Gurunamasivayam filed a consumer case on 14 Mar 2023 against 1)Indane gas Supplier, Jayamcondan, 621802. 2) General Manager, Indane Gas, Anna Salai, Chennai-6000 in the Ariyalur Consumer Court. The case no is CC/5/2020 and the judgment uploaded on 16 Mar 2023.
புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 04-03-2020
உத்தரவு பிறப்பித்த நாள் : 14-03-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண்: 05/2020.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், உதயநத்தம் கிராமம், வடக்கு தெருவில் வசிக்கும் கோவிந்தராஜ் மகன் குரு நமச்சிவாயம் -முறையீட்டாளர்
1. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம் சாலை, இலக்கம் 145 சி -ல் உள்ள பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய (இன்டேன் விநியோகிப்பாளர்) நிர்வாகி
2. சென்னை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, இலக்கம் 500 -ல் உள்ள இன்டேன் கேஸ் பொதுமேலாளர் - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திரு ஏஜே தமிழ் முருகன், முன்னிலையாகியும் முதலாம் எதிர் தரப்பினருக்கு திரு ஏ கதிரவன் வழக்கறிஞர் முன்னிலையாகியும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு திரு ஜி மணி சேகர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 02-03-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம் -1, முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள் – 10, எதிர் தரப்பினரின் பதிலுரை, இரண்டாம் எதிர் தரப்பினரின் சாட்சியம்-1 அவரது சான்றாவணம்-1 மற்றும் வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தமக்கு எதிர் தரப்பினர்கள் ரூ 20 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாம் முதலாம் எதிர் தரப்பினரின் வாடிக்கையாளர் என்றும் தாம் கடந்த 02-05-2017 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினரிடம் பணம் செலுத்தி எரிவாயு உருளை பெற்றேன் என்றும் அதனை பொருத்தி அடுப்பில் உபயோகித்தபோது எரிவாயு உருளையில் பாதுகாப்பு குறைபாடு இருந்த காரணத்தால் திடீரென தீ பற்றி விட்டது என்றும் இந்த தீ வீடு முழுவதும் பரவியது என்றும் உயிர் பிழைத்தால் போதும் என்று தாமும் தமது மனைவி மற்றும் மகனும் வெளியே வந்து விட்டோம் என்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது என்றும் தமது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து விட்டது என்றும் கூரை வீடும் எரிந்து முழுவதும் சேதமாகிவிட்டது என்றும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது என்றும் தமது எரிவாயு உருளை விநியோகஸ்தரால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் காப்பீட்டுத் தொகையை கோரி வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு பகர பொறுப்பு உள்ளது என்றும் எதிர் தரப்பினர்களின் செயல்பாடு சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டிய பொறுப்பு எதிர் தரப்பினர்களுக்கு உள்ளது என்றும் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படாமல் போனதால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்து தமக்கு எதிர் தரப்பினர்கள் ரூ 20 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரண்டாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
04. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார். இந்த பதில் உரையை தாமும் அனுசரிப்பதாக (adopted) முதலாம் எதிர்தரப்பினர் தெரிவித்துள்ளார்.
05. காப்பீட்டுத் தொகை ரூ 20 லட்சத்தை பெறுவதற்கு மட்டுமே இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் எதிர் தரப்பினரின் சேவை குறைபாடு காரணமாக இழப்பீடு கோரி இந்த புகார் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் இதனால் இந்தப் புகார் நுகர்வோர் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட கூடிய ஒன்று அல்ல என்பதால் இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முறையீட்டாளருக்கு எரிவாயு உருளை வழங்கப்பட்டது என்றும் எரிவாயு உருளையை பொருத்தும் போது தீ விபத்து ஏற்பட அவரது கவனக்குறைவு உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளது என்றும் எரிவாயு உருளையின் உற்பத்தி குறைபாடு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்று கூற இயலாது என்றும் இவ்வாறு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மிகுந்த சேதம் ஏற்பட்டு விட்டது என்று கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் தீய நோக்கத்தில் பணம் பெறுவதற்காகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் உண்மையில் எரிவாயு உருளையின் குறைபாடு இருந்து தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் முறையீட்டாளர் தமது விநியோகிப்பாளருக்கு தகவல் தரவேண்டும் என்றும் அவ்வாறு தகவல் தரப்படும் போது எதிர் தரப்பினரின் நிறுவன அலுவலர்களும் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலர்களும் நேரடியாக வந்து கள பார்வை செய்வார்கள் என்றும் இந்த புகாரை பொருத்தவரை முறையீட்டாளர் தங்களுக்கு நேரடியாக எந்த தகவலையும் தரவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் 20 லட்சத்துக்கு எரிவாயு உருளை காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று எவ்வாறு முறையீட்டாளர் கூறுகிறார் என்பது தெரியவில்லை என்றும் முறையீட்டாளர் தரப்பில் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்ட போது அதில் உண்மை இல்லை என்பதால் பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தாங்கள் முடிவு செய்து விட்டதாகவும் இந்த புகாரில் வழக்கு மூலம் இல்லை என்றும் காலம் கடந்து புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தாம் எவ்வித சேவையை குறைபாடும் புரியவில்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் தெரிவித்து பதிலுரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
06. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) புகாரில் கூறப்பட்டுள்ள பிரச்சனை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நிலைநிற்க தக்கதா?
2) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
3) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
4) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
07. முறையீட்டாளர் எதிர் தரப்பினகளின் வாடிக்கையாளர் அல்ல என்று அவர்களால் பதில் உரையில் மறுக்கப்படாத நிலையில் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. ஆனால் எதிர்தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையில் தங்களிடம் சேவை குறைபாடுக்காகவும் தங்களால் ஏற்பட்ட சிரமங்களுக்காகவும் இழப்பீடு கேட்காத நிலையில் காப்பீட்டுத் தொகை மட்டுமே கேட்கக்கூடிய நிலையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி பரிகாரம் கேட்க இயலாது என தெரிவித்துள்ளனர். முறையீட்டாளர் தமது புகாரில் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என தெரிவித்துள்ளன.ர் புகாரில் கூறப்பட்டுள்ள பிரச்சனைக்கு இழப்பீடு பெற காப்பீடு உள்ள காரணத்தினால் எதிர் தரப்பினர்கள் சார்பில் காப்பீட்டு நிறுவனத்தில் இழப்பீடு பெற்று தரவேண்டும் என்று முறையீட்டாளர் கேட்டுள்ளார். எதிர் தரப்பினர்கள் காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீட்டு ஆவணத்தை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நடைமுறை இல்லாத காரணத்தால் இத்தகைய விபத்து ஏற்படும்போது காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருவது எதிர் தரப்பினகளின் கடமை என்று இந்த ஆணையம் கருதுவதால் புகார் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி விசாரிக்க தக்கது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
8. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ள தீ விபத்து குறித்து உடனடியாக தங்களுக்கு தகவல் தரவில்லை என்றும் அவ்வாறு தகவல் தந்து இருந்தால் தங்கள் அலுவலர்களும் காப்பீட்டு நிறுவன அலுவலர்களும் கள பார்வை செய்து அறிக்கை தாக்கல் செய்து இருப்போம் என்றும் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள். தங்களது எரிவாயு உருளை குறைபாடு காரணமாக தீ விபத்து ஏற்படவில்லை என சந்தேகிப்பதாகவும் தங்கள் பதிலில் தெரிவித்துள்ளார்கள். எவ்வாறு இருப்பினும் 02-05-2017 ஆம் தேதியில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக எதிர் தரப்பினர்களுக்கு 28-05-2019 ஆம் தேதியில் வழக்கறிஞர் அறிவிப்பு மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பெற்றுக் கொண்ட பின்னரும் மேற்கண்ட விவரங்களை தெரிவித்து எவ்வித பதிலையும் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் மேற்கண்ட எதிர் வாதம் ஏற்புடையது அல்ல என்றும் இந்தப் புகாரை தாக்கல் செய்வதற்கு கால தாமதம் ஏற்பட்டதால் அதனை மன்னிக்க முறையீட்டாளர் இந்த ஆணையத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்து அந்த விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் காலம் கடந்து புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற எதிர் வாதம் ஏற்புடையதல்ல என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
9. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ள தீ விபத்து ஏற்பட்டது என்பதற்கு முறையீட்டாளர் தரப்பு சான்று ஆவணங்களான முதல் தகவல் அறிக்க (Exibit A-4) மற்றும் தீயணைப்பு துறை வழங்கிய சான்று (Exibit A-5) ஆகியன உள்ளன. வழக்கறிஞர் அறிவிப்பின் மூலம் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது என முடிவு செய்ததால் பதில் அளிக்கவில்லை என்று எதிர் தரப்பினர்கள் கூறுவது ஏற்புடையதல்ல. தகவல் தாமதமாக தரப்பட்டுள்ளது என்றும் விபத்து நடந்த உடனே தங்களுக்கு தகவல் தரப்படவில்லை என்றும் அவ்வாறு தரப்பட்டிருந்தால் தாங்கள் நேரடியாக இடத்தை பார்வையிட்டு அறிக்கை தயாரித்திருப்போம் என்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அவர்கள் நேரடியாக இடத்தை பார்வையிட்டு அறிக்கையை தயாரித்து இருப்பார்கள் என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவிப்பதை குறைந்தபட்சம் முறையீட்டாளருக்கு அவரது வழக்கறிஞர் அறிவிப்பு கிடைக்கப்பெற்ற பின்னர் பதிலாக தெரிவித்து இருக்க வேண்டிய கடமை எதிர் தரப்பினர்களுக்கு உண்டு என்றும் இதனை செய்ய தவறியது சேவை குறைபாடு என்றும் இத்தகைய சேவை குறைபாட்டிற்கு தக்க பரிகாரத்தை வழங்க வேண்டிய கடமை எதிர் தரப்பினர்களுக்கு உண்டு என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
10. 20 லட்சத்துக்கு எரிவாயு உருளை காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று எவ்வாறு முறையீட்டாளர் கூறுகிறார் என்பது தெரியவில்லை என்று தங்கள் பதில் உரையில் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. எரிவாயு உருளை விநியோகிக்கும் நிறுவனத்தின் இணையதளத்தில் எரிவாயு உருளைக்கு காப்பீடு உள்ளது என்பதையும் விபத்து ஏற்படும் போது எவ்வாறு அதனைப் பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் எவ்வளவு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்பதையும் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் எரிவாயு உருளை பயன்படுத்தும் ஒவ்வொரு நுகர்வோரும் இணையதளத்தின் மூலமாக இவற்றை தெரிந்து கொள்வார்கள் என்று யூகித்துக் கொள்ள முடியாது. எதிர் தரப்பில் தாக்கல் செய்துள்ள பதில் உரையில் கூட எவ்வளவு காப்பீட்டு தொகை எந்தெந்த சூழ்நிலையில் வழங்கப்படும் என்ற விவரங்கள் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எரிவாயு உருளை விநியோகிக்கும் நிறுவனத்தினர் தங்களது ஒவ்வொரு நுகர்வோருக்கும் எரிவாயு உருளை காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் காப்பீட்டுத் தொகை விபத்து நேரிட்டால் எவ்வாறு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்தும் காப்பீட்டுத் தொகை பற்றிய விவரங்களையும் குறைந்தபட்சம் உள்ளூர் மொழியில் எழுதப்பட்ட கடிதம் மூலம் எரிவாயு உருளை வழங்கும் பணியாளர்கள் மூலமாக ஒவ்வொரு நுகர்வோருக்கும் வழங்க வேண்டியது எரிவாயு உருளை விநியோகிக்கும் நிறுவனத்தின் கடமையாகும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 பிரிவு 84 (e)-ன்படி முறையீட்டாளருக்கு எரிவாயு உருளை உற்பத்தியாளரான இரண்டாம் எதிர் தரப்பினர் தக்க அறிவுறுத்தலை வழங்க தவறிவிட்டார் என்றும் இந்த ஆணையம் கருதுகிறது.
11. வழக்கின் தன்மையை சாட்சியம் மற்றும் சான்று ஆவணங்கள் மூலம் ஆராய்ந்து பார்க்கும் போது எரிவாயு உருளை காப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் புகாரில் கூறியுள்ள விபத்துக்கு இழப்பீடு தர வேண்டிய கடமை இரண்டாம் எதிர் தரப்பினருக்கு உள்ளது என்றும் முதலாம் எதிர் தரப்பினர் விநியோகஸ்தர் என்ற முறையில் உருளையில் உற்பத்தி குறைபாடு உள்ளதா என்பது அவரால் கண்டறிய முடியாது என்ற நிலையில் அவரை இந்த புகார் இருந்து விடுவித்து இரண்டாம் எதிர்பார்ப்பினர் காப்பீட்டுத் தொகையை பெற்று தருவதில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத காரணத்தால் இந்த புகாரில் உள்ள பிரச்சனையில் இரண்டாம் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் இதனால் காப்பீட்டுத் தொகையை முறையீட்டாளருக்கு வழங்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
12. இரண்டாம் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் முறையீட்டாளருக்கு அவரது எரிவாயு உருளை இணைப்பிற்கான காப்பீட்டு தொகையை வழங்க இரண்டாம் எதிர்தரப்பினர் கடமைப்பட்டவர் என்றும் முடிவு காணப்பட்டுள்ள நிலையில் வழக்கின் தன்மையை கருதி முறையீட்டாளருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக ரூ 2 லட்சம் காப்பீட்டுத் தொகையை இரண்டாம் எதிர் தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள், அதாவது 12-04-2023 ஆம் தேதிக்குள், வழங்க வேண்டும். 12-04-2023 ஆம் தேதிக்குள் முறையீட்டாளருக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் காப்பீட்டு தொகையாக 2 லட்சத்தை வழங்க தவறினால் ரூ 2 லட்சத்துக்கு 12-04-2023 ஆம் தேதி முதல் தொகை செலுத்தப்படும் வரை ஆண்டொன்றுக்கு ரூ.100-க்கு 6% வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் செலுத்த வேண்டும்என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 4
13. இந்த புகாரில் உள்ள பிரச்சனையில் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளருக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் காப்பீட்டு தொகையாக 2 லட்சத்தை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள், அதாவது 12-04-2023 ஆம் தேதிக்குள், வழங்க வேண்டும். 12-04-2023 ஆம் தேதிக்குள் முறையீட்டாளருக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் காப்பீட்டு தொகையாக 2 லட்சத்தை வழங்க தவறினால் ரூ 2 லட்சத்துக்கு 12-04-2023 ஆம் தேதி முதல் தொகை செலுத்தப்படும் வரை ஆண்டொன்றுக்கு ரூ.100-க்கு 6% வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு இரண்டாம் எதிர் தரப்பினர் செலுத்த வேண்டும். முதலாம் எதிர் தரப்பினர் மீதான புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது
02. இரண்டாம் எதிர் தரப்பினரான “Indane” Subsidary of Indian Oil corporation நிறுவனம் தங்களது ஒவ்வொரு எரிவாயு உருளை நுகர்வோருக்கும் எரிவாயு உருளை காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் காப்பீட்டுத் தொகை விவரங்கள் குறித்தும் விபத்து நேரிட்டால் எவ்வாறு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்தும் குறைந்தபட்சம் உள்ளூர் மொழியில் எழுதப்பட்ட கடிதம் மூலம் (நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 பிரிவு 84 (e)- ல் கூறியுள்ள அம்சங்களை கவனத்தில் கொண்டு) தக்க அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்படுகிறது
03. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 14-03-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 01-05-2020 | மின்னஞ்சல் விவரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 01-06-2020 | மின்னஞ்சல் விவரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 06-06-2020 | மின்னஞ்சல் விவரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 02-08-2022 | வங்கி கணக்கு நகல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 05-06-2020 | தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்கள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 01-05-2020 | மின்னஞ்சல் விவரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 01-06-2020 | மின்னஞ்சல் விவரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 06-06-2020 | மின்னஞ்சல் விவரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | 02-08-2022 | வங்கி கணக்கு நகல் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 05-06-2020 | தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்கள் | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | - | காப்பீட்டு ஆவணம் | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு குரு நமச்சிவாயம்
எதிர்தரப்பினர்கள் தரப்பு சாட்சி: இல்லை
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes
Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.