புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 30-11-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 14-10-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 202/2022.
கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைக்குளம் அஞ்சல் கிராம அலுவலகம் அருகில் இலக்கம் 1/15-சி -ல் வசிக்கும் சாமுவேல் மகன் ரெனால்ட் ஏசுதாசன்.
-முறையீட்டாளர்
1. அண்ணா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் (மொரீசியஸ் குடியரசு), இந்தியாவில் உள்ள அதன் அலுவலகம் - இலக்கம் 1312, 11வது பிரதான சாலை, விஜய் நகர்,பெங்களூர்
2. தலைமை நிர்வாக அலுவலர், அண்ணா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், இலக்கம் 10, டாக்டர் துர்காபாய் தேஷ்முக் சாலை, ஆர் கே புரம், சென்னை- 600 028.
3. திரு வைத்திலிங்கம், தலைவர், அண்ணா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், Accura Speciality Labs & Scans, இலக்கம் 26/53, இரண்டாவது தெரு, காமராஜ் அவென்யூ அடையார், சென்னை – 600 020 - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்காக திருமதி எலிசபெத் ரவி மற்றும் திரு பி. ராஜா வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும், முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்களுக்காக திரு கே. எம். பாலாஜி மற்றும் வி. கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் மூன்றாம் எதிர் தரப்பினருக்காக திரு வி. பாலாஜி மற்றும் ஏ. சேர்மராஜ், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 29-09-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் புகார், முறையீட்டாளர் தரப்பில் சாட்சியம்-1, அவரது 16 சான்றாவணங்கள், முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் பதிலுரை, அவர்களது சாட்சியம் -1, மூன்றாம் எதிர் தரப்பினரின் பதிலுரை மற்றும் இருதரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து தாம் செலுத்திய கல்வி கட்டணம் ரூ 11,50,000/- ஐ எதிர் தரப்பினருக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக எதிர் தரப்பினர்கள் தமக்கு ரூ 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்த் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் சரி என கருதும் இதர பரிகாரங்களை தமக்கு வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. முதலாம் எதிர்தரப்பினர் என்பவர் மொரிசியஸ் குடியரசில் உள்ள அண்ணா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இந்திய அலுவலகம் என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் முதலாம் எதிர் தரப்பினரின் சென்னை அலுவலகத்தில் தலைமை நிர்வாக அலுவலர் என்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் முதலாம் எதிர் தரப்பினரான மருத்துவக் கல்லூரியின் தலைவர் என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. தாம் முதலாம் எதிர் தரப்பினரின் கல்லூரியில் இளநிலை மருத்துவ படிப்பிற்கு (MBBS.,) சேர விண்ணப்பித்து கல்லூரி சேர்க்கைக்காக இரண்டாம் எதிர் தரப்பினரிடம் ரூ 1,00,000/- ஐ கடந்த 11-07-2014 ஆம் தேதியன்று செலுத்தினேன் என்றும் 14-07-2014 ஆம் தேதியன்று வங்கி மூலமாக ரூ 9,50,000/- ஐ முதலாம் எதிர் தரப்பினரின் வங்கிக்கணக்கில் செலுத்தினேன் என்றும் ரூ 1,00,000/- ஐ கடந்த 17-07-2014 ஆம் தேதியன்று செலுத்தினேன் என்றும் தமது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், நடத்தை சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எதிர் தரப்பினரிடம் சமர்ப்பித்தேன் என்றும் அவற்றில் கடவுச் சீட்டை மட்டும் திருப்பி வழங்கிவிட்டு மற்றவற்றை எதிர் தரப்பினர்கள் அவர்கள் வசம் வைத்து கொண்டனர் என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. தாம் முதலாம் எதிரி தரப்பினரின் மொரிசியஸ் குடியரசில் உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில் இந்த கல்லூரி இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என தெரிய வந்த காரணத்தாலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் இதர சூழ்நிலைகள் காரணத்தாலும் படிப்பை தொடர இயலாமல் திரும்பி வந்து விட்டேன் என்றும் தாம் செலுத்திய மேற்படி கட்டணங்களையும் அசல் சான்றிதழ்களையும் திரும்ப வழங்குமாறு எதிர் தரப்பினரிடம் கேட்டேன் என்றும் ஆனால் அவற்றை எதிர் தரப்பினர்கள் வழங்கவில்லை என்றும் இதன் காரணமாக தாம் வேறு படிப்பில் சேர இயலாத நிலையும் நிலை ஏற்பட்டது என்றும் இதனால் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் கடந்த 05-04-2017 ஆம் தேதியில் எதிர்தரப்பினர்கள் மீது புகார் அளித்தேன் என்றும் அதனை விசாரித்த காவல் ஆய்வாளர் சரிவர நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் அசல் விண்ணப்பத்தை தாக்கல் செய்ததில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 28-07-2017 ஆம் தேதியன்று அடையார் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை நடத்தினார் என்றும் அப்போது தம்மிடம் தமது சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டன என்றும் தாம் செலுத்திய தொகை வழங்கப்படவில்லை என்றும் இதனால் தமக்கு ரூ 11,50,000/- இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாடு காரணம் என்றும் இத்தகைய சிரமங்களுக்கு எதிர்தரப்பினர்கள் பொறுப்பு என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
06. எனவே, தாம் செலுத்திய கல்வி கட்டணம் ரூ 11,50,000/- ஐ எதிர் தரப்பினருக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக எதிர் தரப்பினர்கள் தமக்கு ரூ 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்த் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் சரி என கருதும் இதர பரிகாரங்களை தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்:
07. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகார் நிலைநிற்க தக்கதல்ல என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளரே நிரூபிக்கவேண்டும் என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
08. மேதகு உச்ச நீதிமன்றத்தால் கடந்த 09-08-2012 தேதியன்று என்ற SLP (Civil) No 22532/2012 என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கை, கட்டணம் போன்றவை சேவை குறைபாடு என்ற வரையறையில் வராது என்றும் இத்தகைய பிரச்சனைகளை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி(1986) அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள் விசாரிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதலாம் இரண்டாம் எதிர்த் தரப்பினர்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
09. இரண்டாம் எதிர் தரப்பினர் தாம் முதலாம் எதிர் தரப்பினர் சார்பில் அண்ணா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சேர்க்கைக்காக நியமனம் செய்யப்பட்ட ஆலோசகர்/முகவர் என்றும் ரூபாய் ஒரு லட்சத்தை தவிர மற்ற அனைத்து தொகைகளும் முதலாம் எதிர் தரப்பினரின் கணக்கில் முறையீட்டாளர் நேரடியாக செலுத்தியுள்ளார் என்றும் முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினரின் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து முடித்துவிட்டு தன்னிச்சையாக கல்லூரியிலிருந்து வந்துவிட்டார் என்றும் இரண்டாம் எதிர்த் தரப்பினர்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
10. முறையீட்டாளர் அளித்த புகாரின் காரணமாக இரண்டாம் எதிர்தரப்பினர் அவரின் அனைத்து சான்றிதழ்களையும் திருப்பி வழங்கிவிட்டார் என்றும் முதலாம் எதிர் தரப்பினர் மீது இந்த புகாரை விசாரிக்க இந்த ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் மொரிசியஸ் குடியரசில் உள்ள நீதிமன்றத்தில் தான் புகார் தெரிவிக்க இயலும் என்றும் இதனால் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முதலாம் இரண்டாம் எதிர்த் தரப்பினர்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
மூன்றாம் எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்:
11. மேதகு உச்ச நீதிமன்றத்தால் கடந்த 09-08-2012 தேதியன்று என்ற SLP (Civil) No 22532/2012 என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கை, கட்டணம் போன்றவை சேவை குறைபாடு என்ற வரையறையில் வராது என்றும் இத்தகைய பிரச்சனைகளை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி(1986) அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள் விசாரிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மூன்றாம் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
12. தம் மீது எவ்வித குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களும் புகாரில் இல்லை என்றும் தம் மீதும் மற்ற எதிர் தரப்பினர் மீதும் இது தொடர்பாக அடையார் காவல் ஆய்வாளரிடம் அளிக்கப்பட்ட புகார் விசாரணையின்போது சான்றிதழ்களை இரண்டாம் எதிர்தரப்பினர் திருப்பி வழங்கியுள்ளார் என்றும் இதில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தாம் முதலாம் எதிர்தரப்பினரான அண்ணா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் என புகாரில் குறிப்பிட்டுள்ளது தவறு என்றும் இதனால் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மூன்றாம் எதிர் தரப்பினர் பதிலுரையில் தெரிவித்துள்ளார்.
13. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) எதிர்தரப்பினர்கள் கூறுவது போல் புகாரை விசாரிக்க இந்த ஆணையத்துக்கு நிலப்பரப்பு சார்ந்த அதிகார வரம்பு (Territorial Jurisdiction) உள்ளதா?
2) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
3) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
4) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
14. முதலாம் எதிர் தரப்பினர் என்பது வெளி நாடான மொரிசியஸ் குடியரசில் உள்ள கல்லூரி என்பதால் இந்த வழக்கை விசாரிக்க இந்த ஆணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் இதுதொடர்பாக மொரீசியஸ் குடியரசில் உள்ள தக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள். இது நிலப்பரப்பு சார்ந்த அதிகார வரம்பு குறித்த சட்ட பிரச்சினையாகும். வழக்கின் சங்கதிகள் குறித்த கேள்விகளை (questions of facts) முடிவு செய்வதற்கு முன்பாக மேற்படி சட்டம் தொடர்பான கேள்விக்கு (question of law) தீர்வு காண்பது அவசியமாகியுள்ளது.
12. முதலாம் எதிர் தரப்பினரின் அலுவலகம் இந்திய நாட்டின் நிலப்பரப்பில் உள்ளது மேலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் முதலாம் எதிர் தரப்பினரின் பிரதிநிதிகளாக செய்யப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் எதிர் தரப்பினரின் கல்லூரியில் முறையீட்டாளரை சேர்ப்பதற்கு முன்பாக அனைத்து பரிவர்த்தனைகளும் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக எழுந்துள்ள வழக்கு மூலத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த வழக்கை விசாரிக்க இந்த ஆணையத்திற்கு அதிகாரம் வரம்பு உள்ளது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
13. தாம் முதலாம் எதிரி தரப்பினரின் மொரிசியஸ் குடியரசில் உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில் இந்த கல்லூரி இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என தெரிய வந்த காரணத்தாலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் இதர சூழ்நிலைகள் காரணத்தாலும் படிப்பை தொடர இயலாமல் திரும்பி வந்து விட்டேன் என்று முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் கடந்த 05-04-2017 ஆம் தேதியில் எதிர்தரப்பினர்கள் மீதுஅளித்த புகாரில் என்னுடைய உடல்நிலை காரணமாகவும் மற்ற சொந்த காரணமாகவும் என்னால் படிப்பை தொடர முடியவில்லை என்று முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார். இதில் தாம் சேர்ந்த மருத்துவ கல்லூரி இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் படிப்பைத் தொடரவில்லை என்று முறையீட்டாளர் குறிப்பிடப்படவில்லை இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில் தன்னிச்சையாக படிப்பில் இருந்து முறையீட்டாளர் விலகி விட்டார். இதற்கு எதிர்த் தரப்பினர்கள் பொறுப்பாக மாட்டார்கள். மேலும் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களுக்கு தமது தம்மால் செலுத்தப்பட்ட தொகையை திரும்ப தருமாறு எந்த ஒரு கடிதத்தையும் அல்லது மின்னஞ்சல் அல்லது வழக்கறிஞர் அறிவிப்பையும் அளித்ததாக தெரியவில்லை. அதற்கான ஆவணங்கள் எதையும் அவர் தாக்கல் செய்யவில்லை இந்த சூழலில் தொகையை திரும்ப எதிர்தரப்பினர்கள் தரவேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல என்றும் இந்த காரணங்களால் முதலாம் எதிர்தரப்பினர் மீதான புகார் நிரூபிக்க படவில்லை என்பதால் அவர் மீதான புகாரை தள்ளுபடி செய்வது சரியானது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
14. மூன்றாம் எதிர்தரப்பினர் அண்ணா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் என்று முறையீட்டாளர் கூறும் நிலையிலும் அதனை மூன்றாம் தரப்பினர் மறுக்கும் நிலையிலும் தமது கூற்றை நிரூபிக்க போதுமான சாட்சியத்தையும் சான்றாக ஆவணங்களையும் முறையீட்டாளர் சமர்ப்பிக்கவில்லை மேலும் இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளரின் சான்றிதழ்களை தாம் அவருக்கு அளித்ததாக பதில் உரையில் ஒப்புக் கொள்ளும் நிலையில் மூன்றாம் எதிர்தரப்பினர் சான்றிதழ்களை தம் வசம் வைத்திருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை இதனால் மூன்றாம் எதிர்தரப்பினர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை புகார் நிரூபிக்கப்படவில்லை என்று இந்த ஆணையம் கருதுகிறது.
15. முதலாம் எதிர்தரப்பினரான அண்ணா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முகவர் தாம் என்று இரண்டாம் எதிர் தரப்பினர் தங்கள் பதிலுரையில் ஒப்புக்கொண்டுள்ளார். கல்லூரி சேர்க்கையின் போது முறையீட்டாளரின் சான்றிதழ்கள் இவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது. முறையீட்டாளர் கல்லூரியில் படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில் சான்றிதழ்களை திருப்பித் தருவது இவரது கடமையாகும். ஆனால் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து அடையார் காவல் ஆய்வாளரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது கூட இவர் சான்றிதழ்களை திருப்தி அளிக்கவில்லை என்பதையும் பின்னர் உயர் நீதிமன்ற ஆணைக்கு பின்பு நடைபெற்ற காவல் ஆய்வாளரின் விசாரணையின்போது இரண்டாம் எதிர்தரப்பினர் சான்றிதழ்களை முறையீட்டாளருக்கு திருப்பி அறிவித்துள்ளார் என்பதையும் அறியமுடிகிறது. இதனால் nஇரண்டாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
16. இரண்டாம் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்ற நிலையில் முறையீட்டாளருக்கு என்ன பரிகாரம் வழங்க வேண்டும் என்பது மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது முக்கியமான வினாவாகும். இரண்டாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளரின் சான்றிதழ்களை திருப்பி அளிக்காத காரணத்தால் முறையீட்டாளர் படிப்பை தொடர இயலாது என்பது அறிந்த உண்மையாகும். இதனால் அவருக்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்ய முடியாதது. இருப்பினும் இரண்டாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு ரூ 5 லட்சம் வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 4
17. வழக்கின் செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இதர பரிகாரங்கள் ஏதும் இல்லை எதுவும் இல்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் இந்த வழக்கிலிருந்து மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் மீதான புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. இரண்டாம் எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக இரண்டாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு ரூ 5 லட்சம் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் ரூ 5,00,000/- மற்றும் இத்தொகைக்கு 14-10-2022 தேதியிலிருந்து நூற்றுக்கு ரூ 6 சதவீத வட்டி ஆகியவற்றை எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும்.
03. வழக்கின் செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதர பரிகாரங்கள் ஏதும் இல்லை எதுவும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 14-10-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 04-06-2012 | SSLC certificate of complainant | xerox |
ம.சா.ஆ.2 | 09-05-2014 | HSc certificate of complainant | xerox |
ம.சா.ஆ.3 | 21-05-2014 | Conduct certificate of complainant | xerox |
ம.சா.ஆ.4 | 21-05-2014 | T.C. of complainant | xerox |
ம.சா.ஆ.5 | 17-08-2015 | Passport of complainant | xerox |
ம.சா.ஆ.6 | - | Fee strecture note | xerox |
ம.சா.ஆ.7 | - | Transaction sheet | xerox |
ம.சா.ஆ.8 | 11-07-2014 | Cash receipt | xerox |
ம.சா.ஆ.9 | 11-07-2014 | Affidavit of complainant’s father | xerox |
ம.சா.ஆ.10 | 17-07-2014 | Admission letter | xerox |
ம.சா.ஆ.11 | 26-08-2014 | Letter issued by Immigration office | xerox |
ம.சா.ஆ.12 | - | Identity card | xerox |
ம.சா.ஆ.13 | 03-11-2014 | Residence Permit | xerox |
ம.சா.ஆ.14 | 05-04-2017 | Compaint to the Police Commissioner | xerox |
ம.சா.ஆ.15 | 05-04-2017 | Receipt | xerox |
ம.சா.ஆ.16 | 06-07-2017 | Order of the High Court | xerox |
முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | 10-04-2014 | Authorization letter | xerox |
எம.சா.ஆ.2 | 17-07-2014 | Admission letter | xerox |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி:
திரு ரெனால்ட் ஏசுதாசன்
முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தரப்பு சாட்சி:
திரு மணிமாறன்
மூன்றாம் எதிர் தரப்பினர் சாட்சி:
திரு வைத்திய லிங்கம்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.