புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 05-10-2018
உத்தரவு பிறப்பித்த நாள் : 20-06-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 37/2018.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், சித்தம்பூண்டி கிராமம், கொண்டரசம் பாளையம், நாட்டான் தோட்டத்தில் வசிக்கும் சின்னப்ப கவுண்டர் மகன் சுந்தரம் - முறையீட்டாளர்
- எதிர்-
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் திருச்செங்கோடு நகர், அண்ணா சாலை, குமார் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், கதவு எண் 145 -ல் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லிமிடெட் அதன் கோட்ட மேலாளர் - எதிர் தரப்பினர்
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன்படி முறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திரு பி எஸ் கிரீ சங்கர், வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர் தரப்பினருக்கு திரு என் எஸ் இதயத்துல்லா, வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 06-06-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள்-09, எதிர் தரப்பினரின் பதிலுரை, எதிர் தரப்பினரின் சாட்சியம்-1, எதிர் தரப்பினரின் சான்றாவணம்-04 மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
02. தமக்கு சொந்தமாக உள்ள பரமத்தி வேலூர் வட்டம், சுள்ளி பாளையம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தில் கடந்த 02-7-2014 ஆம் தேதியில் நிலக்கடலை பயிரிட்டேன் என்றும் இதற்கு எதிர் தரப்பினரிடம் ரூ 8,090/- செலுத்தி பயிர் காப்பீடு செய்தேன் என்றும் மழை இல்லாத காரணத்தால் பயிர்கள் காய்ந்து கருகி விட்டதால் கிராம நிர்வாக அலுவலர் அதற்கு உரிய சான்று வழங்கினார் என்றும் பின்னர் எதிர் தரப்பினரை நேரிலும் தொலைபேசியிலும் பயிர் காப்பீடு வழங்குமாறு கேட்டு எவ்வித பயனும் ஏற்படாததால் கடந்த 02-02-2017 ஆம் தேதியில் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினேன் என்றும் ஆனால் எதிர் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டை காப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை என்றும் இத்தகைய செய்கை சேவை குறைபாடு என்றும்இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பெற சங்கதிகளையும் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
03. எனவே, தமக்கு வழங்கப்பட வேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகை ரூ 1,34,700/- மற்றும் அதற்கு 26-09-2014 ஆம் தேதி முதல் ஆண்டு ஒன்றுக்கு 24 சதவீத வட்டி ஆகியவற்றையும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ 50,000/- மற்றும் இந்த வழக்கின் செலவு தொகை ரூ 5,000/- ஆகியவற்றையும் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும்இந்த ஆணையும் இன்னும் சரியான கருதும் பிற தீர்வுகளையும் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
04. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
05. முறையீட்டாளர் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து அறிமுகப்படுத்திய திருத்தப்பட்ட தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தில் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் மூலம் பிரிமிய தொகை செலுத்தி புகாரில் கூறியுள்ளவாறு பயிர் காப்பீடு செய்துள்ளார் என்றும் இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2014 ஆம் ஆண்டில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட பயிர் காப்பீடு வழங்குவதற்கான அறிவிக்கையில் முறையீட்டாளரின் கிராமத்தின் பெயர் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்றும் இந்நிலையில் முறையீட்டாளர் புகாரில் கேட்டுள்ள பரிகாரங்களை பெற தக்கவர் அல்ல என்றும் மேலும் முறையீட்டாளர் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா நிறுவனத்தில் பிரிமிய தொகை செலுத்தியுள்ள நிலையில் அவரை இந்த புகாரில் தரப்பினராக சேர்க்காமல் அந்தத் திட்டத்திற்கு உதவும் துணை நிறுவனமாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள தங்கள் மீது புகார் தாக்கல் செய்துள்ளது சரியல்ல என்றும் இதனால் தங்கள் தரப்பில் எவ்விதமான சேவை குறைபாடு ஏற்படவில்லை என்றும் தங்கள் மீதான முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டியது என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் தெரிவித்து எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
06. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளாரா?
2) எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்து உள்ளனர் எனில் எத்தகைய பரிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
08. முறையிட்டளர் புகாரில் தெரிவித்துள்ளது போல பயிர் காப்பீட்டை அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பிரிமிய தொகை செலுத்தி காப்பீடு செய்துள்ளார் என்பது முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சான்றாவணம்-1 மேற்படி நிறுவனம் வழங்கிய ரசீது மூலம் அறிய முடிகிறது இந்நிலையில் முறையீட்டாளர் மேற்படி நிறுவனத்தின் நுகர்வோர் என்பதில் மாற்றமில்லை. ஆனால் திருத்தப்பட்ட தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு உதவும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டு செயல்பட்ட எதிர் தரப்பினர் முறையீட்டாளரிடம் எவ்வித தொகையும் பெற்றுக் கொள்ளாத நிலையில் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் அல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
09. முறையிட்டளர் புகாரில் தெரிவித்துள்ளது போல அவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்த கடலை பயிர் வறட்சி காரணமாக கருகிவிட்டது என்பதற்கு கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழை முறையீட்டாளர் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்துள்ளார். அதே நேரத்தில் அந்த பசலியில் பயிர் கருவி விட்டது என்பதால் வறட்சி காரணமாக பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட அரசாணை நகல் முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டு இருந்தால்தான் பயிர் காப்பீடு இழப்பீடு பெற தக்கவரா என்பதை கண்டறிய இயலும் என்ற சூழ்நிலையில் அதனை சமர்ப்பிக்காமல் இழப்பீடு பெற தக்கவரா என அறிய இயலாது என்பதால் முறையீட்டாளர் பயிர் காப்பீடு பெறத் தகவல் என்று இந்த ஆணையத்தால் கூற இயலாது.
10. முறையீட்டாளர் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பிரிமிய தொகை செலுத்தி காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள நிலையில், அவரை இந்த வழக்கில் தரப்பினராக சேர்க்காத நிலையில், மேற்படி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் மூலம் காப்பீட்டு நிர்வாகம் செய்யும் எதிர் தரப்பினரை மட்டும் தரப்பினராக இந்த புகாரில் சேர்த்துள்ள நிலையில், எதிர் தரப்பினர் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
11. மேலே விவரிக்கப்பட்ட காரணங்களினால் முறையீட்டாளர் எதிர் தரப்பினர் மீதும் கூறும் குற்றச்சாட்டை தக்க சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் மூலமாக நிரூபிக்கவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
12. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
13. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 20-06-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
மு.சா.ஆ.1 | 20-08-2014 | அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பணம் செலுத்திய ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.2 | - | புகைப்படங்கள் 6 | அசல் |
மு.சா.ஆ.3 | 26-09-2014 | புகைப்பட ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.4 | 26-09-2014 | கிராம நிர்வாக அலுவலர் சான்று | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.5 | 02-02-2017 | வழக்கறிஞர் அறிவிப்பு | அலுவலக நகல் |
மு.சா.ஆ.6 | 02-02-2017 | அஞ்சலக ரசீது | அசல் |
மு.சா.ஆ.7 | 07-02-2017 | ஒப்புகை கடிதம் | அசல் |
மு.சா.ஆ.8 | 09-02-2017 | பதில் கடிதம் | அசல் |
மு.சா.ஆ9 | 17-03-2017 | அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி அனுப்பிய பதில் கடிதம் | அசல் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எத.சா.ஆ.1 | - | திருத்தப்பட்ட தேசிய விவசாய காப்பீட்டு திட்டம் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.2 | - | அறிவிக்கப்பட்ட கிராமங்களின் பட்டியல் | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.3 | 02-02-2017 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.4 | 09-02-2017 | பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
எத.சா.ஆ.5 | 13-02-2017 | ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு சி சுந்தரம், முறையீட்டாளர்
எதிர் தரப்பினர் சாட்சி: திரு வி கஸ்தூரி ரங்கன், மேலாளர்
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.