புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 25-04-2019
உத்தரவு பிறப்பித்த நாள் : 07-10-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண்: 11/2019.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், மணப்பத்தூர் கிராமத்தில் வசிக்கும் அழகப்பன் மகன் சிங்காரவேலு.
-முறையீட்டாளர்
1. வருவாய் வட்டாட்சியர், செந்துறை வருவாய் வட்டம், அரியலூர் மாவட்டம்
2. வருவாய் கோட்டாட்சியர், உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம்
3. மாவட்ட ஆட்சியர், அரியலூர் மாவட்டம், அரியலூர் - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்காக அவரே முன்னிலையாகியும், எதிர்தரப்பினக்காக அரசு வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 16-09-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் புகார், முறையீட்டாளர் தரப்பில் சாட்சியம்-1, அவரது 04 சான்றாவணங்கள், எதிர் தரப்பினரின் பதில் உரை, எதிர் தரப்பினரின் சாட்சியம்-1, இருதரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து தமக்கு சொந்தமான நிலத்தை உட்பிரிவு செய்து தனி பட்டா வழங்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட அலைச்சல், அலைகழிப்பு, வீண் செலவுகள், மன உளைச்சல், காலதாமதம் ஆகியவற்றிற்கு இழப்பீடாக ரூ 50 ஆயிரத்தையும் இந்த வழக்கின் செலவு தொகையையும் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் சரி என கருதும் இதர பரிகாரங்களை தமக்கு வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், மணப்பத்தூர் கிராமம், சித்திடையர் -ல் வசிக்கும் அழகப்பர் உடையார் மகன் வேலாயுதம் வழங்கிய பொது அதிகார ஆவணம் அடிப்படையில் அவரது மகனான முறையீட்டாளர் சிங்காரவேலு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
04. அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், மணப்பத்தூர் வருவாய் கிராமம், புல எண் 262/13 A -ல் தமக்கு சொந்தமான நிலத்தை உட்பிரிவு செய்து தனி பட்டா வழங்க கடந்த 15-03-2019 அன்று ரூ 40/- அரசு கணக்கில் செலுத்தி முதலாம் எதிர் தரப்பினருக்கு தமது தந்தை அழகப்ப உடையார் சமர்ப்பித்தார் என்றும் இணையவழியில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யும்படி பதில் தெரிவித்தனர் என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. மேற்படி பதிலை பெற்ற பின்பு சம்பந்தப்பட்ட நிலம் பூர்வீக சொத்து என்பதால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்று என்றும் அனுபவத்தின் அடிப்படையில் உட்பிரிவு செய்து வழங்கும்படியும் பணம் செலுத்திய ரசீதை மீண்டும் இணைத்து கடந்த 23-03-2019 அன்று முதலாம் எதிர் தரப்பினருக்கு தமது தந்தை அழகப்ப உடையார் சமர்ப்பித்தார் என்றும் இதற்கு பதில் அளித்த முதலாம் எதிர்தரப்பினர் பதிவு செய்யப்பட்ட ஆவணம் அல்லது நீதிமன்ற தீர்ப்பாணை இல்லாமல் நிலத்தை உட்பிரிவு செய்ய இயலாது என்று மீண்டும் தெரிவித்துவிட்டார் என்றும் இதுகுறித்து முதலாம் எதிர் தரப்பினருக்கு கடந்த 06-04-2019 அன்று ஒரு அறிவிப்பை பதிவு தபாலில் அனுப்பி வைத்துவிட்டு அதன் நகலை இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
06. எதிர்தரப்பினர்கள் தமது கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பது சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இத்தகைய சிரமங்களுக்கு எதிர்தரப்பினர்கள் பொறுப்பு என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
07. எனவே, தமக்கு சொந்தமான நிலத்தை உட்பிரிவு செய்து தனி பட்டா வழங்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட அலைச்சல், அலைகழிப்பு, வீண் செலவுகள், மன உளைச்சல், காலதாமதம் ஆகியவற்றிற்கு இழப்பீடாக ரூ 50 ஆயிரத்தையும் இந்த வழக்கின் செலவு தொகையையும் எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் சரி என கருதும் இதர பரிகாரங்களை தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
07. முதலாம் எதிர்தரப்பினர் பதில் உரை தாக்கல் செய்து அதனை இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்த் தரப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகார் நிலைநிற்க தக்கதல்ல என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளரே நிரூபிக்கவேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
08. முறையீட்டாளர் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய அரசுக்கு செலுத்தும் தொகை சேவைக் கட்டணம் அல்ல என்றும் அரசு விதிகளின்படி கட்டணம் வசூலிக்கபடுவதால் முறையீட்டாளர் நுகர்வோர் அல்ல என்றும் இதனால் இந்த ஆணையத்தின் விசாரணைக்கு புகார் உகந்ததல்ல என்றும் இதனால் புகாரை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
09. முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினரிடம் சமர்ப்பித்த விண்ணப்பங்களுக்கு இரண்டு முறை சரியான விளக்கங்களுடன் பதில் தரப்பட்டு சரியான கடமை செய்யப்பட்டுள்ளது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித குறைபாடும் ஏற்படவில்லை என்றும் இதனால் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் கிடைக்க தக்கதல்ல என்றும் அவரது புகார் தங்களது செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.
10. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) எதிர்தரப்பினர்கள் கூறுவது போல் முறையீட்டாளர் நுகர்வோர் என்ற வரையறையில் வரமாட்டாரா? புகாரை விசாரிக்க இந்த ஆணையத்துக்கு அதிகார வரம்பு உள்ளதா?
2) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
3) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
4) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
5) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரியவில்லை எனில் எதிர்தரப்பினர்கள் கேட்பது போல அவர்களுக்கு வழக்கின் செலவு தொகையை முறையீட்டாளர் வழங்க வேண்டுமா?
எழு வினா எண் – 1
11. முறையீட்டாளர் நுகர்வோர் அல்ல என்றும் இதனால் இந்த ஆணையத்தின் விசாரணைக்கு புகார் உகந்ததல்ல என்றும் இதனால் புகாரை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள். வழக்கின் சங்கதிகள் குறித்த கேள்விகளை (questions of facts) முடிவு செய்வதற்கு முன்பாக மேற்படி சட்டம் தொடர்பான கேள்விக்கு (question of law) தீர்வு காண்பது அவசியமாகியுள்ளது.
12. முறையீட்டாளர் நிலங்களை உட்பிரிவு செய்ய அரசுக்கு செலுத்தும் தொகை சேவைக் கட்டணம் அல்ல என்றும் அரசு விதிகளின்படி கட்டணம் வசூலிக்கபடுவதால் முறையீட்டாளர் நுகர்வோர் அல்ல என்ற எதிர் தரப்பினரின் வாதம் ஏற்புடையது அல்ல என்றும் ஒரு சேவையை செய்வதற்கு செலுத்தப்படும் கட்டணம் சேவை கட்டணம் என்ற வரையறைக்குள் வருகிறது என்றும் இதனால் சேவை செய்வதற்கு கட்டணம் பெறுபவர் சேவையை வழங்குபவர் என்றும் அதற்கான கட்டணத்தை செலுத்துபவர் நுகர்வோர் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
13. Further it may be noted that section 4(1) of Consumer of Protection Act, 1986 states “Save as otherwise expressly provided by the Central Government, by notification, this Act shall apply all goods and services”. Hence, this Complaint is maintainable.
எழு வினா எண் – 2
14. அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், மணப்பத்தூர் வருவாய் கிராமம், புல எண் 262/13 A -ல் தமக்கு சொந்தமான நிலத்தை உட்பிரிவு செய்து தனி பட்டா வழங்க கடந்த 15-03-2019 அன்று ரூ 40/- அரசு கணக்கில் செலுத்தி முதலாம் எதிர் தரப்பினருக்கு தமது தந்தை அழகப்ப உடையார் சமர்ப்பித்தார் என்பதை எதிர்த் தரப்பினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த விண்ணப்பம் முதலாம் எதிர் தரப்பினரால் நிராகரிக்கப்பட்டு அந்த தகவல் கடிதம் மூலம் முறையீட்டாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
15. மேற்படி பதிலை பெற்ற பின்பு சம்பந்தப்பட்ட நிலம் பூர்வீக சொத்து என்பதால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்று என்றும் அனுபவத்தின் அடிப்படையில் உட்பிரிவு செய்து வழங்கும்படியும் பணம் செலுத்திய ரசீதை மீண்டும் இணைத்து கடந்த 23-03-2019 அன்று முதலாம் எதிர் தரப்பினருக்கு தமது தந்தை அழகப்ப உடையார் சமர்ப்பித்தார் என்பதை எதிர்த் தரப்பினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த விண்ணப்பம் முதலாம் எதிர் தரப்பினரால் நிராகரிக்கப்பட்டு அந்த தகவல் கடிதம் மூலம் முறையீட்டாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
16. பொதுவாக, நில அளவை செய்து தர, உட்பிரிவு செய்ய கோருவது மற்றும் பட்டா பெயர் மாற்றம் கோருவது உள்ளிட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இறுதி ஆணை பிறப்பிப்பது முதலாம் எதிர் தரப்பினரின் (வருவாய் வட்டாட்சியரின்) கடமையாகும். இவ்வாறு தம்மிடம் சேவை கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
(அ) விண்ணப்பங்களில் உள்ள கோரிக்கை சட்டப்படி ஏற்புடையதாகவும் தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டும் சரியான சேவை கட்டணம் செலுத்தப்பட்டும் இருப்பின் ஆய்வுசெய்து கோரிக்கையை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கலாம்.
(ஆ) விண்ணப்பங்களில் உள்ள கோரிக்கை சட்டப்படி ஏற்புடையதாக இருந்தும் விளக்கங்கள் தேவைப்படும் நிலையிலும் ஏதேனும் ஆவணங்கள் தேவைப்படும் நிலையிலும் கட்டண குறைபாடு உள்ள நிலையிலும் இருப்பின் அதனை விண்ணப்பதாரருக்கு தெரிவித்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு ஆணை பிறப்பிக்கலாம்.
(இ) விண்ணப்பங்களில் உள்ள கோரிக்கை சட்டப்படி ஏற்புடையதாக இல்லை என்றாலும் ஆய்வின்போது விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டிய காரணங்கள் உள்ளது என்றாலும் நிராகரிப்புகான விபரங்களை பதிவு செய்து விண்ணப்பத்தை நிராகரித்து வருவாய் வட்டாட்சியர் ஆணை பிறப்பிக்கலாம்.
17. சேவை கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு மேற்கண்ட மூன்று வகைகளில் எந்த வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் வருவாய் வட்டாட்சியர் தனது சேவையை புரிந்துள்ளார் என்றே முடிவு செய்ய இயலும் என்றும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காத நிலையில் தான் சேவைக் கட்டணத்தை திரும்ப கேட்க இயலும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
18. இந்த வழக்கில் முதலாம் எதிர்தரப்பினர் மேற்படி வகைப்பாடுகளில் மூன்றாவது வகைப்பாட்டின்படி முறையீட்டாளரின் விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறு முறையீட்டாளரின் விண்ணப்பம் மீது முதலாம் எதிர்தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்ட பின்னர் அவர் சேவை புரியவில்லை என் கூற இயலாது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. (Whether patient surgery is success or not, the service fee should be paid to the doctor).
19. நில அளவை செய்து தர கோருவது மற்றும் பட்டா பெயர் மாற்றம் கோருவது உள்ளிட்ட விண்ணப்பங்கள் மீது நிராகரிப்பு ஆணை வருவாய் வட்டாட்சியர் பிறப்பித்தால் அதனை எதிர்த்து வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யவும் அவரது ஆணையை எதிர்த்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் பின்னர் வருவாய் நில நிர்வாக ஆணையரிடம் முறையீடு தாக்கல் செய்யவும் வழிவகைகள் உண்டு.
20. (1) மேற்கண்டவாறு வழிமுறைகள் உள்ள நிலையில் (available appropriate forums) அவற்றை முறையீட்டாளர் பின்பற்றாமல் இத்தகைய புகார்களை தாக்கல் செய்வது அரசு அலுவலர்களுக்கு தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்துவதோடு ஆணையத்திற்கும் கால விரயம் ஏற்படுகிறது. (2) தனது புகாரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் மீது எவ்வித குற்றச்சாட்டையும் தெரிவிக்காத நிலையில் அவர்களை தரப்பினராக சேர்த்துள்ளது தேவையற்ற ஒன்றாகும். (3) முறையீட்டாளர் தரப்பில் முதலாம் எதிர் தரப்பினருக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் நகல்கள் -2 மற்றும் முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு அனுப்பிய பதில்களின் நகல்கள்-2 ஆகியவற்றை முறையீட்டாளர் இங்கு சமர்ப்பிக்கப்படவில்லை இத்தகைய முறையீட்டாளரின் செய்கைகள் சங்கதிகளை மறைப்பதற்கு (suppressision of facts) ஒப்பானதாகும்.
எழு வினா எண் – 3 & 4
21. எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரியவில்லை என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் முறையீட்டாளர் கோரும் பரிகாரம் அவருக்கு கிடைக்க தக்கதல்ல. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை.
எழு வினா எண் – 5
22. பத்தி 20-ல் சொல்லப்பட்டுள்ள காரணங்களினால் எதிர் தரப்பினருக்கு பதிலுரையில் கேட்கும் வழக்கின் செலவு தொகையை முறையீட்டாளர் கொடுக்க கடமைப்பட்டவர் ஆவார் என்றும்எதிர் தரப்பினருக்கு அவர்களது வழக்கறிஞர் கட்டணம், அரசு அலுவலர்கள் இந்த வழக்கிற்காக பணியாற்றிய நாட்களுக்கான ஊதியம் போன்ற பல்வேறு செலவுகள் இருந்தாலும் கூட வழக்கின் செலவு தொகையாக ரூ 5000/- இந்த ஆணையத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. இதனை முறையீட்டாளர் இந்த ஆணை கிடைக்கப் பெற்ற நான்கு வார காலத்திற்குள் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு செலுத்தி அந்த ரசீதுடன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் வழங்க வேண்டும் என்றும் தவறினால் இந்த வழக்கில் மூன்றாம் தரப்பினராக உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் முறையீட்டாளர் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 பிரிவு 72 - படி நடவடிக்கை மேற்கொள்ள தக்க விண்ணப்பத்தை இந்த ஆணையத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. முறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் சார்பில் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு இந்த வழக்கின் செலவுத் தொகையாக ரூபாய் 5,000/- ஐ செலுத்த வேண்டும். இதற்காக முறையீட்டாளர் இந்த ஆணை கிடைக்கப் பெற்ற நான்கு வார காலத்திற்குள் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு (மாவட்ட ஆட்சியர்) அவர்தெரிவிக்கும் தமிழக அரசின் வங்கி கணக்கில்செலுத்தி அந்த ரசீதுடன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் வழங்க வேண்டும். தவறினால் இந்த வழக்கில் மூன்றாம் தரப்பினராக உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர், முறையீட்டாளர் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 பிரிவு 72 - படி நடவடிக்கை மேற்கொள்ள தக்க விண்ணப்பத்தை இந்த ஆணையத்தில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 07-10-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 16-04-2019 | பட்டா | நகல் |
ம.சா.ஆ.2 | 19-04-2019 | பொது அதிகார ஆவணம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 06-04-2019 | அறிவிப்பு, அஞ்சலக ரசீது மற்றும் ஒப்புதல் அட்டைகள் | அசல் |
ம.சா.ஆ.4 | 15-03-2019 | சேவை கட்டணம் செலுத்திய ரசீது | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு சிங்காரவேலு
எதிர் தரப்பினர் தரப்பு சாட்சி: திருமதி தேன்மொழி
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.