புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 07-07-2017
உத்தரவு பிறப்பித்த நாள் : 10-02-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண்: 49/2017.
அரியலூர் மாவட்டம், திருமானூர், மேலவீதி, இலக்கம் 4/284 -ல் வசிக்கும் எம்ஜி பாலசுப்பிரமணியன் மனைவி அழகேஸ்வரி
-முறையீட்டாளர்
அரியலூர் மாவட்டம், திருமானூரில் உள்ள, தலைவர் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு
- முறையீட்டாளர் முகவர்
1. அரியலூர் மாவட்டம், கீழபழுவூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சார்பதிவாளர்
2. அரியலூர் மாவட்டம், அரியலூர் நகர், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் மாவட்ட பதிவாளர்
3. திருச்சிராப்பள்ளி நகர், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள தனித் துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு அவரது முகவர் எம்.ஜி. பாலசுப்ரமணியன் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு அரசு வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 31-01-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, சான்றாவணங்கள் – 14, எதிர் தரப்பினரின் பதிலுரை, முறையீட்டாளரின் வாதம் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முதலாம் எதிர் தரப்பினரிடம் 05-10-2015 ஆம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை எதிர் தரப்பினர்கள் உடனே திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பிற்கு இழப்பீட்டு தொகையாக ரூ 90 ஆயிரம் எதிர் தரப்பினர்கள் வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கின் செலவு தொகையை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற நிவாரணங்களை தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
- தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாம் கடந்த 25-09-2015 ஆம் தேதியில் அரியலூர் வட்டம், கீழப்பழுர் கிராமத்தில் நத்தம் புல எண் 270/ 234 மற்றும் புஞ்சை புல எண் 330/ 3 சி 11 -ல் வீடு மற்றும் காலி மனையை விலைக்கு வாங்க கிரைய ஆவணம் எழுதி சட்டப்படி செலுத்தவேண்டிய தொகையை செலுத்தி முதலாம் எதிர்தரப்பினர் அலுவலகத்தில் பதிவு செய்ய சமர்ப்பித்தேன் என்றும் ஆனால் அன்றைய நாளிலேயே பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி 05-10-2015 ஆம் தேதியில் தமது கிரைய ஆவணங்களை முதலாம் எதிர்தரப்பினர் பதிவு செய்தார் என்றும் ஆனால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அதற்கான குறுந்தகடு எதுவும் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் சட்டபூர்வமாக சேவைக் கட்டணங்களை செலுத்திய நிலையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை திருப்பித் தராமல் முதலாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இரண்டாம் எதிர் தரப்பினரிடம் நேரில் முறையிட்டும் உரிய நடவடிக்கையை அவர் எடுக்கவில்லை என்றும் 19-09-2016 ஆம் தேதியில் மூன்றாம் எதிர்தரப்பினர் அலுவலகத்தில் ஆஜராகும்படி அனுப்பிய கடிதம் 14-09-2016 ஆம் தேதியில் கிடைத்தது என்றும் தமது தரப்பில் அங்கு சென்றபோது இடத்தை பார்வையிட்டு முடிவு செய்யப்படும் என்று மூன்றாம் எதிர்த் தரப்பினர்கள் தெரிவித்தார் என்றும் 29-09-2016 ஆம் தேதியில் தனி வட்டாட்சியர் என்று கூறி ஒரு ஒருவர் தனியார் காரில் வந்து இடத்தை பார்வையிட்டார் என்றும் ஒரு படிவத்தில் தமது முகவரிடம் கையொப்பம் பெற்றுச் சென்றார் என்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் கொடுத்தால் உத்தரவு தருகிறோம் என தெரிவித்தனர் என்றும் வழிகாட்டி நூல் மதிப்புபடி முத்திரை கட்டணம் செலுத்தப்பட்டும் உரிய சேவை கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் செலுத்தப்பட்டும் தாம் பதிவு செய்த ஆவணங்களை திரும்ப தராமல் இருப்பது சேவை குறைபாடு என்றும் ஆவணங்களை பதிவு செய்ய தாக்கல் செய்த நாள் 25-09-2015 என்றும் ஆனால் பதிவுசெய்யப்பட்டது 05-10-2015 ஆம் தேதியில் என்றும் இடத்தை பார்வையிட்டது 29-09-2016 ஆம் தேதியில் என்றும் ஆனால் இருபத்தோரு மாதங்களாகியும் பதிவு செய்த ஆவணங்களை திரும்ப வழங்கவில்லை என்றும் எதிர்தரப்பினர்களின் இத்தகைய செய்கைகள் சேவை குறைபாடு என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் பெருத்த இழப்பு ஏற்பட்டது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார். எனவே, புகாரில் கேட்டுள்ள பரிகாரங்களை தமக்கு வழங்க வேண்டும் என்று முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
04. முதலாம் எதிர்தரப்பினர் பதில் முறை தாக்கல் செய்து அதனை இரண்டாம் எதிர் தரப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளார். புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல அவர் 25-09-2015 ஆம் தேதியில் தமது கிரைய ஆவணங்களை பதிவு செய்ய தாக்கல் செய்தது உண்மை என்றும் அவரது ஆவணத்தில் புல எண் 270/234, 270/236 என்று இருந்தது என்றும் ஆனால் அரசு வழிகாட்டியில் கீழப்பழுவூர் கிராம புல எண் புல எண் 270/5 வரை மட்டுமே உள்ளது என்றும் இதனால் வருவாய் துறையிடம் இருந்து உட்பிரிவு அட்டவணை வழங்கக்கோரி அவரது ஆவணங்கள் முடிவுறா ஆவணம் என முடிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது என்றும் உட்பிரிவு அட்டவணை கிடைக்கப் பெற்ற பின்னர் அவரது ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன என்றும் இதனால் தங்கள் தரப்பில் ஆவணங்களை பதிவு செய்ய எவ்வித காலதாமதமும் ஏற்படவில்லை என்றும் வழிகாட்டி மதிப்பில் ரூ1500/- என்று இருந்தபோதிலும் கடந்த 2013 ஆம் ஆண்டில் சதுர மீட்டர் ரூ 3000/- என்று பதிவு செய்யப்பட்டுள்ள காரணத்தால் சதுர மீட்டருக்கு ரூ 3000/- முத்திரைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது என்றும் அவ்வாறு கணக்கிட்டு முத்திரைக் கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது என்றும் முறையீட்டாளர் அதனை செலுத்த மறுத்ததால் இந்திய முத்திரை சட்ட பிரிவு 47 (A)-ன்படி தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) திருச்சிராப்பள்ளி அவர்களுக்கு மதிப்பீடு செய்ய அனுப்பப்பட்டது என்றும் சட்டப்படி இச்செயல் மேற்கொள்ளப்பட்டால் தங்கள் தரப்பில் சேவை குறைபாடு ஏற்பட்டது என்று கூறப்படுவது தவறானது என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில்உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
மூன்றாம் எதிர்தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
05. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் முதலாம் எதிர்தரப்பினர் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு முறையீட்டாளர் பதிவு செய்த இரண்டு ஆவணங்களும் இந்திய முத்திரை சட்டப்பிரிவு 47 (A)-ன்படி பரிந்துரை செய்யப்பட்டு 22-12-2015 ஆம் தேதியில் வரப்பட்டன என்றும் தமிழ்நாடு 1968 ஆம் ஆண்டு முத்திரைத்தாள் விதிகளின் நான்காவது விதியின் கீழ் 23-12-2015 ஆம் தேதியில் தாங்கள் முறையீட்டாளருக்கு அறிவிப்பு அனுப்பி அதனைத் தொடர்ந்து தொலைபேசி மற்றும் அஞ்சல் அட்டை மூலம் தகவல் வழங்கினோம் என்றும் பின்னர் தல பார்வை செய்தபோது காலி இடமாக பதிவு செய்யப்பட்ட இடத்தில் இரண்டு மாடி கட்டிடம் முழுமையடையாமல் இருந்ததால் அரசின் அனுமதி அடிப்படையில்தான் முடிவு செய்யப்படும் என்பதால் அரசு அனுமதி பெற்றதை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது என்றும் தங்கள் தரப்பில் பணம் கேட்டதாக சொல்லப்படுவது தவறானது என்றும் ஆனால் வழிகாட்டி மதிப்பினை குறைக்கும் வகையில் முறையீட்டாளர் தரப்பில் ஆவணங்களைத் தாக்கல் செய்து நிரூபிக்கவில்லை என்றும் அரசின் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ஒரு சதுர மீட்டர் ரூ 3,000/- என்கிற மதிப்பில் முதலாம் எதிர்தரப்பினர் நிர்ணயம் செய்த தொகையை செலுத்த கோரி அஞ்சல் அட்டை மற்றும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் தற்போது குறைவு முத்திரை தீர்வை ரூ 10,500 முறையீட்டாளர் செலுத்தி ஆவணங்களை பெற்றுக் கொண்டு விட்டார் என்றும் தங்கள் தரப்பில் சேவை குறைபாடு ஏற்பட்டது என்று கூறப்படுவது தவறானது என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் மூன்றாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
06. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) இந்த புகாரை தாக்கல் செய்ய முகவர் எம். ஜி. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு தகுதி நிலை (locus standi) உள்ளதா?
2) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
3) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
4) இந்த வழக்கில்பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
07. அழகேஸ்வரி என்பவர் இந்த புகாரின் முறையீட்டாளர். குறுந் தலைப்பு மற்றும் நெடும் தலைப்பு ஆகியவற்றில் எம்ஜி பாலசுப்ரமணியன் தலைவர் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு என்பவர் அவரது முகவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் முகவராக செயல்பட தகுதி நிலை உள்ளதா? அதிகாரம் உள்ளதா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த புகார் தாக்கல் செய்யப்பட்ட நாள் 29-06-2017 ஆகும். ஆனால் தாக்கல் செய்யப்பட்ட நாளில் முறையீட்டாளர் அழகேஸ்வரி எம்.ஜி. பாலசுப்ரமணியன் அவர்களை முகவராக நியமித்து அதிகாரம் வழங்கியதற்கு எந்த ஆவணங்களும் கிடையாது. முறையீட்டாளர் புகாரில் முதல் விசாரணைக்காக 15-11-2018 ஆம் தேதியில் நிரூபண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார். அன்றைய நாளில் முறையீட்டாளர் அழகேஸ்வரி அவர்கள் எம்.ஜி. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு தமது எனது கணவர் எனக் கூறி இந்த வழக்கை நடத்துவதற்கான ஆவணமாக 30-8 -2018 ஆம் தேதியிட்ட உறுதிமொழி மற்றும் ஒப்புதல் சீட்டு என்பது 15வது சான்று ஆவணமாக முறையீட்டாளர் தரப்பில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளில் தகுதி நிலை அல்லது அதிகாரம் எதுவும் இல்லாமல் முறையீட்டாளர் முகவராக எம்.ஜி. பாலசுப்ரமணியன் புகார் தாக்கல் செய்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புகாரில் எம்ஜி பாலசுப்பிரமணியன் அவர்கள் முறையீட்டாளரின் அதிகாரம் பெற்ற முகவரா? அல்லது தன்னார்வ நுகர்வோர் சங்கத்தின் பிரதிநிதியா என்பது போன்ற விவரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் எம்.ஜி. பாலசுப்ரமணியன் அவர்கள் புகாரை எவ்வித தகுதி நிலையம் (locus standi) இல்லாமல் தாக்கல் செய்துள்ளார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
08. முறையீட்டாளர் ஆவணங்களை பதிவு செய்த நாளில் அவற்றை பதிவு செய்யாமல் காலதாமதமாக பதிவு செய்வதற்கு முதலாம் எதிர்தரப்பினர் கூறும் காரணம் ஏற்புடையதாக உள்ளதோடு அந்த ஆவணங்கள் குறைவான முத்திரை தீர்வை செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் முடிவு செய்து அவற்றை மூன்றாம் எதிர் தரப்பினருக்கு சட்டப்படி அனுப்பி வைத்துள்ளதால் முதலாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரியவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இரண்டாம் எதிர் தரப்பினரிடம் முறையீட்டாளர் முதலாம் எதிர்தரப்பினர் பதிவு செய்த ஆவணங்களை திரும்ப வழங்கவில்லை என்று முறையீடு செய்தும் இரண்டாம் எதிர்தரப்பினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறும் நிலையில் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் புகார் செய்யப்பட்டது என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களையும் முறையீட்டாளர் சமர்ப்பிக்கவில்லை. இதனால் இரண்டாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரியவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. புகாரில் மூன்றாம் எதிர்தரப்பினர் அனுப்பிய அறிவிப்பு தமக்கு 14-09-2016 ஆம் தேதியில் கிடைத்தது என்று முறையீட்டாளர் கூறும் நிலையில் அதனை முறையீட்டாளர் இங்கு சமர்ப்பிக்கவில்லை. மூன்றாம் எதிர்தரப்பினர் குறைவு முத்திரை தீர்வை குறித்து அறிவிப்பு அனுப்பியும் அஞ்சல் அட்டை மற்றும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தும் விசாரணைக்கு அழைத்து விசாரித்து தல பார்வை செய்து முடிவுசெய்துள்ளது. சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் நிர்ணயித்த தொகையை செலுத்தாமல் பதிவுத் துறைத் தலைவரிடம் மேல்முறையீடு செய்து நிர்ணயிக்கப்பட்ட தொகை குறைக்கப்பட்டு அதன்பின்பு நிர்ணயம் செய்யப்பட்ட தொகை செலுத்தப்பட்டு ஆவணங்களை முறையீட்டாளர் திரும்பப் பெற்றுள்ளார் என்பதை சாட்சியும் மற்றும் சான்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது. இதிலிருந்து முறையீட்டாளர் செலுத்திய முத்திரைக் கட்டணத்தை விட கூடுதலாக அவர் கட்டணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அதனை அவர் செலுத்தி ஆவணங்களை பெற்றுக் கொண்டு விட்டார் என்றும் உள்ள நிலையில் சட்டப்படி மூன்றாம் எதிர் தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை சேவை குறைபாடு உடையது என்று முடிவு செய்ய இயலாது என்றும் அவர் பணம் கேட்டார் என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரங்களும் முறையீட்டாளர் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
09. முதலாம் எதிர் தரப்பினரிடம் 05-10-2015 ஆம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை எதிர் தரப்பினர்கள் உடனே திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டாளர் பரிகாரம் கேட்டுள்ளார் மேற்கண்ட ஆவணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதால் இந்த கோரிக்கை தேவையற்றதாக ஆகிவிட்டது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இரண்டாவது எழு வினாவை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 4
10. இந்த புகாரை தாக்கல் செய்ய தகுதி நிலை (locus standi) இல்லாமல் புகாரை தாக்கல் செய்து முகவராக செயல்பட்ட எம்ஜி பாலசுப்ரமணியன் அவர்கள் பிரிவு 39 (m) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019- ன்படி வழக்கின் செலவுத் தொகையாக ரூ 10 ஆயிரத்தை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் செலுத்த வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. இந்த புகாரை தாக்கல் செய்ய தகுதி நிலை (locus standi) இல்லாமல் புகாரை தாக்கல் செய்து முகவராக செயல்பட்ட எம்ஜி பாலசுப்ரமணியன் அவர்கள் பிரிவு 39 (m) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019- ன்படி வழக்கின் செலவுத் தொகையாக ரூ 10 ஆயிரத்தை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் செலுத்த வேண்டும்.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 10-02-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | | வில்லங்கச் சான்று | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | | வில்லங்கச் சான்று | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | | வழிகாட்டி மதிப்பு நூல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | | வழிகாட்டி மதிப்பு குறிப்பு தாள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 25-09-2015 | தாக்கல் செய்த கிரைய ஆவணங்கள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 25-09-2015 | வரைவோலைகள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 05-10-2015 | முதலாம் எதிர்தரப்பினர் வழங்கிய ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | | மூன்றாம் எதிர்தரப்பினர் அனுப்பிய அஞ்சல் அட்டைகள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | | பட்டா சிட்டா | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 06-12-2017 | பதிவுத்துறை தலைவரின் ஆணை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.11 | 11-10-2018 | பதிவுத்துறை தலைவரின் ஆணை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.12 | 31-07-2018 | பதிவுத்துறை தலைவரின் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.13 | 03-09-2018 | துணை பதிவுத்துறை தலைவரின் அழைப்பாணை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ1.4 | 30-08-2018 | மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையில் தாக்கல்செய்த உறுதிமொழி சீட்டு | ஜெராக்ஸ் |
எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: அழகேஸ்வரி
எதிர்தரப்பினர்கள் சாட்சி: 1
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.