R.Kamaraj,S/o. Rajamanikam, filed a consumer case on 17 Mar 2023 against 1)The Manager, ICICI Bank, Melani kuzhi. 2) The chairman, ICICI Bank, in the Ariyalur Consumer Court. The case no is CC/14/2022 and the judgment uploaded on 20 Mar 2023.
புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 20-06-2022
உத்தரவு பிறப்பித்த நாள் : 17-03-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண்: 14/2022.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் அஞ்சல், கே என் குப்பம் கிராமம், தெற்கு தெரு, இலக்கம் 214 –ல் வசிக்கும் ராஜமாணிக்கம் மகன் காமராஜ் -முறையீட்டாளர்
1. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மேலணிக்குழிகாடு (Melani Kuzhi Kadu) உள்ள கிளை மேலாளர், ஐ சி ஐ சி ஐ வங்கி, மேலணிக்குழிகாடு கிளை.
2. குஜராத் மாநிலம், வதோதரா நகரில் உள்ள ஐ சி ஐ சி ஐ வங்கியின் தலைவர் - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திருமதி கே கோமதி வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர்தரப்பினர்களுக்கு திருவாளர்கள் டி.ஸ்டானிஸ்லாஸ், எஸ். எட்வர்ட் பிண்டோ, வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 08-03-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், எதிர்தரப்பினர்களின் பதில் உரை, முறையீட்டாளரின் நிரூபண வாக்குமூலம் அவரது சான்று ஆவணங்கள்-8, இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வமான வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 2019, பிரிவு 35-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தம்மால் முதலாம் எதிர் தரப்பினருக்கு செய்து தரப்பட்ட அடமான ஆவணங்களை ரத்து செய்து தர வேண்டும் என்றும் தம்மால் முதலாம் எதிர் தரப்பினரிடம் வழங்கப்பட்ட அசல் ஆவணங்களை திருப்பித் தர வேண்டும் என்றும் தமக்கு முதலாம் எதிர் தரப்பினர் அவரது வங்கியில் கடன் நிலுவை எதுவும் இல்லை என்று சான்று வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் இழப்புகளுக்கு தமக்கு எதிர் தரப்பினர்கள் ரூ மூன்று லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாம் முதலாம் எதிர்த்தரப்பினரிடம் K9ARY0028187957 & 617951000018 என்ற கடன் எண்களை கொண்ட இரண்டு கடன்களை பெற்று இருந்தேன் என்றும் அந்த வகையில் தாம் முதலாம் எதிர் தரப்பினருக்கு பணம் செலுத்த வேண்டியது இருந்தது என்றும் தமக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக முதலாம் எதிர் தரப்பினரிடம் பேசி தமக்கும் முதலாம் எதிர்த்தரப்பினருக்கும் கடந்த 24-11-2020 ஆம் தேதியில் ஒரு சமரச தீர்வு ஏற்பட்டது என்றும் அதன் அடிப்படையில் தாம் மேற்படி இரண்டு கடன் கணக்குகளுக்கும் முறையே ரூ 50,000 மற்றும் ரூ. 2 லட்சத்தை ஒரே தவணையில் 28-11-2020 ஆம் தேதியில் செலுத்தி வைத்தேன் என்றும் இதன் மூலம் தம்மால் முதலாம் எதிர் தரப்பினரிடம் பெறப்பட்ட கடன் கணக்குகள் முடிக்கப்பட்டு விட்டது என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. முதலாம் எதிர் தரப்பினரிடம் தாம் பெற்ற கடன்கள் முழுவதும் செலுத்தப்பட்ட பின்னர் கடந்த 07-12-2020 ஆம் தேதியில் முதலாம் எதிர்த்தரப்பினர் தரப்பில் கணக்குகள் முடிக்கப்பட்ட விட்டன என்ற கடிதம் தமக்கு வழங்கப்பட்டது என்றும் ஆனால் தம்மால் முதலாம் எதிர் தரப்பினருக்கு சொத்துக்களை அடமான ஆவணம் எழுதி கொடுத்தவற்றை ரத்து செய்து தரவில்லை என்றும் தம்மால் முதலாம் எதிர் தரப்பினரிடம் வழங்கப்பட்ட அசல் ஆவணங்களை திருப்பி வழங்கவில்லை என்றும் தமக்கு முதலாம் எதிர் தரப்பினரிடம் கடன் நிலுவையில் இல்லை என்ற சான்று வழங்கவில்லை என்றும் இவற்றை பலமுறை கேட்டபோதும் சரிவர பதில் அளிக்கவில்லை என்றும் இதனால்தமது ஆவணங்களை வைத்து சொத்தை விற்பனை செய்யவும் அல்லது கடன் பெறவும் இயலவில்லை என்றும் இதனால் தமக்கு மிகுந்த சிரமமும் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்றும் முதலாம் எதிர் தரப்பினரின் செய்கைகளுக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் பகர பொறுப்பு உடையவர் என்றும் இது குறித்து வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் எதிர் தரப்பின ர்களின் இத்தகைய செய்கை நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. எனவே, தம்மால் முதலாம் எதிர் தரப்பினருக்கு செய்து தரப்பட்ட அடமான ஆவணங்களை ரத்து செய்து தர வேண்டும் என்றும் தம்மால் முதலாம் எதிர் தரப்பினரிடம் வழங்கப்பட்ட அசல் ஆவணங்களை திருப்பித் தர வேண்டும் என்றும் தமக்கு முதலாம் எதிர் தரப்பினர் அவரது வங்கியில் கடன் நிலுவை எதுவும் இல்லை என்று சான்று வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் இழப்புகளுக்கு தமக்கு எதிர் தரப்பினர்கள் ரூ மூன்று லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
07. முதலாம் எதிர்தரப்பினர் தங்களது பதில் உரையை தாக்கல் செய்து அதனை இரண்டாம் எதிர் தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளார். முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர்கள் தமது உரையில் தெரிவித்துள்ளார்கள்.
08. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளவாறு முதலாம் எதிர் தரப்பினரிடம் கடன் பெற்றது உண்மை என்றும் சமரச தீர்வு ஏற்பட்டு ஒரே தவணையில் பணம் செலுத்தும் அடிப்படையில் அவருக்கு கடிதம் வழங்கப்பட்டு அதில் உள்ள கால வரையறைக்குள் அவர் பணம் செலுத்தி விட்டார் என்பதும் ஒப்புக்கொள்ளப்படுகிறது என்றும் எவ்வாறு இருப்பினும் முறையீட்டாளருக்கும் தங்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி கடன் வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளதால் தங்களுக்கும் அவருக்கும் கடன் வழங்குவோர், கடன் பெறுபவர் என்ற உறவு மட்டுமே உள்ளதாகவும் அவருக்கும் தங்களுக்கும் சேவை வழங்குபவர், நுகர்வோர் என்ற உறவு இல்லை என்றும் இதன் காரணமாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி அவர் பரிகாரம் பெற தக்கவர் அல்ல என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலில் தெரிவித்துள்ளார்கள்.
09. முறையீட்டாளர் தங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அடமான ஆவணங்களை ரத்து செய்ய தங்கள் தரப்பில் தயாராக இருந்ததாகவும் இருப்பினும் அசல் ஆவணங்கள் தங்கள் அலுவலகத்தில் இடமாற்றம் செய்யும்போது எந்த இடத்தில் வைத்தோம் (misplaced) என்று தெரியாத நிலை உள்ளதாகவும் அதனை கண்டுபிடிக்க தக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அல்லது புதிய ஆவணங்களை சட்டப்படி உருவாக்கித் தர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தங்கள் தரப்பில் முறையீட்டாளருக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் எவ்வாறு இருப்பினும் முறையீட்டாளர் தங்கள் தரப்பில் அடமான ஆவணங்களை ரத்து செய்ய முன்வரவில்லை என்றும் தங்கள் தரப்பில் உள்ள ஆவணங்களை பெற்றுக் கொள்ளவும் தங்களிடம் அவருக்கு கடன் நிலுவை எதுவும் இல்லை என்ற சான்றிதழை பெற்றுக் கொள்ளவும் முன் வரவில்லை என்றும் இரண்டாம் எதிர் தரப்பினராக சேர்க்கப்பட்டுள்ள பெயரில் தங்கள் நிறுவனத்தில் எவ்வித பதவியும் இல்லை என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடு ஏற்படவில்லை என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்து புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
10. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) புகாரில் கூறப்பட்டுள்ள பிரச்சனை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நிலைநிற்க தக்கதா?
2) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
3) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
4) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
11. முறையீட்டாளருக்கும் தங்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி கடன் வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளதால் தங்களுக்கும் அவருக்கும் கடன் வழங்குவோர், கடன் பெறுபவர் என்ற உறவு மட்டுமே உள்ளதாகவும் அவருக்கும் தங்களுக்கும் சேவை வழங்குபவர், நுகர்வோர் என்ற உறவு இல்லை என்றும் இதன் காரணமாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி அவர் பரிகாரம் பெற தக்கவர் அல்ல என்றும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள். வழக்கின் சங்கதிகள் குறித்த கேள்விகளை (questions of facts) முடிவு செய்வதற்கு முன்பாக மேற்படி சட்டம் தொடர்பான கேள்விக்கு (question of law) தீர்வு காண்பது அவசியமாகியுள்ளது. Section 4(1) of Consumer of Protection Act, 2019 states that “Save as otherwise expressly provided by the Central Government, by notification, this Act shall apply all goods and services”. Hence, this Complaint is maintainable.
.
எழு வினா எண் – 2
12. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளவாறு முதலாம் எதிர் தரப்பினரிடம் கடன் பெற்றது உண்மை என்றும் சமரச தீர்வு ஏற்பட்டு ஒரே தவணையில் பணம் செலுத்தும் அடிப்படையில் அவருக்கு கடிதம் வழங்கப்பட்டு அதில் உள்ள கால வரையறைக்குள் அவர் பணம் செலுத்தி விட்டார் என்பதும் ஒப்புக்கொள்ளப்படுகிறது என்றும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில் முதலாம் எதிர் தரப்பினருக்கு முறையீட்டாளர் ஏற்படுத்தி கொடுத்த அடமான ஆவணத்தை ரத்து செய்ய வேண்டிய கடமை முதலாம் எதிர் தரப்பினருக்கு உண்டு என்றும் இதைப் போல மேலும் முதலாம் எதிர் தரப்பினரிடம் முறையீட்டாளர் கடன் பெறும்போது சமர்ப்பித்த அசல் ஆவணங்களை திரும்ப வழங்க வேண்டிய கடமை உண்டு என்றும் கடன் கணக்கு முடிக்கப்பட்ட பின்பு முதலாம் எதிர் தரப்பினர் வங்கியில் முறையீட்டாளருக்கு கடன் நிலுவையில் இல்லை என்ற சான்று வழங்க முதலாம் எதிர்த்தரப்பினர் கடமைப்பட்டவர் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
13. முறையீட்டாளர் தங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அடமான ஆவணங்களை ரத்து செய்ய தங்கள் தரப்பில் தயாராக இருந்ததாகவும் இருப்பினும் அசல் ஆவணங்கள் தங்கள் அலுவலகத்தில் இடமாற்றம் செய்யும்போது எந்த இடத்தில் வைத்தோம் (misplaced) என்று தெரியாத நிலை உள்ளதாகவும் அதனை கண்டுபிடிக்க தக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அல்லது புதிய ஆவணங்களை சட்டப்படி உருவாக்கித் தர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தங்கள் தரப்பில் முறையீட்டாளருக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் எவ்வாறு இருப்பினும் முறையீட்டாளர் தங்கள் தரப்பில் அடமான ஆவணங்களை ரத்து செய்ய முன்வரவில்லை என்றும் தங்கள் தரப்பில் உள்ள ஆவணங்களை பெற்றுக் கொள்ளவும் தங்களிடம் அவருக்கு கடன் நிலுவை எதுவும் இல்லை என்ற சான்றிதழை பெற்றுக் கொள்ளவும் முன் வரவில்லை என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என்று இந்த ஆணையம் கருதுகிறது.
14. அசல் ஆவணங்கள் தங்கள் அலுவலகத்தில் இடமாற்றம் செய்யும்போது எந்த இடத்தில் வைத்தோம் (misplaced) என்று தெரியாத நிலை உள்ளதாகவும் அதனை கண்டுபிடிக்க தக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அல்லது புதிய ஆவணங்களை சட்டப்படி உருவாக்கித் தர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தங்கள் தரப்பில் முறையீட்டாளருக்கு தெரிவிக்கப்பட்டது என எதிர்த்தரப்பினர்கள் கூறும் நிலையில் தாங்கள் முறையீட்டாளரை அடமான ஆவணங்களை ரத்து செய்யவும் அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்ளவும் அழைத்தும் அவர் வரவில்லை என்று கூறுவது முற்றிலும் நம்பத் தகுந்ததாக இல்லை என்று இந்த ஆணையம் கருதுகிறது.
15 முறையீட்டாளர் பணம் செலுத்தி தான் பெற்ற கடன் கணக்குகளை முடித்து வைத்த பின்னர் அதனை ஒப்புக்கொண்டு கடிதம் எழுதியுள்ள முதலாம் எதிர் தரப்பினர் அப்போதே தங்கள் வங்கியில் முறையீட்டாளருக்கு கடன் எதுவும் இல்லை என்ற சான்றிதழை வழங்க கூடிய சூழ்நிலை இருந்தும் அதனை முதலாம் எதிர் தரப்பினர் செய்யவில்லை இத்தகைய செய்கை சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. முறையீட்டாளர் தரப்பில் முதலாம் எதிர்த்தரப்பினருக்கு கடன் தொகையை முழுவதுமாக செலுத்தி பல மாதங்கள் கடந்த நிலையிலும் இந்த புகாரில் அளித்துள்ள பதிலில் அசல் ஆவணங்கள் தங்கள் அலுவலகத்தில் இடமாற்றம் செய்யும்போது எந்த இடத்தில் வைத்தோம் (misplaced) என்று தெரியாத நிலை உள்ளதாகவும் அதனை கண்டுபிடிக்க தக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அல்லது புதிய ஆவணங்களை சட்டப்படி உருவாக்கித் தர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தங்கள் தரப்பில் முறையீட்டாளருக்கு தெரிவிக்கப்பட்டது என்று கூறுவது போல எந்த ஒரு கடிதத்தையும் முறையீட்டாளருக்கு முதலாம் எதிர்த்தரப்பினர் வழங்கவில்லை என்பதை அறிய முடிகிறது. இத்தகைய செய்கை சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. எனவே, முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளபடி முதலாம் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
16. இரண்டாம் எதிர் தரப்பினராக சேர்க்கப்பட்டுள்ள ஒரு பதவி தங்கள் நிறுவனத்தில் இல்லை என எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் கூறப்படும் நிலையில் இரண்டாம் எதிர் தரப்பினர் மீதான புகார் தள்ளுபடி செய்வது சரியானது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
17. முதலாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்று முறையீட்டாளருக்கு முடிவு காணப்பட்டுள்ள நிலையில் வழக்கின் தன்மையை கருதி முறையீட்டாளருக்கு தக்க பரிகாரங்கள் வழங்குவது அவசியம் என்று இந்த ஆணையம் கருதுகிறது.
18. முதலாம் எதிர் தரப்பினரிடம் கடன் தொகைகளை செலுத்திய பின்னரும் முறையீட்டாளருக்கு அடமான ஆவணத்தை ரத்து செய்யாத காரணத்தால் மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுவது இயற்கையானது என்றும் அடமான ஆவணம் கிடைக்கப் பெற்றிருந்தால் அடமான சொத்தை விற்கவும் அல்லது அந்த ஆவணத்தின் மூலம் வேறு கடன்களை பெறவும் முறையீட்டாளருக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்த ஆணையம் கருதுகிறது. இதனால் முதலாம் எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ஒரு லட்சத்தை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள் முதலாம் எதிர் தரப்பினர் முறியீட்டாளருக்கு வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. தவறினால் ரூ ஒரு லட்சத்துக்கு 18-04-2023 ஆம் தேதி முதல் தொகை செலுத்தப்படும் வரை ஆண்டொன்றுக்கு ரூ.100-க்கு 6% வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு முதலாம் எதிர் தரப்பினர் செலுத்த வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
19. மேலும் முதலாம் எதிர் தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்துக்குள், (1) முதலாம் எதிர் தரப்பினருக்கு முறையீட்டாளர் ஏற்படுத்தி கொடுத்த அடமான ஆவணத்தை ரத்து செய்து தர வேண்டும். (2) முதலாம் எதிர் தரப்பினரிடம் முறையீட்டாளர் கடன் பெறும்போது சமர்ப்பித்த அசல் ஆவணங்களை திரும்ப வழங்க வேண்டும். (3) முதலாம் எதிர் தரப்பினர் வங்கியில் முறையீட்டாளருக்கு கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழை முறையீட்டாளருக்கு முதலாம் எதிர் தரப்பினர் வழங்க வேண்டும்.
எழு வினா எண் – 4
20. இந்த புகாரில் உள்ள பிரச்சனையில் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முதலாம் எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ஒரு லட்சத்தை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள் முதலாம் எதிர் தரப்பினர் முறியீட்டாளருக்கு வழங்க வேண்டும். தவறினால் ரூ ஒரு லட்சத்துக்கு 18-04-2023 ஆம் தேதி முதல் தொகை செலுத்தப்படும் வரை ஆண்டொன்றுக்கு ரூ.100-க்கு 6% வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு முதலாம் எதிர் தரப்பினர் செலுத்த வேண்டும். இரண்டாம் எதிர் தரப்பினர் மீதான புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. முதலாம் எதிர் தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்துக்குள், (1) முதலாம் எதிர் தரப்பினருக்கு முறையீட்டாளர் ஏற்படுத்தி கொடுத்த அடமான ஆவணத்தை ரத்து செய்து தர வேண்டும். (2) முதலாம் எதிர் தரப்பினரிடம் முறையீட்டாளர் கடன் பெறும்போது சமர்ப்பித்த அசல் ஆவணங்களை திரும்ப வழங்க வேண்டும். (3) முதலாம் எதிர் தரப்பினர் வங்கியில் முறையீட்டாளருக்கு கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழை முறையீட்டாளருக்கு முதலாம் எதிர் தரப்பினர் வழங்க வேண்டும்.
03. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 17-03-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 24-11-2020 | Settlement letter | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 24-11-2020 | Settlement letter | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 28-11-2020 | Payment receipt | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 28-11-2020 | Payment receipt | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 07-12-2020 | Letter from OP - 1 | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 22-03-2022 | Legal notice | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 23-03-2022 | Acknowledgment | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 23-03-2022 | Acknowledgment | ஜெராக்ஸ் |
எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு ஆர் காமராஜ்
எதிர்தரப்பினர்கள் சாட்சி: இல்லை
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes
Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.