புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: /03/ 2016
உத்தரவு பிறப்பித்த நாள் : 11-11-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண்: 16/2017.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், செங்கமேடு கிராமம், இலக்கம் 4 /147 -ல் வசிக்கும் வீரமுத்து மகன் ராஜேந்திரன்
-முறையீட்டாளர்
1. அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், அசவீரன் குடிக்காட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, அசவீரன் குடிக்காடு கிளை, கிளை மேலாளர்
2. அரியலூர் மாவட்டம் அரியலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திரு. சி அய்யம்பெருமாள், வழக்கறிஞர் முன்னிலையாகியும், முதலாம் எதிர் தரப்பினருக்கு திரு டி என் பி செந்தில்குமார் வழக்கறிஞர் முன்னிலையாகியும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு அரசு வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 04-11-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியமாக நிரூபண வாக்குமூலம், முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள் – 07, முதலாம் எதிர் தரப்பினரின் பதிலுரை, இரண்டாம் எதிர் தரப்பினரின் பதிலுரை, முதலாம் எதிர் தரப்பினரின் நிரூபண வாக்குமூலம் மற்றும் அவரது சான்றாவணங்கள் – 06, இரண்டாம் எதிர் தரப்பினரின் நிரூபண வாக்குமூலம் மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டிய தாட்கோ மானியம் ரூ 30 ஆயிரத்தை தமது வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஆணையிட வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் தாம் வங்கிக்குச் செலுத்த வேண்டிய ரூ 19 ஆயிரத்துக்கு தாட்கோ மானியம் ரூ 30 ஆயிரத்திலிருந்து வரவு வைத்துவிட்டு தனது வங்கிக் கணக்கில் ரூ 11 ஆயிரத்தை வரவு வைக்க ஆணையிட வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ரூ 1,50,000/- எதிர்த் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவுத் தொகையாக ரூ 50,000/- தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
- தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாம் ஆதிதிராவிடர் என்பதால் தாட்கோ நிறுவனத்தில் பரிசீலிக்கப்பட்டு பெட்டிக்கடை நடத்த ஒரு லட்சம் கடனுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டு முதலாம் எதிர் தரப்பினருக்கு இரண்டாம் எதிர்தரப்பினர் பரிந்துரை செய்தனர் என்றும் இவ்வாறு வழங்கப்படும் கடன் தொகையில் ரூ 65 ஆயிரம் கடனாக கணக்கு வைக்கப்படும் என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் ரூ 30,000/- மானியமாக முதல் எதிர் தரப்பினருக்கு தருவார் என்றும் தாம் தமது பங்கு தொகையாக ரூ 5,000/- எதிர் தரப்பினருக்கு வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது தமக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் இந்த அடிப்படையில் கடந்த 20-03-2012 ஆம் தேதியன்று தமது பெட்டிக்கடைக்கு தேவையானவற்றை தாம் வாங்கியதற்காக முரளி ஏஜென்சிக்கு முதலாம் எதிர்தரப்பினர் ரூ 80 ஆயிரம் வழங்கினார் என்றும் தாம் தவறாது கடன் தொகையை தவணைகளாக செலுத்தி வந்தேன் என்றும் தமக்கு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வழங்கப்பட்ட தொகை ஒன்று முதலாம் எதிர்தரப்பினர் வங்கியில் வரவு வைக்கப்பட்டதால் அந்த பணத்தையும் கடன் தொகைக்கு முதலாம் எதிர்தரப்பினர் எடுத்துக் கொண்டார் என்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்து தாம் பெற்ற தொகையும் முதலாம் எதிர்தரப்பினர் வங்கியில் வரவு வைக்கப்பட்டதால் அந்த பணத்தையும் கடன் தொகைக்கு முதலாம் எதிர்தரப்பினர் எடுத்துக் கொண்டார் என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்
04. இந்நிலையில் எதிர் தரப்பினர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு அறிவிப்பினை அனுப்பினார்கள் என்றும் தாம் ரூ 19,000/- மட்டுமே முதலாம் எதிர் தரப்பினருக்கு செலுத்த வேண்டியது உள்ளது என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் மூலமாக வழங்கப்பட்ட மானியம் ரூ 30,000/- தமது கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றும் அதனையும் சேர்த்து கணக்குப் பார்த்தால் முதலாம் எதிர்தரப்பினர் ரூ 11 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் முதலாம் எதிர் தரப்பினரிடம் மானியத்தைப் பெற்று தமது கணக்கில் வரவு வைக்க தவறிவிட்டார் என்றும் இத்தகைய செய்கை முதலாம் எதிர் தரப்பினரின் சேவை குறைபாடு என்றும் இத்தகைய சூழ்நிலையை உருவாவதற்கு இரண்டாம் எதிர்தரப்பினர் காரணம் என்பதால் அவரும் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் இத்தகைய சேவை குறைபாட்டால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும். முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்
05. எனவே, எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டிய தாட்கோ மானியம் ரூ 30 ஆயிரத்தை தமது வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஆணையிட வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் தாம் வங்கிக்குச் செலுத்த வேண்டிய ரூ 19 ஆயிரத்துக்கு தாட்கோ மானியம் ரூ 30 ஆயிரத்திலிருந்து வரவு வைத்துவிட்டு தனது வங்கிக் கணக்கில் ரூ 11 ஆயிரத்தை வரவு வைக்க ஆணையிட வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ரூ 1,50,000/- எதிர்த் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவுத் தொகையாக ரூ 50,000/- தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
06. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் முதலாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
07. முறையீட்டாளரின் புகார் புகார் பிரிவு -24 ஏ, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986 -ன்படி கால வரையறை கடந்து தாக்கல் செய்யப்பட்டது என்பதால் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் தாங்கள் முறையீட்டாளருக்கு வழங்கிய கடன் தாட்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் அல்ல என்றும் அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட கடன் பெறுவதற்கு அவரது பங்கு தொகையை ரூ 5,000/- ஐ அவர் செலுத்தவில்லை என்றும் அவர் கூறுவது போல மானியத் தொகை ரூ 30,000/- எதனையும் தாட்கோ நிறுவனம் தங்களுக்கு வழங்கவில்லை என்றும் இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட கடன் பொது கடனாக தான் தங்களால் அனுமதிக்கப்பட்டது என்றும் முதலாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
08. முறையீட்டாளர் தாங்கள் வழங்கிய கடனை செலுத்தாத காரணத்தால் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு ரூ 60 ஆயிரம் திருப்பிச் செலுத்த அவர் ஒப்புக் கொண்டு கையப்பம் செய்ததால் கடந்த 14-02-2015 ஆம் தேதியில் மக்கள் நீதிமன்றம் இதற்கான ஆணையை பிறப்பித்தது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடு இல்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் முதலாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில்உரையை தாக்கல் செய்துள்ளார்.
இரண்டாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
09. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
10. புகாரில் தெரிவித்து உள்ளவாறு முறையீட்டாளருக்கு முதலாம் எதிர்தரப்பினர் கடன் வழங்கியது தங்களுக்கு தெரியாது என்றும் முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு நேரடியாக கடன் கொடுத்து உள்ளார் என்றும் முறையீட்டாளருக்கும் முதலாம் எதிர் தரப்பினருக்கும் உள்ள பிரச்சனைகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடு இல்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் இரண்டாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில்உரையை தாக்கல் செய்துள்ளார்.
11. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளரின் புகார் கால வரையறை முடிவடைந்த பின்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?
2) ஏற்கனவே ஒரு நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்ட பிரச்சனையை இந்த ஆணையம் விசாரிக்கலாமா?
3) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
4) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
5) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
09. முறையீட்டாளரின் புகார் புகார் பிரிவு -24 ஏ, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986 -ன்படி கால வரையறை கடந்து தாக்கல் செய்யப்பட்டது என முதலாம் எதிர்தரப்பினர் பதில் உரையில் தெரிவிப்பதற்கு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த சட்ட பிரிவின் படி பாதிக்கப்படும் நுகர்வோர் எவர் ஒருவரும் இரண்டு ஆண்டு காலத்திற்குள் இந்த ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும். தவறினால் கால வரையறை முடிவடைந்து விடுகிறது என்றாலும் காலதாமதத்தை மன்னிக்கும் மனுவுடன் புகாரை அளிக்கவும் இயலும். ஆனால் இந்த வழக்கில் காலதாமதத்தை மன்னிக்க கோரும் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது சங்கதி ஆகும்.
10. கடந்த 20-03-2012 ஆம் தேதியன்று தமது பெட்டிக்கடைக்கு தேவையானவற்றை தாம் வாங்கியதற்காக முரளி ஏஜென்சிக்கு முதலாம் எதிர்தரப்பினர் ரூ 80 ஆயிரம் வழங்கினார் என முறையீட்டாளர் கூறும் நிலையில் முதலாம் எதிர்தரப்பினர் கடன் வழங்கிய தேதி மேற்படி நாள் என்று நிர்ணயிக்க வேண்டிய அவசியமாக உள்ளது. முறையீட்டாளர் தனது புகாரில் ரூ ஒரு லட்சம் கடன் வழங்க எதிர் தரப்பினர்கள் கொண்டனர் என்று கூறும் நிலையில் ரூ 80 ஆயிரம் மட்டுமே கடந்த 20-03-2012 ஆம் தேதியன்று கடன் வழங்கப்பட்டதால் அன்றைய தினமே தகராறு என்பது ஏற்பட்டுள்ளதாக கருதமுடியும். இவ்வாறு வழக்கு உற்பத்தியான நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த புகார் தாக்கல் செய்யப்படவில்லை.
11. முதலாம் எதிர் தரப்பினர் தமக்கு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இருந்து கடந்த 19-03-2013 ஆம் தேதியன்று வழங்கப்பட்ட தொகை அவரது வங்கியில் வரவு வைக்கப்பட்ட காரணத்தால் அந்த தொகையை முதலாம் எதிர்தரப்பினர் தமது கடன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டார் என்றும் இதைப் போலவே, முதலாம் எதிர் தரப்பினர் தமக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் இருந்து வழங்கப்பட்ட தொகை அவரது வங்கியில் வரவு வைக்கப்பட்ட காரணத்தால் அந்த தொகையை முதலாம் எதிர்தரப்பினர் தமது கடன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டார் என்றும் புகாரில் குற்றம்சாட்டும் நிலையில் மேற்கண்ட தொகையில் வர வைக்கப்பட்ட நாளில் தகராறு என்பது உற்பத்தியாகி உள்ளது என்று வைத்துக் கொண்டால்கூட இவ்வாறு தாவா உற்பத்தியான பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
12. இந்த வழக்கின் முறையீட்டாளருக்கும் முதலாம் எதிர் தரப்பினருக்கும் இந்த வழக்கில் உள்ள சங்கதிகள் மட்டும் அடங்கிய பிரச்சனை என்பது அரியலூர் மக்கள் நீதிமன்றத்தில் 159/2015 என்ற வழக்கு எண்ணில்கடந்த 14-02-2015 ஆம் தேதி அன்று இரு தரப்பினரும் கையொப்பம் செய்து சமரசம் ஏற்பட்டு மக்கள் நீதிமன்றத்தால் தக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேற்படி நாளில் தகராறு என்பது உற்பத்தியாகி உள்ளது என்று வைத்துக் கொண்டால்கூட இவ்வாறு தாவா உற்பத்தியான பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
13. மேற்கண்ட 10, 11, 12 ஆகிய பத்திகளில் விவாதிக்கப்பட்டபடி முறையீட்டாளர் தமது புகாரை வழக்கு உற்பத்தியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்துள்ளார் என்பதும் காலவரை முடிவடைந்த நிலையில் காலதாமதத்தை மன்னிக்க கோரி எந்த விண்ணப்பத்தையும் தாக்கல் செய்யாமல் அவரது புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதால் முதலாம் எழு வினாவிற்கு பதில் ஆம் என்றும் இதனால் இந்த வழக்கு சட்டப்படி நிலைநிற்க தக்கதல்ல என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
14. ஏற்கனவே ஒரு நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்ட பிரச்சனையை இந்த ஆணையம் விசாரிக்கலாமா? என ஆய்வு செய்யும் போது ஒரே தரப்பினருக்கு இடையே சட்டப்படி அமைக்கப்பட்ட தக்க நீதி மன்றத்தில் தீர்மானிக்கப்பட்ட அதே பிரச்சனை மீண்டும் அதே தரப்பினர்கள் அதே பிரச்சனைக்காக வேறு ஒரு விசாரணை மன்றத்தில் விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்ற சட்ட கொள்கை (Doctrine of Resjudicata) இந்த வழக்கில் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். உரிமையியல் விசாரணை சட்டத்தில் பிரிவு 10 -ன் மூலம் இந்த கொள்கை இந்தியாவில் அமலில் உள்ளது.
15. இந்த வழக்கின் முறையீட்டாளருக்கும் முதலாம் எதிர் தரப்பினருக்கும் இந்த வழக்கில் உள்ள சங்கதிகள் மட்டும் அடங்கிய பிரச்சனை என்பது அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் குழுவில் எடுத்துக்கொள்ளப்பட்டு மக்கள் நீதிமன்றத்தில் 159/2015 என்ற வழக்கு எண்ணில்கடந்த 14-02-2015 ஆம் தேதி அன்று இரு தரப்பினரும் கையொப்பம் செய்து சமரசம் ஏற்பட்டு மக்கள் நீதிமன்றத்தால் தக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதன்பின்பு இந்த வழக்கின் முதலாம் எதிர் தரப்பினர் மேற்படி ஆணையை நிறைவேற்ற கோரி அரியலூர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார் என்பதும் முதலாம் தரப்பினர்கள் சமர்ப்பித்துள்ள சான்றாவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.
16. மேற்கண்ட 14, 15 ஆகிய பத்திகளில் விவாதிக்கப்பட்டபடி முறையீட்டாளரின் புகார் உரிமையியல் விசாரணை சட்டத்தில் பிரிவு 10 -ன் மூலம் இந்த ஆணையம் விசாரிக்க தடை செய்யப்பட்டதாகும். இதனால் இந்த வழக்கு சட்டப்படி நிலைநிற்க தக்கதல்ல என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
17. முறையீட்டாளருக்கு ரூ ஒரு லட்சம் கடன் வழங்க இரண்டாம் எதிர்தரப்பினர் முதலாம் எதிர் தரப்பினருக்கு பரிந்துரைத்துள்ளார் என்பதை முறையீட்டாளர் தரப்பு சான்றாவணம் ஒன்றின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதில் நிபந்தனைகள் முறையீட்டாளருக்கு விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி முறையீட்டாளர் தமது பங்கு தொகையாக ரூபாய் 5 ஆயிரத்தை முதலாம் எதிர் தரப்பினரிடம் செலுத்த வேண்டும். ஆனால், அவ்வாறு தான் செலுத்தினேன் என்று முறையீட்டாளர் தனது புகாரில் அல்லது நிரூபண வாக்குமூலத்தில் தெரிவிக்கவில்லை. இவ்வாறு நிபந்தனை பின்பற்றப்படாத நிலையில் முதலாம் எதிர்தரப்பினர் தமக்கு அளித்த கடன் தாட்கோ அங்கீகரித்த கடன் என்று வாதிடுவது ஏற்புடையதல்ல. புகாரில் தெரிவித்து உள்ளவாறு முறையீட்டாளருக்கு முதலாம் எதிர்தரப்பினர் கடன் வழங்கியது தங்களுக்கு தெரியாது என்றும் முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு நேரடியாக கடன் கொடுத்து உள்ளார்கள் என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் பதில் அளித்துள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். இந்நிலையில் புகாரின் கூறியுள்ளபடி சேவை குறைபாடு எதனையும் முதலாம் எதிர்தரப்பினர் புரியவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 4 & 5
10. முதல் மூன்று எழு வினாக்களுக்கு தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 11-11-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 21-12-2011 | தாட்கோ கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 20-03-2012 | வரைவோலை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | - | செலுத்து சீட்டுகள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 08-03-2013 | எல்ஐசி கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 03-07-2014 | கடன் திருப்பி செலுத்த கோரி அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 02-02-2016 | வட்ட சட்டப்பணிகள் குழு கடிதம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | - | வங்கி கணக்கு புத்தகம் | ஜெராக்ஸ் |
முதலாம் எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | 24-05-2016 | வங்கி கணக்கு அறிக்கை | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | 05-07-2016 | வங்கி கணக்கு அறிக்கை | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.3 | 20-03-2015 | திருப்பி செலுத்திய பண விவரங்கள் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.4 | - | நீதிமன்ற நாட்குறிப்பு | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.5 | 14-02-2015 | மக்கள் நீதி மன்ற ஆணை | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.6 | 01-06-2016 | நிறைவேற்றுகை மனு நகல் | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு ராஜேந்திரன்
முதலாம் எதிர்தரப்பினர் சாட்சி: திரு பரமேஸ்வரன்
இரண்டாம் எதிர்தரப்பினர் சாட்சி: திரு சிவசண்முகம்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.