புகார் கோப்பிக்கு எடுக்கப்பட்ட நாள் : 26-07-2018
உத்தரவு பிறப்பித்த நாள் : 14-10-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண்: 22/2018.
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், அருங்கல் கிராமம், வடக்கு தெரு, கதவு எண் 145 -ல் வசிக்கும் நடேசன் மகன் காளிதாஸ்
-முறையீட்டாளர்
1. அரியலூர் மாவட்டம், அரியலூர் நகர், திருச்சி பிரதான சாலையிலுள்ள இண்டஸ் இந்து வங்கி, அதன் கிளை மேலாளர் மூலம்
2. சென்னை, தியாகராய நகர், ஜி என் செட்டி சாலை, இலக்கம் 34 ஜி-ல் உள்ள இன்டஸ் இந்து வங்கியின் கன்ஸ்யூமர் பைனான்ஸ் டிவிஷன், அதன் முதன்மை மேலாளர் மூலம்
3. அரியலூர் மாவட்டம், அரியலூர் நகர், சிறிய புஷ்பம் காம்ப்ளக்சில் இருக்கும் இண்டஸ் இந்து வங்கியின் பிரதிநிதி சக்திவேல் - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு அவரே முன்னிலையாகியும், முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்களுக்காக திரு தமிழ் முருகன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் மூன்றாம் எதிர் தரப்பினர் அழைத்தும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வராததால் தோன்றா தரப்பினர் நிலைக்கு வைக்கப்பட்டும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 21-09-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இவ்வணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் புகார், முறையீட்டாளர் தரப்பில் சாட்சியம்-1, அவரது 08 சான்றாவணங்கள், முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரின் சாட்சியம், அவரது 02 சான்றாவணங்கள், இருதரப்பு வாத உரை ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து தம்மிடம் இருந்து எதிர் தரப்பினர்கள் எடுத்துச்சென்ற TN 61 L 8534 என்ற பதிவு எண் கொண்ட தமது இரு சக்கர வாகனத்தை எதிர் தரப்பினர்கள் தமக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களது செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு எதிர் தரப்பினர்கள் தமக்கு இழப்பீடாக ரூ 80,000/- வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவுத் தொகையாக ரூ 5000/- எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களது சேவை குறைபாட்டின் காரணமாக தாம் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை தள்ளுபடி செய்து எதிர் தரப்பினருக்கு தாம் எவ்வித தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்று எதிர் தரப்பினர்கள் சான்று வழங்க வேண்டும் என்றும் வரும் காலங்களில் நிதி நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களிடம் முன்னறிவிப்பின்றி அடாவடித்தனமாக குண்டர்களை வைத்துக் கொண்டு வாகனத்தை கைப்பற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது என ஆணை பிறப்பிக வேண்டுமென்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. கடந்த 16-06-2017 அன்று இரு சக்கர வாகனம் ஒன்றை விலைக்கு வாங்கினேன் என்றும் இதற்காக எதிர் தரப்பினர்களிடம் கடன் பெற்றேன் என்றும் இந்த கடனுக்கு மாதமொன்றுக்கு ரூ 2378 வீதம் 21 -07 -2017 முதல் 21 -05 -2019 வரை 23 தவணைகள் நான் செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணம் பெறப்பட்டது என்றும் வாங்கிய கடனுக்கு கீழ்க்கண்ட வகைகளில் தொகை செலுத்தி உள்ளேன் என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
S.No | Date | Rs | Mode | Remarks |
01 | 21-07-2017 | Rs 2378 | Through bank | |
02 | 21-09-2017 | Rs 2378 | Through bank | |
03 | 27-10-2017 | Rs 3000 | In person | Alleges that OPs issued receipt for Rs 2400/- only. |
04 | 13-12-2017 | Rs 3000 | In person | Alleges that OPs issued receipt for Rs 2400/- only. |
05 | 24-01-2018 | Rs 3000 | In person | Alleges that OPs issued receipt for Rs 2400/- only. |
06 | 16-02-2018 | Rs 5000 | In person | Alleges that Ops have not issued receipt |
| Total | Rs 18,756 | | |
04. இந்நிலையில் கடந்த 20 -03 2018 அன்று மூன்றாம் எதிர் தரப்பினரும் அவருடன் வேறு ஒருவரும் வந்து தம்மிடம் இருந்த மேற்படி இரு சக்கர வாகனத்தை அடாவடித்தனமாக எடுத்துச் சென்று விட்டார்கள் என்றும் மறுநாள் தாம் எதிர் தரப்பினரை சந்தித்து ரூ 5000/- செலுத்த தயாராக இருப்பதாக கூறி தமது வாகனத்தை திருப்பி தருமாறு கேட்டபோது அவர்கள் ரூ 48,000/- மொத்தத் தொகையும் செலுத்தினால்தான் வாகனத்தை திருப்பித் தருவோம் என்று தெரிவித்து விட்டார்கள் என்றும் இத்தகைய செய்கைகள் சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இத்தகைய சிரமங்களுக்கு எதிர்தரப்பினர்கள் பொறுப்பு என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. எனவே, தம்மிடம் இருந்து எதிர் தரப்பினர்கள் எடுத்துச்சென்ற TN 61 L 8534 என்ற பதிவு எண் கொண்ட தமது இரு சக்கர வாகனத்தை எதிர் தரப்பினர்கள் தமக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களது செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு எதிர் தரப்பினர்கள் தமக்கு இழப்பீடாக ரூ 80,000/- வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவுத் தொகையாக ரூ 5000/- எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களது சேவை குறைபாட்டின் காரணமாக தாம் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை தள்ளுபடி செய்து எதிர் தரப்பினருக்கு தாம் எவ்வித தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்று எதிர் தரப்பினர்கள் சான்று வழங்க வேண்டும் என்றும் வரும் காலங்களில் நிதி நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களிடம் முன்னறிவிப்பின்றி அடாவடித்தனமாக குண்டர்களை வைத்துக் கொண்டு வாகனத்தை கைப்பற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டுமென்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
05. இந்த வழக்கின் முதலாம் எதிர்தரப்பினர் பதில் உரை தாக்கல் செய்து அதனை இரண்டாம் எதிர் தரப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளார் மூன்றாம் எதிர்தரப்பினர் இந்த ஆணையத்தின் முன்பு ஆஜராகவில்லை என்பதால் ஒருதலைப்பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்ற தரப்பினராக வைக்கப்பட்டுள்ளார்.
06. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகார் சட்டப்படியும் நியாயப்படியும் நிலைநிற்க தக்கதல்ல என்றும் புகாரில் சொல்லப்பட்டுள்ள சங்கதிகளில் தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
07. முறையீட்டாளர் தங்களிடம் இருசக்கர வாகனத்தை வாங்குவதற்காக கடன் பெற விண்ணப்பம் செய்து ஒப்பந்தம் மேற்கொண்டு ரூ 42,878/- கடன் பெற்றார் என்றும் அதற்கு அவர் 01-07-2017 முதல் 21-09-2017 வரை இருபத்தி மூன்று தவணைகளில் ரூ 54 ஆயிரத்து 664 திருப்பி செலுத்த வேண்டும் என்றும் முறையீட்டாளர் கீழ்க்கண்டவாறு பணத்தை திருப்பி செலுத்தியுள்ளார் என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
S.No | Date | Rs | Remarks |
01 | 21-10-2017 | Rs 2400 | Issued receipt |
02 | 13-12-2017 | Rs 2400 | Issued receipt |
02 | 24-01-2018 | Rs 2400 | Issued receipt |
03 | 18-02-2018 | Rs 5000 | Issued receipt |
| Total | Rs 12,200 | Issued receipt |
07. முறையீட்டாளர் ஒப்பந்தப்படி 3 தவணை தொகையை தொடர்ந்து செலுத்த தவறினால் வாகனத்தை சுவாதீனம் எடுத்துக் கொள்ளும் உரிமை முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு உண்டு என்றும் அந்த அடிப்படையில் அவர் தவணை தொகையை செலுத்தாததால் தங்களால் வாகனம் சுவாதீனம் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு விட்டது என்றும் வண்டியை ஏலத்தில் விடும் முன்பு முறையீட்டாளருக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது என்றும் வண்டியை பெற்ற பின்னர் அதனை பற்றிய விவரங்களை தெரிந்து அதனை மறைத்து இந்த புகாரை முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ளார் என்றும் மேற்கண்ட விவரங்களை தக்க ஆவணங்களுடன் சமர்ப்பித்து நிரூபிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் தாங்கள் எவ்வகையிலும் சேவை குறைபாடு புரியவில்லை என்றும் இதனால் முறையீட்டளரின் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்
08. தீர்மானிக்க வேண்டிய பிரச்சனைகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றி சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர் தரப்பினர்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றி சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
பிரச்சனை எண் – 1
09. முறையீட்டாளர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் வாகனம் விலைக்கு வாங்க கடன் பெற்றுள்ளார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் முறையீட்டாளர் செலுத்திய தொகைக்கு ரசீது தரவில்லை என்று அவர் தெரிவிக்கும் நிலையில் அதனை அவரே நிரூபிக்க கடமைப்பட்டவர் ஆவார் ஆனால் போதிய ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கவில்லை என்று இந்த ஆணையம் கருதுகிறது.
10. முறையீட்டாளர் தாம் பெற்ற கடனுக்கு தொடர்ந்து மூன்று தவணைகள் பணம் செலுத்தாத காரணத்தால் அவரிடமிருந்து வாகனத்தை தாங்கள் சுவாதீனம் எடுத்துக் கொண்டதாக முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்த் தரப்பினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு எதிர்த் தரப்பினர்கள் பதில் தர வேண்டியுள்ளது என்று இந்த ஆணையம் கருதுகிறது.
(1) வாகனத்தை சுவாதீனம் எடுப்பதற்கு முன்பு பணம் செலுத்த கோரி எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு அறிவிப்பு அனுப்பினார்களா?
(2) வாகனமானது எதிர்தரப்பினர்களால் எந்த தேதியில் எந்த நேரத்தில் எந்த இடத்தில் யார் மூலமாக சுவாதீனம் எடுக்கப்பட்டது?
(3) வாகனம் சுவாதீனம் எடுக்கப்பட்ட பின்பு ஏலம் விடுவது குறித்து எதிர்த் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு முறையான அறிவிப்பு அனுப்பினார்களா?
(4) வாகனம் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பின்னர் எந்த தேதியில் எங்கு யாருக்கு என்ன விலைக்கு விற்கப்பட்டது என்ற விவரங்களை முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் தெரிவித்தார்களா?
வாகனத்தை சுவாதீனம் எடுப்பதற்கு முன்பு பணம் செலுத்த கோரி எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு அறிவிப்பு அனுப்பியதற்கு, வாகனமானது எதிர்தரப்பினர்களால் எந்த தேதியில் எந்த நேரத்தில் எந்த இடத்தில் யார் மூலமாக சுவாதீனம் என்பதற்கு, வாகனம் சுவாதீனம் எடுக்கப்பட்ட பின்பு ஏலம் விடுவது குறித்து எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு முறையான அறிவிப்பு அனுப்பியதற்கு, வாகனம் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பின்னர் எந்த தேதியில் எங்கு யாருக்கு என்ன விலைக்கு விற்கப்பட்டது என்ற விவரங்களை முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் தெரிவித்தார்கள் என்பதற்கு எந்த சாட்சியத்தையும் ஆவணங்களையும் எதிர்த் தரப்பினர்கள் இங்கு சமர்ப்பிக்கவில்லை மேலும் இது குறித்த விவரங்களையும் தங்கள் பதிலுரையில் தெரிவிக்கவில்லை. இதனால் எதிர் தரப்பினர்கள் வாகனத்தை சுவாதீனம் எடுக்கும்போது சட்டப்படியான வழிகளை பின்பற்றவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இதன் மூலம் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்த் தரப்பினர்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றி சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எதிர்த் தரப்பினர்கள் தன்னிடமிருந்து அடாவடித்தனமாக வாகனத்தை எடுத்துக் கொண்டார்கள் என்ற முறையீட்டாளரின் வாதம் ஏற்புடையதாக உள்ளது. அதே நேரத்தில் மூன்றாம் எதிர்தரப்பினர் குறித்த குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்படவில்லை அதனால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டியது அவசியமானது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
பிரச்சனை எண் – 2
11. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றி சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் முறையீட்டாளர் தமது புகாரில் கேட்பதுபோல அவரிடமிருந்து சுவாதீனம் பெறப்பட்ட இருசக்கர வாகனத்தை திருப்பி அளிப்பது நடைமுறை சாத்தியமில்லாத நிலை உள்ளது (இந்த வாகனம் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு விட்டதால்). இதனால் முறையீட்டாளர் வாகனத்தை விலைக்கு வாங்குவதற்கு செலுத்திய முன் பணத்தொகை ரூ18,000/- மற்றும் அவர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களுக்கு செலுத்தியதாக இந்த எதிர்த் தரப்பினர்கள் கூறும் தொகை ரூ 12,200/- ஆக மொத்தம் ரூ 30,200/- முறையீட்டாளருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் தொகை வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து தொகை வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
12. இனிவரும் காலங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தங்களிடம் வாகன கடன் பெறும் வாடிக்கையாளர்கள் தவணை தொகையை கட்ட தவறினால் சட்டப்படியான அறிவிப்பு கொடுத்து சட்டப்படியான வழிகளை பின்பற்றாமல் வாகனத்தை மறு சுவாதீனம் செய்யக்கூடாது.
13. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின்செயல்பாடுகளால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். பணத்தின் மூலம் இதனை சரி செய்துவிடமுடியாது என்றாலும் கூட ரூ 10,000/- முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு இழப்பீடு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் தொகை வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து தொகை வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
பிரச்சனை எண் – 3
14. வழக்கின் செலவு தொகையாக முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் ரூ 5000/- இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இதர வேறு பரிகாரங்கள் எதுவும் இந்த வழக்கில் தேவைப்படுகிறது என்று கருதவில்லை.
.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளர் வாகனத்தை விலைக்கு வாங்குவதற்கு செலுத்திய முன் பணத்தொகை ரூ18,000/- மற்றும் அவர் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களுக்கு செலுத்தியதாக இந்த எதிர்த் தரப்பினர்கள் கூறும் தொகை ரூ 12,200/- ஆக மொத்தம் ரூ 30,200/- முறையீட்டாளருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் தொகை வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து தொகை வழங்க வேண்டும்.
02. இனிவரும் காலங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தங்களிடம் வாகன கடன் பெறும் வாடிக்கையாளர்கள் தவணை தொகையை கட்ட தவறினால் சட்டப்படியான அறிவிப்பு கொடுத்து சட்டப்படியான வழிகளை பின்பற்றாமல் வாகனத்தை மறு சுவாதீனம் செய்யக்கூடாது.
03. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின்செயல்பாடுகளால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு முறையீட்டாளருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் ரூ 10,000/- இழப்பீடு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் இத்தொகைக்கு 30-12-2018 தேதியிலிருந்து நூற்றுக்கு ரூ 6 சதவீத வட்டி சேர்த்து தொகை வழங்க வேண்டும். மூன்றாம் எதிர் தரப்பினரை பொறுத்து இந்தப் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது
04. முறையீட்டளருக்கு எதிர் தரப்பினர்கள் இந்த வழக்கின் செலவுத் தொகையாக ரூபாய் 5,000/- ஐ இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும்.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 14-10-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 16-06-2017 | ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 10-07-2017 | காப்பீட்டு பாலிசி ஆவணம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | - | கணக்கு புத்தகம் | அசல் |
ம.சா.ஆ.4 | 27-1-2017 13-12-2017 24-01-2018 | ரசீதுகள் -3 | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 07-07-2017 | வங்கி கடிதம் புகார் மனு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 11-04-2017 | முறையீட்டளரின் வங்கி கணக்கு அறிக்கை | அசல் |
ம.சா.ஆ.7 | 28-03-2018 | அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 13-04-2018 | புகார் | ஜெராக்ஸ் |
முதலாம் மற்றும் இரண்டாம் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | - | கடன் விண்ணப்பம் மற்றும் கடன் ஒப்பந்தம் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | - | முறையீட்டளரின் வங்கி கணக்கு அறிக்கை | கணினி நகல் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு காளிதாஸ் – முறையீட்டாளர்
எதிர் தரப்பினர் தரப்பு சாட்சி: திரு தீபன் சக்கரவர்த்தி
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.