்டால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, தாம் எதிர் தரப்பினரிடம் செலுத்திய தொகை ரூ 2 லட்சத்து 26 ஆயிரத்தை தமக்கு எதிர் தரப்பினர்கள் திருப்பி வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் நியாயமற்ற வர்த்தக நடைமுறை காரணமாக தனக்கு ஏற்பட்ட மன வலி, துன்பம், வேதனை ஆகியவற்றிற்கு இழப்பீடாக ஐம்பதாயிரம் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
05. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
06. தங்கள் கல்லூரியில் முறையீட்டாளரின் மகள் கடந்த 11-07-2016 ஆம் தேதி கல்விக் கட்டணமாக ரூ 45,000/-, e கல்வி கட்டணமாக ரூ 20,000/-, தொழில் மேம்பாட்டு கட்டணமாக ரூ 25,000/- ஆக மொத்தம் ரூ 1,10,000/- மற்றும் உணவு விடுதி கட்டணமாக ரூ 53,000/- செலுத்தி இணைந்தார் என்றும் சேர்க்கையின் போது முறையீட்டாளர் மற்றும் அவர் மகள் அளித்த உறுதி மொழியில் கல்லூரியில் இருந்து விலகினால் எந்த தொகையும் கேட்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார் என்றும் கல்லூரி மற்றும் விடுதி விதிமுறைகளின்படி தானாக கல்லூரியில் இருந்து விலகினால் செலுத்தப்பட்ட தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் வழிகாட்டுதல் மற்றும் முன் தீர்ப்புகள் அடிப்படையில் சேர்க்கை தேதி முடிவடைந்த பின்பு கல்லூரியை விட்டு விலகினால் தொகையை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது என்றும் கடந்த 01-08-2016 ஆம் தேதியிலிருந்து மாணவி தங்களது கல்லூரியின் வகுப்புகளுக்கு வந்தார் என்றும் கடந்த 26-09-2016 ஆம் தேதி அசல் சான்றிதழ்களையும் மாற்றுச் சான்றிதழ்களையும் கேட்டார் என்றும் அப்போது எந்த தொகையும் கேட்க மாட்டோம் என்று உறுதிமொழி அளித்தார் என்றும் மேலும் பொறியியல் படிப்புகளுக்கு சேர்க்கைக்கான கடைசி நாள் 10-09-2016 ஆம் தேதி என்றும் இந்த தேதிக்கு பின்பு இவர் கல்லூரியை விட்டு விலகியதால் அந்த இடம் காலியாக தொடர்ந்து நான்காண்டுகளுக்கு இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றும் இத்தகைய காரணங்களால் எதிர்த் தரப்பினர்கள் எவ்வித தொகையும் முதலீட்டாளருக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடு இல்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் எதிர்தரப்பினர்கள் தமது உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றி சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றி சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
8. முறையீட்டாளர் தரப்பில் கல்லூரியிலிருந்து மாணவி விலகினால் எவ்வித தொகையும் திரும்ப கேட்க மாட்டோம் என்ற உறுதிமொழியை எதிர் தரப்பினருக்கு அளித்துள்ளார்கள் என்பது சான்று ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. மேலும், கல்லூரி விடுதி மற்றும் உணவு மன்றம் ஆகியவற்றின் விதிமுறைகளின்படி கல்லூரியை விட்டு விலகினால் எவ்வித தொகையும் வழங்கப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
9. 2016 - 2017 ஆம் கல்வி சேர்க்கைக்கு 10-09-2016 ஆம் தேதி இறுதி நாள் என்று நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் எந்த ஒரு மாணவரையும் கல்லூரியில் சேர்க்க இயலாது என்பது உண்மையான ஒன்றாகும். அதன் பின்னர் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு சேர்க்கையில் இணைந்த ஒரு மாணவர் அல்லது மாணவி கல்லூரியை விட்டு விலகினால் அந்த இடத்துக்கு வேறு மாணவர் அல்லது மாணவியை சேர்க்க இயலாது என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தகைய சூழ்நிலையில் பொறியியல் கல்வி படிப்பு படிப்பின் மொத்த நான்காண்டு காலத்திற்கும் அந்த இடம் காலியாக இருக்கும் (பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை மூலம் யாராவது சேர்க்கப்பட்டால் தவிர) என்பதும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இவ்வழக்கில் மாணவி பொறியியல் படிப்பு முதலாம் ஆண்டு சேர்க்கை நிறைவுபெற்ற சுமார் இரண்டு வாரங்கள் கழித்து கல்லூரியை விட்டு விலகியுள்ளார் இத்தகைய சூழ்நிலையில் புதிய மாணவரை அந்த இடத்திற்கு சேர்க்க முடியாது. இதனால் செலுத்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப கேட்பது என்பது ஏற்புடையதல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. முறையீட்டாளர் தரப்பில் கல்லூரி சேர்க்கைக்காக மொத்தம் ரூ 2,27,000/- எதிர் தரப்பினரிடம் செலுத்தினோம் என்று புகாரில் முதலாவது பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ரசீதுகள் முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் எதிர்த் தரப்பினர்கள் சேவை குறைபாடு செய்துள்ளார்கள் என்று முடிவு செய்ய இயலாது
10. முதலாம் எதிர் தரப்பினரிடம் placement training என்ற பெயரில் ரூ 25,000/- செலுத்தப்பட்டதற்கு ஆதாரமாக முறையீட்டாளர் தரப்பில் இரண்டாம் மற்றும் மூன்றாம் சான்று ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேற்கண்டவாறு கல்லூரியை விட்டு விலகிய பின்னர் இந்த தொகையை நிர்வாகச் செலவுகளை கழித்துக்கொண்டு முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு வழங்க கடமைப்பட்டவர் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. முறையீட்டாளர் தரப்பில் கல்லூரி உணவு விடுதி கட்டணமாக ரூ 53,000/- எதிர் தரப்பினருக்கு செலுத்தினார்கள் என்று அவர் தனது பதிலுரையில் ஒப்புக் கொண்ட நிலையில் மாணவி உணவு விடுதியை விட்டு விலகிய பின்னர் அதனை தம்வசம் வைத்துக் கொள்வது என்பது சரியானது அல்ல என்றும் மாணவி விடுதியில் இருந்த காலத்திற்கான கட்டணம் மற்றும் நிர்வாக செலவுகளை பிடித்தம் செய்து கொண்டு மாணவிக்கு மீதித் தொகையை இரண்டாம் எதிர் தரப்பினரின் வழங்க வேண்டியது சரியானது என்றும் அந்த அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ 43,000 மாணவிக்கு திரும்ப வழங்க வேண்டும் என்றும் மாணவி செலுத்தியதாக கூறப்படும் இதர கட்டணங்களை திருப்பித் தரவேண்டும் என்று முறையீட்டாளர் தரப்பில் கூறப்படுவது சரியான காரணங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
12. முதலாவது பிரச்சனையை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
12. இந்த ஆணையம் தக்கது என கருதும் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன? என்பதை ஆய்வு செய்யும் போது மேற்படி பத்தி 11- ல் சொல்லப்பட்டுள்ள தொகைகளை பெறுவதற்கு முறையீட்டாளர் தகுதியுடையவர் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. அந்த அடிப்படையில் முதலாம் எதிர் தரப்பினரிடம் placement training என்ற பெயரில் செலுத்திய தொகை ரூ 25,000/- -ல் 10 சதவீதம் நிர்வாக செலவுகளுக்காக பிடித்தம் செய்து கொண்டு முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும். தவறினால் 04-11-2022 தேதி முதல் ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 22,500/- தொகையுடன் முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர் வழங்க வேண்டும். இரண்டாம் எதிர்தரப்பினர் உணவு விடுதிகள் பெற்ற தொகையில் ரூ 43 ஆயிரத்தை எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும். தவறினால் 04-11-2022 தேதி முதல் ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 30,000/- தொகையுடன் முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர் வழங்க வேண்டும்.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு கல்வி கட்டண தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. முதலாம் எதிர் தரப்பினரிடம் placement training என்ற பெயரில் செலுத்திய தொகை ரூ 25,000/- -ல் 10 சதவீதம் நிர்வாக செலவுகளுக்காக பிடித்தம் செய்து கொண்டு முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் ரூ 22,500/- செலுத்த வேண்டும். தவறினால் 04-11-2022 தேதி முதல் ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 22,500/- தொகையுடன் முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர் வழங்க வேண்டும்.
03. இரண்டாம் எதிர்தரப்பினர் உணவு விடுதிக்காக பெற்ற தொகையில் ரூ 43 ஆயிரத்தை எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும். தவறினால் 04-11-2022 தேதி முதல் ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 43,000/- தொகையுடன் முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர் வழங்க வேண்டும்.
04. புகாரில் உள்ள தரப்பினர்கள்அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 04-11-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 02-07-2016 | சேர்க்கை கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 11-07-2016 | முதல் எதிர்தரப்பினர் வழங்கிய ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 11-07-2016 | உணவு விடுதி ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 11-07-2016 | வள்ளியம்மை சங்க ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 2016-2020 | அடையாள அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 23-09-2016 | மருத்துவக்கல்லூரி இயக்குனரின் கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 27-09-2016 | பல் மருத்துவ கல்லூரி ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 20-12-2016 | பல் மருத்துவ கல்லூரி ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | 10-11-2016 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 06-12-2016 | பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | 14-09-2016 | தொழில்நுட்ப கல்வி துறை கடிதம் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | 22-07-2011 | விரைவு அஞ்சல் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.3 | - | கூட்டு உறுதிமொழி | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.4 | - | சேர்க்கை விண்ணப்பம் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.5 | - | விடுதி குறிப்பேடு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.6 | - | வேண்டுகோள் கடிதம் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.7 | - | உறுதிமொழி கடிதம் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.8 | 10-11-2016 | மனுதாரர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.9 | 30-11-2016 | அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய கடிதம் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.10 | 10-11-2016 | எதிர் தரப்பினர் துணைவேந்தருக்கு அனுப்பிய கடிதம் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.11 | 09-12-2016 | அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய பதில் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.12 | 25-10-2016 | இரண்டாம் ஆண்டு சேர்க்கை காலியிடம் குறித்த கடிதம் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.13 | 21-11-2017 | இரண்டாம் ஆண்டு சேர்க்கை காலியிடம் குறித்த கடிதம் | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு பாலசுப்ரமணியன்
எதிர்தரப்பினர்கள் தரப்பு சாட்சி: திரு கே கதிரவன்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.